காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் - வரலாறு - மாண்டேகு – செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்கள் | 12th History : Chapter 4 : Advent of Gandhi and Mass Mobilisation
மாண்டேகு – செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்கள்
இந்தியாவுக்கான பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர்
எட்வின் மாண்டேகு - வும் அரசப்பிரதிநிதி (வைசிராய்) செம்ஸ்ஃபோர்டும் இந்தியாவுக்கான
அரசியல் சாசன மாற்றங்களை அறிவித்தனர். அவையே பின்னர் 1919இன் இந்திய கவுன்சில்கள் சட்டம்
என்று அழைக்கப்பட்டன. மாகாண சட்டப்பேரவைகளைப் பெரும்பான்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன்
விரிவுபடுத்த இந்தச் சட்டம் வகை செய்தது. இரட்டை ஆட்சியின் கீழ் மாகாண அரசுகளுக்கு
நிர்வாகத்தில் அதிகப் பங்கு வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் சட்டம் ஒழுங்கு,
நிதி ஆகிய முக்கியமான துறைகள் ஆங்கிலேயருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும்
ஆளுநர்களின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தனர். சுகாதாரம், கல்வி, உள்ளாட்சி போன்ற
இதர துறைகள் இந்தியப் பிரதிநிதிகளுக்கு மாற்றப்பட்டது. இத்தகைய மாற்றப்பட்ட துறைகளுக்குப்
பொறுப்பேற்ற அமைச்சர்கள் சட்டப்பேரவைகளுக்குக் கடமைப்பட்டவர்களானார்கள். ஒதுக்கீடு
செய்யப்பட்டத் துறைகளுக்குப் பொறுப்பேற்றவர்கள் சட்டப்பேரவைகளுக்குக் கடமைப்பட்டவர்கள்
இல்லை . மேலும் சிறப்பு (மறுப்பானை) அதிகாரங்களின் கீழ் அந்தந்த மாகாணங்களின் ஆளுநர்கள்
அமைச்சர்களை அதிகாரம் செய்ய இயலும். இதனால் இந்த அமைப்பு முழுதுமே நகைப்புக்கிடமாய்
ஆகின. மத்திய சட்டப்பேரவை குறித்து விவரிக்கும் சட்ட அம்சம், இரண்டு அவைகளுடன் இரட்டை
அடுக்கு சட்டப்பேரவை மற்றும் மேலவையை உருவாக்கியது.
மத்திய சட்டப்பேரவையில் இருந்த 144 மொத்த உறுப்பினர்களில்
41 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படவேண்டும். மாநிலங்களவை என்றழைக்கப்பட்ட மேலவையில்
மொத்தம் இருந்த 60 உறுப்பினர்களில் 26 நபர்கள் நியமன உறுப்பினர்களாக இருந்தனர். கவர்னர்
ஜெனரல் மற்றும் அவரது நிர்வாகக்கவுன்சில் மீது இரண்டு அவைகளுக்கும் எந்தக் கட்டுப்பாடும்
இல்லை. ஆனால் மாகாண அரசுகள் மீது மத்திய அரசுக்கு முழுக் கட்டுப்பாடு இருந்தது. இதன்
விளைவாக, ஐரோப்பிய ஆங்கிலேய அதிகாரிகளின் கைகளில் அதிகாரம்குவிந்திருந்தது. வாக்களிக்கும்
உரிமையும் தொடர்ந்து கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தது.
பிரிட்டனின் போர் முயற்சிகளுக்கு நிபந்தனையற்ற
ஆதரவுகொடுத்த இந்தியாவின் பொது நலன் மீது அக்கறை கொண்ட மக்கள் இன்னும் நிறைய எதிர்பார்த்தனர்.
இந்தத் திட்டம் 1918ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டபோது இந்தியா முழுவதும் விமர்சனத்துக்கு
உள்ளானது. 1918ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பம்பாயில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸின் சிறப்பு
அமர்வில் இந்தத் திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தத் திட்டம் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும்
அளிப்பதாகக் காங்கிரஸ் தெரிவித்தது.
பொதுக்கருத்தை உருவாக்குவதில் தாங்கள் வழக்கமாகப்
பின்பற்றிய ஆசைகாட்டி மோசம் செய்யும் கொள்கையை காலனியாதிக்க அரசு பின்பற்றியது. சீர்திருத்தங்களை
முயன்று அதற்காக உழைக்க வேண்டும் என்று கோரிய மிதவாத் தாராளக் கொள்கையுடைய அரசியல்
தலைவர்களின் குழு ஒன்று செயல்பட்டது. சுரேந்திரநாத் பானர்ஜி தலைமையிலான இந்தக் குழு
பெரும்பான்மைக் கருத்தை எதிர்த்ததோடு இந்திய லிபரல் (தாராளமய ) கூட்டமைப்பு என்ற பெயரில்
தனது சொந்தக் கட்சியைத் தொடங்க காங்கிரசுக்கு வழியமைத்தது.