அரசியல் கொள்கைகள் - அமைப்பெதிர்வாதம் (Anarchism) | 11th Political Science : Chapter 8 : Political Ideologies - Part-II
அலகு 9
அரசியல் கொள்கைகள் - பகுதி II
கற்றலின் நோக்கங்கள்
❖ அமைப்பெதிர்வாதம் கொள்கையின் பொருள், தன்மைகள், வகைகள் மற்றும் சிந்தனையாளர்களைப் புரிந்து கொள்ளுதல்.
❖ பெண்ணியத்தின் பொருள் தோற்றம் மற்றும் வகைகளை - அறிந்து கொள்ளுதல்.
❖ பெண்கள் முன்னேற்றத்திற்கு இந்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை அறிதல்.
❖ சமுதாயவாதத்தின் தோற்றம், சிந்தனையாளர்கள் மற்றும் முக்கியத் தன்மைகளைப் பற்றிய தெளிவைப் பெறுதல். மனிதன், சமூகம், உரிமைகள், நீதி ஆகியவற்றைப் பற்றி சமுதாய வாதம் கூறியதை ஆய்வு செய்தல்.
❖ பின் நவீனத்துவ கொள்கையின் பொருள், சிந்தனையாளர்களைப் படித்தல். உண்மைகள், தனித்தன்மை, அடையாள அரசியல் ஆகியவற்றைக் குறித்து பின் நவீனத்துவத்தின் கருத்துக்களை ஆய்தல்.
❖ ஆழச் சூழலியல், மேலோட்டமான சூழலியல், சூழலிய அரசியல் கோட்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படைக் கருத்துகளை புரிந்து கொள்ளுதல்.
❖ இந்தியாவின் முக்கியமான சுற்றுச் சூழல் இயக்கங்களை அறிந்து கொள்ளுதல்.
மனிதனுடைய அடிப்படை குணமாகிய பரஸ்பர ஒத்துழைப்புடன் சுய ஆட்சி முறையை வலியுறுத்தும் அரசியல் கொள்கைக்கு 'அமைப்பெதிர்வாதம்' என்பது பெயராகும். இந்த தத்துவத்தின் ஆங்கிலப் பெயர் 'ANARCHISM' கிரேக்க மொழிச் சொல்லான ANARCHOS-இல் இருந்து தோன்றியது. அமைப்பெதிர்வாதம் என்பது இதன் பொருளாகும். பியரிஜோசப் பிரௌதான் இலாபத்தை திருட்டு என வர்ணித்தார். இத்தத்துவத்தை முதன் முதலில் ஆதரித்தவர்களில், பியரிஜோசப் பிரௌதான் முக்கியமானவர் ஆவார்.
அதிகாரம் இருக்கும் இடத்தில் விடுதலை இருக்காது. - பீட்டர் கிரோபோட்கின்
இரஷ்யாவின் சிந்தனையாளரான கிரோபோட்கின், ஃபிரான்ஸ் நாட்டின் அமைதி சிந்தனையாளரான லியோ டால்ஸ்டாய் ஆகியோர் இக்கொள்கையை ஆதரித்தனர்.
எல்லா வகையான அதிகாரங்களையும் அகற்ற வேண்டும். மனிதர்களை, அரசு, தனி சொத்துரிமை, மதம் ஆகியவைகளின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும். மனிதரின் பரஸ்பர ஒத்துழைப்பு அடிப்படையில் புதிய முறையைப் படைக்க வேண்டும் என்று அதிகாரம் இல்லா கொள்கை கூறுகிறது.
அமைப்பெதிர்வாதம் அரசை ஒரு தேவையற்ற தீமையாக கருதுகின்றது. மக்களின் உரிமையை பாதித்து தார்மீக முன்னேற்றத்தைத் தடுப்பதால் அரசு ஒரு தீமையாகும். அரசினால் எந்த பயனும் இல்லை. அது தேவையற்ற ஒன்றாகும். எந்த பணியையும் அது செய்யாததால் அதனை உடனே அழிக்க வேண்டும் என்று இக்கோட்பாடு கூறுகின்றது.
அமைப்பெதிர்வாதம் குழப்பத்தையும் ஒற்றுமையின்மையையும் உருவாக்கவில்லை. இது ஒழுங்கு மற்றும் ஒற்றுமையை கொண்டுவர முயற்சிக்கின்றது. மனிதர்கள் இயற்கையாகவே கூட்டுறவு சிந்தனை கொண்டவர்கள் ஆவர். பரஸ்பர ஒத்துழைப்பை உடையவர்கள் ஆவர். அரசு என்பது ஒரு செயற்கையான அமைப்பு ஆகும். மனிதனின் ஒத்துழைப்பு குணத்தை அது அழிக்கின்றது. மனிதனின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் பாதிக்கின்றது. ஆகவே அமைப்பெதிர்வாதம் அரசை அழித்துவிட்டு சுய விருப்பம் அடிப்படையில் ஒத்துழைப்பை ஆணி வேராக கொண்ட புதிய சமுதாயத்தை படைக்க வேண்டும் என்று கூறுகின்றது. ஒவ்வொரு ஆணும் பெண்ணும் மகிழ்ச்சியுடன் பொது வாழ்க்கையில் பங்கேற்பார்கள்.
அமைப்பெதிர்வாதம் ஆட்சி இல்லா சமூகத்தை ஆதரிக்கவில்லை. ஆட்சியாளர்கள் இல்லா சமூகத்தைத்தான் ஆதரிக்கின்றது. அமைப்பெதிர்வாதம் சுய உரிமை மற்றும் சுய நிர்ணயம் ஆகிய கோட்பாடுகளை ஆதரிக்கின்றது. ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் சுய நிர்ணய உரிமையைப் பெற்றிருக்கிறான். அதைப் போலவே ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தனது உடல் மற்றும் உயிர் மீது உரிமை பெற்று இருக்கிறார்கள். அரசு இந்த இரண்டு கோட்பாடுகளையும் மீறுவதால் நாம் அதை அகற்ற வேண்டும் அமைப்பெதிர்வாதம் அரசை மட்டும் அல்ல, குடும்பம், மதம் ஆகிய சமூக அமைப்புகளையும் எதிர்க்கின்றது. சில தத்துவ ஞானிகள் தனி சொத்துரிமையை எதிர்க்கின்றனர்.
அரசை ஒழிக்க வேண்டும் என்று மார்க்சிசம் கூறுவது போலவே அமைப்பெதிர்வாதம் கூறுகின்றது. இருந்தபோதிலும் மார்க்ஸியத்திற்கும் அமைப்பெதிர்வாதத்திற்கும் வேறுபாடுகள் உள்ளன. அமைப்பெதிர்வாதம் அரசை உடனே அழிக்க வேண்டும் என கூறுகின்றது. ஆனால் மார்க்சியம் சமதர்மவாத சமூகம் தோன்றிய பிறகு தானாகவே அரசு உதிர்ந்து போய்விடும் என்று கூறுகின்றது.
ஜெரார்ட் கசேய் 21-ஆம் நூற்றாண்டில் அமைப்பெதிர்வாதத்தை ஆதரித்தார். அரசை அவர் குற்றவாளி நிறுவனம் என்று வர்ணித்தார். அரசு இல்லா சமூகங்களைப் புதிதாக உருவாக்க வேண்டும் என்று கூறினார்.
தத்துவ அமைப்பெதிர்வாதம், சமதர்ம அமைப்பெதிர்வாதம், புரட்சிகர அமைப்பெதிர்வாதம், புதுத் தாராளவாத அமைப்பெதிர்வாதம் என்று பல உட்பிரிவுகளைக் கொண்டுள்ளன. இவற்றிடையே பல வேறுபாடுகள் உள்ளன. இவை பெரும்பாலும் அரசை அகற்ற வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் புதுத்தாராளவாத அமைப்பெதிர்வாதக் கோட்பாடு, அரசை அகற்ற வேண்டாம், அதனுடைய அதிகாரத்தை குறைத்தால் போதும் என்கின்றது.
அமைப்பெதிர்
❖எல்லா வகையான அதிகாரங்களும் தேவையற்றது, விரும்பத்தகாதது. ஆகவே மனிதர்கள் மற்றும் குழுக்களின் ஒருங்கிணைப்பால் பரஸ்பர ஒத்துழைப்புடன் புதியதோர் சமுதாயத்தை படைக்க வேண்டும்.
❖அமைப்பெதிர் குழப்பமாகாது அமைப்பெதிர் அராஜகம் ஆகாது.
❖அமைப்பெதிர் சுய உரிமை கோட்பாட்டின்படி வாழ்க்கையை மேற்கொள்வதாகும்.
❖அமைப்பெதிர் ஆதரவாளர்கள் எவ்வித விதிவிலக்கும் இல்லாமல் அதிகார அத்துமீறல்களை எதிர்ப்பவர்கள் ஆவர்.
பல்வேறு, தத்துவ ஞானிகள் அமைப்பெதிர்வாதக் கொள்கையை விமர்சிக்கிறார்கள். மனிதனின் இயற்கை குணத்திற்கு எதிரானது என்று கூறுகிறார்கள். அதனுடைய கருத்துக்கள் ஆழமற்றவை என்றும் விமர்சிக்கிறார்கள். மனிதனுடைய சுயநல குணத்தை அவர்கள் பார்க்கத் தவறிவிட்டார்கள். எல்லா மனிதர்களும் பரஸ்பர ஒத்துழைப்புடன் இருக்கின்றனர் என்று கூற முடியாது. சந்தர்ப்பங்களால் ஈர்க்கப்பட்டு சுயநலமாக அவர்கள் செயல்படலாம். அரசு இல்லா சமுதாயம் பல பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும். பயங்கரவாதம், வலைதளக் குற்றங்கள், சுற்றுசூழல் மாசுபாடு ஆகியவைகள் மனிதகுலத்தை வாட்டி வதைக்கக்கூடும். அரசு இல்லாவிட்டால் தீவிரவாத குழுக்கள் அணு ஆயுதங்களைக் கைப்பற்றி உலகத்தையே அழித்துவிடுவார்கள்.