Home | 12 ஆம் வகுப்பு | 12வது புவியியல் | மக்கள் தொகை அடர்த்தி
   Posted On :  27.07.2022 06:25 pm

12 வது புவியியல் : அலகு 1 : மக்கள்தொகை புவியியல்

மக்கள் தொகை அடர்த்தி

மக்கள் அடர்த்தி = மொத்த மக்கள் தொகை / நாட்டின் மொத்த பரப்பளவு

மக்கள் தொகை அடர்த்தி

மக்கள்தொகையின் அறுதி எண்ணிக்கை ஒரு இடத்தின் நிலத்தோற்றம் மற்றும் வளங்களின்மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஒரு சதுர கி.மீ. நிலப் பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கையே மக்களடர்த்தியாகும்.

மக்கள் அடர்த்தி = மொத்த மக்கள் தொகை / நாட்டின் மொத்த பரப்பளவு

மொத்த மக்கள் தொகையை மொத்த நிலப்பரப்பால் வகுக்கும்போது மக்கள் அடர்த்தியை பெற முடியும். கணித அடர்த்தியை ஒப்பிடும்போது, நிலம்- மக்கள் விகிதாச்சாரத்தை கண்டறியும் ஒரு பண்பட்ட முறை உடலியல் அல்லது ஊட்டச்சத்து அடர்த்தி.

உடலியல் அல்லது ஊட்டச்சத்து அடர்த்தி என்பது மொத்த மக்கள் தொகைக்கும் மொத்த பயிரிடப்பட்ட பரப்பளவுக்கும் இடையேயான விகிதாச் சாராமாகும். உலகின் விளைநிலம் 13.3 சதவீதமாகும். உலகின் ஊட்டச்சத்து அடர்த்தி சதவீதம் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 325 பேர். இந்தியாவில் உள்ள மொத்த விளை நிலம் 48.83 சதவீதம் ஆகும். அதன் ஊட்டச்சத்து அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 753 பேர். சிங்கப்பூரின் அடர்த்தி சதவீதம் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 44,0998 பேர். மக்கள் அடர்த்திப் பகுதிகளை கீழ்கண்டவாறு மூன்றாகப் பிரிக்கலாம்.

 

1. மிக அடர்த்தியான மக்கள் 

தொகையைக் கொண்டபகுதிகள்

சாதகமான காலநிலையுடன் கூடிய வளமான சமவெளிகள், அதிக தொழில் வளர்ச்சியடைந்த மற்றும் நகர்புறப் பகுதிகள் மிக அடர்த்தியான மக்கள் தொகைப் பகுதிகள் ஆகும். நான்கு மிக அடர்த்தியான மக்கள் தொகைப் பகுதிகள் நான்கு காணப்படுகின்றன. இங்கு மக்கள் அடர்த்தி சதுரகிலோமீட்டருக்கு 100 பேருக்கு மேல் உள்ளது. இப்பகுதிகள் :

அ.கிழக்கு ஆசியா: சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா.

ஆ.தெற்காசியா: இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கை.

இ.அமெரிக்க ஐக்கிய நாட்டின் வடகிழக்குப் பகுதி.

ஈ.மத்திய மற்றும் வடமேற்கு ஐரோப்பா. நான்கு பகுதிகளில் முதல் இரண்டு பகுதிகள் அதாவது கிழக்கு ஆசியா மற்றும் தெற்கு ஆசியா மிக அடர்த்தியான மக்கள் தொகையையைக் கொண்டுள்ளது. இதற்கு காரணம் சாதகமான காலநிலை, வளமான மண் மற்றும் விவசாயத்திற்கு சாதகமாக உள்ள அதிக பரப்பளவிலான சமவெளிகள் போன்ற சூழ்நிலைகளாகும். இந்தியா மற்றும் சீனாவில் உள்ள சமவெளிகள் மற்றும் ஆற்றுப் பள்ளத்தாக்குகள் மிக அடர்த்தியான மக்கள் தொகையைக் கொண்டுள்ளன. அமெரிக்க ஐக்கிய நாட்டின் வடகிழக்குப் பகுதி மற்றும் மத்திய மற்றும் வடமேற்கு ஐரோப்பா மிக அடர்த்தியான மக்கள் தொகையைக் கொண்டிருப்பதற்கான காரணம் அதிக அளவில் தொழிற்சாலைகள் குழுமிக் காணப்படுவதாகும்.

உயர் சிந்தனை திறன்

சிங்கப்பூர் ஏன் உலகிலேயே மிக அதிக உடலியல் அல்லது ஊட்டசத்து மக்கள் அடர்த்தியைக் கொண்டுள்ளது?

 

2. மிதமான மக்கள்தொகை அடர்த்தியைக்கொண்ட பகுதிகள்

மிதமான மக்கள்தொகை அடர்த்திப் பகுதிகள் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 10 முதல் 80 பேரைக் கொண்டுள்ளன. அமெரிக்க ஐக்கிய நாட்டின் மத்தியப்பகுதிகள், அயன மண்டல மேற்கு ஆப்பிரிக்கா, ரஷ்யாவின் மேற்கு பகுதி, கிழக்கு ஐரோப்பா, இந்தியாவின் தக்கான பீடபூமி, மெக்சிகோ பீடபூமியின் தெற்கு பகுதி, வடகிழக்கு பிரேசில் மற்றும் மத்திய சிலி போன்றவை இந்தப் பிரிவில் அடங்கும்.

இப்பகுதிகளில் நன்கு வளர்ச்சியடைந்த வேளாண் தொழில், சாதகமான காலநிலை, வளமான மண், மீன்பிடித் தொழில் போன்றவை காணப்படுகின்றன.

 

3. குறைவான மக்கள்தொகை அடர்த்தியைக்கொண்ட பகுதிகள்

உலகின் பாதிப் பகுதிகள் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 10 பேருக்கு குறைவான மக்கள் அடர்த்தியைக் கொண்டுள்ளது. பெரிய பரப்பளவிலான சில பகுதிகள் முழுமையாக குடியிருப்பில்லாமல் காணப்படுகின்றன. முக்கியமான குறைவான மக்கள் தொகை அடர்த்திக்கொண்டப் பகுதிகளாவன.

அ. தென் அமெரிக்காவின் அமேசான் மற்றும் ஆப்பிரிக்காவின் காங்கோ காட்டுப்பகுதிகள்.

ஆ. கனடா மற்றும் கிரீன்லாந்தின் ஆர்டிக் பகுதி மற்றும் துருவப் பகுதிகள்.

இ. உலகின் பெரிய பாலைவனங்களான சகாரா, கலகாரி, அரேபியா, ஆஸ்திரேலிய பாலைவனம், தென் அமெரிக்காவின் அட்டகாமா பாலைவனம், மேற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டின் பாலைவனப்பகுதிகள் மற்றும் இந்தியாவின் தார் பாலைவனம்.

ஈ. எல்லா கண்டங்களில் காணப்படும் மலைப்பகுதிகள்.

உ. அண்டார்டிகா.


ஒரு சதுர கிலோமீட்டருக்கு இரண்டு பேருடன் ஆஸ்திரேலியா உலகின் மிக குறைவான மக்கள் அடர்த்திக் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய மக்கள் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டுள்ளனர்.

மக்கள் அடர்த்திக் குறைவாகக் காணப்படுவதற்கு காரணம்:

அ.மோசமான மற்றும் பாதகமான சூழ்நிலை.

ஆ தொழில்கள் இல்லாமை.

இ.சரியான போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இல்லாமை.

ஈ.அரசின் திட்டம்.

 

மக்கள் தொகை தொடர்பான கலைச்சொற்கள்

1. மக்கள் தொகை: ஒரு குறிப்பிட்ட புவிப்பரப்பில் காணப்படும் ஒரே இனம் சார்ந்த தனி நபர்களின் குழு.

2. மக்கள்: ஒரு குறிப்பிட்ட நாட்டின், சமூகத்தின் உறுப்பினர்கள்.

3. பிறப்பு விகிதம்: ஒரு வருடத்தில் 1000 பேருக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை.

4. இறப்பு விகிதம்: ஒரு வருடத்தில் 1000 பேருக்கு பிறந்த குழந்தைகளில் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை.

5. மொத்த இடப்பெயர்ச்சி விகிதம்: மொத்த இடப்பெயர்ச்சி விகிதத்திற்கான சூத்திரம் மிகவும் எளிமையானது.

N = 1000 x (I-E) / P

N = மொத்த இடப்பெயர்ச்சி விகிதம்

E = ஒரு நாட்டிலிருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை

I = ஒரு நாட்டிற்குள் உட்புகும் மக்களின் எண்ணிக்கை

P = மதிப்பிடப்பட்ட மக்கள் தொகை

6. கருவுறுதல் விகிதம்: கருவுறுதல் விகிதம் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அல்லது வருடத்தில் ஒரு பெண்ணுக்கு அல்லது 1000 பெண்களுக்கு அவர்களது வாழ்நாளில் பிறக்கும் –குழந்தைகளின் எண்ணிக்கை ஆகும். உலகிலேயே நைஜரில்தான் மிக அதிக கருவுறுதல் விகிதம் (6.49) காணப்படுகிறது. சிங்கப்பூர் உலகிலேயே மிகக் குறைவான கருவுறுதல் விகிதத்தைக் (0.83) கொண்டுள்ளது. நாடுகளுக்கிடையே ஏன் இந்த வேறுபாடுகள் என நீங்கள் யூகிப்பீர்களா?

7.சார்பு நிலை விகிதம: சார்ந்திருப்போரின் எண்ணிக்கையை பணிபுரிபவரின் அல்லது வருமானம் ஈட்டுவோரின் எண்ணிக்கையால் வகுக்க கிடைப்பது சார்பு நிலை விகிதம் ஆகும். இதை கணக்கீடு செய்யும்போது 15 வயதுக்கு உட்பட்டவர்களையும் - 65 வயதுக்கு மேற்பட்டவரையும் சார்ந்திருப்போர் எனவும், 15-64 வயதுக்கு உட்பட்டவர்களை பணிபுரிவோர் எனவும் பிரிக்கலாம்.

8. மக்கள்தொகை வளர்ச்சி விகிதம்:

= CBR - CDR +/- நிகர இடபெயர்சி விகிதம் / 1000 தெற்கு சூடான் மிக அதிக மக்கள்தொகை வளர்ச்சிவிகிதத்தை (3.83%,2017)கொண்டுள்ளது.

9. இயற்கை மக்கள் தொகை அதிகரிப்பு (RNI) =

CBR - CDR (இடப்பெயர்வு இல்லை)

CBR > CDR = Î மக்கள் தொகை இயற்கை மக்கள் தொகை அதிகரிப்பு (RNI) சதவீதத்தில் காட்டப்படுகிறது. எடுத்துகாட்டாக, 2% = 2/100 = 20/1000

இடப்பெயர்வு முக்கியமென்றால் மக்கள் தொகை வளர்ச்சி இயற்கை மக்கள் தொகை அதிகரிப்பு (RNI)க்கு சமமானது இல்லை.

10. வயது வந்தோர் கல்வியறிவு சதவீதம்: வயது வந்தோர் கல்வியறிவு குறியீடு என்பது ஒரு பகுதியில் அல்லது நாட்டில் எவ்வளவு வயது வந்தோர் படிக்கவும் எழுதவும் தெரிந்தவர்கள் என தீர்மானிக்கும் ஒரு புள்ளிவிவர முறையாகும். ஆயுட்காலம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் போன்று வயது வந்தோர் கல்வியறிவு சதவீதமும் மனித வள மேம்பாடு குறியீட்டை அளக்கும் காரணிகளில் ஒன்றாகும். மிகவும் குறைவான வயது வந்தோர் கல்வியறிவு சதவீதம்(21.8% ,2015) கொண்ட நாடு பர்க்கினோ பாசோ ஆகும். ஒரு நாட்டின் வாழ்க்கைத் தரத்தை கல்வியறிவு சதவீதம் எவ்வாறு பாதிக்கிறது?

11. ஆயுள் எதிர்பார்ப்பு சதவீதம்: ஆயுள் எதிர்பார்ப்பு சதவீதம் என்பது இறப்பு விகிதம் ஒவ்வொரு வயதிலும் மாறாமல் இருக்கும் நிலையில் ஒரு நாட்டில் பிறந்த நபர் எவ்வளவு வருடங்கள் வாழ்வார் என்பதாகும். ஆயுள் எதிர்பார்ப்பு சதவீதம் ஆண் பெண் என இருபாலாருக்கும் தனித்தனியாகவும் ஒன்றாகவும் காட்டப்படுகிறது. சரியாக 2015 வருட புள்ளிவிவரத்தின் அடிப்படையில், நீண்ட ஆயுட்காலம் கொண்ட நாடு மொனாக்கோ (89.52 வருடங்கள்) ஆகும். மிக குறைவான ஆயுட்காலம் கொண்ட நாடு (Chad) சாட் (49.81 வருடங்கள்)ஆகும்.

12th Geography : Chapter 1 : Population Geography : Density of Population in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது புவியியல் : அலகு 1 : மக்கள்தொகை புவியியல் : மக்கள் தொகை அடர்த்தி - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது புவியியல் : அலகு 1 : மக்கள்தொகை புவியியல்