முகலாயப் பேரரசு | இரண்டாம் பருவம் அலகு -2 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - ஹூமாயூன் (1530-1540, 1555 -1556) | 7th Social Science : History : Term 2 Unit 2 : The Mughal Empire
ஹூமாயூன் (1530-1540, 1555 -1556)
ஹூமாயூன் அரசபதவி ஏற்றவுடன் தம் தந்தையின் விருப்பத்திற்கிணங்கத் தாம் பெற்ற நாட்டைப் பிரித்துச் சகோதரர்களுக்குக் கொடுத்தார். அதன்படி அவருடைய சகோதரர்கள் கம்ரான், ஹின்டல், அஸ்காரி ஆகிய மூவரும் ஒவ்வொரு பகுதியைப் பெற்றனர். ஆனால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் டெல்லி அரியணையின் மீது ஆசை இருந்தது. இவர்களைத் தவிர ஹுமாயூனுக்கு வேறு சில போட்டியாளர்களும் இருந்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பீகாரையும் வங்காளத்தையும் ஆட்சி செய்து வந்த ஆப்கானியரான ஷெர்ஷா சூர் என்பவராவார். ஷெர்ஷா 1539 இல் சௌசா என்ற இடத்திலும், 1540 இல் கன்னோஜிலும் ஹூமாயூனைத் தோற்கடித்தார். அரியணையிலிருந்து தூக்கி வீசப்பட்ட ஹூமாயூன் ஈரானுக்குத் தப்பியோட நேர்ந்தது. பாரசீக அரசர், சபாவிட் வம்சத்தைச் சேர்ந்த ஷா-தாமஸ்ப் என்பவரின் உதவியால் 1555 டெல்லியை மீண்டும் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றார். ஆனால், 1558 இல் டெல்லியில் தமது நூலகத்தின் படிக்கட்டுகளில் இடறி விழுந்த ஹூமாயூன் மரணத்தைத் தழுவினார்.