அரசியல் கொள்கைகள் - பெண்ணியம் | 11th Political Science : Chapter 8 : Political Ideologies - Part-II
பெண்ணியம்
பெண்களும் மனிதர்களே என்ற தீவிர கருத்துக்குப் பெயர் தான் பெண்ணியம்
ஆணிற்கும், பெண்ணிற்கும் உள்ள சமத்துவத்தையும் முழு மனிதத்துவத்தையும் கண்டு கொள்பவர் தான் பெண்ணியவாதி ஆவார். -குளேரிஸ்டீபன்
பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடக்கூடிய இயக்கங்களுக்கும் கொள்கைக்கும் பெண்ணியம் என்பது பெயர் ஆகும். ஆண், பெண் சமத்துவத்தை பெண்ணியம் ஆதரிக்கின்றது. நவீன அரசியல் கோட்பாட்டியலில் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பெண்ணியம் தோன்றியது. அறிவியல் ரீதியாக ஆணும் பெண்ணும் சமம் என்று நிரூபிக்கப்பட்டதால் பெண்ணியம் தோன்றியது.
பல்வேறு பெண்ணியக் கொள்கைப் பள்ளிகள், அரசியல் அறிவியலில் காணப்படுகின்றன.
1. தாராளவாதப் பெண்ணியம்
2. மார்க்சியவாதப் பெண்ணியம்
3. தீவிரப் பெண்ணியம்
4. சுற்றுச்சூழல் பெண்ணியம்
5. பின் காலனியப் பெண்ணியம்
முதல் கட்ட பெண்ணியமானது 19-ஆம் நூற்றாண்டில் தோன்றியது. ஆண்களுக்கு நிகரான அரசியல் உரிமைகளைப் பெண்களுக்கும் கோரியது. பெண்கள் அடிமையாக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வாக்குரிமை உள்ளிட்ட அரசியல் உரிமைகள் வழங்கப்பட்டால் பெண்களை ஆண்களுக்கு நிகராக முன்னேற்ற முடியும். அரசு ஆணையும், பெண்ணையும் சமமாக பார்க்கும் ஒரு கருவியாகும். இயற்கையாகவே பெண்களுக்கு எதிரானது அரசு கிடையாது. தாராளவாதப் பெண்ணியம் மேற்கத்திய மக்களாட்சி நாடுகளில் பெண்களுக்கு சமமான வாக்குரிமை பெற்றுத்தந்து மிகப்பெரிய சாதனை செய்தது.
2. மார்க்சியவாதப் பெண்ணியம்
மனிதர்களிடையே சொத்துரிமை தோன்றியதால் தான் பெண்கள் அடிமையாக்கப்பட்டனர். மனித வரலாற்றின் இரண்டாவது காலகட்டமாகிய பண்டைய கால அடிமை முறையில் தான் தனிசொத்துகள் தோன்றின. காரல் மார்க்சின் நண்பரான பிரெட்ரிக் ஏங்கல்ஸ் "குடும்பம், தனி சொத்துகள் மற்றும் அரசின் தோற்றம்" என்ற நூலை எழுதினார். தனிசொத்துகள் தோன்றிய பிறகு ஆண்கள் ஆதிக்கம் செலுத்தினர், பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டனர் என்று அவர் கூறினார். பொதுவுடைமைவாத புரட்சி வர வேண்டும், புரட்சி மூலம் தொழிலாளர்களும் விடுதலை பெறுவார்கள், பெண் இனமும் விடுதலை பெறும், ஆண்களிடம் தனிசொத்துகள் இருக்காது, செல்வங்கள் எல்லாம் எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் என்று கூறினார்.
பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில் எந்தவித ஏற்றத்தாழ்வும் கிடையாது. பெண்கள் ஆண்களால் சுரண்டப்படுகிறார்கள், ஏமாற்றப்படுகிறார்கள் என்று தீவிரப் பெண்ணியம் கூறுகிறது.
சைமன்டி பீவர் "இரண்டாவது பாலினம்" என்ற நூலை எழுதினார். "பெண்கள் பிறப்பது கிடையாது, உருவாக்கப்படுகிறார்கள்" என்ற கருத்தை இவர் வலியுறுத்தனார். பிறக்கும் பொழுது ஆணும், பெண்ணும் சமமான திறமைகளை பெற்றிருக்கின்றனர். ஆணாதிக்க சமுதாயமும், கலாச்சாரமும் பிரச்சாரங்கள் மூலம் பெண்களை அடிமைப்படுத்துகிறது.
ஆணாதிக்கம் இயற்கைக்கும், நீதிக்கும் எதிராகப் பெண்களை அடிமைப்படுத்துகிறது. உலக முழுவதும் பல்வேறு கலாச்சாரங்கள் பெண்களுக்குப் பலவகையான மதிப்பை வழங்குவது இக்கருத்துக்கு சாட்சி ஆகும்.
கரோல் ஹானிஸ்க் என்ற புகழ்பெற்ற பெண்ணியவாதி "தனிப்பட்ட வாழ்விலும் அரசியல்" (The Personal is Political) என்ற முழக்கத்தின் மூலம். ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துவதை விளக்கினார். மனிதர்களின் வாழ்க்கையை இரண்டு தளங்களில் ஆண்கள் பிரித்திருக்கிறார்கள். தனிவாழ்க்கை மற்றும் பொது வாழ்க்கை. தனிவாழ்க்கை குடும்பம் சம்பந்தப்பட்டதாகும். இங்கு அன்பும், பாசமும் நிறைந்திருக்கும் போட்டி, பொறாமை இருக்காது.
குடும்பத் தளத்தில் பெண்கள் வசிக்கிறார்கள், இங்கு அரசியல் கிடையாது, மாறாக பொது வாழ்க்கையில் போட்டி, பொறாமை நிறைந்திருக்கும். ஆண்கள் இதில் பங்கேற்கிறார்கள். அரசியல் மற்றும் அதிகாரப் போட்டியில் ஆண்கள் ஈடுபடுகின்றனர். இக்கருத்துக்களை கரோல் ஹானிஸ்க் நிராகரிக்கின்றார். பொது வாழ்வில் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்விலும் போட்டி, பொறாமைகள் உள்ளன. கணவன், மனைவி உறவுகளில் கூட அதிகாரம், போட்டி, இருக்கலாம். தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் பெண்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் அரசியல், அதிகாரத்தை பற்றி பேச வேண்டும். ஆண்களுக்கு இணையான அதிகாரத்தை பெண்கள் பெற வேண்டும். ஆகவே தனிப்பட்ட வாழ்விலும் அரசியல் உள்ளது என்று அவர் கூறினர்.
4. சுற்றுச்சூழல் பெண்ணியம்
இயற்கையையும், பெண்களையும் ஆணாதிக்கும் ஏமாற்றுகிறது. சுற்றுச் சூழல் பெண்ணியத்தின் முக்கிய சிந்தனை சிற்ப்பிகள் பிரான்கோஸ் டி எபோன்னே, ரோஸ்மேரி ரூதர், நேஸ்ரா கிங் மற்றும் வந்தனா சிவா ஆவார்கள்
சுற்றுச்சூழல் பெண்ணியம்
"நாம் பெண்கள் தலைமையில் புவியில் அமைதியான வருங்காலத்தைப் பெறுவோம் அல்லது நமக்கு வருங்காலம் என்ற ஒன்றே இல்லாமல் போகும்”. - வந்தனா சிவா
இரண்டு வகையான சுற்றுசூழல் பெண்ணிய கருத்துகள் உள்ளன. ஒன்று தீவிரப் பெண்ணியம், இரண்டாவது, கலாச்சாரப் பெண்ணியம். தீவிரப் பெண்ணியம் ஆணாதிக்கத்தை அழித்தால் தான் இயற்கையையும், பெண்களையும் காப்பாற்ற முடியும் என்று கூறுகிறது.
கலாச்சாரப் பெண்ணியம் உணவு தயாரிப்பதிலும், இனத்தைப் பெருக்குவதிலும் பெண்கள் இயற்கைக்கு நெருக்கமானவர்கள் என்று கூறுகிறது. இயற்கை சீரழிவால் ஆண்களை விடப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மனித வாழ்க்கையில் வேலைப் பங்கீடு முறையால் இயற்கை சீரழியும் பொழுது பெண்களுக்குத்தான் அதிக இன்னல்கள் தோன்றுகின்றன. இயற்கையையும் பெண்களையும் பாதுகாக்க வேண்டும்.
பின் காலனி ஆதிக்கப் பெண்ணியம் 1980 களில் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இயக்கமாகவும், தத்துவமாகவும் தோன்றியது. ஆட்ரி லார்டு என்ற பெண்ணியவாதி பின் காலனி ஆதிக்கப் பெண்ணியத்தை தோற்றுவித்தார். "நிபுணரின் கருவிகள் நிபுணரின் வீட்டை ஒருபோதும் உடைக்காது" (The Mater's Tools Will Never Dismantle the Master's House) என்ற முக்கிய நூலை எழுதினார். யாத்திரி ஸ்பிவாக், சந்தரா தல்பதே மொகந்தி, எதல் க்ராலே ஆகியோர் பின் காலனி ஆதிக்கப் பெண்ணிய வாதிகள் ஆவர்.
ஆட்ரிலார்டு கூறினார். "எல்லா பெண்களும் ஒரே மாதிரியான அடக்குமுறையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறக்கூடாது. அவ்வாறு நினைத்தால் ஆணாதிக்கத்தின் பலவகையான தன்மைகளை நாம் பார்க்கத் தவறிவிடுவோம். எவ்வாறு ஆணாதிக்க கருவிகள் பயன்படுத்தப்படுகிறது என்ற விழிப்புணர்வு இல்லாமல் பெண்கள் இருப்பார்கள். வெள்ளைக்கார ஆணாதிக்கத்தில் ஆப்பிரிக்க, அமெரிக்கப் பெண்ணாக நான் சந்தித்த சோதனைகள், அனுபவங்கள் தவறாக சித்தரிக்கப்படுகின்றன, சிறுமைப்படுத்தப்படுகின்றன."
பின் காலனி ஆதிக்கப் பெண்ணியம் மேற்கத்தியப் பெண்ணிய இயக்கங்களின் கருத்துகளை எதிர்க்கிறது. அவர்களின் அனுபவங்களை உலகம் முழுவதும் உள்ள பெண்களின் அனுபவம் என்று சித்தரிப்பதை இது எதிர்க்கிறது, உலகம் முழுவதும் பெண்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை . வர்க்கம், இனம், மதம், நாடு போன்ற காரணிகளால் பெண்களிடையே பல வேறுபாடுகள் உள்ளன. மேற்கத்தியப் பெண்ணிய கருத்துக்கள் உலகின் பிற பகுதிகளில் உள்ள பெண்களின் நிலையைப் பிரதிபலிப்பதில்லை . ஆசிய, ஆப்பிரிக்க பெண்கள் மேற்கத்தியக் காலனி ஆதிக்கத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கத்தியப் பெண்ணியவாதிகள் காலனி ஆதிக்கதாக்கத்தை சந்திக்காததால் அதனை கவனிக்க தவறுகிறார்கள். ஆப்பிரிக்கக் கண்டத்தின் பெண்கள் இனவாதம், அடிமை முறை, கட்டாய குடியேற்றம் போன்ற சோதனைகளைச் சந்தித்தனர். மேற்கத்தியப் பெண்கள் இவைகளைச் சந்திக்கவில்லை. மேற்கத்தியப் பெண்ணியவாதம் தங்களை படித்த, அரசியல் விழிப்புணர்வு உள்ள, நவீன சக்தி பெற்ற பெண்களாகக் கருதுகிறது. ஆசிய, ஆப்பிரிக்க பெண்களை அதிகாரமில்லாத, விழிப்புணர்வு இல்லாத, செயலற்ற இனமாகக் கருதுகிறது. இது ஒரு தவறான அணுகுமுறையாகும். ஆசிய, ஆப்பிரிக்கப் பெண்கள் காலனி ஆதிக்கம், ஆணாதிக்கம் என்ற இரண்டு சுரண்டல் சக்திகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பின் காலனியப் பெண்ணியம் மேற்கத்திய காலனி ஆதிக்கத்தை விமர்ச்சிக்கின்றது. மேலும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் அரசியல் சிந்தனைகளில் பெண்கள் சந்திக்கும் தனிப்பட்ட பிரச்சனைகள் பற்றி கவனம் செலுத்துவது இல்லை என்றும், பின் காலனியப் பெண்ணியம் கூறுகிறது.
இந்திய அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக முக்கிய திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. 73-வது மற்றும் 74-வது அரசியல் சாசன திருத்தச் சட்டங்கள் கிராம, நகர சுய ஆட்சி அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்கியுள்ளன. கடந்த இருபது ஆண்டுகளாக அமலில் இருக்கும் மகளிர் இட ஒதுக்கீடு பெண்களுக்கு முன்னேற்றத்தையும் அரசியல் சக்திகளையும் வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றம் "விஷாகா வழிமுறைகள்" என்ற பாதுகாப்பினை தனது தீர்ப்பின் மூலம் பெண்களுக்கு வழங்கியுள்ளது. பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலின தொந்தரவுகளை தடுப்பதற்கு விஷாகா வழிமுறைகள் முயற்சிக்கின்றன. பாராளுமன்றம் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலின தொந்தரவுகளை தடை செய்து சட்டம் இயற்றி உள்ளது. அகப் புகார் குழு மற்றும் தல புகார் குழு ஆகியவைகள் பணியிடங்களில் உருவாக்கப்பட வேண்டும் என்று இச்சட்டம் கூறுகிறது. முன்பாக பாராளுமன்றம் 2005-ஆம் ஆண்டு குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது.
முடிவாக பாலின சமத்துவம் மனித குலத்தின் பாதி அளவாக இருக்கின்ற பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். பெண்ணியம் இதற்கு முயற்சிகின்றது.
விவாதம்
நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றத்திலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று பல ஆண்டுகளாகப் கோரப்படுகிறது. மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது இந்த கோரிக்கையின் முக்கிய சாரமாகும். நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் மகளிர் இட ஒதுக்கீடு கோரி வகுப்பில் விவாதம் செய்க.