Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | ஒத்துழையாமை இயக்கம்

காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் - வரலாறு - ஒத்துழையாமை இயக்கம் | 12th History : Chapter 4 : Advent of Gandhi and Mass Mobilisation

   Posted On :  12.07.2022 06:04 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 4 : காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

ஒத்துழையாமை இயக்கம்

அ)ரௌலட் சட்டம்ஆ) ஜாலியன் வாலாபாக் படுகொலைஇ) ஒத்துழையாமை இயக்கத்தின் தொடக்கம்ஈ) காந்தியடிகளின் தலைமை ஏற்படுத்தியத் தாக்கம்உ) சௌரி சௌரா சம்பவம் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தைத் திரும்பப்பெறுதல்

ஒத்துழையாமை இயக்கம்

 

அ) ரௌலட் சட்டம்

மிதவாத தேசியவாதிகளுக்கு முக்கியத்துவம் தருவதும் தீவிர தேசியவாதிகளைத் தனிமைப்படுத்துவதும் பிரிட்டிஷாரின் கொள்கையின் ஒரு பகுதியாக இருந்தது. 1919இல் இந்திய கவுன்சில்கள் சட்டம் மற்றும் ரௌலட் சட்டம் ஆகியன ஒரே ஆண்டில் இயற்றப்பட்டன. உலகப் போர் நடந்த கால கட்டத்தில் தீவிரத்தன்மையுடையோர் மற்றும் தேசபக்த புரட்சியாளர்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகள் தொடர்ந்தன. பலர் தூக்கில் தொங்கவிடப்பட்டனர் அல்லது நீண்ட காலத்துக்குச் சிறையில் அடைக்கப்பட்டனர். பொதுவாக மக்களிடையே போராட்ட எண்ணம்வலுத்த நிலையில் இன்னும் பல அடக்குமுறை அதிகாரங்களுடன் தன்னைப் பலப்படுத்திக்கொள்ள அரசு விரும்பியது. மத்திய சட்டப்பேரவையின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த மசோதாவை எதிர்த்த நிலையில் 1919இல் மார்ச் மாதம் ரௌலட் சட்டத்தை அரசு நிறைவேற்றியது. எந்தவித நீதிமன்ற விசாரணையுமின்றி எவரையும் சிறையில் அடைக்க அரசுக்கு இந்தச் சட்டம் அதிகாரமளித்தது.


காந்தியடிகளும் அவரது சகாக்களும் அதிர்ச்சி அடைந்தனர். காந்தியடிகள் நிறுவிய சத்தியாகிரக சபை, இந்தச் சட்டத்தை மீறுவது என்று முதன் முதலாக உறுதி ஏற்றது. கூட்டங்கள், அந்நியத் துணிகளைப் புறக்கணிப்பது, பள்ளிகளைப் புறக்கணிப்பது, கள்ளுக்கடைகளுக்கு முன் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது, மனுக்கள், போராட்டங்கள் ஆகியப் பழமையான ஆர்ப்பாட்ட முறைகளை கைவிட்டு புதுமையான முறை பின்பற்றப்பட்டது. தொழிலாளர்கள், கைவினைக் கலைஞர்கள், விவசாயிகள் ஆகியோரின் பெரும் பங்கேற்புடன் சத்தியாகிரகம் என்ற ஆயுதம் பயன்படுத்தப்பட்டது. காதி இதன் அடையாளமாகவும் பின்னர் தேசியவாதிகளின் உடையாகவும் மாறிப்போனது. மக்கள் விழிப்புணர்வு அடைந்து அரசியல் பணிகளில் தீவிரம் காட்டினால்தான் இந்தியாவில் சுயராஜ்யம் என்பது நடைமுறைக்கு வரும். 1919 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் ரௌலட் சட்டத்துக்கு எதிராக வேலைநிறுத்தத்தைக் கடைபிடிக்குமாறு காந்தியடிகள் அழைப்பு விடுத்தவுடன் நாடு முழுவதும் ஊக்கம் பிறந்தது. இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைத்த கிலாபத் இயக்கத்தையும் இத்துடன் இணைத்தார்.

 

ஆ) ஜாலியன் வாலாபாக் படுகொலை

நாடு  முழுவதும் நடந்த மக்கள்  போராட்டங்கள் மற்றும் மக்களிடம் காணப்பட்ட மகத்தான தன்னெழுச்சி காரணமாக காலனி அரசு ஆத்திரமடைந்தது. 1919 ஏப்ரல் 13இல், அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் பகுதியில் நிராயுதபாணிகளான மக்கள் திரள் மீது மிகக் கொடுமையான அரசியல் குற்றங்கள் இழைக்கப்பட்டன. சத்தியபால், சாய்புதீன் கிச்லு ஆகியோரைக் கைது செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான வகையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக இரண்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் போராட்டக் களத்தில் குழுமியிருந்தனர். பஞ்சாபின் துணை நிலை ஆளுநராக மைக்கேல் ஓ டையரும், ராணுவக் கமாண்டராக ஜெனரல் ரெஜினால்டு டையரும் பதவி வகித்தனர். அவர்கள் இருவரும் தங்களுடைய அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களுக்குப் பாடம் புகட்ட விரும்பினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியிருந்த இடத்துக்கு ஒரே ஒரு குறுகிய வாயில் மட்டுமே இருந்தது. அங்கு சிக்கிக்கொண்ட மக்களைக் குறிவைத்து எந்திரத் துப்பாக்கிகளில் குண்டுகள் தீரும் வரை சுடுமாறுஜெனரல்டையர் உத்தரவிட்டார். அரசு தகவல்களின் படி உயிரிழப்புகள் 379 என்ற எண்ணிக்கையில் இருந்தபோதிலும் உண்மையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கக்கூடும். ராணுவச் சட்டம் பஞ்சாப் முழுவதும் அமல்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் சொல்லமுடியாத அளவுக்கு துயரங்களை சந்தித்தனர்.


இந்தக் கொடுமைகளைக் கண்டு நாடு முழுவதும் கொந்தளித்தது. பம்பாய், கல்கத்தா, டெல்லி, லாகூர் ஆகிய இடங்களில் ரௌலட் சட்டத்துக்கு எதிராகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்த நிலையில் அங்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டன. பல நகரங்கள் மற்றும் மாநகரங்களில் வன்முறை நிகழ்வுகள் அரங்கேறின. இந்த கொடுமைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரவீந்திரநாத் தாகூர் உட்பட பல பிரபலங்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டங்களைத் துறந்தனர்.

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பிறகு இரவீந்திரநாத் தாகூர் தனது அரசப் பட்டத்தை உடனடியாகத் துறந்தார். 1919 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி அரசப்பிரதிநிதிக்கு (வைசிராய்) அனுப்பிய எதிர்ப்புக் கடிதத்தில் தாகூர் இவ்வாறு எழுதினார். "இணக்கமற்ற சூழல் நிலவும் வேளையில் அவமானத்தின் சின்னமாக இந்த மதிப்புக்குரிய பட்டம் திகழ்கிறது. மனிதர்களாகக் கூடக் கருத முடியாத நிலையில் மதிப்பிழந்து போன எனது நாட்டு மக்களுக்கு ஆதரவாக எனது தரப்பில் நான் மேற்கொள்ளும் செயலாக, எனக்கு வழங்கப்பட்ட அனைத்து சிறப்புப் பட்டங்களையும் திரும்ப ஒப்படைக்கிறேன்."

கிலாபத், பஞ்சாப் கொடுமை ஆகிய இரண்டு காரணங்களால் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டது. துருக்கி சுல்தான் மற்றும் இசுலாமிய புனிதத் தலங்கள் தொடர்பானது கிலாபத் இயக்கம். ஜாலியன் வாலாபாக்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு பஞ்சாப் கொடுமை எனப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் உறுதிமொழிகளுக்கு எதிராக இசுலாமிய புனிதத் தலங்களின் கட்டுப்பாட்டை இசுலாம் அல்லாத சக்திகள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட நிலையில் ஜாலியன் வாலாபாக்கில் நடத்தப்பட்ட கொடுமைகளுக்குக் காரணமான ரெஜினால்டு டையர், மைக்கேல் ஓ டையர் இருவரையும் பிரிட்டிஷ் நீதிமன்றங்கள் குற்றங்களில் இருந்து விடுதலை செய்துவிட்டது.

கால்சா ஆதரவற்றோர் காப்பகத்தில் வளர்க்கப்பட்ட சீக்கிய பதின்பருவ இளைஞரான உதம் சிங் இந்த நிகழ்வை தனது கண்களால் கண்டார். ஜாலியன் வாலாபாக் படுகொலைகளுக்குப் பழி தீர்க்கும் விதமாக 1940 மார்ச் 30இல் லண்டனின் காக்ஸ்டன் அரங்கில் மைக்கேல் ஓ டையரை உதம் சிங் படுகொலை செய்தார். லண்டனின் பெண்டோன்வில்லே சிறையில் உதம் சிங் தூக்கிலிடப்பட்டார்.


இந்து - முஸ்லிம் ஒற்றுமை குறித்து அக்கறை கொண்ட காந்தியடிகளும் காங்கிரசும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டதாக உணரப்பட்ட முஸ்லிம் தோழர்களுக்குத் துணையாக நின்றனர். மௌலானா சௌகத் அலி மற்றும் முகமது அலி என்ற சகோதரர்கள் மௌலானா அபுல் கலாம் ஆசாத் உடன் இணைந்து கிலாபத் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களாக விளங்கினர்.

 

 

இ) ஒத்துழையாமை இயக்கத்தின் தொடக்கம்

கிலாபத் மாநாட்டில், காந்தியடிகளின் வற்புறுத்தலின் பேரில் 1920 ஆகஸ்டு 31 முதல் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது. அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு நீதிமன்றங்களைப் புறக்கணிக்கும் திட்டத்தை அலகாபாத்தில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிவு செய்தது. 1920ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் சிறப்பு அமர்வில் காலனி ஆதிக்க அரசுடன் ஒத்துழையாமையைக் கடைபிடிப்பது என்ற காந்தியடிகளின் யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிலாபத் மற்றும் பஞ்சாப் குறைகள் சரிசெய்யப்பட்டு தன்னாட்சி அரசு நிறுவப்படும் வரை இந்த ஒத்துழையாமையைக் கடைபிடிக்க உறுதி ஏற்கப்பட்டது.

பள்ளிகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள், சட்டப்பேரவைகள், அந்நியப் பொருட்களைப் புறக்கணித்தல், அரசு வழங்கிய பட்டங்களையும் விருதுகளையும் திரும்ப ஒப்படைப்பது ஆகியன ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்க்கப்பட்டன. மாற்றாக, தேசியப்பள்ளிகள், பஞ்சாயத்துகள் ஆகியன அமைக்கப்பட்டு சுதேசிப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும். வரிகொடா இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் போன்ற பல இயக்கங்களைப் பின்னர் இந்தப் போராட்டத்தில் இணைக்கவும் முடிவு செய்யப்பட்டது. 1920ஆம் ஆண்டு நாக்பூரில் நிகழ்ந்த காங்கிரஸ் அமர்வில் முந்தைய தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மொழி சார்ந்த மாகாண காங்கிரஸ் கமிட்டிகளை அங்கீகரித்து அமைப்பதற்கு வகை செய்யும் மற்றொரு முக்கியத் தீர்மானம் நாக்பூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. இதனால் பெரும் எண்ணிக்கையிலானப் பணியாளர்கள் இந்த இயக்கத்தில் சேர்ந்தனர். காங்கிரஸின் அடிப்படையை விரிவாக்கும் நடவடிக்கையாகப் பணியாளர்கள் கிராமங்களுக்குச் சென்று 4 அணா (25 பைசா) என்கிற குறைவான கட்டணத்தில் கிராமத்தினரைக் காங்கிரஸில் சேர்க்க வேண்டும். இதனால் காங்கிரஸின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் மாற்றம் பெற்றன. நாட்டின் பெயரில் ஒன்றுசேர்ந்த மக்கள் தேசியப் போராட்டத்தில் பங்கேற்றனர். ஆனால் மக்கள் போராட்டத்தை எதிர்த்தப் பழைமைவாதிகள் பலர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக வழி அமைத்தது. மேல் குடிக்கானது என்ற அடையாளத்தைப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி மெதுமெதுவே உண்மையான தேசிய அமைப்பு என்ற தோற்றத்தில் மக்கள் அமைப்பாக காந்தியடிகளின் தலைமையிலான காங்கிரஸ் மாறியது.

 


ஈ) காந்தியடிகளின் தலைமை ஏற்படுத்தியத் தாக்கம்

உள்ளூர் மக்களால் ஆயிரக்கணக்கான பள்ளிகள், நூற்றுக்கணக்கான கல்லூரிகள் மற்றும் வித்யாபீடங்கள் நிறுவப்பட்டன. பல முன்னணி வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலைக் கைவிட்டனர். ஆயிரக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு நிறுவனங்களை விட்டு வெளியேறினர். தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்ட அலி சகோதரர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்குமாறு மக்களுக்கு அந்தந்த பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள் அழைப்பு விடுத்தன. அரசு வழக்கம் போல் அடக்குமுறையைக் கையாண்டது .பாரபட்சமில்லாமல் கைது செய்யப்பட்டத் தொண்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இந்தியாவின் பல நகரங்களுக்கு 1921இல் வேல்ஸ் இளவரசர் மேற்கொண்ட பயணமும் புறக்கணிக்கப்பட்டது. இந்திய மக்களின் விசுவாச உணர்வை வேல்ஸ் இளவரசரின் பயணம் தூண்டும் என்று எதிர்பார்த்த காலனி ஆதிக்க அரசின் கணக்கு தவறாகப் போனது. நாடு முழுவதும் தொழிலாளர்களும் விவசாயிகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்தியர்கள் ஒத்துழையாமை இயக்கத்தை வன்முறையற்ற வகையில் பின்பற்றினால் ஓராண்டுக்குள் சுயராஜ்யத்தைப் பெற்றுத்தருவதாக காந்தியடிகள் உறுதி கூறினார்.

போராட்டத்தின் இந்தக் கட்டத்தில் தென்னிந்தியா முன்னேறிச் சென்றது. ஆந்திர விவசாயிகள் ஜமீன்தார்களுக்கு வழங்கவேண்டிய வரிகளை நிறுத்திவைத்தனர். சிராலா - பெராலாப் பகுதியைச் சேர்ந்த அனைத்து மக்களும் வரி செலுத்த மறுத்துக் கூட்டம் கூட்டமாக நகரங்களைக் காலி செய்து வெளியேறினர். நூற்றுக்கணக்கான கிராம பட்டேல்களும் ஷான் போக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். சி. இராஜாஜி, எஸ். சத்தியமூர்த்தி, தந்தை ஈ.வே.ரா. பெரியார் ஆகிய தலைவர்கள் தலைமையில் தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்பட்டது. கேரளாவில் ஜென்மி-க்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர்.

உத்தரப்பிரதேசம், வங்காளம், அசாம், பீகார், ஒரிசா (ஒடிசா) ஆகியவற்றின் பல பகுதிகளில் இருந்து கீழ் வகுப்பு மக்கள் இந்த போராட்டங்கள் காரணமாக தீவிரமாக அவமதிக்கப்பட்டதாக இந்திய அரசுத்துறைச் செயலாளருக்கு எழுதியக் கடிதத்தில் அரசப்பிரதிநிதி (வைசிராய்) ஒப்புக்கொண்டிருந்தார். இந்த இயக்கத்தின் தீவிரம் கண்டு ஊக்கம் பெற்ற காங்கிரஸ் தனது சிறப்பு மாநாட்டில் இவ்வியக்கத்தை இன்னும் தீவிரமாக்குவது பற்றி உறுதியுடன் கூறியது. அரசு ஏழு நாட்களுக்குள் பத்திரிக்கைச் சுதந்திரத்தை மீட்டு சிறைக்கைதிகளை விடுதலை செய்யாவிட்டால்ப ர்தோலியில் வரிகொடா பிரச்சாரங்கள் உட்பட சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கப்போவதாக காந்தியடிகள் பிப்ரவரி 1922இல் அறிவித்தார்.

 

உ) சௌரி சௌரா சம்பவம் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தைத் திரும்பப்பெறுதல்

நாடு விடுதலை அடைந்து சுயராஜ்யம் கிடைத்துவிடும் என்று பொதுமக்களும் தேசியவாதத் தொண்டர்களும் அதிக ஊக்கம் கொண்டு போராட்டத்தில் தீவிரமாகப்பங்கேற்றனர். காடுகளில் வசித்த பழங்குடிகள் உட்பட அனைத்து வகுப்பு மக்களையும் இது பாதித்ததோடு அவர்களை ஈர்க்கவும் செய்தது. கலவரங்கள் மற்றும் மோசமான வன்முறைகளும் நாட்டில் நிகழ்ந்தன. மலபார் மற்றும் ஆந்திராவில் இரண்டு வன்முறைக் கிளர்ச்சிகள் நடந்தன. கரையோர ஆந்திராவின் ராம்பா பகுதியில் அல்லூரி சீதாராம ராஜூ தலைமையில் பழங்குடியினர் கிளர்ச்சி செய்தனர். மலபாரில் முஸ்லிம் (மாப்பிள்ளை) விவசாயிகள் ஆயுதமேந்திஉயர்வகுப்பு நிலப்பிரபுக்கள் மற்றும் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் மாவட்டத்தில் சௌரி சௌரா என்ற கிராமத்தில் மதுக் கடைகள் மற்றும் உள்ளூர் சந்தையில் அதிக விலைக்குப் பொருட்கள் விற்கப்படுவதைக் கண்டித்து ஒரு தன்னார்வக் குழு ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. 1922 பிப்ரவரி 5இல் 3,000 நபர்களுடன் நடந்த ஒரு காங்கிரஸ் கட்சிப் பேரணி மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக் குழுவினர் காவல் நிலையத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதோடு அதை எரித்ததில் 22 போலீசார் உயிரிழந்தனர். இந்த நிகழ்வை அடுத்து காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் திரும்பப்பெறுவதாக அறிவித்தார்.

தேசியவாதத் தொண்டர்களுக்கு ஏமாற்றம் தரும் விதமாக பர்தோலியில் இந்த முடிவை காங்கிரஸ் செயற்குழு ஏற்றுக்கொண்டது. இந்த முடிவை இளம் தொண்டர்கள் எதிர்த்த நிலையில் காந்தியடிகள் மீது நம்பிக்கை கொண்ட இதரத் தொண்டர்கள் இது ஒரு தந்திரமான முடிவு என்று கருதினர். கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற காந்தியடிகள் பற்றி ஜவஹர்லால் நேருவும் சுபாஷ் சந்திர போஸும் கடுமையாக விமர்சனம் செய்தனர். இப்படியாக ஒத்துழையாமை இயக்கம் முடிவுக்கு வந்தது.

துருக்கி மக்கள் முஸ்தபா கமால் பாட்சா தலைமையில் கிளர்ந்தெழுந்து சுல்தானிடம் இருந்து அரசியல் அதிகாரத்தைப் பறித்து கலிபா என்ற நடைமுறையை ரத்து செய்துவிட்டு, மதமும் அரசியலும் இணைந்து பயணிக்க முடியாது என்று அறிவித்த நிலையில் கிலாபத் இயக்கம் தேவையற்றுப் போனது.

Tags : Advent of Gandhi and Mass Mobilisation | History காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் - வரலாறு.
12th History : Chapter 4 : Advent of Gandhi and Mass Mobilisation : Non-cooperation Movement Advent of Gandhi and Mass Mobilisation | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 4 : காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் : ஒத்துழையாமை இயக்கம் - காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 4 : காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்