மக்கள்தொகைக் கூறுகள்
மக்கள் தொகை என்பது பாலின விகிதம், கல்வியறிவு விகிதம், பாலின
வயது பிரமிடு போன்றவை மக்கள்தொகைக் கூறுகள் ஆகும்.
பாலின விகிதம் என்பது மொத்த மக்கள் தொகையில் ஆண் - பெண் இருபாலாருக்கிடையே
காணப்படும் விகிதாச்சாரமாகும்.
கத்தாரில் 100 பெண்களுக்கு
315 ஆண்கள் (2019)
உலகிலேயே
2018 ல் அதிக ஆண் - பெண் விகிதத்தைக் கொண்டுள்ள நாடு கத்தார். இது 100 பெண்களுக்கு
315 ஆண்கள் என்ற பிரமிப்பூட்டும் வகையில் முதலிடத்தில் உள்ளது.
உலகளவில் 2014ல் பிறப்பு பாலின விகிதம் 100 சிறுமிகளுக்கு
107 சிறுவர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.( 934 சிறுமிகளுக்கு 1000 சிறுவர்கள்) இந்தியாவின் பாலின விகிதமானது 2011ஆம் ஆண்டின்
கணக்கீட்டின் படி ஒவ்வொரு 1000 ஆண்களுக்கும் 933 பெண்களாகும்.
இந்தியாவில் மிக அதிக பாலின விகிதத்தைக் கொண்டுள்ள மாநிலம் கேரளா.
கேரளா 1000 ஆண்களுக்கு 1084 பெண்கள் என்ற விகிதத்தைக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து
புதுச்சேரி 1000 ஆண்களுக்கு 1037 பெண்கள் என்ற விகிதத்தையும் தமிழ்நாடு 1000 ஆண்களுக்கு
996 பெண்கள் என்ற விகிதத்தையும் கொண்டுள்ளது.
சீஸ்ஜெண்டர்
(Cisgender) (சுருக்கமாக CIS என அழைக்கப்படுகிறது) பிறக்கும் போது ஒருவருக்குக் கொடுக்கப்பட்ட
பாலின அடையாளம் தற்போதைய பாலின அடையாளத்துடன் ஒத்துப்போகும்போது அந்த நபரை குறிக்கும்
சொல் சிஸ்ஜெண்டர் ஆகும். இது திருநங்கை என்னும் சொல்லிற்கு எதிர்ச் சொல்லாகும்.
மக்கள் தொகை பாலின வயது பிரமிடு என்பது வயது மற்றும் பாலினத்தைக்
காட்டும் வரைபடமாகும். இதன் காரணமாகவே மக்கள் தொகை வயது பிரமிடுகள் பாலின வயது பிரமிடு
என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக பாலின வயது பிரமிடுகள் முக்கோண வடிவத்தில் காட்டப்படுகிறது.
இருப்பினும் மக்கள் தொகை பாலின வயது பிரமிடுகள் வேறுவடிவங்களிலும் காணப்படுகின்றன.
பொதுவாக மக்கள்தொகை பிரமிடுகளில் இடப்புறம் ஆண் வலப்புறம் பெண் என தனித்தனியே காட்டப்படுகிறது.
இதைப் பிரித்துக்காட்டும் வகையில் குறுக்கே ஒரு கோடு வரையப்பட்டிருக்கும்.
லாட்வியா-உலகிலேயே மிக அதிக
பாலின விகிதத்தைக் கொண்ட நாடு.
முன்னாள்
சோவியத் ஒன்றியத்தின் நாடான லாட்வியா இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஆண்களின் எண்ணிக்கையில்
பெரும் சரிவைக் கண்டது. 2015 ஆம் ஆண்டளவில் ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 84.8 ஆண்கள்
இருந்தனர். அதாவது மொத்த மக்கள் தொகையில் 54.10 சதவீதம் பேர் பெண்கள். மது அருந்துதல்,
புகைப் பிடித்தல் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஒட்டுதல் போன்ற காரணங்களால் லாட்வியாவில்
ஆண்களின் இறப்பு விகிதம் அதிகமாக காணப்படுகிறது. லாட்வியாவில் வேலையின்மை, நிதி இலக்குகளை
எட்ட இயலாமை போன்ற காரணங்களால் ஆண்கள் தற்கொலை செய்துகொள்வது 80 சதவீதமாகும். இங்கு
பெண்கள் ஆண்களைவிட 11 ஆண்டுகள் அதிகமாக வாழ்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட வயதுக் குழுவில் உள்ள மொத்த மக்கள் தொகையில்
கல்விக் கற்றோரின் எண்ணிக்கையை சதவீதத்தில் கூறுவது கல்வியறிவு சதவீதமாகும். கல்வியறிவு
தலைமுறைக்குத் தலைமுறை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இருப்பினும் யுனெஸ்கோ புள்ளியியல்
நிறுவனம் அளித்த புதிய தகவலின்படி இன்னும் 750 மில்லியன் பேர் எழுத்தறிவற்றவர்களாக
இருக்கின்றனர். அதில் மூன்றில் இரண்டு பங்கு பெண்களாவர். இந்த எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டிற்கான
கல்வி இலக்குகள் பேணத்தகுந்த மேம்பாடு இலக்குகள் 4 மற்றும் 5 ஐ அடையத்தேவையான செயல்களை
தீவிரமாக மேற்கொள்ள அறிவுறுத்துகிறது.
இந்தியாவின்
கல்வியறிவு விகிதம் 74.04 சதவீதமாகும். கேரளா 93.91 கல்வியறிவு சதவீதத்தை எட்டியுள்ளது.
மிகக் குறைந்த கல்வியறிவைக் கொண்டுள்ள மாநிலம் பீகார் (63.82 சதவீதம்). பிறப்பு ஆயுள்
எதிர்பார்ப்பு (கேரளாவில் 71.61 ஆண்கள், 75 பெண்கள், பீகாரில் 65.66 ஆண்கள் 64.79 பெண்கள்)
பிறக்கும் ஒவ்வொரு 1000 குழந்தைகளில் ஏற்படும் இறப்பு விகிதம் (கேரளா 10 பேர் பிகாரில்
61 பேர்) ஒவ்வொரு 1000 பேருக்காண பிறப்பு விகிதம் (கேரளா 16.9 பேர் பீகாரில் 30.9 பேர்)
மற்றும் இறப்பு விகிதம் (கேரளா 6.4 பேர் பீகார் 7.9 பேர்) போன்ற சமூகக் கூறுகள் இந்த
கல்வியறிவு விகிதத்துடன் தொடர்புடையதாகும்.
இந்தியாவில் 70 சதவீத கல்வியறிவற்றவர்களைக்
கொண்டுள்ள ஆறு மாநிலங்கள்: உத்திர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திர
பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம். இந்தி மொழி பேசும் உத்திர பிரதேசம், பீகார், மத்திய
பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் சத்தீஷ்கர் போன்ற மாநிலங்களில் இந்தியாவின்
மொத்த கல்வியறிவற்றோர் எண்ணிக்கையில் பாதிக்கும் சற்றே குறைவானோர் (48.12 சதவீதம்)
உள்ளனர்.
பாலின வயது பிரமிடுகள் மூன்று வகைப்படும். அவை விரிவாக்கப் பிரமிடு,
கட்டுப்பாடான பிரமிடு மற்றும் நிலையான பிரமிடு போன்றவையாகும்.
விரிவாக்கப் பாலின வயது பிரமிடு
இப்பிரமிடுகள் மொத்த மக்கள் தொகையில் இளம் வயதுக் குழுவினர்
அதிக சதவீதத்தில் இருப்பதைக் காட்டுகிறது. இப்பிரமிடுகள் அதிக இனப்பெருக்கமும் குறைந்த
ஆயுள் எதிர்பார்ப்பும் கொண்ட மக்கள் தொகையைக் குறிக்கிறது. பெரும்பாலான மூன்றாம் உலக
நாடுகள் இதில் அடங்கும். புதிதாக வளர்ந்து வரும் நாடுகளான ஆப்கானிஸ்தான், வங்காள தேசம்,
கென்யா, மற்றும் சில லத்தீன் அமெரிக்க நாடுகள் இவ்வகைப் பிரமிடுகளைக்கொண்டுள்ளன.
கட்டுப்பாடான பாலின வயது பிரமிடு
இவ்வகைப் பிரமிடுகளில் கீழ்ப் பகுதி குறுகலாக காணப்படுவதால்
கட்டுப்பாடான பாலின வயது பிரமிடு என அழைக்கப்படுகிறது. இவ்வகைப் பிரமிடுகளில் இளவயதினரின்
சதவீதம் குறைவாகக் காணப்படுகிறது. அடுத்தடுத்து வரும் வயதுக் குழுவினரின் எண்ணிக்கை
குறைந்து கொண்டே வருவதால் கட்டுப்பாடான பாலின வயது பிரமிடுகள் சரிந்து வரும் பிறப்பு
விகிதத்தைக் காட்டுகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் இவ்வகைப்பிரமிடுகளைக் கொண்டுள்ளது.
நிலையான பாலின வயது பிரமிடு
எல்லா வயதுக் குழுவினரும் ஏறக்குறைய சமவிகிதத்தில் இருப்பதைக்
காட்டும் பிரமிடுகள் நிலையான பாலின வயது பிரமிடுகள் எனப்படும். இதில் மக்கள் தொகை வளர்ச்சியில்
ஏற்றமோ இறக்கமோ இல்லாமல் நிலையாக உள்ளது. ஆஸ்திரியா இவ்வகை பிரமிடுகளைக் கொண்டுள்ளது.
பாலின வயது பிரமிடுகளின் நோக்கம்
ஒரு நாட்டின் ஆண் - பெண் பாலினங்களை ஒப்பிடுதல், தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் கண்டறிதல், மக்கள் தொகைக் கட்டமைப்பை அறிதல் போன்றப் பணிகளை துரிதமாக செய்ய பாலின வயது பிரமிடுகள் அமைக்கப்படுகின்றன. ஒரு அரசாங்கம் முன்னேற்றக் கொள்கைகளை உருவாக்க உதவுவது பிரமிடுகளின் நோக்கமாகும்.
தற்பொழுது
இந்தியாவில் திரிபுரா மாநிலம் தான் மிகவும் அதிக கல்வியறிவு விகிதத்தைக் (94.65%) கொண்டுள்ளது.
2011ஆண்டின் கணக்கீட்டின்படி இந்தியாவின் மிக அதிக கல்வியறிவுப் பெற்ற மாநிலங்களான
கேரளா மற்றும் மிசோரம் ஆகியவற்றின் கல்வியறிவு விகிதம் முறையே 93.91 சதவீதம் மற்றும்
91.58 சதவீதமாகும். 2011ஆண்டின் கணக்கீட்டின்படி இந்தியாவின் தேசிய கல்வியறிவு
74.04 சதவீதமாகும். திரிபுராவின் முதலமைச்சர் தலைமையில் கீழுள்ள மாநிலக் கல்வியறிவு
பணி ஆணையத்தின் மேற்பார்வையில் இயங்கிவந்த உள்ளாட்சி அமைப்புகள், கிராமப் பஞ்சாயத்துகள்,
அரசு சாரா அமைப்புகள் மற்றும் உள்ளூர் கிளப்புகள் ஆகியவற்றின் ஈடுபாடே திரிபுராவின்
சாதனைக்குக் காரணமாகும். 2001 ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி கல்வியறிவு விகிதத்தில்
12 ஆம் இடத்தில் இருந்த திரிபுரா 2011 ஆம் ஆண்டு 87.75 சதவீதத்துடன் நான்காம் இடத்திற்கு
முன்னேறியது. கல்வியறிவு மேம்பாட்டிற்காக திரிபுரா மாநில அரசு மேற்கொண்ட திட்டங்களாவன:
• 10,000
அங்கன் வாடி மையங்களில் 100 சதவீத சேர்க்கை
• குழந்தைகளின்
பள்ளிப் படிப்பு பாதியில் நின்றுவிடுவதை தடுக்க எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சிப் பெறாதவர்
இல்லை எனும் கொள்கை.
• மாணாக்கர்களைக்
கவரும் வண்ணம் அனைத்துப் பள்ளிகளிலும் வாரத்தின் எல்லா நாட்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட
உணவு வகைகள் கொண்ட சத்துணவுத் திட்டம்.
• கல்விக்கட்டனமில்லா அரசுக் கல்லூரிகள். அதிகாரிகளின் கூற்றுப்படி அகர்த்தலா, தொலைதூரப்பகுதிகள், பழங்குடியினர், தன்னாட்சிப் பகுதிகள் என -எல்லாப் பகுதிகளிலும் முழுமையான கல்வித்திட்டம் முழு ஈடுபாட்டுடன் செயல்படுத்தப்பட்டதால் திரிபுரா மாநிலம் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மட்டுமல்லாமல் கல்வியறிவு பெற்ற மாநிலமாகவும் விளங்குகிறது. கல்வி மேம்பாட்டிற்காக திரிபுரா அரசு ஆர்வம் காட்டுவது முழுமையான குழந்தைத் தொழிலாளர் இல்லாமையைச் சுட்டிக்காடுகிறது.