குடிப்பெயர்வின் வகைகள் ,அறிவு புலப்பெயர்ச்சி,குடிபெயர்தலுக்கான காரணங்கள், உந்தும் காரணிகள், இழுக்கும் காரணிகள் - இடம்பெயர்தல் | 12th Geography : Chapter 1 : Population Geography
இடம்பெயர்தல்
மக்கள் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு குடிப்பெயர்வது இடம்பெயர்தல்
எனப்படும். இது இனப்பெருக்கம் மற்றும் இறப்பு விகிதத்திற்கு அடுத்தப்படியாக மக்கள்
தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் முக்கியக் காரணியாகும். இடம்பெயர்தல் இருவகைப்படும்
அவை குடி வரவு மற்றும் குடி அகல்வு ஆகும். வெளியிலிருந்து ஒரு இடத்திற்கு மக்கள் வருவது
குடி வரவு அல்லது குடியிறக்கம் எனப்படும். ஓரிடத்திலிருந்து பிற இடங்களுக்கு வெளியேறுவது
குடியேற்றம் அல்லது குடி அகல்வு எனப்படும். குடியிறக்கம் ஒரு இடத்தின் மக்கள் தொகை
வளர்ச்சியை அதிகரிக்கிறது. மாறாக, குடியேற்றம் ஒரு இடத்தின் மக்கள் தொகை வளர்ச்சியை
குறைக்கிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டுடன் 3110 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும்
மெக்சிகோவிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு குடிபெயர்ந்தவர்கள் 98 சதவிகிதம் உள்ளதால்
மெக்சிகோவின் குடியேற்றப் பிரச்சினை தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது. மெக்சிகோவின் குடியேற்ற
விகிதம் 1960 களிலிருந்தே கணிசமான அளவு அதிகரித்துள்ளது. மெக்சிகோதான் உலகிலேயே மிக
அதிக குடியேற்றம் செய்த நாடாகும். 11 சதவிகிதத்திற்கும் மேலான மெக்சிகோ மக்கள் வெளிநாடுகளில்
வாழ்கின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் 2015 ஆம் ஆண்டிற்கான அறிக்கையின்படி 2013ல் அமெரிக்க
ஐக்கிய நாடுகள், ஜெர்மனி, ரஷ்யா போன்ற நாடுகள் மிக அதிக அளவு குடியிறங்குபவர்களைக்
கொண்டுள்ள நாடுகளாகவும் துவலு(Tuvalu) மற்றும் தோகேலா (Tokelau) ஆகியவை மிகக் குறைந்தளவு
குடியிறங்குபவர்களைக் கொண்ட நாடுகளாகவும் காணப்படுகின்றன.
1. நிகரஇடப்பெயர்வு (NetMigration)
நிகரஇடப்பெயர்வு என்பது குடியிறக்கதிற்கும் குடியேற்றத்திற்கும்
இடையேயான வேறுபாடாகும். அதிக மக்களின் குடியிறக்கமும் மக்கள் தொகை வளர்ச்சியும் இதன்
சாதகமான விளைவாகும். எடுத்துக்காட்டாக, வட அமெரிக்காவின் 44 சதவீத மக்களும் ஐரோப்பாவின்
88 சதவீத மக்களும் குடியிறங்குபவர்களாகும். அதிக மக்கள் வெளியேறுவதும் மக்கள் தொகை
குறைவதும் இதன் எதிர்மறை விளைவாகும்.
ஒரு சமுதாயத்தின் பொருளாதார மற்றும் சமூகத் தோல்விகளைச் சுட்டிக்காட்டுவது
குடியேற்றமாகும். இது ஒரு நாட்டின் எல்லையைக் கடப்பதாகும். இதை எளிதாக கண்காணித்துக்
கட்டுப்படுத்தலாம். இவ்வகை இடப்பெயர்வை கட்டுப் படுத்த அல்லது தடை செய்யச் சட்டங்கள்
உள்ளன. ஒவ்வொரு வருடமும் இரண்டு மில்லியனிலிருந்து மூன்று மில்லியன் மக்கள் தங்கள்
நாட்டைவிட்டு வெளியேறுகிறார்கள். 1965க்கும் 2000க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் 175 மில்லியன்
மக்கள் தங்கள் நாட்டைவிட்டு வெளியேறியிருக்கின்றனர். இது உலக மக்கள் தொகையில் மூன்று
சதவிகிதமாகும்.
இது ஒரு நாட்டின் எல்லைக்குள் நிகழ்வதாகும். மக்கள் ஒரு நாட்டின்
மாநில அல்லது மாகாணங்களுக்கு இடையில் இடம்பெயர்வதாகும். இதை அரசு கட்டுப்படுத்துவது
எளிதல்ல.
ஒரு மாநிலம் அல்லது மாவட்டத்திற்குள் நிகழும் இடப்பெயர்வே உள்ளூர்
இடப்பெயர்வாகும். இதில் மக்கள் மாநில எல்லைகளைக் கடப்பதில்லை . ஒரு நகரம் அல்லது மாநகரத்திற்குள்
புதிய வீடு வாங்குவது போன்ற பல காரணங்களுக்காக இந்த இடப்பெயர்வு நடைபெறுகிறது. பொதுவாக
இது மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இடம்பெறாததால் இதற்கானக் காரணங்களை ஆய்வு செய்வது
கடினமாகும். வருமானம் அல்லது வாழ்க்கை முறை மாற்றத்தினால் இது நிகழ்கிறது. அமெரிக்கர்கள்
ஐந்திலிருந்து ஏழு வருடங்களில் தங்கள் குடியிருப்பை மாற்றுகிறார்கள்.
ஒருவர் தன் விருப்பத்தின் பேரில் இடம்பெயர்வது தன்னார்வ இடப்பெயர்வாகும்.
பெரும்பாலான இடப்பெயர்வுகள் தன்னார்வ இடப்பெயர்வாகும்.
கட்டாய இடம்பெயர்வில் இடம்பெயர்பவர் எந்த முடிவும் எடுப்பதில்லை.
இது அடிமைத்தனத்தின் விளைவாக ஏற்படுகிறது. 1519க்கும் 1867க்கும் இடைப்பட்ட காலத்தில்
11 மில்லியன் ஆப்பிரிக்க அடிமைகள் அமெரிக்காவிற்கு அழைத்து வரப்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.
1860ல் கிட்டத்தட்ட 4 மில்லியன் அடிமைகள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருந்தனர். ராணுவத்தில்
கட்டாய ஆள் சேர்ப்பின் காரணமாக அகதிகளானவர்கள், இடம்பெயர்ந்தோரின் குழந்தைகள், விவாகரத்து
அல்லது கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரிவினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆகியோர்
கட்டாய இடப்பெயர்வில் உட்படுகின்றனர்.
அறிவு புலப்பெயற்சி என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி சார் இடம்பெயர்வோடு
தொடர்புடையதாகும். சில நாடுகள் தங்கள் மக்கள்தொகையில் உயர் கல்விக் கற்றோரை இழக்க நேரிடுகிறது.
இது இப்பிரிவினரைப் பெறக்கூடிய நாடுகளுக்கு சாதகமாகவும் அனுப்பும் நாடுகளுக்கு பாதகமாகவும்
உள்ளது.
அறிவு
புலப்பெயர்ச்சியைப் பெறும் நாடுகள்: தங்களது பொருளாதாரத்தை முன்னேற்ற
உதவும் மிகவும் தகுதிவாய்ந்த தொழிலாளர்களை இந்நாடுகள் பெறுகின்றன. இது அறிவியல் தொழில்
நுட்பம் போன்ற முக்கியத் துறைகளின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவுகிறது. இப்பிரிவினருக்கு
கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக இந்நாடுகள் செலவிடவேண்டியதில்லை. எடுத்துக்காட்டாக,
முனைவர் பட்டம் பெற்ற 30 சதவிகித மெக்சிகோ மக்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ளனர்.
பிறந்த
நாடு: கல்வி மற்றும் சுகாதார செலவுகள் இப்பிரிவினரின் சொந்த நாட்டிற்கு
திருப்பி செலுத்தப்படுவதில்லை. இந்நாடு எதிர்கால தலைவர்களையும் திறமைசாலிகளையும் இழந்துவிடுகின்றன.
15 முதல் 40 சதவிகித பட்டதாரிகள் கனடாவிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு செல்கிறார்கள்.
இந்நிகழ்வு பொருளாதார வளர்ச்சியில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்நாடுகளுக்கு
பணம் பெறும் வாய்ப்புள்ளது. அறிவு புலப்பெயர்ச்சி மூலம் குடிபெயர்ந்தவர்கள்
தங்களது திறமைகளை சொந்த நாட்டில் பயன்படுத்த முடிவதில்லை. அதற்கான வளங்களும் தொழில்நுட்பங்களும்
அங்கு காணப்படுவதில்லை. குறிப்பிட்ட தொழிலாளர் சந்தையும் போதிய அளவில் பெரிதாக இல்லை.
குடிபெயர்தலுக்கான காரணிகளை உந்துக் காரணி (push factor) மற்றும்
இழுவைக் காரணி(Pull factor) என இருவகைப்படுத்தலாம். கட்டாயமாக மக்களைக் குடிபெயர செய்வது
அல்லது மக்களை தன்பால் ஈர்ப்பது ஆகிய இரண்டும் முறையே உந்துக் காரணி மற்றும் இழுவைக்
காரணி எனப்படும். உந்துக் காரணி என்பது கட்டாயக் காரணியாகும். இது ஒருவர் எந்த நாட்டிலிருந்து
வெளியேறுகிறாரோ அந்நாட்டோடு தொடர்புடையது. இழுவைக் காரணி என்பது ஒருவர் எந்த நாட்டிற்கு
இடம்பெயர்கிறாரோ அந்நாட்டோடு தொடர்புடையது. பொதுவாக ஓரிடத்தின் சாதகமான சூழ்நிலையே
மக்களை அவ்விடத்திற்கு ஈர்க்கிறது. பொதுவாக உந்து மற்றும் இழுவைக் காரணிகள் ஒரு காந்தத்தின்
வடமுனை மற்றும் தென் முனைப்போல கருதப்படுகின்றன.
உந்தும்
காரணிகள்: போதிய அளவு வேலையில்லாமை, குறைவான வாய்ப்புகள், பாலைவனமாக்கல்,
பஞ்சம்/வறட்சி, அரசியல் அச்சுறுத்தல், அடக்கு முறை, குறைந்த மருத்துவ வசதி, செல்வ இழப்பு,
இயற்கை சீற்றங்கள், மரண அச்சுறுத்தல்கள், அடிமைத்தனம், மாசடைதல், வீட்டுவசதிக் குறைவு,
நில உரிமையாளர்கள் கொடுமைப்படுத்துவது, கோரிக்கைக்களை நிறைவேற்ற தேவையான வாய்ப்புகள்
குறைவு.
இழுக்கும்
காரணிகள்: வேலைவாய்ப்புகள், சிறந்த வாழ்க்கை நிலை, அரசியல் மற்றும் மத
சுதந்திரம், பொழுதுபோக்கு , கல்வி, போதிய மருத்துவ வசதி, பாதுகாப்பு, குடும்ப பிணைப்புகள்,
தொழிற்சாலை, கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான வாய்ப்புகள்.