அரசியல் கொள்கைகள் - சுற்றுச்சூழலியல் | 11th Political Science : Chapter 8 : Political Ideologies - Part-II

   Posted On :  03.10.2023 11:26 pm

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 9 : அரசியல் கொள்கைகள் - பகுதி II

சுற்றுச்சூழலியல்

நவீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் கொண்டு வந்த முன்னேற்றம் நமது பூமியின் சுற்றுச்சூழலை அழித்து வருகிறது. ஓசோன் அழிதல், பருவ நிலை மாற்றம், அமில மழை போன்ற சுற்றுச்சூழல் பிரச்சனைகள் நம்மை அச்சுறுத்துகின்றன.

சுற்றுச்சூழலியல் 

நவீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் கொண்டு வந்த முன்னேற்றம் நமது பூமியின் சுற்றுச்சூழலை அழித்து வருகிறது. ஓசோன் அழிதல், பருவ நிலை மாற்றம், அமில மழை போன்ற சுற்றுச்சூழல் பிரச்சனைகள் நம்மை அச்சுறுத்துகின்றன. இயற்கையை அழிக்கும், முன்னேற்றத்திற்கு எதிரான இயக்கம் மற்றும் கொள்கைக்கு சுற்றுச்சூழலியம் என்பது பெயராகும். அகண்ட பிரபஞ்சத்தில் பூமியில் மட்டுமே நாம் வசிக்க முடியும். ஆகவே, பூமியைக் காப்பாற்றுவது அவசியமாகிறது.



எல்லோருடைய தேவைகளையும்  இயற்கையால் பூர்த்திச் செய்ய முடியும். ஒருவருடைய  பேராசையையும் அதனால்  பூர்த்தி செய்ய முடியாது. - மகாத்மா காந்தி


ஆழச் சூழலியல் மற்றும் மேலோட்டமான சூழலியல் 



தத்துவ விவாதம் 

மனிதனுக்கும், சூழலுக்கும், வளர்ச்சிக்கும், சூழ்நிலைக்கும் இடையில் உள்ள தொடர்புகளைப் பற்றி விரிவான விவாதம் உள்ளது. ஆழச் சூழலியல் - மேலோட்டமான சூழலியல் என்ற விவாதம் உள்ளது


மேலோட்டமான சூழலியல்

மனிதனை முன்னிறுத்தி, பயனுள்ள கருவியாக இயற்கையை அணுகும் கொள்கைக்கு மேலோட்டமான சூழலியல் என்பது பெயராகும். அமெரிக்கத் தத்துவ ஞானியான அந்தோணி வெஸ்டன் இக்கோட்பாட்டைத் தீவிரமாக ஆதரித்தார். மனிதனுக்கு இந்த உலகில் முதன்மையான இடத்தை இக்கோட்பாடு வழங்குகிறது. இயற்கை மனித நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. எல்லா உயிர்களும் இயற்கைச் செல்வங்களும் மனித வாழ்விற்காக உள்ளன.


மனித முன்னிறுத்தல் (Anthroprocentricism)


சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு தொழில் நுட்பத் தீர்வுகளை இக்கோட்பாடு ஆதரிக்கின்றது. இயற்கை மாசுபடுவதைத் தடுப்பதற்கு மாற்று எரிசக்திகளை உருவாக்க வேண்டும். இவ்வணுகுமுறை மூன்று கருத்துகளை(R-களை) ஆதரிக்கின்றது. அவை 

i) பயன்பாட்டைக் குறைத்தல் (Reduce), 

ii) மறுபயன்பாடு (Reuse), 

iii) மறுசுழற்சி (Recycle) ஆகியவைகளாகும். இயற்கைச் செல்வங்களை சிக்கனமாக மறுசுழற்சி அடிப்படையில் பயன்படுத்த வேண்டும்.



ஆழச் சூழலியல்

நார்வே நாட்டின் இயற்கைத் தத்துவ ஞானியான ஆர்ன் நேயஸ் (Arne Naess) 1973 ஆம் ஆண்டு இக்கருத்தை உருவாக்கினார். மகாத்மா காந்தி, ரஸேல் கார்ஸன் ஆகியோரிடமிருந்து இவர் ஊக்கம் பெற்றார். புவிக்கோள் மூன்று அங்கங்களைப் பெற்று இருக்கின்றது. அவைகள் i) மனிதர்கள், ii) மற்ற உயரினங்கள், iii) உயிரற்ற பொருட்களும் விசைகளும் ஆகும். பூமியில் வாழும் கோடிக்கணக்கான உயிர்களில் மனித இனமும் ஒன்று. மனித இனத்தை முன்னிறுத்துவதை நாம் கைவிட வேண்டும்.


மனிதர் அல்லா உயிரினங்களுக்கும் அடிப்படை மதிப்பு, அடையாளம் ஆகியவை உள்ளன. எல்லா உயரினங்களும் சமமான முக்கியத்துவத்தை (Bio Centric Equality) பெற்றிருக்கின்றன. இயற்கையை கவனத்துடன் பயன்படுத்தி மனிதர்கள் வாழ வேண்டும். பல்லுயிர்களைப் பாதுகாக்க வேண்டும். பேராசையால் மனித இனம் பல உயிர்களை அழித்து வருகிறது. உடனடியாக மக்கள் தொகையை இப்பூமியில் கட்டுப்படுத்த வேண்டும். மக்கள் தொகைப் பெருக்கம் சுற்றுச்சூழலை அழிக்கின்றது.


சுற்றுச்சூழல் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நாம் நமது தொழில் நுட்பத்தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றை உடனடியாக மாற்ற வேண்டும். மனிதர்கள் "இயற்கையான நபர்கள்" ஆவர். நமது நுகர்வுக் கலாச்சாரத்தை மாற்ற வேண்டும். நமது "சூழலியல் தடம்" குறைக்கப்பட வேண்டும். இயற்கையை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். சுற்றுச்சூழல் மீது மனிதர்களின் தாக்கத்தை ஆழமாக, தத்துவமாக விவாதிப்பதால் இந்தக் கொள்கைக்கு ஆழச்சூழலியல் எனப் பெயரிடப்பட்டது.


புவி நமக்குச் சொந்தமானது கிடையாது. நாம் தான் புவிக்கு சொந்தமானவர்கள்.


ஆழச் சூழலியல் - மேலோட்டமான சூழலியல் கருத்து முரண்பாடுகள் 


ஆழச் சூழலியலின் எட்டு முக்கிய கருத்துகளின் சுருக்கம் 

1. புவியில் உள்ள எல்லா உயிரினங்களும் அடிப்படை மதிப்பை பெற்று இருக்கின்றன

2. இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களும் (சிறியவையோ, பெரியவையோ) புவியின் சிறப்பு தன்மைக்கு முக்கிய பங்கை ஆற்றுகின்றன.

3. மனிதர்கள் தங்களது அடிப்படை தேவைக்கு மட்டுமே மற்ற உயிரினங்களைப் பயன்படுத்த வேண்டும்.

4. உலகில் மனித மக்கள் தொகையை குறைப்பது மற்ற உயிரினங்களின் நலனுக்கு நல்லது ஆகும்

5. உலகில் மனிதனின் தலையீடு அதிகமாகவும், மோசமாகவும் உள்ளது

6. பொருளாதாரம், தொழில்நுட்பம், கொள்கை ஆகிய துறைகளில் மனிதனின் கொள்கைகள் உடனடியாக, தீவிரமாக மாற்றப்பட வேண்டும்.

7. வாழ்க்கையின் நிலையை விட வாழ்க்கை தரம் முக்கியமானது

8. மேற்கண்ட உண்மைகளை உணர்ந்த அனைவரும் மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

மேலோட்டமான சுழலியலின் எட்டு முக்கிய கருத்துகளின் சுருக்கம் 

1. புவியில் உள்ள அனைத்து உயிரினங்களும் மனிதனின் தேவைக்காக உள்ளன

2. சிறிய உயிரினங்களை விட மனிதன் போன்ற பெரிய உயிரினங்கள்தான் முக்கியமானவைகள் ஆகும்.

3. மனிதர்கள் எல்லா இயற்கை வளங்களையும், உயிரினங்களையும் தங்களது பொருளாதார நலனுக்காக பயன்படுத்தலாம்.

4. மனித மக்கள் தொகை கட்டுப்பாடு இன்றி வளரலாம்.

5. தொழில் நுட்ப வளர்ச்சி எல்லா சிக்கல்களையும் நீக்கும்

6. பொருளியல் வாதமும், நுகர் கலாச்சாரமும் மனித சமூகத்தை ஆள வேண்டும்.

7. மனிதனின் வாழ்க்கை நிலை உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும்

8. சுற்றுச்சூழல் பிரச்சனைகளை நிபுணர்களிடம் விட்டுவிட வேண்டும். அவர்கள் தீர்வுகளை வழங்குவார்கள். மற்றவர்கள் சூழலியப் பிரச்சனைகளில் தலையிடக் கூடாது.


சூழலியலும் அரசியல் கோட்பாடும்

ஆண்ட்ரு ஹேவுட் என்ற புகழ் பெற்ற அரசியல் அறிஞர் அரசியல் கோட்பாட்டியலில் சூழலியலை மூன்று வகையாக பிரித்தார்.

() சமூகச் சூழலியல் 

() நவீனச் சூழலியல் 

() ஆழச் சூழலியல்



() சமூகச் சூழலியல்

அமெரிக்க தத்துவ ஞானி முரே புக்சின் சமூக சூழலியல் என்ற கருத்தை உருவாக்கினார். சமூக சூழலியலில் மூன்று வித அணுகுமுறைகள் உள்ளன.

1. சூழலிய சமதர்மவாதம் 

2. சூழலிய அமைப்பெதிர்வாதம் 

3. சூழலியப் பெண்ணியம்

1. சூழலிய சமதர்மவாதம்

ருடால்ப் பரோ சூழலிய சோசலிசத்தை 'சிவப்பில் இருந்து பசுமைக்கு' (From Red to Green) என்ற நூலில் விவரித்தார். முதலாளித்துவத்தை இயற்கையின் எதிரியாக இந்த அணுகுமுறை பார்க்கின்றது. நுகர் கலாச்சாரத்தின் மூலமாக முதலாளித்துவம் இயற்கையை சீரழித்துவிட்டது. கட்டுபாடு இல்லாத சொத்துரிமை புவிக் கோளின் நலத்தையும் வளத்தையும் கெடுத்துவிட்டது.

அரசியலில் புதிய அணுகுமுறை வேண்டும். சமதர்மவாதமும், சூழலியிலும் ஒன்று சேர வேண்டும். சமதர்மவாதம் மட்டுமே சுற்றுச்சூழலைக் காப்பாற்றும். அரசுக்குச் சமதர்மவாத திசையையும், தன்மையையும் வழங்கி இயற்கையைக் காப்பாற்ற வேண்டும்.

2. சூழலிய அமைப்பெதிர்வாதம்

முர்ரே புக்சின் இந்த அணுகுமுறையை ஆதரித்தார். அதிகாரம் சூழலியலின் எதிரி என்று கூறினார். அரசு, மதம், குடும்பம் போன்ற போர்வையில் அதிகாரம் மனிதர்களை வாட்டிவதைக்கின்றது. மனிதனுடைய பரஸ்பர ஒத்துழைப்பு உணர்வை அதிகாரம் தடை செய்துள்ளது. இயற்கையாகவே மனிதன் பரஸ்பர ஒத்துழைப்புடன் வாழ்பவன். ஆகவே அதிகாரத்தை நீக்கி விட்டு பரஸ்பர ஒத்துழைப்புடன் புதியதோர் சமூகத்தை உருவாக்கி மனிதனையும் இயற்கையையும் காப்பாற்ற வேண்டும்.

3. சூழலியப் பெண்ணியம்

கரோலின் மெர்ச்சன்ட 'இயற்கையின் மரணம்' (The Death of Nature) என்ற நூலில் சூழலியப் பெண்ணியத்தை விவரித்தார். ஆணாதிக்கம் இயற்கையின் எதிரியாகும். பெண்ணியம் இயற்கையின் தோழி ஆகும். ஆணாதிக்கம் பெண்கள் மீது மட்டும் அல்ல, இயற்கையின் மீதும் ஆணின் ஆதிக்கத்தை உருவாக்குகின்றது. பெண்களையும், இயற்கையையும் பயன்பாட்டு பொருளாக பாவிக்கின்றது. பெண்களுக்கும் இயற்கைக்கும் உள்ள அடையாளம், மதிப்பு, உயிர் தன்மை ஆகியவற்றை ஆணாதிக்கம் மதிப்பதில்லை. ஆகவே பாலினச் சமத்துவம் மற்றும் இயற்கை சார்ந்த புதிய அரசியலை நாம் உருவாக்க வேண்டும்.


() நவீனச் சூழலியல்

மேலோட்டமான சூழலியல் அரசியல் அறிவியலில் நவீன சூழலியலாக அழைக்கப்படுகிறது. தாராளவாதத்திற்கும், இயற்கைக்கும் இடையில் சுற்றுச்சூழலைக் காப்பதற்காக தாராளவாதத்தைச் சிறிது திருத்தி அமைக்க வேண்டும் என்று நவீன சூழலியல் கூறுகின்றது. "அறிவொளி மனித முன்னிறுத்தல்" என்றகருத்தை ஆதரிக்கின்றது. அதாவது இந்த புவியின் எதிர்காலத்தையும் மனித குலத்தின் எதிர்காலத்தையும் மனதில் வைத்து மனிதன் செயல்பட வேண்டும். "தலைமுறைகளுக்கு இடையிலான நீதி" என்ற கருத்தையும் நவீனச் சூழலியல் ஆதரிக்கின்றது. அதாவது இந்த புவியை வருங்கால தலைமுறைகளிடம் இருந்து கடனாகப் பெற்று உள்ளோம். ஆகவே புவியை பாதுகாத்து வருங்காலத்தில் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். "நிலையான முன்னேற்றம்" என்ற கருத்தையும் நவீனச் சூழலியல் ஆதரிக்கின்றது. சீக்கிரமாக பணக்காரர் ஆக வேண்டும் என்பதை விட நிதானமாக பணக்காரர் ஆக வேண்டும். இதற்காக இயற்கையை நிதானமாக பயன்படுத்த வேண்டும் என்று நவீனச் சூழலியல் கூறுகின்றது.


() ஆழச் சூழலியல்

இயற்கைக்கு சாதகமான புது அரசியல் திட்டம் மற்றும் அரசியல் அனுகுமுறையை ஆழச் சூழலியல் வலியுறுத்துகிறது. அரசியலுக்கும், இயற்கைக்கும் இடையிலான உறவில் அடிப்படை மாற்றத்தை உருவாக்க வேண்டும். மனிதர்கள், பிற உயிரினங்கள் மற்றும் உயரற்ற பொருட்கள் ஆகியவைகளிடையே உள்ள தொடர்பை மதித்து, புரிந்துகொண்டு, காப்பாற்றும் அரசியல் வேண்டும்.


இந்தியாவின் சுற்றுச்சூழல் இயக்கங்கள்

நவீன முன்னேற்றம் இயற்கையைச் சீரழிப்பதால் பல்வேறு எதிர்ப்பு போராட்டங்கள் உலகம் முழுவதும் தோன்றியுள்ளன. நமது நாட்டிலும் சூழலையும் பல்லுயிர் அமைப்பையும் காப்பாற்றுவதற்காகப் பல சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் தோன்றின. அவைகளில் முக்கியமான நான்கு இயங்கங்களை நாம் இங்கு காணலாம்.

. பீஸ்நவ் இயக்கம் 

. சிப்கோ இயக்கம் 

. அப்பிக்கோ இயக்கம் 

. அமைதி பள்ளத்தாக்கு பாதுகாப்பு இயக்கம்


. பீஸ்நவ் இயக்கம் (Bisnau Movement):

பதினெட்டாவது நூற்றாண்டில் ராஜஸ்தானில் உருவான வெற்றிகரமான சுற்றுச்சூழல் இயக்கமே பீஸ்நவ் இயக்கமாகும். தார் பாலைவனத்தில் குரு ஜம்பேஸ்வர் என்ற ஞானி பீஸ்நவ் என்ற மதக் குழுவை இடைக்கால வரலாற்றில் உருவாக்கினார். 'பீஸ்நவ்' என்ற இந்தி மொழிச் சொல்லிற்கு '29' என்பது பொருளாகும். இயற்கையுடன் ஒன்றி வாழ வேண்டிய வாழ்க்கையை தனது 29 கோட்பாடுகள் மூலமாக விவரிப்பதால் பீஸ்நவ் என்று அழைக்கப்பட்டது.

ஜோத்பூர் மகாராஜா பதினெட்டாவது நூற்றாண்டில் ஒரு புதிய அரண்மனையை கட்டினார். கேஜர்லி கிராமத்தில் அரக்க மரம் நிறைந்த காடு உள்ளது. தனது அரண்மனைக்காக மரங்களை வெட்டி வருமாறு இராணுவத்தை அனுப்பினார். அம்ரிதா தேவி என்ற பெண்மணி மரங்களை வெட்டக்கூடாது என்று போராட்டம் செய்தார். மரத்தை வெட்டுவதற்கு பதிலாக தனது தலையை வெட்டுங்கள் என்று கூறினார். இராணுவம் அவரது தலையை துண்டித்தது. கிராம மக்கள் அனைவரும் வனத்தை காப்பாற்றுவதற்காக தங்களது உயிரைக் கொடுத்தனர். மொத்தம் 363 கிராம உறுப்பினர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட மகாராஜா உடனடியாக தனது இராணுவத்தைத் திரும்ப பெற்றார். அப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வனம் என்று அறிவித்தார். பீஸ்நவ் கேஜர்லி இயக்கம் நவீன இந்தியாவின் முதல் வெற்றிகரமான சுற்றுச்சூழல் இயக்கமாகும்.

குறிப்பிடத்தக்க மேற்கோள்

வெட்டப்பட்ட மரத்தைவிட வெட்டுண்ட மனித உயிர் முக்கியமானது அல்ல.


. சிப்கோ இயக்கம் (Chipko Movement):

உத்தரகண்ட் மாநிலத்தில் 1973-ஆம் ஆண்டு நடைபெற்ற அமைதியான சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமே சிப்கோ இயக்கமாகும். இந்தியில் 'சிப்கோ' என்றால் 'கட்டிப்பிடி' என்று பொருள்படும். விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் கம்பெனி, அலக்நந்தா பள்ளத்தாக்கில் மரங்களை வெட்டுவதற்காக அரசு அனுமதி பெற்று வந்தது. மரங்களை வெட்டக்கூடாது என்று அப்பகுதி மக்கள், முக்கயமாக பெண்கள் அமைதியாக போராடினார்கள். 'தஸோலி கிராம ஸ்வராஜ்ய மண்டல்' (DGSM) என்ற அரசு சாரா அமைப்பும் அதன் தலைவர் சந்திபிரசாத் பட் அவர்களும் போராடினார்கள்.

புகழ் பெற்ற சுற்றுச் சூழல் வாதியான சுந்தர்லால் பகுகுணா போராட்டத்தில் குதித்தார். பெரும் அளவில் பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். தூம்சிங் நெகி, பச்னி தேவி போன்ற பெண் தலைவர்கள் மக்களின் வன உரிமைக்காக போராடினார்கள். 1980-ஆம் ஆண்டு முதல் இமயமலை வனப்பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு மத்திய அரசு தடைவிதித்து. பெண்ணியம், காந்தியம், சுற்றுச் சூழலியம் ஆகிய மூன்று கொள்கைகளை சிப்கோ இயக்கத்தில் நாம் காணலாம்.



. அப்பிக்கோ இயக்கம் (Appiko Movement):

மேற்குத் தொடர்ச்சி மலையில், கர்நாடகாவின் உத்திர கன்னட மாவட்டத்தில் நடைபெற்ற இயக்கமே அப்பிக்கோ இயக்கமாகும். அப்பிக்கோ என்றால் கன்னட மொழியில் 'கட்டிக்கோ' என்று பொருளாகும். இம்மாவட்டத்தில் தொழிற்சாலைகள் பெருகியதால் 1950-ஆம் ஆண்டு 81% இருந்த வனப்பரப்பு 1980-ஆம் ஆண்டு 24% ஆக குறைந்தது. சூற்றுச்சூழல் ஆர்வமுள்ள மக்கள் மரங்களை கட்டி அணைத்து போராட்டம் நடத்தினர். எஞ்சிய காடுகளைக் காப்பாற்றுதல், அழிக்கப்பட்ட காடுகளை உருவாக்குதல், நல்ல முறையில் வளங்களைப் பயன்படுத்தும் விழிப்புணர்வை உருவாக்குதல் ஆகிய மூன்று நோக்கங்களை அப்பிக்கோ இயக்கம் ஆதரித்தது. மரங்களை கட்டி அணைத்துக் காப்பாற்றியதால் அப்பிக்கோ இயக்கம் என்று பெயர் வந்தது.


. அமைதி பள்ளத்தாக்கு பாதுகாப்பு இயக்கம்

அமைதிப் பள்ளத்தாக்கு என்பது கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது. பசுமை மாறாக் காடுகள் இங்கு உள்ளன. ஆங்கிலத்தில் Silent Valley (அமைதிப் பள்ளத்தாக்கு) என்று அழைக்கப்படுகிறது. மகாபாரதத்தில் பாண்டவர்களின் மனைவியான திரௌபதிக்கு 'சைரந்திரி' என்று மற்றொரு பெயர் உள்ளது. இவ்வனப்பகுதி அவர்களின் நினைவாக சைரந்திரி வனம் என்று அழைக்கப்பட்டது. காலனிய ஆட்சியில் அந்த வனப்பகுதிக்கு ஆங்கிலேயர்கள் சென்றபோது அமைதியான வனமாக அது இருந்தது. வனத்தில் சத்தத்தை தொடர்ச்சியாக உருவாக்கும் சிகாடஸ் பூச்சிகள் அங்கு இல்லாததால் வனம் அமைதியாக இருந்தது என்று ஆங்கிலேயர் அதற்கு அமைதிப் பள்ளத்தாக்கு என்று பெயரிட்டனர்.

அந்தப் பள்ளத்தாக்கில் பல்லுயிர்கள் அதிகம் உள்ளன. சிங்கவால் குரங்குகள் அதிகம் காணப்படுகின்றன. சிங்கவால் குரங்கின் அறிவியல் பெயர் 'மகாகாசைலேனஸ்' என்பதாகும். இதனால் தான் அது 'சைலண்ட் வேலி' என்று அழைக்கப்படுகிறது என்பதும் ஒரு வாதமாகும். கேரள மாநில மின்சாரத்துறை 1970-களில் மின்சாரம் தயாரிப்பதற்காக அவ்வனத்தில் உள்ள குந்திப்புழா என்ற நதியில் அணைகட்டத் தொடங்கியது.

KSSP என்ற 'கேரள சாஸ்திர சாகித்ய பரிசத்' அமைப்புச் சுற்றுச்சூழல் போராட்டத்தை இந்த அணைக்கு எதிராக நடத்தியது. அணைகட்டினால் அமைதிப் பள்ளத்தாக்கு அழிந்துவிடும் என்ற பெரிய போராட்டம் நடைபெற்றது. பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் குதித்தனர். ஆகவே 1980-ஆம் ஆண்டு கேரளா மாநில அரசாங்கம் அணைகட்டும் திட்டத்தைக் கைவிட்டது. 1985ஆம் ஆண்டு மத்திய அரசாங்கம் இப்பகுதியை தேசிய பூங்காவாக அறிவித்தது. பின்னர் இப்பகுதி 'நீலகிரி உயிர்க்கோள இருப்பாக' அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிப் பள்ளத்தாக்கு பாதுகாப்புப் போராட்டம் 20வது நூற்றாண்டின் மிகச்சிறந்த இந்திய சுற்றுச்சூழல் இயக்கமாக கருதப்படுகிறது.

Tags : Political Ideologies அரசியல் கொள்கைகள்.
11th Political Science : Chapter 8 : Political Ideologies - Part-II : Environmentalism Political Ideologies in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 9 : அரசியல் கொள்கைகள் - பகுதி II : சுற்றுச்சூழலியல் - அரசியல் கொள்கைகள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 9 : அரசியல் கொள்கைகள் - பகுதி II