இடைக்காலங்களில் கிழக்கு ஆசியா | வரலாறு - நிலப்பிரபுத்துவம் | 9th Social Science : History: The Middle Ages
நிலப்பிரபுத்துவம்
வலுவான மதங்களான கிறித்தவமும் இஸ்லாமும் மக்களின் மீது பெரும் செல்வாக்கைச் செலுத்தினாலும், மக்களுடைய பொருளாதார வாழ்க்கை நிலப்பிரபுத்துவ உறவுகளால் தீர்மானிக்கப்பட்டது.
இப்பூமியில் கடவுளின் பிரதிநிதியாகக் கருதப்படும் அரசர் நிலப்பிரபுத்துவத்தின் தலைவராகக் கருதப்பட்டார். அவர்களுக்கு அடுத்த நிலையில் கோமகன்களாகக் கருதப்பட்ட டீயூக்குகள் (Dukes) 'கவுண்ட் 'டுகள் (Counts)
'யேல்'கள் (Earls)
போன்றோர் இருந்தனர். இந்த நிலப்பிரபுக்கள், நிலப்பிரபுத்துவ அடிப்படையில் அரசரிடம் இருந்து நிலம் பெற்றுக் கொண்டு அவருக்காக போரிட சம்மதித்த வகுப்பினர் ஆவர். அரசர் நிலங்களைப் பிரித்து இவர்களுக்குக் கொடுத்தார். இவர்கள் தாங்கள் பெற்ற நிலங்களை பிப் (Fief) துண்டுகளாகப் பிரித்தனர். தங்களுக்குக் கீழிருந்த வைஸ் கவுண்ட் என்பவர்களுக்கு விநியோகம் செய்தனர். இவ்வரிசையில் இறுதி இடம் பெற்றவர்கள் நைட் (knight)
எனப்படும் சிறப்புப்பணி வீரர்கள். இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை வேறு எவருக்கும் பிரித்துத்தர முடியாது. இவர்கள் அனைவருக்கும் கீழ் அடிமட்டத்தில் இருந்தவர்கள் வில்லொயன் அல்லது செர்ப் (villein
or serf) என்றறியப்பட்ட பண்ணை அடிமைகள் ஆவர்.
ஃபிப் (fief) என்பது ஒருவருக்கு அவரைவிட மேல் நிலையில் இருக்கும் கோமகனால் வழங்கப்படும் நிலம். நிலத்தைப் பெற்றவர் நிலம் கொடுத்தவருக்கு கைமாறாக சில சேவைகளைச் செய்ய வேண்டும். அது அவருடைய கடமையாகும்.
அண்டியிருத்தலை மையமாகக் கொண்ட நிலப்பிரபுத்துவ முறையில் சமத்துவம்,
சுதந்திரம் ஆகிய கருத்துக்களுக்கு இடமில்லை . உரிமைகளும்,
கடமைகளும் மட்டுமே இருந்தன. பிஷப்புகள் (Bishop-மாவட்ட அளவிலான மதத்தலைவர்) 'அபாட்டுகள் (Abbot-கிறித்தவ மதகுருக்களின் தலைவர்) 'கார்டினல்கள்'(Cardinalபோப்பாண்டவருக்கு அடுத்த நிலையிலுள்ள மதகுரு) ஆகியோரும் திருச்சபையும் சமூக அரசியல் கட்டமைப்பின் கீழ் இடம் பெற்றனர். பிரபுக்களும் மதகுருமார்களும் உடல் உழைப்பில் ஈடுபடமாட்டார்கள். எனவே அவர்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான உணவு மற்றும் இதர அவசியத் தேவைகள் அனைத்தையும் உற்பத்தி செய்துதர வேண்டிய பொறுப்பை விவசாயிகள் சுமக்க நேர்ந்தது.
கிறித்தவ இறையியலில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டன. அவை சமயகுருமார் கோட்பாடு மற்றும் புனிதச் சடங்குகள் பற்றியனவாகும். இவ்விரு அம்சங்களும் சமயகுருமார்களின் அதிகாரத்தை அதிகரிக்கச் செய்தன.
இடைக்காலத்தின் இறுதியில் திருச்சபையின் வளர்ச்சியோடு பேராசை மிக்க அரசியல் தலைவர்களின் எழுச்சியும் ஏற்பட்டது. ஜெர்மன் நாட்டு பேரரசர் நான்காம் ஹென்றிக்கும், போப்பாண்டவர் ஏழாம் கிரிகோரிக்கும் ஏற்பட்ட மோதலில் போப் மதவிலக்கம் என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்தி பேரரசரைப் பதவி விலகச் செய்தார். இதை பயன்படுத்தி போப் மூன்றாம் இன்னோசன்ட் இங்கிலாந்தும், அயர்லாந்தும் திருச்சபைக்குச் சொந்தமானவை என அரசர் ஜானை அங்கீகரிக்க வைத்தார். பல கிறித்தவ சமயப் பற்றாளர்கள்,
போப்பாண்டவர் அரசு அதிகாரத்தில் தலையிடுவதை வெறுக்கத் தொடங்கினர்.
திருச்சபை விலக்கம் என்பது ஒரு மனிதன் கிறித்தவனாக இருப்பதால் என்ன உரிமைகளுக்குத் தகுதியானவரோ அவ்வுரிமைகள் அவருக்கு மறுக்கப்படுவதாகும். அவர் திருச்சபைக்குள் புனிதச் சடங்குகளைச் செய்ய முடியாது. இறந்த பின்னர் அவருடைய உடலைத் திருச்சபைக்குச் சொந்தமான கல்லறைத் தோட்டத்தில் புதைக்க முடியாது. மதவிலக்கம் என்பது ஒரு அரசனுடைய குடிமகனுக்கு அவர் பெறத் தகுதியுள்ள சமயம் சார்ந்த பயன்களை மறுப்பதன் மூலம் அந்நபரை அரசனுக்கு எதிராக வெறுப்பு கொள்ளத் தூண்டுவது.
இதே காலகட்டத்தில் இந்தியா......
ஹன்
ரோமானியப் பேரரசின் சரிவுக்கு பிறகு, ஐரோப்பா சிறிய சிறிய ஜெர்மானிய அரசுகளாக சிதறுற்றிருந்த சமயம், ஹன் இனத்தவர்களும் கடுமையான போர்குணமுள்ள மத்திய ஆசிய மக்களும் வடகிழக்கு இந்தியா மீது படையெடுத்தனர். ஸ்கந்தகுப்தரால் அவர்கள் முறியடிக்கப்பட்டாலும், அவருடைய மறைவிற்கு பின், இந்தியாவினுள் நுழைந்து, மத்திய இந்தியா முழுதும் குடியேறினர். தோரமானர் மற்றும் மிஹிரகுலர் இருவரும் நன்கு அறியப்பட்ட ஹன் அரசர்கள் ஆவர்கள். இவ்வரசர்கள் புத்த மதத்தவர்களை தண்டித்தனர். புத்த மடாலயங்களை எரித்தனர். ஏறத்தாழ கி.பி (பொ.ஆ) 528 ஆம் ஆண்டு மாளவத்தைச் சார்ந்த யசோதர்மன் மூலமாக ஹன் இனத்தவர்களது ஆட்சி இந்தியாவில் முடிவுக்கு வந்தது.
பாரசீகத்துடனான சாளுக்கியர்களின் (பாதாமி மற்றும் வாதாபியை உட்கொண்ட) உறவுமுறை
சாளுக்கியா (Chalukya)
பாரசீகத்தில் அமையப் பெற்ற சசாநித் வம்சமும் சாளுக்கிய அரசும் சமகால அரசுகளாகும். சீன வம்சத்தில் டாங் என்ற அரசருடன், சசாநித் வம்சத்தின் கடைசி அரசரான இரண்டாம் குசரவ் நல்ல உறவு முறையைக் கொண்டிருந்தார். மேலும் சாளுக்கிய அரசர் இரண்டாம் புலிகேசியின் தூதுவர்களையும் பகிர்ந்து கொண்டார். மாகாராஷ்டிரத்தை உள்ளடக்கிய சாளுக்கிய அரசின் தலைநகர் பாதாமியாகும். யுவான் சுவாங் சாளுக்கியர்களின் வீரத்தைப் புகழ்ந்து கூறும்பொழுது அவர்கள் நன்றி உணர்வு மிக்கவர்களாகவும், போரில் ஈடுபடுவதை பெருமையாகவும், குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்குபவர்களாகவும் திகழ்ந்தார்கள் என்கிறார்.
● கிறித்தவ சகாப்தத்தின்போது ரோமுக்குப் போட்டியாக விளங்கிய சீனா அரசியல் உறுதியற்ற தன்மைக்கு உள்ளாகிப் பின்னர் ஒன்றுபட்டு சுங் அரச வம்சத்தால் மூன்று நூற்றாண்டுகள் ஆளப்பட்டது.
● சுங் அரச வம்சத்தைத் தூக்கி எறிந்த மங்கோலியர்கள் சீனாவில் யுவான் அரச வம்சத்தை நிறுவினர்.
● தனிமைப்பட்டுக் கிடந்த ஜப்பான் கி.பி.(பொ.ஆ) ஆறாம் நூற்றாண்டில்மிக்காடோபேரரசு ஆனபோதுமைய நீரோட்டத்தில் இணைந்தது. வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் ஜப்பான் சீனாவைப் பின்பற்றியது.
● பேரரசர்கள் தங்கள் கட்டுப்பாட்டினைப் படிப்படியாக இழந்தபோது இராணுவத்தளபதி அரசை தன்வசப்படுத்திச் கொண்டார். இவர் காமகூரா சோகுனேட்டை நிறுவினார்.
● காமகூரா சோகுனேட்டுக்குப் பின்னர் அஸிகாகா சோகுனேட் ஆட்சியைக் கைப்பற்றியது.
● நபிகள் நாயகத்தால் நிறுவப்பட்ட இஸ்லாம் மதம் வெகுவாகப் பரவத் தொடங்கியது.
● தொடக்கத்திலேயே இஸ்லாமைத் தழுவிக் கொண்ட அராபியர்கள் முதலாவதாக ஸ்பெயினிலும் பின்னர் ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்லாமிய அரசை நிறுவுவதில் வெற்றி பெற்றனர்.
● முகமதுவின் குடும்ப வழிவந்த கலீஃபாக்கள் உமையதுகள் எனவும் முகமதுவின் மாமன் குடும்பவழி சார்ந்த கலீஃபாக்கள் அப்பாசித்துகள் எனவும் அறியப்பட்டனர். உமையதுகள் டமாஸ்கஸ்ஸிலிருந்து ஆட்சி புரிய அப்பாசித்துகள் பாக்தாத்திலிருந்து ஆண்டனர்.
● நபிகள் நாயகத்தின் மறைவுக்குப் பின்னர் அராபியாவின் தலைமைக்காக நடந்த சண்டை இஸ்லாம் சன்னி,
ஷியா என இரண்டாகப் பிரிவதற்கு இட்டுச் சென்றது.
● அராபியர் வளர்த்தெடுத்த கட்டடக்கலை சாரசனிக் என அழைக்கப்பட்டது.
● புனித நகரமான ஜெருசலேமை செல்ஜுக் துருக்கியர்கள் கைப்பற்றிக் கொண்டது சிலுவைப் போர்களுக்குக் காரணமானது.
● செல்ஜுக் துருக்கியர்கள் வலிமை குன்றியது,
ஆட்டோமன் துருக்கியரின் எழுச்சிக்கு இட்டுச் சென்றது.
● கான்ஸ்டாண்டிநோபிளைத் துருக்கியர் கைப்பற்றியது இடைக்காலத்தை முடித்து வைத்தது.
● இடைக்காலத்தில் மக்களின் அன்றாட வாழ்வு நிலப்பிரபுத்துவ முறை சார்ந்ததாக இருந்தது.
● சமயம் சார்ந்த விஷயங்களில் மட்டும் அதிகாரம் செலுத்தி வந்த திருச்சபை மெல்ல மெல்ல சமயம் சாராத விஷயங்களிலும் தனது அதிகாரத்தை நிலைநாட்டத் தொடங்கியது.