Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | இஸ்லாமும், இஸ்லாமியப் பேரரசுகளின் தோற்றமும்

இடைக்காலங்களில் கிழக்கு ஆசியா | வரலாறு - இஸ்லாமும், இஸ்லாமியப் பேரரசுகளின் தோற்றமும் | 9th Social Science : History: The Middle Ages

   Posted On :  05.09.2023 01:09 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்காலம்

இஸ்லாமும், இஸ்லாமியப் பேரரசுகளின் தோற்றமும்

நபிகள் நாயகம் (முகமது நபி) இஸ்லாமைத் தோற்றுவித்தார். இஸ்லாம் சகோதரத்துவம் என்னும் கருத்தை முன் வைத்தது. இஸ்லாமியர் அனைவரும் சரிசமமானவர்கள் எனும் கருத்தினை முகமது அழுத்தமாகக் கூறினார்.

இஸ்லாமும், இஸ்லாமியப் பேரரசுகளின் தோற்றமும்

நபிகள் நாயகம் (முகமது நபி) இஸ்லாமைத் தோற்றுவித்தார். இஸ்லாம் சகோதரத்துவம் என்னும் கருத்தை முன் வைத்தது. இஸ்லாமியர் அனைவரும் சரிசமமானவர்கள் எனும் கருத்தினை முகமது அழுத்தமாகக் கூறினார். சமத்துவம் சகோதரத்துவம் ஆகிய இக்கருத்துக்கள் தங்களுக்குள்ளே போர் செய்து கொண்டிருந்த அராபிய இனக் குழுக்களுக்கும், உலகின் ஏனைய பகுதிவாழ் மக்களுக்கும் ஏற்புடையதாய் இருந்தது. ஆனால் பிறந்த ஊரில் சந்தித்த இடர்ப்பாடுகளின் காரணமாய் நபிகளும் அவரைப் பின்பற்றுவோரும் மெக்காவிலிருந்த எத்ரிப் என்னும் நகருக்கு இடம் பெயர்ந்தனர். கி.பி. (பொ.) -622இல் மெக்காவை விட்டு நபிகள் இடம்பெயர்ந்த நிகழ்வு அராபிய மொழியில் ஹிஜிரா (Hijrah) என அழைக்கப்படுகிறது. அவருடைய வருகையைச் சிறப்பிக்கும் வகையில் எத்ரிப் நகர மக்கள் தங்கள் நகரத்திற்கு மதினாட்உன்-நபி (நபிகள் நாயகத்தின் நகரம்) எனப் புதுப்பெயர் சூட்டினர். தற்போது அது மெதினா என அழைக்கப்படுகிறது. ஹிஜிராவிற்குப் பின்னர் பத்து ஆண்டுகள் கழித்து கி.பி. (பொ.) -632 இல் நபிகள் இயற்கை எய்தினார். அவர் இயற்கை எய்தும் தருவாயில் இஸ்லாமின் கருத்துக்களால் ஒருங்கிணைக்கப்பட்டு அராபியர்கள் ஒரு வலிமை வாய்ந்த சக்தியாக உருவாயினர்.


 

() அராபியர்

நபிகள் நாயகத்தைத் தொடர்ந்து கலீஃபா (மத மற்றும் அரசியல் தலைவர்) பதவியேற்ற அபுபக்கர், ஒமர் ஆகிய இருவரும் ஓர் இஸ்லாமியப் பேரரசின் உருவாக்கத்திற்கு அடித்தளமிட்டனர். குறுகிய காலத்தில் அராபியர்கள் கீழை ரோமானியப் பேரரசையும், பாரசீக சசானிட் அரசரையும் தோற்கடித்தனர். யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் புனித நகரமாக விளங்கிய ஜெருசலேம் அராபியர்களால் கைப்பற்றப்பட்டது. ஒட்டுமொத்த ஸ்பானியமும் பாரசீகமும் புதிய அராபியப் பேரரசின் கீழ்வந்தன.

இஸ்லாம் எளிமையையும் சமத்துவத்தையும் ஆதரித்தது. முந்தைய முறைமைகளின் கீழ் அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் ஆளாகியிருந்த பெருவாரியான மக்களிடையே இவ்விரு கருத்துக்களும் ஈர்ப்பை ஏற்படுத்தி வரவேற்பைப் பெற்றன. அராபியர்கள் மிக எளிதாகப் பல பகுதிகளைக் கைப்பற்றினர். ரோமானியப் பேரரசின் கீழ்பெரும் துயரங்களை அனுபவித்த எகிப்திய மக்கள் எளிதாக அராபியரின் மேலாதிக்கத்தை ஏற்றனர். தளபதி 'தாரிக்' என்பாரின் தலைமையின்கீழ் மொராக்கோவையும் ஆப்பிரிக்காவையும் கைப்பற்றிய அராபியர்கள் ஐரோப்பாவுக்குள் நுழைந்து ஸ்பானியத்தைக் கைப்பற்றி அதனை பல நூற்றாண்டுகள் ஆண்டனர். அதுவரையிலும் பாலைவனங்களில் நாடோடிகளாக வாழ்ந்துவந்த அராபியர்கள் வலிமை மிகுந்த ஒரு பேரரசின் ஆட்சியாளர்கள் ஆயினர். இவர்கள் சாராசென்ஸ் (சகாரா மற்றும் நஸின் என்னும் இரு சொற்களின் இணைப்பு பாலைவனத்தில் வாழ்பவர்கள் என்பது பொருள்) என்றும் அழைக்கப்பட்டனர்.

சன்னி, ஷியா பிரிவுகளின் தோற்றம்

 அராபியத் தலைவர்களுக்குள் ஏற்பட்ட சச்சரவுகளே இஸ்லாமின் இருபிரிவுகள் தோன்றக் காரணமாயிற்று. அப்பிரிவுகள் சன்னி மற்றும் ஷியா என்றழைக்கப்பட்டன. சன்னி பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், இஸ்லாமிய நாடுகளின் தலைமையும், நபிகளுக்குப்பின் அப்பொறுப்புக்கு வருவோரும் இஸ்லாமியத்தில் நம்பிக்கையுடைய மக்களின் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். மாறாக ஷியா பிரிவைச் சேர்ந்தோர் இவ்வரசியல், மத தலைமைப் பொறுப்புகளை ஏற்போர் நபிகள் நாயகத்துடன் ரத்த உறவு கொண்டவர்களாகவும் அல்லது மண உறவு கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். மற்றவர்களை அனுமதிக்க முடியாது என்ற நிலைபாட்டைக் கொண்டிருந்தனர்.

 

ஒமையது அல்லது உமையது வம்சத்தின் ஆட்சி

நபிகள் நாயகத்தின் குடும்பத்தின் ஒரு உறவு வழியைச் சேர்ந்த கலீஃபாக்கள் ஒமையது அல்லது உமையது என்று அழைக்கப்பட்டவர்கள் 100 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தனர். டமாஸ்கஸ் அவர்களின் தலைநகரமாகும். ஒரு புதிய பாணியிலான கட்டடக்கலையை அவர்கள் வளர்த்தனர். அதற்கு சாரசனிக் கட்டடக் கலை என்று பெயர். இப்பாணியில் அமைந்த வளைவுகள், தூண்கள், கவிகை மாடங்கள் (Domes) மினார் எனப்படும் கோபுரங்கள் ஆகியவை இந்தியாவில் பரவி இந்தியக் கட்டடக்கலை பாணிகளோடு கலந்தன.


அராபிய முஸ்லீம்கள் இஸ்லாத்தை உலகின் பல பகுதிகளுக்கு எடுத்துச் சென்றனர். தொலைதூரப் பகுதிகளில் அவர்கள் போர் செய்து கொண்டிருந்தபோது அராபியாவில் இருந்தவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர். நபிகள் நாயகத்தின் மருமகன் அலியும் அவரது மகன் ஹுசைனும் கொல்லப்பட்டனர். உமையதுகள் பதவி நீக்கம் செய்யப்பட்டு அப்பாசிட்டுகள் ஆட்சியைக் கைப்பற்றினர். இவர்கள் நபிகள் நாயகத்தின் மாமன் அப்பாஸ் (Abbas) என்பவரின் வழிவந்தோர் ஆகையால் அப்பாசித்துகள் என்றழைக்கப்பட்டனர்.

 

அப்பாசித்துகளின் ஆட்சி

அப்பாசித்துகளின் ஆட்சி கி.பி. (பொ.) -750இல் தொடங்கியது. "நம்பிக்கையாளர்களின் தளபதி" என்னும் பட்டத்தோடு பதவியேற்ற அப்பாசித் ஆட்சியாளர்கள் ஏனைய பேரரசுகளைப் போலவே ஆட்சி புரிந்தனர். பகட்டான விசயங்களில் ஏனைய அரசுகளோடு போட்டியிட்டனர். தலை நகர் டமாஸ்கஸ்ஸிலிருந்து ஈராக்கிலுள்ள பாக்தாத்திற்கு மாற்றப்பட்டது.


 

அராபியரின் அறிவுசார் முயற்சிகள்

அப்பாசித்து கலீஃபாக்கள் புதிய நிலங்களைக் கைப்பற்றும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. அறிவுசார்ந்த முயற்சிகளில் அவர்கள் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர்.

பாக்தாத்: "அரேபிய இரவுகளின் நகரம்" என அறியப்பட்ட நகரமாகும். இது அரண்மனைகள், பொதுக்கட்டடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பெரிய கடைகள், பூங்காக்கள் மற்றும் தோட்டங்களைக் கொண்ட விரிந்து பரந்த நகரமாகும். வணிகர்கள் கிழக்கோடும் மேற்கோடும் பெரும் வணிகத்தைச் செய்தனர். உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பார்வையாளர்கள் குறிப்பாக படித்த அறிஞர்கள், மாணவர்கள், கலைஞர்கள் பாக்தாத்திற்கு வந்தார்கள்". - நேரு, உலக சரித்திரம் (Glimpses of World History).

அராபியர்கள் அறிவியல் பூர்வமான கேள்வி ஞானம் உடையவர்களாக இருந்தனர். மருத்துவம், கணிதம் போன்ற துறைகள் தொடர்பான பலவற்றை அவர்கள் இந்தியாவிலிருந்து கற்றுக் கொண்டனர். இந்திய அறிஞர்களும் கணிதவியலாளர்களும் அதிக எண்ணிக்கையில் பாக்தாத் சென்றனர். மருத்துவம் மற்றும் பிறதுறைகள் சார்ந்த சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட பல இந்திய நூல்கள் அராபிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டன. அராபிய மருத்துவர்களும் அறுவை சிகிச்சை நிபுணர்களும், மருத்துவ, அறுவை சிகிச்சை துறையில் புகழ்பெற்று விளங்கினர்.

 

() அராபியப் பேரரசின் சிதைவும் செல்ஜு துருக்கியர்களின் எழுச்சியும்

அப்பாசித்து பேரரசு ஹருன்-அல்-ரசீத் அரசரின் ஆட்சிக் காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்தது. அவருடைய இறப்பிற்குப் பின் பேரரசு சிதையத் தொடங்கியது. ஆங்காங்கே பல சுதந்திர சிற்றரசுகள் தோன்றின. கலீஃபா ஆட்சி வலுவிழந்ததால் அவ்வரசுகளைக் கட்டுப்படுத்த இயலவில்லை . இஸ்லாமியர்களாக மாறிய துருக்கியர்கள் (செல்ஜுக் துருக்கியர் என அழைக்கப்பட்டனர்) பாக்தாத்தைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றார்கள். கான்ஸ்டாண்டிநோபிளின் பைசாண்டியப்படைகளையும் தோற்கடித்த அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குச் சவாலாய்த் திகழ்ந்தனர். ஜெருசலேமுக்கு வரும் கிறித்தவ புனிதப் பயணிகள் துருக்கியர்களால் பெரும் இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். இதனால் ஏற்பட்ட மோதல்களே சிலுவைப் போர்களுக்கு இட்டுச் சென்றன.

 

() சிலுவைப் போர்களும் செல்ஜுக் துருக்கியரின் வீழ்ச்சியும்

போப்பாண்டவரும் திருச்சபையும் புனித நகரமான ஜெருசலேமை மீட்பதற்காக ஜெருசலேமை நோக்கிச் செல்லுங்கள்' என அனைத்துக்  கிறித்தவ மக்களுக்கும் அழைப்பு விடுத்தனர். புனிதப்போர் செய்தவர்கள் அப்புனித இடங்களைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த செல்ஜுக் துருக்கியரோடு போரிட்டனர். கி.பி. (பொ..) 1095 இல் கிறித்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்குமிடையே தொடங்கிய இப்போராட்டம் ஏறத்தாழ 200 ஆண்டுகள் தொடர்ந்தன. இவையே சிலுவைப் போர்கள் என அழைக்கப்படுகின்றன.

சிலுவைப் போர்களின் மூலம் கிறித்தவர்களால் நினைத்ததைச் சாதிக்க இயலவில்லை . ஜெருசலேம் தொடர்ந்து 700 ஆண்டுகள் உதுமானிய துருக்கியர் வசமே இருந்தது. இந்த தொடர் சிலுவைப் போர்களால் செல்ஜுக் துருக்கியர்கள் பலவீனமடைந்தனர். இதனிடையே கிழக்கேயிருந்து மங்கோலியர்களின் படையெடுப்பில் சிலுவைப்போர் பிரச்சனைகள் ஓரம் கட்டப்பட்டன. கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் செங்கிஸ்கானின் தலைமையில் முன்னேறி வரும் மங்கோலியர் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பினர். கி.பி. (பொ.)1258இல் பாக்தாத் நகரம் மங்கோலியர்களால் கைப்பற்றப்பட்டு அழிவுக்கு உள்ளானது. அப்பாசித்து பேரரசின் எஞ்சியவையும் முடிவிற்கு வந்தன.


 

() சிலுவைப் போர்களின் தாக்கம்

சிலுவைப் போர்கள் நிலப்பிரபுத்துவம் சார்ந்த உறவுகளுக்குமுடிவுகட்டியது.சிலுவைப்போரில்பங்கு பெறுவதற்காகக் கிழக்கே சென்று பலபிரபுக்கள் நீண்ட காலத்திற்கு அங்கேயே தங்க நேர்ந்தது. சிலர் திரும்பி வரவேயில்லை. இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி பண்ணை அடிமைகள் பலர் நிலத்தோடு தங்களை கட்டிப் போட்டிருந்த அடிமைக்கட்டுகளை உடைத்து வெளியேறினர். கீழைநாட்டுப் பொருட்களுக்கான தேவைகள் அதிகரித்ததால் வியாபாரம் பெருகியது. மத்திய தரைக்கடல் பகுதியில் வெனிஸ், ஜெனோவா,

பைசா ஆகிய நகரங்கள் முக்கிய வணிக மையங்களாகத் தோன்றின.கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையேயான வணிகத்தில் கான்ஸ்டாண்டி நோபிள் நகரம் வகித்துவந்த இடைத்தரகர் பாத்திரம் முடிவுக்கு வந்தது. வலிமைவாய்ந்த நிலப்பிரபுக்கள் அழிந்துபோனது ஒருவகையில் இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் முடியாட்சி வலுப்பெறுவதற்கு காரணமாயிற்று. சிலுவைப் போர்களின் குறிப்பிடத்தகுந்த ஒரு விளைவு போப்பாண்டவரும் அவருடைய ஆட்சிமுறையும் தங்கள் செல்வாக்கையும் மரியாதையையும் இழக்க நேர்ந்ததாகும்.

 மங்கோலியர்கள் மற்றும் செங்கிஸ்கான்

மங்கோலியர்கள் நாடோடிகள். போர்த்திறன் கொண்ட அவர்கள் செங்கிஸ்கான் எனும் மகத்தான தலைவனை உருவாக்கினார்கள். செங்கிஸ்கான் சிறப்பு மிக்க இராணுவ ஆற்றல் கொண்டவர். மங்கோலியர்கள் ரஷ்யாவை 300 ஆண்டுகாலம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதன் காரணமாக இடைக்காலத்தின் இறுதிவரை ஏனைய ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் தொழில்நுட்பங்களில் ரஷ்யா வளர்ச்சியடையாது பின்தங்கியிருந்தது.


Tags : East Asia in the Middle Ages | History இடைக்காலங்களில் கிழக்கு ஆசியா | வரலாறு.
9th Social Science : History: The Middle Ages : Islam and the Rise of Islamic Empires East Asia in the Middle Ages | History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்காலம் : இஸ்லாமும், இஸ்லாமியப் பேரரசுகளின் தோற்றமும் - இடைக்காலங்களில் கிழக்கு ஆசியா | வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்காலம்