விலங்கியல் - தசைத்திசு (Muscle Tissue) | 11th Zoology : Chapter 3 : Tissue Level of Organisation

   Posted On :  05.01.2024 11:47 pm

11 வது விலங்கியல் : பாடம் 3 : திசு அளவிலான கட்டமைப்பு

தசைத்திசு (Muscle Tissue)

ஒவ்வொரு தசையும் இணை வரிசையில் அமைந்த நீண்ட உருளை வடிவ இழைகளால் ஆனது.

தசைத்திசு (Muscle Tissue)

ஒவ்வொரு தசையும் இணை வரிசையில் அமைந்த நீண்ட உருளை வடிவ இழைகளால் ஆனது. ஒவ்வொரு இழையும் மையோஃபைப்ரில்கள் எனப்படும் பல நுண்ணிய இழைகளால் ஆனது. தசை இழைகள் தூண்டப்படும் போது சுருங்கியும் மீண்டும் தளர்வு நிலையை அடைந்தும் ஒரு ஒருங்கிணைந்த முறையில் செயல்புரிகின்றன. சுருக்கமாக, உடல் இயக்கங்களில் திறம்படச் செயல்படுபவை தசைகளே ஆகும். தசைகள் மூவகைப்படும். அவை, எலும்புத்தசைகள் (Skeletal muscles), மென்தசைகள் (Smooth muscles) மற்றும் இதயத்தசைகள் (Cardiac muscles) ஆகும்.


எலும்புத்தசை திசுக்கள் எலும்புகளோடு இறுக்கமாக இணைந்துள்ளன. எடுத்துக்காட்டாக இருதலைத் தசையில், (Biceps) கற்றை கற்றையாக, வரியுடைய எலும்புத்தசை இழைகள் இணை இணையாக அமைந்துள்ளன. இணைப்புத்திசுவாலான ஒரு தடித்த உறைக்குள் பல தசை இழைக்கற்றைகள் வைக்கப்பட்டுள்ளன. 9 வது அத்தியாயத்தில் இது குறித்து மேலும் கற்பீர்கள்.


பால்மரிஸ் தசை (Palmaris muscle) 

முழங்கையில் இருந்து மணிக்கட்டு வரை நீளும் குறுகிய தசைகள் பால்மரிஸ் தசைகள் எனப்படும். இத்தசைகள் குரங்கினங்கள் மரத்தின்மீது தொங்குவதற்கும், மேலேறுவதற்கும் (மனிதன் உட்பட) பயன்பட்டது. ஆனால், இன்றைய மனிதர்களில் 11% பேரில் இத்தசைகள் காணப்படவில்லை. இருமுனைகளும் கூர்மையாக, கதிர் வடிவத்தில் அமைந்த வரியற்ற தசை இழைகள் மென்தசைகள் எனப்படும். (படம் 3.7) இவை செல்சந்திப்புகளால் ஒன்றிணைக்கப்பட்டு இணைப்புத்திசு உறையால் கட்டப்பட்டுள்ளது. உள்ளுறுப்புகளான இரத்தக் குழாய்கள், இரைப்பை, மற்றும் சிறுகுடல் போன்றவற்றின் சுவர்கள் மென்தசைகளால் ஆனவை. மென் தசைகள் இயங்குதசைகள் (Involuntary muscles) ஆகும். ஏனெனில் அவற்றின் செயல்களை நேரடியாகக் கட்டுப்படுத்த இயலாது. நம் நினைப்பிற்கு ஏற்றவாறு எலும்புத்தசைகளை இயக்குவது போன்று மென்தசைகளை இயக்க இயலாது.

இதயத்தில் மட்டுமே காணப்படும் சுருங்கி விரியும் தசைகள் இதயத்தசைகள் எனப்படும். இதயத்தசை செல்களில் காணப்படும் பிளாஸ்மா சவ்வுகளைச் செல் சந்திப்புகள் இணைத்து அச்செல்களை ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளச் செய்கின்றன. தொடர்பு சந்திப்புகள் (செல்லிடைத்தட்டுகள்) எனப்படும் அமைப்புகள் சில இணைப்பிடங்களில், இதயத்தசை செல்களைக் கூட்டமாகச் சுருங்கச்செய்கின்றன. அதாவது, ஒரு செல் சுருங்குவதற்கான குறிப்புகளைப் பெற்றுச் சுருங்கும்போது அதன் அருகிலுள்ள செல்களையும் சேர்த்துச் சுருங்குவதற்குத் தூண்டுகிறது.


குறிப்பு 

நரம்பு மண்டல நோய்கள்

1. பார்கின்சன் நோய் (Parkinson's disease):

உடல் இயக்கத்தை பாதிக்கும் நரம்பு மண்டல குறைபாடு. உடல் நடுக்கங்களும் ஏற்படும்

2. அல்சீமயர் நோய் (Alzheimer's disease):

இது ஒரு நாள்பட்ட நரம்புசெல் சிதைவு நோய் ஆகும். சமீபத்திய நிகழ்வுகளைக் கூட நினைவு கூற இயலாமை, பேசும் மொழியில் குறைபாடு, சமநிலையற்ற, ஊசலாடும் மனநிலை ஆகியவை இந்நோயின் அறிகுறிகள் ஆகும்.

உயிருள்ள உடலிலிருந்து சிறிதளவு திசு () திரவம் எடுக்கப்பட்டு நோயின் தன்மை, காரணங்கள், நோய் பரவியுள்ள விதம் ஆகியவற்றைச் சோதித்து அறியும் முறைக்கு பயாப்சி (Biopsy) என்று பெயர்

இறந்த உடலின் உடற்கூறுகளைவெட்டி எடுத்து இறப்பிற்கான காரணம் மற்றும் நோய் பரவியுள்ள விதம் ஆகியவற்றை ஆராய்ந்து கண்டறியும் முறைக்கு ஆட்டாப்சி (Autopsy) என்று பெயர்.

தடய அறிவியல் (Forensic Science) துறையில் குற்றங்களைத் துப்பறிய திசுவியல் தொழில்நுட்பங்கள் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Tags : Zoology விலங்கியல்.
11th Zoology : Chapter 3 : Tissue Level of Organisation : Muscle Tissue Zoology in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 3 : திசு அளவிலான கட்டமைப்பு : தசைத்திசு (Muscle Tissue) - விலங்கியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 3 : திசு அளவிலான கட்டமைப்பு