காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் - வரலாறு - சைமன் குழு - நேரு அறிக்கைலாகூர் காங்கிரஸ் | 12th History : Chapter 4 : Advent of Gandhi and Mass Mobilisation
சைமன் குழு - நேரு அறிக்கைலாகூர் காங்கிரஸ்
1929-30 ஆம் ஆண்டில் அரசியல் சாசன சீர்திருத்தங்களின்
முதல் தவணையை பிரிட்டிஷார் பரிசீலித்து அறிவிக்க வேண்டியிருந்தது. இதன் ஆயத்தத்தில்
சட்ட உருவாக்கக் குழுவான சைமன் குழு நிறுவப்பட்டது. அதன் தலைவரான சைமனின் பெயரில் இந்தக்
குழு அமைந்தது. வெள்ளையர்கள் மட்டுமே இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர். அது
இந்தியர்களுக்கு அவமானமாகக் கருதப்பட்டது. 1927இல் மதராஸில் நடந்த காங்கிரஸ் வருடாந்திர
மாநாட்டில் இந்தக் குழுவை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டது. இந்து மகா சபையும் முஸ்லிம்
லீக் அமைப்பும் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்தன. இந்தியா தொடர்பான காலனி ஆதிக்க மனப்பான்மைக்கு
சவால் விடுக்க பெரும்பான்மையான கட்சிகள் ஒப்புக்கொண்டன. இதன் முடிவாக மோதிலால் நேரு
அறிக்கை வெளியானது. எனினும் டிசம்பர் 1928இல் கல்கத்தாவில் கூடிய அனைத்துக் கட்சிகளும்
வகுப்புவாதப் பிரதிநிதித்துவம் என்ற விஷயத்தை ஏற்கத் தவறின.
சைமன் குழுவுக்கு எதிரான மிகப்பெரிய ஆர்ப்பாட்டம்தான்
முக்கிய திருப்பமாக அமைந்தது. சைமன் குழு எங்குச் சென்றாலும் எப்போது சென்றாலும் ஆர்ப்பாட்டங்கள்
நடத்தப்பட்டன. சைமனே திரும்பிப் போ முழக்கம் காதைப் பிளந்தது. போராட்டத்தின் அடுத்த
கட்டத்துக்கு மக்கள் தயாராகி வருவதை இந்தப் போராட்டம் எடுத்துக்காட்டியது. டிசம்பர்
1928இல் கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் மாநாட்டின் போது, இடதுசாரிகளை சாந்தப்படுத்தும்
முயற்சியாக 1929இல் நடக்கவிருக்கும் அடுத்த மாநாட்டிற்கு ஜவஹர்லால் நேரு தலைவராக இருப்பார்
என்று அறிவிக்கப்பட்டது. 1928இல் காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்த மோதிலால் நேருவைத்
தொடர்ந்து அவரது மகன் ஜவஹர்லால் நேரு 1929இல் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை
வகித்தார்.
இந்திய விடுதலை மற்றும் காங்கிரஸ் வரலாற்றில்
காங்கிரஸ் கட்சியின் லாகூர் மாநாடு சிறப்பு வாய்ந்ததாகும். முழுமையான சுதந்திரம் அடைவது
என்பதைக் குறிக்கோளாகக் காங்கிரஸ் கட்சி இம்மாநாட்டில் அறிவித்தது. 1929 டிசம்பர்
31இல் லாகூரில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் நாளை விடுதலை
நாளாகக் கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டது. சட்டமறுப்பு இயக்கம் காந்தியடிகளின் தலைமையில்
தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இயக்கத்தின் பகுதியாக காந்தியடிகள் தண்டி யாத்திரையை
அறிவித்தார். அனைவருக்கும் அவசியமான பொருளான உப்பு மீது அநியாய வரி விதிக்கப்பட்டதை
எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டம் இதுவாகும். காலனி ஆதிக்க அரசு உப்பு மீது வரி விதித்ததோடு
அதன் மீது ஆளுமை செலுத்தி வந்தது. காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து குஜராத்
கடற்கரையோரம் உள்ள தண்டிவரை 375 கிலோமீட்டர் தொலைவுக்குத் தண்டி யாத்திரை நடைபெற இருந்தது.
அனைத்துப் பகுதிகளின் சமூகக் குழுக்களைச் சேர்ந்த 78 தொண்டர்களுடன் காலனி ஆதிக்க அரசுக்கு
முன்னரே அறிவித்த பிறகு, காந்தியடிகள் யாத்திரையாக நடந்து தண்டியை 25 ஆவது நாளில் அதாவது
1930 ஏப்ரல் 6இல் சென்று காலத்திலும் முழு உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பத்திரிக்கைகள்
இது பற்றிய செய்திகளை வெளியிட்டிருந்தன. ஒரு பிடி உப்பைக் கையில் அள்ளி உப்புக்கு வரி
செலுத்தும் சட்டத்தைத் தவிடுபொடியாக்கினார். அடக்குமுறைச் சார்ந்த காலனி ஆதிக்க அரசு
மற்றும் அதன் அநியாய சட்டங்களுக்கு எதிராக இந்தியர்கள் ஒன்றுதிரண்டு அவற்றை ஏற்க மறுப்பதன்
அடையாளமாக இந்த நிகழ்வு அமைந்தது.
தமிழ்நாட்டில் இராஜாஜி தலைமையில் உப்பு சத்தியாகிரக
யாத்திரை வேதாரண்யம் நோக்கி நடந்தது. திருச்சிராப்பள்ளியில் தொடங்கி 150 மைல்கள் தொலைவில்
தஞ்சாவூர் மாவட்டத்தின் கரையோர கிராமமான வேதாரண்யம் வரை இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக அப்போது தான் இராஜாஜி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
1930 ஏப்ரல் 13இல் ஆரம்பித்த இந்த நடைபயணம் ஏப்ரல் 28இல் முடிவடைந்தது.
நடைபயணத்தில் ஈடுபடுவோருக்கு அடைக்கலம் தந்தால்
கடும் நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த
ஜெ.ஏ. தார்ன் எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட தொண்டர்களை
மக்கள் இன்முகத்துடன் வரவேற்று உண்ண உணவும் இளைப்பாற இடமும் கொடுத்தனர். யாரெல்லாம்
உணவும் உறைவிடமும் கொடுக்க தைரியத்துடன் முனைந்தார்களோ அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டன. கும்பகோணம், செம்மங்குடி, திருத்துறைப்பூண்டி, ஆகிய இடங்கள் வழியாக
சென்ற சத்தியாகிரகத் தொண்டர்களுக்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது.
வேதாரண்யம் இயக்கம் உண்மையில் தென்னிந்திய
மக்களைத் தட்டியெழுப்பிக் காலனி ஆதிக்க ஆட்சிக்கு எதிராக விழிப்புணர்வை ஊட்டி போராட்டத்தில்
பங்கேற்கத் தூண்டியது.