அரசியல் கொள்கைகள் - சமுதாயவாதம் | 11th Political Science : Chapter 8 : Political Ideologies - Part-II
சமுதாயவாதம்
சமுதாயவாதம் ஓர் அரசியல் கோட்பாடாக 1980 - களில் தோன்றியது. மைக்கேல் சாண்டர் என்னும் அறிஞர் "தாராள வாதமும் நீதியின் எல்லைகளும்" (Liberalism and the Limits of Justice) என்ற நூலை எழுதினார். அந்நூலில் புதுத் தாரளவாதத்தையும் ஜான் ரால்ஸ் அவர்களின் நீதி கோட்பாட்டையும் அவர் விமர்சித்தார்.
1840-களில் ஆங்கிலேய அறிஞரான குட்வின் பார்மி Communitarian (சமூகவாதி) என்ற சொல்லை உருவாக்கினார். இருந்தபோதிலும் சமூதாய வாதம் 20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் முழு வடிவம் பெற்றது.
சமுதாயவாதம், தாரளவாதத்தையும் மார்க்கிசியத்தையும் எதிர்த்து தோன்றியது. சமுதாயவாதமானது, தாராளவாதம் தனி நபர்களுக்கு அதிக,தேவையற்ற முக்கியத்துவம் வழங்குவதாக குற்றம் சாட்டியது. சமுதாய வாதம் மார்க்சியித்தையும் வகுப்புவாதம் என நிராகரித்தது. தாராளவாதம் உலகில் பெரும் பகுதிகளில் பின்பற்றப்பட்டதால் சமுதாய வாதம் அதனை அதிகமாக விமர்சித்தது.
சமுதாயவாதம் மனிதன் வெற்றிடத்தில் பிறப்பதில்லை என வாதிடுகின்றது. மனிதன் ஒரு கலாச்சார, சமூக விலங்கு ஆகும். மனிதன் குறிப்பிட்ட சமுதாயத்தில் கலாச்சாரத்தில் பிறக்கின்றான். மனிதனுடைய நம்பிக்கை, நடத்தை, திறன்கள், திறமைகள், அணுகுமுறைகள் எல்லாம் அவனுடைய சமுதாயத்தால் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு நபரும் சமுதாயம் வழங்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்கிறார்கள். மனிதன் அணுவைப் போல தனியாக வசிப்பதில்லை. சமுதாயத்துடன் பின்னி பிணைந்து வாழ்கிறான். மனிதன் சமுதாயத்திலிருந்து முற்றிலும் சுதந்திரமாக தடையில்லாமல் இயங்குவதில்லை (Not unencumbered Self). மாறாக அவன் சமுதாயத்தில் வேரூன்றி இருக்கிறான் (Situated Self).
உங்களுக்குத் தெரியுமா?
இராபர்ட் டி. புட்னம் என்ற அறிஞர் சமுதாய வாதம் தோன்றுவதில் முக்கிய பங்காற்றினார். பௌலிங் எனப்படும் விளையாட்டை புட்னம் ஆய்வு செய்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பான்மையான அமெரிக்கர்கள் பௌலிங் விளையாடினார்கள். தங்களிடையே சமூக தொடர்புகள், அறிவு, திறமைகள் ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதற்கு பௌலிங் விளையாட்டை பயன்படுத்திக் கொண்டனர்.
நாளடைவில் தொலைக்காட்சி, வலைத்தளம் போன்ற புதிய வசதிகள், பொழுதுப் போக்கு கருவிகள் தோன்றின. அதிகமாக இந்த புதிய தொழில்நுட்ப பொழுதுப்போக்குகளில் மக்கள் ஆர்வம் செலுத்தினர். பௌலிங் விளையாட்டு மக்களிடையே செல்வாக்கை இழந்தது. மக்களின் சமூக நடவடிக்கைகள், தொடர்புகள் மறையத் தொடங்கின. காலப் போக்கில் அரசியல் ஆர்வமும் மக்களிடையே குறைந்தது. மக்களாட்சியின் வலிமையை குறைக்கும் வகையில் மக்களின் அரசியல் ஆர்வமின்மை பெரிதானது. மக்களாட்சி வலுவாக இருக்க வேண்டும் என்றால் மக்களிடையிலான சமூகத் தொடர்புகள் அதிகமாக வேண்டும்.
எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் பிறக்கும், வசிக்கும் குழந்தை தமிழ் மொழியில் சரளமாக பேசுகின்றது. ஜப்பானில் பிறந்து, வசிக்கும் குழந்தை ஜப்பானிய மொழியில் சரளமாக உரையாடுகின்றது. கணினித் தொழில்நுட்பம் நிறைந்த நாட்டில் வாழும் மனிதர் கணினி நிபுணராக உருவாகிறார். அதே சமயத்தில் தகவல் தொழில்நுட்பம் முன்னேறாத நாடுகளில் வசிக்கும் நபர் அத்துறையில் நிபுணராக பெரும்பாலும் இருப்பதில்லை .
அரசுக் கோட்பாடு
பொது நலனை மேம்படுத்தும் கருவியே அரசு என்று சமுதாயவாதம் கூறுகின்றது. பொது நலன் என்ற கருத்து எல்லா சமுதாயத்திலும் உள்ளது. ஒவ்வொரு சமுதாயமும் நோக்கங்கள், இலட்சியங்கள், நடவடிக்கைகளை எல்லோருடைய அடிப்படை முன்னேற்றத்திற்காக உருவாக்குகின்றன. பொது நலனை மேம்படுத்துவதற்காக இவைகள் தோற்றுவிக்கப்படுகின்றன. அரசு பொது நலனை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபடுகின்றது. பொது நலனை சிதைக்கும் நடவடிக்கைகளை அது தடை செய்கின்றது. மேலும் சமுதாயவாதம் மக்களாட்சி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆதரிக்கின்றது. சமுதாயத்தின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கும், சமுதாயத்தின் மீது பொறுப்புணர்வு கொண்ட அரசு தான் நல்ல அரசு என்று சமுதாயவாதம் கூறுகின்றது.
உரிமைகள் கோட்பாடு
உரிமைகளும் கடமைகளும் நெருங்கிய தொடர்புடையவை என்று சமுதாயவாதம் கூறுகின்றது. தாரளவாதத்தின் தனிநபர் சுய ஆட்சி மற்றும் உரிமைகள் மீது கொண்டுள்ள அளவு கடந்த பற்றை சமுதாயவாதம் விமர்சிக்கின்றது. மாறாகச் சமுதாயத்தின் நலன் தான் முக்கியமாகும் என்று கூறுகிறது. சமூக, பொது நலனுக்காகத் தனி நபர் உரிமைகளைக் கட்டுப்படுத்தலாம் என சமுதாயவாதம் வாதிடுகிறது. ஒவ்வொரு மனிதனும் தனது நலன் பற்றிய சிந்தனையைப் பெற்றிருக்கலாம், ஆனால் பொது நலன் என்ற கருத்துக்கு அடிபணிந்து இயங்க வேண்டும்.
'நேர்மறை உரிமைகள்' என்ற புதிய கருத்தை சமுதாயவாதம் ஆதரிக்கின்றது. அரசு மானியத்துடன் கல்வி, வீடு வசதி, பாதுகாப்பான சுற்றுச்சூழல், எல்லோருக்கும் சுகாதாரம் போன்ற உரிமைகளை சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் வழங்குவது அரசின் கடமையாகும்.
சமுதாயவாதம் ஜான் ரால்ஸின் நீதிக் கோட்பாட்டை நிராகரிக்கின்றது. நீதி என்பது உலகளாவியது. ஏனென்றால் அது மனிதனில் பகுத்தறிவில் உருவாகிறது என்ற ஜான் ரால்ஸின் கருத்தை சமுதாயவாதம் ஏற்கவில்லை . உலகம் முழுவதும் பொருந்தக் கூடிய நீதிக் கோட்பாடு என்று ஒன்று இல்லை. ஒவ்வொரு சமுதாயமும் தனக்கென நீதிக் கோட்பாட்டை உருவாக்கிக் கொண்டுள்ளது. சமுதாயத்திற்கு சமுதாயம் நீதிக் கோட்பாடு மாறுபடும் என்று சமுதாயவாதம் கூறுகின்றது.
சுருக்கமாக கூறினால், சமுதாயவாதம் மனிதனின் வாழ்க்கையில் சமுதாயம் இன்றியமையாதது என வாதிடுகின்றது. சமுதாயத்தில் 'பொருத்தப்பட்ட மற்றும் அமைக்கப்பட்ட மனிதன்' (Situated and Embedded Man) என்ற கருத்து சமுதாயவாதத்தின் ஆணி வேராக உள்ளது. அரசு மக்களுக்கு நேர்மறை உரிமைகளை வழங்கிப் பொதுநலனை மேம்படுத்த வேண்டும், பாதுகாக்க வேண்டும். ஆனால் சமுதாயவாதம் வருங்காலத்தில் சமூக அல்லது கூட்டு சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் எனக்கூறி தாராளவாதம் எதிர் விமர்சனம் செய்கிறது.