Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | சீனா: தாங் (Tang) அரச வம்சம் (கி.பி. (பொ.ஆ) 618-907)

இடைக்காலங்களில் கிழக்கு ஆசியா - சீனா: தாங் (Tang) அரச வம்சம் (கி.பி. (பொ.ஆ) 618-907) | 9th Social Science : History: The Middle Ages

   Posted On :  05.09.2023 12:35 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்காலம்

சீனா: தாங் (Tang) அரச வம்சம் (கி.பி. (பொ.ஆ) 618-907)

சீனாவில் ஆட்சிப் பொறுப்பேற்ற சூயி அரசவம்சம் நாற்பதாண்டுகளில் வீழ்ச்சியைச் சந்தித்தது. மிகப்பெரும் வாய்க்கால் (Grand Canal) அமைத்தல் போன்ற பொதுப்பணிகளால் ஏற்பட்ட பெரும் நிதிச்சுமையும், கொரியாவின் வடக்குப் பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவு மிகுந்த போர்களும் சூயி வம்சத்தின் வீழ்ச்சிக்குக் காரணங்களாயின.

இடைக்காலங்களில் கிழக்கு ஆசியா


சீனா: தாங் (Tang) அரச வம்சம் (கி.பி. (பொ.) 618-907)

சீனாவில் ஆட்சிப் பொறுப்பேற்ற சூயி அரசவம்சம் நாற்பதாண்டுகளில் வீழ்ச்சியைச் சந்தித்தது. மிகப்பெரும் வாய்க்கால் (Grand Canal) அமைத்தல் போன்ற பொதுப்பணிகளால் ஏற்பட்ட பெரும் நிதிச்சுமையும், கொரியாவின் வடக்குப் பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவு மிகுந்த போர்களும் சூயி வம்சத்தின் வீழ்ச்சிக்குக் காரணங்களாயின. ஒரு வலுவான மையப்படுத்தப்பட்ட பேரரசை உருவாக்கும் நோக்கில் நடத்தப்பட்ட கிளர்ச்சிகளுக்கிடையிலிருந்து தாங் வம்சம் உதயமானது. இக்கிளர்ச்சியை திட்டமிட்டு நடத்திய லி யுவான், யங் யு என்பவரை சீனாவின் பேரரசர் பதவியில் அமர வைத்தார். ஆனால் யங் யு தன்னுடைய அதிகாரி ஒருவரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அரசுத் தலைமை அதிகாரியாக இருந்த (Chancellor) லி யுவான் தன்னைத்தானே பேரரசராக அறிவித்தார். வடமேற்கு எல்லையில் பலநூறு கிலோமீட்டர் தொலைவுக்குப் பெருஞ்சுவர் மீண்டும் கட்டப்பட்டது. இராணுவ நடவடிக்கைகள் சீனாவின் செல்வாக்கைக் கிழக்கே கொரியாவிலும் மேற்கே பாரசீகம் மற்றும் இந்தோ -சீனாவின் எல்லை வரையிலும் பரப்பின.

தாங் அரச வம்சம் மிகப்பெரிய அளவிலான பொதுப்பணிகளை மேற்கொண்டது. போயாங், சாங்-ஆன் என்னும் இரு தலைநகரங்கள் உருவாக்கப்பட்டன. பெரும் நிலவுடைமையாளர் வர்க்கத்தின் செல்வாக்கை சமன் செய்யும் நோக்கில் கன்பூசியத்தத்துவத்தில் பயிற்சி பெற்ற அறிஞர்களும் அதிகாரிகளும் பணியமர்த்தப்பட்டனர். நிலம் சிறுசிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதன் விளைவாக வேளாண் உபரி, நிலப்பிரபுக்களுக்கு குத்தகையாகச் செல்வதற்கு மாறாக வரியாக அரசை வந்தடைந்தது. மேலும் உப்பு மற்றும் தேயிலை அரசின் முற்றுரிமையின் கீழிருந்ததால் அவை அரசுக்குக் கூடுதல் வருவாயை நல்கின.

சீனப் பெருஞ்சுவர்

கி.மு. (பொ..மு) 8 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளின் இடைப்பட்ட காலப் பகுதியில் தங்களுக்குள்ளே போரிட்டுக் கொண்டிருந்த சீன அரசுகள், வடக்கேயிருந்து வரும் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு சுவர்களை எழுப்பிக் கொண்டன. சின் அரசவம்சத்தின் காலத்தில் தனித்தனியாக இருந்த பல சுவர்கள் இணைக்கப்பட்டன. இதன் விளைவாக கிழக்கிலிருந்து மேற்காக சுமார் 5000 கிலோ மீட்டர் நீளமுடைய பெருஞ்சுவர் உருவானது. இச்சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நாடோடிப் பழங்குடியினர் உள்ளே நுழைய முடியாதவாறு இச்சுவர் தடுத்தது. பின்னர் ஆட்சிபுரிந்த பல அரச வம்சத்தினர் காலத்தில் இச்சுவர் விரிவு செய்யப்பட்டு வலுவூட்டப்பட்டது. தற்போது சீனப்பெருஞ்சுவரின் மொத்த நீளம் 6700 கிலோ மீட்டர் ஆகும்.


 

சுங் அரச வம்சம் (Sung Dynasty) (கி.பி. (பொ.) 960-1279)      

பெருந்துயரங்களுக்கு உள்ளான விவசாயிகள் ஹங்சோவ்வின் தலைமையில் மேற்கொண்ட கலகமானது, ஏற்கனவே ஆட்டம் கண்டிருந்த தாங் பேரரசுக்கு பேரழிவைக் கொடுத்தது. இப்பேரரசு ஐந்து பகையரசுகளாகப் பிரிந்தது. பின்னர் புதிதாக ஆட்சியில் அமர்ந்த சுங் வம்ச அரசர்களின் ஆட்சிக் காலத்தில் அவைகள் இணைந்தன. சுங் வம்ச காலத்தில் வணிகமும் தொழில்களும் செழித்து வளர்ந்தன. இரும்பு மற்றும் எஃகு ஆலைகள் மிகவும் கட்டுக்கோப்பாக நடத்தப்பட்டன.

 

சுங் அரசவம்சத்தின் வீழ்ச்சி

சுங் அரசவம்சத்தின் ஆட்சியின்போது நில உடைமையாளர்களும் அரசு அதிகாரிகளும் பணம் படைத்த வணிகர்களும் மிக வளமான வாழ்க்கையை வாழ்ந்தனர். நேர்மாறாக சாதாரண விவசாயிகள் வறுமையில் அகப்பட்டு வாடினர்.

உள்நாட்டில் பிரச்சனைகள் தலைதூக்குவதற்கு முன்னதாகவே வடக்கே இருந்து மேற்கொள்ளப்பட்ட இரு வெளிநாட்டவர் படையெடுப்புகள் சுங் வம்சத்தவர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தன. தொடர்ந்து மங்கோலியர்கள் யுவான் வம்சத்தினர் என்ற பெயரில் தங்கள் ஆட்சியை நிறுவினர்.

கி.பி (பொ..) 1078இல் சீனா உற்பத்தி செய்த இரும்பு 114,000 டன்னைத் தாண்டியது (1788இல் இங்கிலாந்து 68,000 டன்னே உற்பத்தி செய்தது), சீனா, செராமிக் (Ceramics) ஓடுகள் மற்றும் பீங்கான் பொருட்கள் செய்வதிலும் தனித்திறன் பெற்று விளங்கியது. இத்தொழில் நுட்பத்தை அடுத்து வந்த 700 ஆண்டுகள் வரை ஐரோப்பா அறிந்திருக்கவில்லை வெடிமருந்து 1044லேயே பயன்பாட்டில் இருந்தது. ஐரோப்பாவைக் காட்டிலும் 500 ஆண்டுகளுக்கு முன்பாகவே சீனா அச்சடிக்கப்பட்ட புத்தகங்களைக் கொண்டிருந்தது. (Chris Harman, A Peoples History of the World, p.111)


 

யுவான் அரச வம்சம் (Yuan Dynasty) (கி.பி. (பொ.) 1279-1368)

பாரசீகத்தையும் ஒட்டு மொத்த மத்திய ஆசியாவையும் கைப்பற்றிய மங்கோலியர்கள் சீனாவையும் விட்டுவைக்கவில்லை . கி.பி. (பொ ..) 1252இல் மாபெரும் கான் ஆக மாறிய மங்குகான் குப்ளாய்கானை சீனாவின் ஆளுநராகப் பணியமர்த்தினார். யூரேசியாவின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை பரவியிருந்த மங்கோலியரின் ஆதிக்கம், சீனாவின் தொழில் நுட்ப முன்னேற்றங்களை இதர வளர்ச்சி குன்றிய மேற்கு சமூகங்களிடையே பரப்புவதற்கு உதவியது. பெய்ஜிங்கிலிருந்த மங்கோலியரின் அரச சபை மார்க்கோ போலோ போன்ற வெளிநாட்டவர்களிடம் நன்மதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும் விவசாயிகள் தொடர்ந்து வறுமையில் வாடினர். சில மதம் சார்ந்த அமைப்புகளும் ரகசிய அமைப்புகளும் புரட்சியில் இறங்கின. முடிவில் 'சிகப்பு தலைப்பாகைகள் (Red Turbans) என்ற அமைப்பின் தலைவரான சூ யுவான் சங் தலைநகர் பெய்ஜிங்கைக் கைப்பற்றி கி.பி. (பொ..) 1369 இல் தன்னை பேரரசராகப் பிரகடனப்படுத்திக் கொண்டார்.


 

மிங் பேரரசு (Ming Dynasty) கி.பி. (பொ.) 1368-1644)

மங்கோலியர்களை அகற்றிவிட்டு ஆட்சியமைத்த மிங் வம்ச அரசர்கள் வேளாண்மையில் முழுமையாகக் கவனம் செலுத்தும் பொருட்டு, தொழில் மற்றும் வணிக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருவதற்குத் தவறினர். இதன் விளைவாக 16ஆம் நூற்றாண்டில் சீனா பின்தங்க நேர்ந்தது. யூரேசியாவின் ஏனைய பகுதிகள் சீனாவின் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி முன்னேறத் தொடங்கின.

 

Tags : East Asia in the Middle Ages | History இடைக்காலங்களில் கிழக்கு ஆசியா.
9th Social Science : History: The Middle Ages : China: T’ang Dynasty (618–907 A.D. (C.E.)) East Asia in the Middle Ages | History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்காலம் : சீனா: தாங் (Tang) அரச வம்சம் (கி.பி. (பொ.ஆ) 618-907) - இடைக்காலங்களில் கிழக்கு ஆசியா : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : இடைக்காலம்