காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் - வரலாறு - சுயராஜ்ய கட்சி மற்றும் அதன் செயல்பாடுகள் | 12th History : Chapter 4 : Advent of Gandhi and Mass Mobilisation
சுயராஜ்ய கட்சி மற்றும் அதன் செயல்பாடுகள்
ஒத்துழையாமை இயக்கத்தைத் திரும்பப் பெற்ற பிறகு,
அடுத்து என்ன என்ற கேள்வி எழுந்தது. சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு ஆகியோர் புதிய
வழியில் செயல்பாட்டை அறிவித்தனர். தீவிர அரசியலுக்குத் திரும்ப வேண்டும் என்றும் அதில்
தேர்தல் அரசியலில் ஈடுபடுவது அடக்கம் என்றும் அவர்கள் விரும்பினார்கள். சீர்திருத்தம்
பெற்ற சட்டப்பேரவையைக் கைப்பற்றி தேசியவாத உணர்வூட்டி அதன் செயல்பாடுகளை முடக்கும்
ஆற்றலைத் தேசியவாதிகள் வெளிப்படுத்தினர். சுயராஜ்யம் வேண்டுவோர் மற்றும் மாற்றம் வேண்டுவோர்
(Pro-changers) என்று இந்தக் குழு அழைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் சத்தியமூர்த்தி இந்தக்
குழுவில் இணைந்தார்.
சட்டப்பேரவை நுழைவை எதிர்த்த மற்றொரு குழு
காந்தியடிகளின் வழியைப் பின்பற்றி மக்களை ஒன்றுதிரட்டும் பணிகளில் ஆர்வம் காட்டியது.
இந்தக் குழுவுக்கு இராஜாஜி, வல்லபாய் பட்டேல், இராஜேந்திர பிரசாத் ஆகியோர் தலைமை ஏற்றனர்.
எந்த மாற்றமும் தேவையில்லை என்று இந்த அணி வலியுறுத்தியது. இவர்கள் மாற்றம் விரும்பாதோர்
(No-changers) என்று அழைக்கப்பட்டனர். தேர்தல் அரசியல் தேசியவாதிகளின் கவனத்தைத் திசை
திருப்பும் என்றும் மக்களை ஒன்று திரட்டும் பணிகளில் இருந்து அவர்கள் விலகிச்செல்ல
வைத்துவிடும் என்றும் அவர்கள் வாதிட்டனர். நூல் நூற்பது, மது அருந்தாமை, இந்து - முஸ்லிம்
ஒற்றுமை, தீண்டாமையை ஒழிப்பது, ஊரகப்பகுதி மக்களை ஒன்று திரட்டி மக்கள் இயக்கங்களில்
பங்கேற்கச் செய்வது ஆகிய காந்தியடிகளின் ஆக்கப்பணிகளைத் தொடர் அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
மாற்றம் வேண்டுவோர் சுயராஜ்ய கட்சியை காங்கிரஸின் ஒரு பகுதியாகத் தொடங்கினார்கள். இரண்டு
குழுக்களுக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்தப்பட்டு காங்கிரஸ் திட்டங்களில் இரண்டு குழுக்களும்
ஈடுபடுத்தப்பட்டு காந்தியடிகள் ஆக்கப்பணிக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அவரது தலைமையின்
கீழ் ஒரு குழுவுக்கு மற்றொரு குழுவின் செயல்பாடுகள் துணை செய்யவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
மத்திய சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தல்களில்
சுயராஜ்ய கட்சி சிறப்பாகப் பங்கேற்று 101 இடங்களில் 42 இடங்களைக் கைப்பற்றியது. மற்ற
உறுப்பினர்களின் ஆதரவோடு காலனி ஆதிக்க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் விரோதச் சட்டங்களைத்
தீவிரமாக எதிர்க்க முடிந்தது. 1919ஆம் ஆண்டுச் சட்டத்தின் குறைபாடுகள் குறித்து தெரிவிப்பதிலும்
வெற்றி அடைந்தனர். காலம் செல்லச்செல்ல அவர்களுடைய முயற்சிகளும் ஊக்கமும் குறைந்து சுயநினைவுடனோ
அல்லது சுயநினைவின்றியோ அரசு நியமித்த பல குழுக்களில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டதை
ஏற்றனர்.
தேசிய அளவில் மக்கள் போராட்டம் நடைபெறாத நிலையில்
பிரிவினைவாத சிந்தனைப்போக்கு அவர்களை ஆட்டிப்படைத்தது. அடிப்படைவாத சக்திகள் இடத்தை
ஆக்ரமிக்கத் தொடர்ச்சியாகப்ப ல வகுப்புக்கலவரங்கள் நடந்தன. சுயராஜ்ய கட்சியும் பிரிவினைவாதத்தால்
பாதிப்படைந்தது. இந்து நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் அரசுக்கு ஒத்துழைக்கப் போவதாக
ஒரு குழுவினர் ஆதரவாளர்கள் என்ற பெயரில் செயல்பட்டனர். முஸ்லிம் அடிப்படைவாதிகளும்
தேசியப் போராட்டத்தில் தங்களுக்குக் கிடைத்த இடத்தைப் பிடித்துக்கொண்டு மதவாத உணர்வுகளைப்
பரப்பத் தொடங்கினர். இடதுசாரித் தீவிரத்தன்மை கொண்டவர்களின் செயல்பாடுகளால் காந்தியடிகள்
வேதனை அடைந்தார். மதவாதப் போக்கு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் காந்தியடிகள்
21 நாட்கள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.
இதனிடையே சோஷலிசக் கருத்துக்களும் அதன் ஆர்வலர்களும்
தங்களுக்கான களத்தை அமைத்து விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களிடையே செயல்பட ஆரம்பித்தனர்.
இடதுசாரிகள் தொழிலாளர் மற்றும் விவசாய இயக்கங்களைத் தொடங்கினார்கள். காலனி ஆதிக்கவாதம்
மற்றும் முதலாளித்துவத்தை விமர்சனம் செய்யும் மார்க்சீய சித்தாந்தம் வேரூன்றியது. தொழிற்சங்கங்கள்
தவிர மாணவர்களையும் இளைஞர்களையும் ஒருங்கிணைப்பதில் அது பெரும் பங்காற்றியது. இடதுசாரி
சித்தாந்தத்தைப் பரப்புவதில் ஜவஹர்லால் நேரு மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் இடதுசாரி
சித்தாந்தங்களையும் பரப்புவதற்கு தங்கள் பங்களிப்பை நல்கினார்கள். காலனி ஆதிக்க சுரண்டல்
மற்றும் உள்நாட்டில் முதலாளிகள் நடத்திய சுரண்டல் இரண்டுக்கும் எதிராகச் சண்டையிட வேண்டும்
என்று அவர்கள் வாதிட்டனர். எஸ். ஏ. டாங்கே , எம். என். ராய், முஜாஃபர் அகமது ஆகியோர்
கட்சியின் மூத்தத் தலைவரான தமிழ்நாட்டின் சிங்காரவேலர் உள்ளிட்ட தலைவர்களுடன் சேர்ந்து
விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சிகளைத் தொடங்கி வைத்தனர். கம்யூனிச சோஷலிசவாதிகள்
மற்றும் புரட்சியாளர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை எடுத்த அரசு அவர்கள் மீது
சதித்திட்ட வழக்குகளைத் தொடர்ச்சியாக கான்பூர், மீரட், காக்கோரி ஆகிய இடங்களில் பதிவு
செய்தது.
இந்தக் காலகட்டத்தில் பகத் சிங், சந்திரசேகர்
ஆசாத், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் முக்கியப் பணியாற்றினர். நவஜவான் பாரத் சபை, இந்துஸ்தான்
குடியரசு அமைப்பு ஆகியன தொடங்கப்பட்டன. ஆயிரக்கணக்கான இளம் ஆடவர் மற்றும் பெண்கள் காலனி
ஆதிக்க ஆட்சிக்கு எதிரானவர்களாகவும் புரட்சியாளர்களாகவும் மாறினார்கள். இந்தியா முழுவதும்
இளைஞர்கள் மற்றும் மாணவர் மாநாடுகள் நடத்தப்பட்டன. இதனிடையே ராம்பிரசாத் பிஸ்மில்,
அஷ்ஃபக்குல்லா ஆகிய இருவருக்கும் மரண தண்டனையும், வேறு 17 பேருக்கு நீண்டகால சிறைத்
தண்டனையும் காக்கோரி சதித்திட்ட வழக்கில் வழங்கப்பட்டன. பகத் சிங், சந்திரசேகர் ஆசாத்,
ராஜகுரு ஆகியோர் லாலா லஜ்பத் ராய் கொல்லப்பட்டது மற்றும் காவல்துறை அராஜகத்தை எதிர்த்து,
பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரி சாண்டர்ஸை கொன்றுவிட்டனர். இந்த அதிகாரி லாகூரில் நடத்தப்பட்ட
தடியடிக்குத் தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய சட்டப்பேரவை அரங்குக்குள்
1929 ஏப்ரல் 8இல் பகத் சிங்கும், படுகேஷ்வர் தத்தும் வெடிகுண்டு ஒன்றை எறிந்தனர்.
1929இல் மீரட் சதித்திட்ட வழக்கு பதியப்பட்டு மூன்று டஜன் கம்யூனிச தலைவர்கள் நீண்ட
கால சிறைத் தண்டனைகளைப் பெற்றனர். அடுத்தப் பாடத்தில் இவை பற்றிய விவரங்கள் விரிவாக
ஆராயப்பட்டுள்ளன.