Home | 12 ஆம் வகுப்பு | 12வது புவியியல் | உலக மக்கள்தொகைப் பரவல்

புவியியல் - உலக மக்கள்தொகைப் பரவல் | 12th Geography : Chapter 1 : Population Geography

12 வது புவியியல் : அலகு 1 : மக்கள்தொகை புவியியல்

உலக மக்கள்தொகைப் பரவல்

மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக புவியில் வசித்து வருகிறார்கள் ஆனால் கடந்தகாலத்தில் மக்களின் எண்ணிக்கை நீண்டகாலத்திற்கு குறைவாகவே இருந்தது.

உலக மக்கள்தொகைப் பரவல்

மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக புவியில் வசித்து வருகிறார்கள் ஆனால் கடந்தகாலத்தில் மக்களின் எண்ணிக்கை நீண்டகாலத்திற்கு குறைவாகவே இருந்தது. கடந்த சில நூறு வருடங்களில் தான் மக்கள் தொகை ஆபத்தான நிலைக்கு அதிகரித்திருக்கிறது. கண்டங்களில் மக்கள் தொகைப் பரவல் சீரற்றுக் காணப்படுகிறது. சிறியப் பகுதிகள் அதிக மக்கள் தொகையையும் அதிக பரப்பளவு கொண்ட பகுதிகள் குறைவான மக்கள் தொகையையும் கொண்டுள்ளன. அதிக எண்ணிக்கையிலான காரணிகள் புவியின் மீது காணப்படும் மக்கள் தொகைப் பரவல் மற்றும் அடர்த்தியைப் பாதிக்கின்றன.

 

மக்கள் தொகைப் பரவலைப் பாதிக்கும் காரணிகள்

1. நிலத்தோற்றம்

மலைப்பாங்கானப் பகுதிகள் இருப்புப் பாதை மற்றும் நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கு ஏற்றதாக இருப்பதில்லை. வளரும் பருவம் குறுகியதாக இருப்பதால் விவசாயம் செய்ய ஏற்றதாக இல்லை. நீண்ட குளிர்காலம் காணப்படுவதாலும் விவசாயம் செய்ய சாதகமான நிலம் இல்லாததாலும் இப்பகுதிகள் அதிகளவிலான குடியிருப்பிற்கு ஏற்றதாக இல்லை. எனவே மலைப்பாங்கான பகுதிகளில் குறைவான மக்களே வசிக்கின்றனர். மறுபுறம் இந்தியாவில் காணப்படும் கங்கா மற்றும் பிரமபுத்திரா, சீனாவில் உள்ள ஹவாங்கோ மற்றும் வடமேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் காணப்படும் சமவெளிகள் போன்ற தாழ் நிலங்களில் அதிக அளவில் மக்கள் தொகைக் காணப்படுகிறது. வளமான சமநிலங்கள், விவசாயம் செய்ய சாதகமான சூழ்நிலைகள், நீண்ட வளர்பருவம் மற்றும் குடியிருப்புகளுக்கு சாதகமான சூழ்நிலைகள் போன்றவை இதற்கான முக்கியக் காரணங்களாகும்.

2. அணுகக்கூடிய அமைவிடம்

போக்குவரத்து நன்கு வளர்ச்சியடையாத பகுதிகள் குறைவான மக்கள் தொகையைக் கொண்டுள்ளன. ஆனால் நன்கு வளர்ச்சியடைந்த போக்குவரத்து கட்டமைப்புகள் மற்றும் சாலை, இருப்புப் பாதை மற்றும் வான்வழி போக்குவரத்து போன்றவற்றால் இணைக்கப்பட்டுள்ள பகுதிகள் அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளன. கடந்த காலங்களில் நீர் மற்றும் போக்குவரத்து வசதியில்லாதத் தீவுகள் குடியிருப்பின்றிக் காணப்பட்டன. மலைப்பாங்கானப் பகுதிகள் எளிதில் அணுகக்கூடிய நிலையில் இல்லாததால் குடியிருப்பின்றி காணப்படுகின்றன.

3. நிறைவான நீர் அளிப்பு

மக்கள் தொகைப் பரவல் ஒரு பகுதியில் காணப்படும் நீர் அளிப்பால் கட்டுபடுத்தப்படுகிறது. மனிதன் வாழ்வதற்கும் மேம்பாடு அடைவதற்கும் நீர் அளிப்பு இன்றியமையாதது. வறண்ட அல்லது தொடர் வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளை விட நீர் அளிப்பு நிறைந்தப் பகுதிகள் அதிக மக்கள் அடர்த்தியைக் கொண்டுள்ளன. அதிக நீர் அளிப்பைக் கொண்டுள்ள வட இந்திய சமவெளிகள் அதிக மக்களடர்த்தியைக் கொண்டுள்ள வேளையில் வறட்சியால் பாதிக்கப்படும் சகாரா குறைவான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.

4. மண்

உலகில் உள்ள ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் காணப்படும் வளமான வண்டல் மண் பகுதிகள் அடர்த்தியான மக்கள் குடியிருப்புகளைக் கொண்டுள்ளன. ஏனென்றால் இவை வேளாண் தொழிலை ஊக்குவிக்கின்றன. கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசியப் பகுதிகளில் அடர்த்தியான மக்கள் தொகை காணப்படுவதற்கு அங்கு காணப்படும் வளமான மண் தான் காரணமாகும். உதாரணமாக இந்தியாவில் உள்ள கங்கை பள்ளத்தாக்கு, பாகிஸ்தானில் உள்ள சிந்து நதிப் பள்ளத்தாக்கு மற்றும் சீனாவில் உள்ள ஹவாங்கோ பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளில் அடர்த்தியான மக்கள் பரவல் காணப்படுகிறது. மறுபுறம் பாலை மண் பகுதியான சகாரா குறைவான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.

5. பொருளாதார மற்றும் அரசியல் காரணிகள்

சாதகமற்ற பொருளாதார சூழ்நிலை, வேலையின்மை, மத சகிப்புத் தன்மையில்லாமை, மோதல்கள் மற்றும் போர் போன்றவை அதிக மக்கள் தொகையை ஊக்குவிப்பதில்லை.

 

மக்கள் தொகைப் பரவல் வகைகள்

ஒரு இடத்தின் மக்கள்தொகை தன்மையை படிப்பதற்கு மக்கள் தொகைப் பரவல் மற்றும் அடர்த்தியை ஆய்வு செய்வது ஒரு அடிப்படையாகும். மக்கள் தொகைப் பரவல் என்பது புவிப்பரப்பின் மீது மக்கள் எவ்வாறு பரவிக் காணப்படுகிறார்கள் என்பதாகும். உலகில் மக்கள் தொகைப் பரவல் சமமற்றுக் காணப்படுகிறது. உலகின் பத்து மிக அதிக மக்கள்தொகைக் கொண்ட நாடுகள் சேர்ந்து உலகின் 60 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ளன.

Tags : Geography புவியியல்.
12th Geography : Chapter 1 : Population Geography : Distribution of world population Geography in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது புவியியல் : அலகு 1 : மக்கள்தொகை புவியியல் : உலக மக்கள்தொகைப் பரவல் - புவியியல் : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது புவியியல் : அலகு 1 : மக்கள்தொகை புவியியல்