அரசியல் கொள்கைகள் - பின்நவீனத்துவம் | 11th Political Science : Chapter 8 : Political Ideologies - Part-II
பின்நவீனத்துவம்
நவீனத்துவத்தை எதிர்த்துத் தோன்றிய ஒருங்கிணைந்த சில கருத்துக்களைப் பின் நவீனத்துவம் என அழைக்கின்றோம். பிரட்ரிக் நீட்சே, ஜாக் டெரிடா, ஃபுகோ, லிடார்ட் ஆகியோர் பின் நவீனத்துவத்தை ஆதரித்தனர்.
நவீனத்துவம் அரசியல் கோட்பாட்டில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. பகுத்தறிவு, பிரபஞ்சத்துவம், ஒற்றைக் காரணி உலக விளக்கமுறை ஆகிய கோட்பாடுகள்ந வீனத்துவத்தின் முதுகெலும்பாக இருக்கின்றன. இக்கோட்பாடுகளை பின்நவீனத்துவம் நிராகரிக்கின்றது. மாற்றுச் சிந்தனைகளை வழங்குகின்றது. மேற்கத்திய அரசியல் கோட்பாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு பின் நவீனத்துவம் தோன்றி வளர்ந்துள்ளது
கடவுள் இறந்துவிட்டார், அவரை நாம் கொன்று விட்டோம். - பிரட்ரிக் நீட்சே
பிரட்ரிக் நீட்சே, பின் நவீனத்துவத்தின் தந்தையாகக் கருதப்படுகிறார். "கடவுள் இறந்துவிட்டார்" என்பது அவருடைய புகழ்பெற்ற கூற்று ஆகும்.
நவீனத்துவம் உலகளாவியமுறை, ஒற்றைக்காரணி உலகவிளக்கமுறை ஆகியவற்றை ஆதரிக்கின்றது. பின் நவீனத்துவம் இவைகளை நிராகரிக்கின்றது. ஒரு காரணி மூலம் இந்த உலகத்தை நம்மால் விளக்க முடியாது. ஒரு உன்னத உண்மை அல்லது காரணி உலகத்தை இயக்குகிறது என நாம் கூற முடியாது. நமது வாழ்க்கை , பல பாகங்களைக் கொண்டது. ஒரு காரணியால் அதனை விளக்க முடியாது. காரல் மார்க்ஸ், பிரட்ரிக் ஹெகல் போன்ற தத்துவஞானிகள் கூறியது ஏற்புடையது அல்ல. காரல் மார்க்ஸ் மனித வாழ்க்கையின் அடிப்படைக் காரணி பொருளாதாரம் என்றார். தனிச்சொத்துரிமையை நீக்கி விட்டால் உலகப் பிரச்சனைகளை தீர்த்து விடலாம் என்று மார்க்ஸ் கூறினார்.
ஜெர்மானிய சிந்தனையாளரான பிரடிர்க் ஹெகல் உலக ஆன்மாவின் உருவாக்கமே உலகம் என்று கூறினார். உலகத்தை ஆன்மா மூலமாக விவரித்தார். பின் நவீனத்துவம் இது தவறு என்று கூறுகிறது. உலகை விளக்குவதற்கு ஒரு காரணி போதாது, பல காரணிகளால் தான் உலகத்தை விளக்க முடியும். கலாச்சாரம், மொழி, மதம், அரசியல் பொருளாதாரம் உள்ளிட்ட பல காரணிகளின் உதவியுடன் தான் உலகத்தை விளக்க முடியும்.
உண்மை ஒருமையில் இருப்பதில்லை, பன்மையில் இருக்கின்றது. எந்த ஒரு விஷயத்திலும் உண்மை என்ற ஒன்று இல்லை, உண்மைகள் தான் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஒரு தலைவரையோ, வரலாற்று நிகழ்ச்சியையோ நாம் கூறலாம். ஒவ்வொரு தலைவரைப் பற்றியும் பலவித கருத்துக்கள் உள்ளன. ஒரு சிலர் அந்தத் தலைவரை தீர்க்கத்தரிசி என்பர்.
உண்மை ஒருமுகத் தன்மை உடையது கிடையாது. பன்முகத் தன்மை உடையது ஆகும். முரணான இரண்டு கருத்துக்கள் கூட சரியானவைகளாக இருக்கும்.
இன்னும் சிலர் அவரை வார்த்தை ஜாலம் மட்டுமே உள்ளவர் என்பர். ஒரே தலைவர் நல்லவர், கெட்டவர், தூயவர், சுயநலவாதி என பலநிலைகளில் விமர்சிக்கப்படுகிறார். பார்பவர் கண்களில் தான் உண்மை இருக்கின்றது. கருப்பு மற்றும் வெள்ளை என்று இரண்டு நிறங்களில் தான் உலகம் உள்ளது எனக்கூற முடியாது. ஒரு கோட்டில் கருப்பும், வெள்ளையும் இரண்டு கடைசி புள்ளிகள் என்றால், இரண்டிற்கும் இடையில் இதர பல நிறங்கள் உள்ளன. இதுபோலத் தான் மனித வாழ்க்கையும் உலகில் உள்ளது.
ஜாக் டெரிடா என்பவர் ஒரு பிரான்சு நாட்டின் தத்துவ ஞானி ஆவார். இவர் பின் நவீனத்துவத்தை ஆதரித்தார். தகர்ப்பமைப்பு அல்லதுகட்டுடைத்தல் என்ற அணுகுமுறையை உரைகளின் பொருளைப் புரிந்து கொள்வதற்கு அவர் உருவாக்கினார்.
ஒவ்வொரு உரையிலும், பல பொருள்கள் உள்ளன. மனிதனுடைய மொழி இன்னும் வளர்ச்சி அடையவில்லை. ஆகவே எழுத்தாளர்கள் தங்கள் எல்லாக் கருத்துக்களையும் உரைமூலம் புரியவைக்க முடியாது. உரையைப் படிப்பவர்கள் தங்களின் புரிதலுக்குத் தகுந்தவாறு உரையின் பொருளை உருவாக்குகிறார்கள். ஒரே உரையில் பல பொருள்கள் உள்ளன. தகர்ப்பமைப்பின் மூலமாகத்தான் உரையைப் புரிந்து கொள்ள முடியும்
தகர்ப்பமைப்பு என்றால் என்ன ?
"வாசிப்பதற்கும், விளக்குவதற்கும், எழுதுவதற்கும் ஆன விதிகள்". - ஜாக் டெரிடா
நவீனத்துவத்தின் உலகளாவிய முறையைப் பின் நவீனத்துவம் நிராகரிக்கின்றது. அதற்கு மாறாக தனித்துவத்தை அது ஆதரிக்கின்றது. ஒரு முழு அமைப்பை விட, அதுனுடைய பகுதிகளே முக்கியம் என்று கூறுகின்றது. எடுத்துக்காட்டாக, நவீனத்துவம் உலகம் முழுவதற்கான உரிமைகள் கோட்பாட்டை ஆதரித்தது. பின்நவீனத்துவம் இதனை மறுக்கின்றது. பெண்கள், பழங்குடி மக்கள் போன்ற வஞ்சிக்கப்பட்ட, தனித்துவமான குழுக்களின், மக்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் தருகின்றது.
நவீனத்துவம் அமைப்பு ரீதியான மாற்றங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றது. பின்நவீனத்துவம் குறிப்பிட்ட சமூகக் குழுக்களின் மாற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் வழங்குகின்றது.
பின்நவீனத்துவம் அடையாள அரசியலை ஆதரிக்கின்றது. குறிப்பிட்ட நலிவடைந்த எளிமையான சமூகக குழுக்கள் ஆதிக்க முறைக்கு எதிராக தங்களது ஜாதி, இனம், பாலினம் அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அடையாள அரசியல் என்பது பெயராகும். இந்த குழுக்களின் உறுப்பினர்கள் தங்களை பாசத்துடன் "நாம்" என்று அழைக்கிறார்கள். இவர்கள் எதிர்க்கும் குழுக்களின் உறுப்பினர்களை "அவர்கள்" என்று அழைக்கிறார்கள். குறிப்பிட்ட அடையாளம், இடம் சார்ந்த மக்களின் சக்தி ஏற்றலுக்கு அடையாள அரசியல் முயற்சிக்கின்றது.
பின்நவீனத்துவத்தை பல்வேறு சிந்தனையாளர்களும், அறிஞர்களும் விமர்சித்து உள்ளனர். ஆலன் கிர்பி என்ற பிரிட்டானிய கலாச்சார விமர்சகர் பின்நவீனத்துவம் முடிந்துவிட்டது என்று கூறினார். ஏனென்றால், பின் நவீனத்துவத்தின் கலாச்சார காலம் முடிந்து எண்மின் (Digital) நவீனத்துவம் உருவாகி உள்ளது என்று ஆலன் கிர்பி கூறினார்.