வரலாறு - காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் | 12th History : Chapter 4 : Advent of Gandhi and Mass Mobilisation
கற்றலின் நோக்கங்கள்
கீழ்க்காண்பவற்றைப்
பற்றி அறிந்துகொள்ளல்
•
சம்பரான் இயக்கம் மற்றும் கேதா சத்தியாகிரகம்
•
மாண்டேகு – செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்கள்
•
பிராமணரல்லாதார் இயக்கம் மற்றும் ஒத்துழையாமை இயக்கம்
•
ஜாலியன் வாலாபாக் படுகொலை, சுயராஜ்ய கட்சி மற்றும் அதன் செயல்பாடுகள்
•
சைமன் குழு, வட்ட மேசை மாநாடுகள்
•
காந்தி - இர்வின் ஒப்பந்தம் மற்றும் அம்பேத்கரும் அரசியலும்
அறிமுகம்
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1869இல் கடற்கரையோர நகரான போர்பந்தரில் பிறந்தார். 1915ஆம் ஆண்டு அவர் இந்தியா திரும்பியபோது தென்னாப்பிரிக்காவின் இனவாத அரசு விதித்த சமத்துவமில்லாத நிலைமைகளுக்கு எதிரான காந்தியடிகளின் போராட்டங்கள் ஒரு சாதனையாக இருந்தன. இந்திய தேசிய சக்திகளுக்கு உதவ வேண்டும் என்று காந்தியடிகள் உறுதியாக விரும்பினார். தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்காக முன்னர் ஆதரவு திரட்டிய போது காங்கிரஸ் தலைவர்களுடன் அவர் தொடர்பில் இருந்ததால் காந்தியடிகளுக்கு இந்தியத் தலைவர்களுடன் தொடர்பு இருந்தது. கோபால கிருஷ்ண கோகலேவின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரைத் தனது அரசியல் குருவாக அடையாளம் கண்டார். இந்தியாவை விட்டு இருபது ஆண்டுகள் வெளியே இருந்த காந்தியடிகள் கோகலேவின் அறிவுரையை ஏற்று இந்தியா திரும்பிய உடன் நாட்டின் நிலைமையோடுத் தன்னைப் பொருத்திக்கொள்ளும் விதமாக நாடு முழுவதும் ஓராண்டு காலத்துக்குப் பயணம் மேற்கொண்டார். அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தை நிறுவிய அவர், தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கம் உள்ளிட்ட அரசியல் இயக்கங்களில் தீவிரப் பங்கேற்கவில்லை .
தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது இனவாத அடிப்படையில் செயல்பட்ட அந்நாட்டு அரசுக்கு எதிராக சத்யம் (உண்மை), அஹிம்சை (வன்முறையற்ற தன்மை) ஆகியவற்றின் அடிப்படையிலான சத்தியாகிரகப் போராட்டத்தைப் படிப்படியாக உருவாக்கினார். தீமை மற்றும் அநீதிக்கு எதிராக போராடிய போதிலும், ஒரு சத்தியாகிரகி தனது மனதில் அமைதியை நிலைநிறுத்துவதோடு தவறு செய்தவரை வெறுக்கக்கூடாது. எதிர்ப்பின் பாதையில் ஒரு சத்தியாகிரகி சிரமங்களை ஏற்றுக்கொள்வார் மற்றும் அவரது நடவடிக்கையில் வெறுப்புணர்வுக்கு இடமில்லை. அஹிம்சையும் உண்மையும் தைரியமானவர்கள் மற்றும் அச்சமற்றவர்களின் ஆயுதங்களாக விளங்கும். அவை கோழைகளின் ஆயுதங்கள் அல்ல. எண்ணப்போக்கு மற்றும் பழக்கம், நம்பிக்கை மற்றும் செயல்பாட்டுக்கு இடையே காந்தியடிகளுக்கு எந்தவித வேறுபாடுமில்லை.