Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | காந்தியடிகளின் சத்தியாகிரக சோதனைகள்

காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் - வரலாறு - காந்தியடிகளின் சத்தியாகிரக சோதனைகள் | 12th History : Chapter 4 : Advent of Gandhi and Mass Mobilisation

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 4 : காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

காந்தியடிகளின் சத்தியாகிரக சோதனைகள்

அ) சம்பரான் இயக்கம் (1917) ஆ) ஆலைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் மற்றும் அகமதாபாத்தில் காந்தியடிகளின் உண்ணாவிரதம் (1918) இ) கேதா போராட்டம் (1918)

காந்தியடிகளின் சத்தியாகிரக சோதனைகள்

 

அ) சம்பரான் இயக்கம் (1917)

சம்பரானில் இருந்த விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, இந்திய மக்களை ஒன்றிணைக்கும் முதல் முயற்சியைக் காந்தியடிகள் மேற்கொண்டார். அவர் போராட்டத்தைத் துவங்குமுன், நிலைமை குறித்து விரிவாக ஆராய்ந்தார். பீகாரின் சம்பரான்மாவட்டத்தில் இருந்த கருநீலச்சாய (இண்டிகோ) விவசாயிகள் ஐரோப்பிய வர்த்தகர்களால் பெரிதும் ஏமாற்றப்பட்டனர். அவர்களிடம் இருந்த 3/20 பங்கு நிலத்தில் விவசாயிகள் கருநீலச்சாயத்தைக் கட்டாயம் விளைவிக்க வேண்டும். அதனையும் வர்த்தகர்கள் நிர்ணயிக்கும் விலைக்கே விற்கவேண்டும். இந்தக் கட்டமைப்பு விவசாயிகளைச் சுரண்டியதோடு அவர்களை வறுமையின் பிடியில் சிக்கவைத்தது. ராஜேந்திர பிரசாத், மஜாருல் ஹக், ஆச்சார்ய கிருபாளினி, மஹாதேவ தேசாய் போன்ற உள்ளூர் தலைவர்களுடன் காந்தியடிகள் விரிவான விசாரணை மேற்கொண்டார். உடனடியாக அந்த மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் காந்தியடிகளுக்கு உத்தரவிட்டனர். ஆனால் வெளியேற மறுத்த காந்தியடிகள், இந்த உத்தரவு நியாயமற்றது என்று மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி உத்தரவை மீறுவதன் மூலம் ஏற்படும் விளைவுகளைச் சந்திக்க போவதாகவும் கூறினார்.


காந்தியடிகளையும் ஒரு உறுப்பினராகக் கொண்டு விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஏழை விவசாயிகளின் சிரமங்கள் குறித்து குழுவிடம் எடுத்துரைத்துப் புரியவைப்பதில் காந்தியடிகளுக்குச் சிரமம் ஏற்படவில்லை . அந்த அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அமல்படுத்தப்பட்டதில் ஐரோப்பிய வர்த்தகர்களின் கட்டுப்பாட்டிலிருந்த கருநீலச்சாய விவசாயிகள் மீட்கப்பட்டனர். ஐரோப்பிய வர்த்தகர்கள் படிப்படியாக சம்பரானை விட்டே வெளியேறிவிட்டனர்.

 

ஆ) ஆலைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் மற்றும் அகமதாபாத்தில் காந்தியடிகளின் உண்ணாவிரதம் (1918)

இவ்வாறாக காந்தியடிகள் தனது முதலாவது வெற்றியைத் தாய்மண்ணில் பதிவு செய்தார். விவசாயிகளின் நிலைமையை நெருக்கமாகப் புரிந்துகொள்ள இந்த போராட்டம் அவருக்கு வழிவகை செய்தது. அகமதாபாத் நகர மையத்தில் பணியாளர்களுக்காக மக்களை ஒன்றுதிரட்டும் பணி காத்திருந்தது. துணி ஆலைப் பணியாளர்களுக்கும், ஆலை முதலாளிகளுக்கும் இடையே பிரச்சனை நிலவியது. காந்தியடிகள் இருதரப்பையும் சந்தித்துப் பேசினார். மிகக் குறைவான ஊதியம் பெற்ற பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்க முதலாளிகள் மறுத்ததை அடுத்து 35 சதவீதம் ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு காந்தியடிகள் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொழிலாளர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார். தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும் காந்தியடிகளின் உண்ணாவிரதமும் இறுதியில் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்கவேண்டிய நிலைக்கு ஆலை முதலாளிகளை நிர்ப்பந்தித்தது.

            

இ) கேதா போராட்டம் (1918)

கேதா மாவட்ட விவசாயிகள் பருவமழை பொய்த்ததன் காரணமாகச் சிரமத்தைச் சந்தித்தனர். 1918இல் நில வருவாய் வசூலை ரத்து செய்யுமாறு காலனி ஆட்சி நிர்வாகத்திடம் அவர்கள் கோரினர். அரசின் பஞ்சகால விதியின்படி, பயிர் சாகுபடி சராசரியாக 25 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் பயிரிடுவோர் முழு நிலவரி ரத்துக்கு தகுதி பெறுவர். ஆனால் நிர்வாகத்தினர் இவ்விதியை அமல்படுத்த மறுத்துவிட்டு முழுமையாக பணத்தைச் துன்புறுத்தினர். பிளேக் நோயாலும் அதிக விலையேற்றத்தாலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காந்தியடிகள் உறுப்பினராக அங்கம் வகித்த இந்தியப் பணியாளர் சங்கத்தை (Servants of India Society) உதவி கோரி அணுகினர். ஏழை விவசாயிகள் சார்பாக விதல்பாய் பட்டேலுடன் இணைந்து தலையிட்ட காந்தியடிகள் பணம் செலுத்துவதை நிறுத்திவிட்டு இந்த எதேச்சதிகாரம் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கையை எதிர்த்து சாகும்வரைப் போராட்டம் நடத்துமாறு அறிவுறுத்தினார். இளம் வழக்கறிஞரான வல்லபாய் பட்டேலும் இந்துலால் நாயக்கும் காந்தியடிகளுடன் இந்த இயக்கத்தில் இணைந்து விவசாயிகளை உறுதியாக இருக்குமாறு வேண்டினர். பயிர்களை எடுத்துக்கொள்வது, போராட்டம் நடத்தியவர்களின் சொத்துகளையும் கால்நடைகளையும் சொந்தமாக்கிக் கொள்வது, சில நேரங்களில் அவற்றில் சிலவற்றை ஏலம் விடுவது என அரசு அடக்குமுறைகளைக் கையாண்டது.


எந்த விவசாயியால் பணம் செலுத்த முடியுமோ அவர்களிடம் இருந்து மட்டுமே வருவாயை வசூல் செய்யவேண்டும் என்று அரசு நிர்வாகத்தினர் அறிவுறுத்தல்களை வெளியிட்டனர். இதனை அறிந்த காந்தியடிகள் போராட்டத்தை விலக்கிக்கொள்ள முடிவு செய்தார்.

காந்தியடிகள் தலைமையில் நடந்த மூன்று போராட்டங்களும் இந்திய நாடு எங்கிருக்கிறது என்ற உணர்வை அவருக்கு வழங்கும் விதமாக அமைந்தது. ஏழை விவசாயிகள், இந்தியாவின் மூலை முடுக்கில் வாழ்ந்த அனைத்து வகுப்புகள், சாதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க இந்தப் போராட்டங்களின் வாயிலாக காந்தியடிகள் ஆதரவு திரட்டினார். காலனி ஆதிக்கவாத மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சுரண்டல்காரர்கள் இருதரப்பையும் எதிர்கொண்ட அவர் இருதரப்பிலும் பேச்சுகளை நடத்தினார். ஒடுக்கப்பட்டவர்களை ஒன்று திரட்டி அவர்களின் தலைவராகவும் அதே நேரத்தில் ஒடுக்கும் நபர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தும் திறனும் பெற்று ஒரு தலைவராக அவர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவரை மக்களிடம் தலைவராகவும் மகாத்மாவாகவும் இந்த பண்புகள் நிலைநிறுத்தின.

பல்வேறு சாதி, பிரதேசங்கள், மதங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த இந்தியர்களுக்கு நலப்பணிகளில் பயிற்சி வழங்க இந்திய பணியாளர் சங்கத்தை கோபால கிருஷ்ண கோகலே 1905இல் நிறுவினார். பின்தங்கிய, ஊரக மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட நாட்டின் முதலாவது மதச்சார்பற்ற அமைப்பு இதுவாகும். நிவாரணப் பணி, கல்வியறிவூட்டல் மற்றும் இதர சமூகக்கடமைகளில் உறுப்பினர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். ஐந்தாண்டு காலத்துக்கு பயிற்சி பெறவேண்டிய உறுப்பினர்கள் குறைவான சம்பளத்துக்குப் பணியாற்ற ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த அமைப்புக்குத் தலைமையகம் மகாராஷ்டிராவின் பூனாவிலும், சென்னை (மதராஸ்), மும்பை (பம்பாய்), அலகாபாத் மற்றும் நாக்பூரில் முக்கிய கிளைகளும் இருந்தன.

Tags : Advent of Gandhi and Mass Mobilisation | History காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் - வரலாறு.
12th History : Chapter 4 : Advent of Gandhi and Mass Mobilisation : Gandhi’s Experiments of Satyagraha Advent of Gandhi and Mass Mobilisation | History in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 4 : காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் : காந்தியடிகளின் சத்தியாகிரக சோதனைகள் - காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் - வரலாறு : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 4 : காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்