முகலாயப் பேரரசு | இரண்டாம் பருவம் அலகு -2 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - ஔரங்கசீப் (1658-1707) | 7th Social Science : History : Term 2 Unit 2 : The Mughal Empire
ஷாஜகான் ஔரங்கசீப் (1658-1707)
முகலாய மாமன்னர்களில் கடைசி அரசரான ஔரங்கசீப் தம் தந்தையைச் சிறைப்படுத்தி ஆட்சியைத் தொடங்கினார். ஆலம்கிர் (உலகைக் கைப்பற்றியவர்) என்னும் பட்டத்தை சூட்டிக் கொண்டார். இவர் தம் தாத்தா ஜஹாங்கீரைப்போல கலைகளின்மீது ஆர்வம் கொண்டவராகவோ தந்தை ஷாஜகானைப் போல் கட்டிடக் கலையில் நாட்டங்கொண்டவராகவோ இல்லை. தமது மதத்தைத் தவிர ஏனைய மதங்களை அவர் சகித்துக்கொள்ளவில்லை. இந்துக்களின் மீது மீண்டும் ஜிசியா வரியை விதித்தார்.
இந்துக்களை அரசுப்பணிகளில் அமர்த்துவதைத் தவிர்த்தார். 1658க்கும் 1681க்கும் இடைப்பட்ட காலத்தில் வடஇந்தியாவிலிருந்த ஔரங்கசீப் பண்டேலர்கள், சீக்கியர்கள், ஜாட்டுகள் சாத்னாமியர்கள் ஆகியோரின் கலகங்களை அடக்கினார். வடகிழக்கில் அவர் மேற்கொண்ட விரிவாக்க நடவடிக்கைகள் காமரூபாவைச் (அஸ்ஸாம்) சேர்ந்த ஆகோம் அரசுடன் போர் ஏற்படக் காரணமாயிற்று. இவ்வரசு முகலாயர்களால் பலமுறை தாக்கப்பட்டாலும் அதை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை.
ராஜபுத்திரர் மற்றும் மராத்தியருடன் கொண்டிருந்த உறவு
ஔரங்கசீப் ரஜபுத்திரர்களின் மீது கொண்டிருந்த பகைமை அவர்களுடன் நெடுங்காலப் போருக்கு வழிவகுத்தது. நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில் அவருடைய மகன் இளவரசர் அக்பர் அவருக்கு எதிராக கலகம் செய்ததோடு ரஜபுத்திரர்களுடன் சேர்ந்துகொண்டு இடையூறு விளைவித்தார். தக்காணத்தில் இளவரசர் அக்பர் சிவாஜியின் மகன் சாம்பாஜியுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டார். இதனால் 1689 இல் ஔரங்கசீப் தக்காணம் செல்ல நேர்ந்தது.
தக்காணத்தில் ஔரங்கசீப் பீஜப்பூர், கோல்கொண்டா அரசுகளைப்பணியவைத்தார். தமக்கென ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்ட சிவாஜி, 1674 இல் தம்மை மராத்திய நாட்டின் பேரரசராக அறிவித்தார். தென்மேற்கில் சிவாஜியின் எழுச்சியை ஔரங்கசீப்பால் தடுக்க இயலவில்லை . ஆனால் அவரால் சிவாஜியின் மைந்தரான, பட்டத்து இளவரசர் சாம்பாஜியைக் கைது செய்து சித்திரவதை செய்து கொல்ல முடிந்தது. தம்முடைய தொண்ணூறாவது வயதில் 707 இல் மரணத்தைத் தழுவுகின்றவரை ஔரங்கசீப் தக்காணத்திலேயே தங்கியிருந்தார்.
ஔரங்கசீப்பின் ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் ஆங்கிலேயர்கள் மதராஸ் (சென்னை ), கல்கத்தா (கொல்கத்தா), பம்பாய் (மும்பை) ஆகிய இடங்களில் தங்கள் வணிக மையங்களை வலுவாக நிறுவினர். பிரஞ்சுக்காரர்கள் தங்களின் முதன்மை வணிக மையத்தைப் பாண்டிச்சேரியில் நிறுவினர்.
முகலாயர் நிர்வாகம்
மைய நிர்வாகம்
இந்தியாவின் பெரும் பகுதியில் ஓர் உறுதியான நிர்வாகத்தை முகலாயர்கள் ஏற்படுத்தியிருந்தனர். முகலாய நிர்வாகக் கட்டமைப்பின் உச்ச உயர்நிலைத் தலைவர் பேரரசரே ஆவார். சட்டங்களை இயற்றுபவரும் அவரே; அவற்றைச் செயல்படுத்துபவரும்அவரே ஆவார். அவரே படைகளின் தலைமைத் தளபதி, அவரே நீதி வழங்குபவரும் ஆவார். அவருக்கு அமைச்சர் குழுவொன்று உதவியது. அக்குழுவில் இடம்பெற்றிருந்த மிக முக்கிய அதிகாரிகள் பின்வருமாறு: வக்கீல் (பிரதம மந்திரி) வஜீர் அல்லது திவான் (வருவாய்த் துறை மற்றும் செலவுகள்) மீர்பாக்க்ஷி இராணுவத்துறை அமைச்சராவார். மீர்சமான் அரண்மனை நிர்வாகத்தை கவனித்தார். குவாஜி தலைமை நீதிபதியாவார். சதா-உஸ்சுதூர் இஸ்லாமியச் சட்டங்களை (சாரியா) நடைமுறைப் படுத்தினார்.
மாகாண நிர்வாகம்
பேரரசு பல சுபாக்களாகப் (மாகாணங்கள்/ மாநிலங்கள்) பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு சுபாவும் 'சுபேதார்' என்னும் அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஒவ்வொரு சுபாவும் பல சர்க்கார்களாகப் (மாவட்டங்கள்) பிரிக்கப்பட்டிருந்தன. சர்க்கார் பர்கானாக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. பல கிராமங்களை உள்ளடக்கிய பிரிவே பர்கானாவாகும்.
உள்ளாட்சி நிர்வாகம்
நகரங்களும் பெருநகரங்களும் கொத்தவால் எனும் அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டன. கொத்தவால் சட்டம் ஒழுங்கைப் பராமரித்தார். கிராம நிர்வாகம் கிராமப் பஞ்சாயத்துகளிடம் (முறைப்படுத்தப்படாத கிராம அளவிலான நீதி வழங்கும் அமைப்புகள்) வழங்கப்பட்டிருந்தது. பஞ்சாயத்து உறுப்பினர்கள் தீர்ப்புகளை வழங்கினர்.
படை நிர்வாகம்
முகலாய இராணுவமானது காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, பீரங்கிப்படை ஆகிய பிரிவுகளைக் கொண்டிருந்தன. அரசர் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட, சிறப்பு வாய்ந்த ஆயுதங்களை ஏந்திய எண்ணிக்கையிலும் அதிகமான பாதுகாப்பு வீரர்களையும், அரண்மனைக் காவலர்களாகவும் பராமரித்தார்.
மன்சப்தாரி முறை
மன்சப்தாரி முறையை அக்பர் அறிமுகம் செய்தார். இம்முறையின் கீழ் பிரபுக்கள், ராணுவ அதிகாரிகள், குடிமைப் பணி அதிகாரிகள் ஆகியோரின் பணிகள் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரே பணியாக மாற்றப்பட்டன. இப்பணியிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு மன்சப் (படிநிலை, தகுதி அந்தஸ்து) வழங்கப்பட்டது. அப்படியான தகுதியைப் பெற்றவர் மன்சப்தார் ஆவார். மன்சப்தார் சாட், சவார் எனும் இருவிடயங்களைச் சார்ந்திருந்தன. சாட், என்பது அவரது தகுதியைக் குறிப்பதாகும். சவார் என்பது ஒரு மன்சப்தார் பராமரிக்க வேண்டிய குதிரைகள், குதிரைவீரர்களின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும். மன்சப்தாரின் ஊதியமானது அவரால் பராமரிக்கப்படும் குதிரைகளின் எண்ணிக்கையைப் (10 முதல் 10,000 வரை) பொறுத்திருந்தது. பேரரசர் மன்சப்தார்களுக்கு உயர்ந்த ஊதியம் வழங்கினார். ஊதியம் பெறுவதற்கு முன்னர் நடைபெறும் மேற்பார்வையின்போது, மன்சப்தார் தமது குதிரை வீரர்களைக் காட்சிப்படுத்த வேண்டும். திருட்டைத் தவிர்ப்பதற்காகக் குதிரைகளுக்கு முத்திரையிடும்முறை பின்பற்றப்பட்டது. மன்சப்தாரால் பராமரிக்கப்படும் படைகளை அரசர் தமது விருப்பத்தின்படி பயன்படுத்தலாம் அக்பருடைய ஆட்சிக் காலத்தில் மன்சப்தார் பதவி பரம்பரை உரிமை சார்ந்ததாக இல்லை. அவருக்குப் பின்னர், அது பரம்பரை உரிமை சார்ந்த பணியானது.
நிலவருவாய் நிர்வாகம்
அக்பரின் ஆட்சியின்போது நிலவருவாய் நிர்வாகம் சீரமைக்கப்பட்டது. அக்பரின் வருவாய்த்துறை அமைச்சரான ராஜா தோடர்மால் ஷெர்ஷா அறிமுகம் செய்த முறையைப் பின்பற்றினார். அம்முறையை மேலும் சீர்செய்தார். தோடர்மாலின் ஜப்த் முறை வடக்கு, வடமேற்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இம்முறையின்படி நிலங்கள் அளவை செய்யப்பட்டு அவற்றின் இயல்புக்கும் வளத்திற்கும் ஏற்றவாறு வகைப்படுத்தப்பட்டன. பத்தாண்டு காலத்திற்குச் சராசரி விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு (13) அரசுக்கு வரியாகச் செலுத்தப்பட வேண்டுமென நிர்ணயம் செய்யப்பட்டது. ஷாஜகானின் காலத்தில் ஜப்த் அல்லது ஜப்தி எனும் இம்முறை தக்காண மாகாணங்களுக்கும் நீடிக்கப்பெற்றது.
முகலாயப் பேரரசர்கள் பழைய இக்தா முறையை ஜாகீர் எனப் புதிய பெயரிட்டுச் செயல்படுத்தினர். இந்நிலவுரிமை ஒப்பந்த காலமுறை டெல்லி சுல்தான்களின் காலத்தில் வளர்த்தெடுக்கப்பட்டதாகும். இம்முறையின் கீழ் குறிப்பிட்ட ஒரு பகுதியில் நிலவரி வசூல் செய்யும் பொறுப்பும் அப்பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பும் ராணுவ அல்லது சிவில் அதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருடைய தற்போதைய பெயர் ஜாகீர்தார் ஆகும். தங்களது ஊதியத்தைப் பணமாகப் பெறாத ஒவ்வொரு மன்சப்தாரும் ஜாகீர்தார் ஆவார். ஜாகீர்தார் தம் அதிகாரிகள் மூலம் நிலவரியை வசூல் செய்தார். மாவட்ட அளவிலான வரிவசூல் அதிகாரி அமில் குஜார் ஆவார். அவருக்குப் பொட்டாதார், கனுங்கோ , பட்வாரி, முக்காதம் போன்ற துணைநிலை அதிகாரிகள் உதவி செய்தனர்.
ஜமீன்தாரி முறை
நில உரிமையாளர்களிடமிருந்து நிலவரியை வசூலிக்கப் பணியமர்த்தப்பட்டவர்களே ஜமீன்தார்கள் ஆவர். ஜமீன்தார்கள் முகலாய அதிகாரிகள், படைவீரர்கள் ஆகியோரின் உதவியுடன் நிலவரியை வசூல் செய்தனர். சட்டம், ஒழுங்கு, அமைதி ஆகியவற்றையும் பாதுகாத்தனர். உள்ளூர் அளவிலான தலைவர்களும் சிற்றரசர்களும் ஜமீன்தார்கள் என்றே அழைக்கப்பட்டனர். ஆனால், பதினாராம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஜமீன்தார்களுக்குத் தங்களது ஜமீன் பகுதிகளின் மீது பரம்பரை உரிமை வழங்கப்பட்டது. வரிவசூல் பணிகளைச் செய்வதற்காகப் படைகளை வைத்துக்கொள்ளும் அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அறிஞர்களுக்கும், இறைப்பணியில் ஈடுபட்டுள்ள பெரியோர்க்கும், சமயம் சார்ந்த நிறுவனங்களுக்கும் அரசர் நிலங்களை வழங்கினார். வரிவிலக்கு அளிக்கப்பட்ட இந்நிலங்கள் சுயயூர்கள் என்றழைக்கப்பட்டன.
சமயக் கொள்கை
முகலாயப் பேரரசர்கள் இஸ்லாமைப் பின்பற்றினர். தம்முடைய சமயக் கொள்கையில் அக்பர் மிகவும் முற்போக்காளராகவும், தாராள மனப்பாங்கு கொண்டவராகவும் இருந்தார். அக்பரின் அவையில் போர்த்துகீசிய கிறித்துவப் பாதிரியார்கள் மிகவும் விரும்பத்தக்கவர்களாக இருந்துள்ளனர். அக்பர் அனைத்து மதங்களிலுமுள்ள சிறந்த கொள்கைகளை ஒருங்கிணைத்துத் தீன்-இலாகி (தெய்வீக மதம்) என்னும் ஒரே சமயத்தை உருவாக்க முயன்றார். அக்பருடைய கொள்கையை ஜஹாங்கீரும் ஷாஜகானும் பின்பற்றினர். ஔரங்கசீப் தம்முடைய முன்னோர்களின் தாராளக் கொள்கையை மறுத்தார். முன்னரே குறிப்பிடப்பட்டதுபோல இந்துக்களின்மீது ஜிசியா வரியையும், பயணிகளின் மீதான வரியையும் மீண்டும் விதித்தார். ஏனைய மதங்களின் மீதான அவரின் சகிப்புத்தன்மை இன்மை மக்களிடையே அவரை விரும்பத்தகாதவராக ஆக்கியது.
கலை, கட்டடக்கலை
பாபர், பாரசீகக் கட்டட முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தி ஆக்ரா ,ப்யானா, டோலாப்பூர், குவாலியர் மற்றும் க்யூல் (அலிகார்) போன்ற பகுதிகளில் கட்டங்களைக் கட்டுவித்தார். ஆனால், அவற்றில் சில கட்டடங்கள் மட்டுமே தற்போது உள்ளன. ஹுமாயூனின் டெல்லி அரண்மனை, தீன்-இ-பானா இது பின்னாளில் ஷெர்ஷாவினால் இடிக்கப்பட்டிருக்கக் கூடும் என அறியப்படுகிறது. அவ்விடத்தில் ஷெர்சா, புரான கிலாவைக் கட்டினார். ஷெர்சாவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மிக முக்கியமான நினைவுச் சின்னம் பீகாரில் சசாரம் என்னுமிடத்தில் அமைந்துள்ள கல்லறை மாடமாகும்.
திவான் -இ-காஸ், திவான்-இ- ஆம், பஞ்ச் மஹால் (பிரமிடு வடிவிலான ஐந்து அடுக்குக் கட்டடம்) ரங் மஹால், சலீம் சிஸ்டியின் கல்லறை, புலந்தர்வாசா ஆகியவை அக்பரால் கட்டப்பட்டவையாகும். சிக்கந்தராவிலுள்ள அக்பரின் கல்லறை கட்டப் பணிகளை ஜஹாங்கீர் நிறைவு செய்தார். மேலும், ஆக்ராவில் நூர்ஜகானின் தந்தையான இம்மத்உத்-தௌலாவின் கல்லறையையும் கட்டினார்.
முகலாயப் பேரரசும், அதன் புகழும் உன்னதமும் ஷாஜகான் காலத்தில் உச்சத்தை எட்டியது. பேரரசர் அமர்வதற்காகச் விலையுயர்ந்த நவரத்தினத் கற்கள் பதிக்கப்பெற்ற மயிலாசனம் தயாரிக்கப்பட்டது. யமுனை நதிக்கரையில் உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் எழுப்பப்பட்டது. மேலும், ஆக்ராவிலுள்ள முத்து மசூதி (மோதி மசூதி) டெல்லியிலுள்ள மிகப்பெரிய ஜூம்மா மசூதி ஆகியவை ஷாஜகானால் கட்டப்பட்டவையாகும்.
ஔரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தில், கட்டடக்கலை பெரிய அளவிலான ஆதரவைப் பெறவில்லை . ஆனாலும், ஔரங்கசீப்பின் மகன் ஆஜாம் ஷாவால் தம் தாயின் அன்பைப் போற்றும் வகையில் ஔரங்கபாத்தில் கட்டப்பட்ட பிபிகா மக்பாரா என்னும் கல்லறை மாடம் குறிப்பிடத்தக்கதாகும்.
செங்கோட்டை
லால் குய்லா என்று அழைக்கப்படும் டெல்லியிலுள்ள 'செங்கோட்டை' முகலாயப் பேரரசர்களின் வாழ்விடமாகும். இது 1639 இல் பேரரசர் ஷாஜகானால் மதில்களால் சூழப்பெற்ற தனது தலைநகர் ஷாஜகானாபாத்தில் கட்டப்பட்ட அரண்மனையாகும், இக்கோட்டை சிவப்புநிறக் கற்களால் கட்டப்பட்டுள்ளதால் இது செங்கோட்டை என அழைக்கப்படுகிறது.