Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | சிமெண்ட் மற்றும் சிமெண்ட் பயன்பாடுகள்

அன்றாட வாழ்வில் வேதியியல் | பருவம் 3 அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - சிமெண்ட் மற்றும் சிமெண்ட் பயன்பாடுகள் | 6th Science : Term 3 Unit 3 : Chemistry in Everyday life

   Posted On :  21.09.2023 08:04 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 3 : அன்றாட வாழ்வில் வேதியியல்

சிமெண்ட் மற்றும் சிமெண்ட் பயன்பாடுகள்

இயற்கையில் கிடைக்கக்கூடிய சுண்ணாம்புக்கல், களிமண் மற்றும் ஜிப்சம் ஆகிய தாது உப்புகளைக் கலந்து அரைப்பதன் மூலம் சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது.

சிமெண்ட்

பண்டைய காலத்தில் வீடுகளைக் கட்ட சுண்ணாம்புக் கலவைகளும், மண் மற்றும் மரக்கட்டைகளும் பயன்படுத்தப்பட்டன. ஆனால் தற்போது வீடுகள் முதல் பெரிய அணைக்கட்டுகள், மற்றும் பாலங்கள் கட்டுவதற்கு சிமெண்ட் பயன்படுகிறது. இயற்கையில் கிடைக்கக்கூடிய சுண்ணாம்புக்கல், களிமண் மற்றும் ஜிப்சம் ஆகிய தாது உப்புகளைக் கலந்து அரைப்பதன் மூலம் சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது.


சிமெண்டுடன் நீர் சேர்க்கும்பொழுது நிமிடங்களில் அது கெட்டிப்படுகிறது. சிமெண்ட் தயாரிக்கும்போது இறுதியாக அத்துடன் சிறிதளவு ஜிப்சம் சேர்க்கப்படுகின்றது. ஜிப்சமானது சிமெண்டின் கெட்டிப்படும் நேரத்தை தாமதமாக்குகின்றது.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வில்லியம் ஆஸ்பிடின் என்பவர் 1824 ஆம் ஆண்டு முதன்முதலில் சிமெண்டைக் கண்டுபிடித்தார். இது இங்கிலாந்து நாட்டில் உள்ள போர்ட்லேண்ட் என்னும் இடத்தில் கிடைக்கும் சுண்ணாம்புக் கல்லின் தன்மையை ஒத்திருந்ததால் போர்ட்லேண்ட் சிமெண்ட் என்று அழைக்கப்படுகிறது.

 

சிமெண்டின் பயன்கள்

காரை, கற்காரை, வலுவூட்டப்பட்ட காரை போன்ற பல விதங்களில் சிமெண்ட் பயன்படுத்தப்படுகிறது.

காரை

காரை என்பது சிமெண்ட்டும், மணலும் நீருடன் கலந்த கலவை ஆகும். வீடுகளில் சுவர்கள் கட்டுவதற்கும், அவற்றின் மேலே பூசுவதற்கும் தரை போடுவதற்கும் பயன்படுகிறது.

கற்காரை (கான்கிரீட்)

சிமெண்ட், மணல், ஜல்லிக்கற்கள், நீர் சேர்ந்த கலவையே கற்காரை ஆகும். கட்டடங்கள், பாலங்கள், அணைக்கட்டுகள் கட்டுவதற்கு இது பயன்படுகிறது.

வலுவூட்டப்பட்ட காரை (Reinforced Cement Concrete)

இரும்புக்கம்பிகள் அல்லது எஃகு வலைகளைக் கற்காரையோடு சேர்த்துப் பெறப்படுவதே வலுவூட்டப்பட்ட காரையாகும். இந்தக் காரை மிகவும் வலுவானதாகவும் உறுதியானதாகவும் இருக்கும். அணைக்கட்டுகள், பாலங்கள், வீட்டின் மேல்தளம் மற்றும் தூண்கள் கட்டுவதற்குப் பயன்படுகிறது. இதைக்கொண்டு பெரிய குடிநீர்த் தொட்டிகள், குழாய்கள் மற்றும் கழிவு நீர் வடிகால்களையும் அமைக்கின்றார்கள்.


செயல்பாடு 5 : ஒரே அளவிலான மூன்று குவளைகளை எடுத்துக்கொள்க. அதற்கு A,B,C என பெயரிடுக. ஒவ்வொன்றிலும் இரண்டு தேக்கரண்டி சிமெண்டை எடுத்துக்கொள். முதல் குவளை Aயில் ஒரு தேக்கரண்டி நீரும், இரண்டாவது குவளை Bயில் இரண்டு தேக்கரண்டி நீரும், மூன்றாவதில் மூன்று தேக்கரண்டி நீரைச் சேர்க்கவும்.

சிறிது நேரம்கழித்து எந்த குவளையில் உள்ள சிமெண்ட் முதலில் கெட்டித் தன்மையடைகின்றது? குவளையின் அடிப்பகுதியை தொடும்போது குளிர் அல்லது வெப்பத்தை உணர்கிறாயா. ஏன்? இந்தச் செயல்பாட்டிலிருந்து சிமெண்ட் விரைவாக கெட்டித்தன்மை அடைவதற்கு சரியான அளவில் நீரைச் சேர்க்கவேண்டும் என்பது நமக்குத் தெளிவாகின்றது.

Tags : Chemistry in Everyday life | Term 3 Unit 3 | 6th Science அன்றாட வாழ்வில் வேதியியல் | பருவம் 3 அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 3 Unit 3 : Chemistry in Everyday life : Cement and Uses of cement Chemistry in Everyday life | Term 3 Unit 3 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 3 : அன்றாட வாழ்வில் வேதியியல் : சிமெண்ட் மற்றும் சிமெண்ட் பயன்பாடுகள் - அன்றாட வாழ்வில் வேதியியல் | பருவம் 3 அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 3 : அன்றாட வாழ்வில் வேதியியல்