விலங்கியல் - எபிதீலியத் திசு (Epithelial tissue) | 11th Zoology : Chapter 3 : Tissue Level of Organisation
எபிதீலியத் திசு (Epithelial tissue)
உடலின் மேற்பரப்பிலும் உடற்குழியினைச் சுற்றிலும் காணப்படும் செல் வரிசையானது எபிதீலியத்திசு எனப்படும். உடலின் மேற்பரப்பில் இத்திசுவானது உறை போன்றும், மெல்லிய படல எபிதீலியமாகவும், சுரப்பு எபிதீலியமாகவும் காணப்படுகிறது. பாதுகாப்பு, உறிஞ்சுதல், வடிகட்டுதல், கழிவு நீக்கம், சுரப்பு மற்றும் உணர்வறிதல் போன்ற பணிகளை எபிதீலிய திசுக்கள் செய்கின்றன. செல்களின் அமைப்பில் உள்ள மாறுபாடுகளைப் பொறுத்து எபிதீலிய திசுக்களானது எளிய எபிதீலியம் மற்றும் கூட்டு எபிதீலியம் (அல்லது) அடுக்கு எபிதீலியம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
எளிய எபிதீலியம் (Simple epithelium) ஓரடுக்கு செல்களால் ஆனது. உறிஞ்சும், சுரக்கும் மற்றும் வடிகட்டும் உறுப்புகளில் இவை காணப்படுகின்றன. எளிய எபிதீலியமானது தட்டை வடிவ எபிதீலியம், கனசதுர வடிவ எபிதீலியம், தூண் வடிவ எபிதீலியம், குறு இழை கொண்ட எபிதீலியம் மற்றும் பொய் அடுக்கு எபிதீலியம் என மேலும் வகைப்படுத்தப்பட்டுள்ளது (படம் 3.2). மெல்லிய தட்டையான ஓரடுக்கு செல்களால் ஆன, ஒழுங்கற்ற விளிம்புகளைக் கொண்ட எபிதீலியம் தட்டை வடிவ எபிதீலியம் ஆகும். இவை,சிறுநீரகக் கிளாமருலஸ்களிலும், நுரையீரல்களின் காற்றுப்பைகளிலும், இதயம், இரத்தக்குழல்கள், மற்றும் நிணநீர் நாளங்களில் உறையாகவும் பாதுகாப்பு தேவைப்படாத இடங்களில் ஊடுருவல் எல்லையாகவும் வடிகட்டும் பரப்புகளாகவும் செயல்புரிகின்றன.
ஓரடுக்கு, கனசதுர வடிவச் செல்களைக் கொண்டவை கனசதுர வடிவ எபிதீலியம் (Cuboidal epithelium) ஆகும். இவை பொதுவாக, சிறுநீரகக் குழல்களிலும், நாளங்களிலும், சிறிய சுரப்பிகளின் சுரப்புப் பகுதிகளிலும், அண்டகப் பரப்புகளிலும் காணப்படுகின்றன. சுரத்தலும் உறிஞ்சுதலும் இதன் முக்கியப் பணியாகும்.
வட்ட மற்றும் நீள்வட்ட உட்கருவைச் செல்லின் அடிப்பகுதியில் கொண்ட உயரமான ஓரடுக்குச்செல்களால் ஆனவை தூண் வடிவ எபிதீலிய செல்கள் (columnar epithelial cells) ஆகும். இரைப்பையில் இருந்து மலக்குடல் வரை உள்ள செரிமான மண்டலப் பகுதியின் அகவுறையில் இவை காணப்படுகின்றன. இவ்வுறையில் உள்ள செல்கள், உறிஞ்சும் தன்மையுடைய செல்களின் உச்சிப்பரப்பில் மைக்ரோவில்லை என்னும் நீட்சிகளாகவும், பாதுகாப்பிற்கான உயவுத்தன்மையுடைய கோழைப் பொருளைச் சுரக்கும் கோப்பை வடிவச்செல்களாகவும் (Goblet Cell) இரண்டு வகையாக மாறுபாடு அடைந்துள்ளது. உறிஞ்சுதல் மற்றும் கோழை, நொதி போன்ற பொருள்களைச் சுரத்தல் ஆகிய பணிகளை இவை மேற்கொள்கின்றன. கருப்பை, அண்ட நாளங்கள், தூண் வடிவ செல்களின் உச்சிப்பரப்பில் குறுயிழைகள் காணப்பட்டால் அச்செல்கள் குற்றிழை கொண்ட எபிதீலியம் (Ciliated epithelium) என அழைக்கப்படுகின்றன. சிறிய சுவாசக்குழல்கள், அண்டநாளங்கள் மற்றும் கருப்பையில் காணப்படும் குறு இழை எபிதீலிய (Ciliated epithelium) செல்கள் தம் குறு இழைகளை அசைத்துக் கோழை திரவத்தை உந்தித்தள்ளுகின்றன. குறு இழை அற்ற எபிதீலியமானது (Non - ciliated epithelium) செரிப்புப்பாதை, பித்தப்பை மற்றும் சில சுரப்பிகளின் சுரப்பு நாளங்களில் காணப்படுகிறது.
பொய் அடுக்கு எபிதீலிய செல்கள் (Pseudo-stratified epithelial cells) தூண் வடிவத்திலும் சமமற்ற அளவுகளிலும் காணப்படும். இவ்வகை எபிதீலியம் ஓரடுக்கினால் ஆனது. ஆனாலும் பார்ப்பதற்குப் பல அடுக்குகள் போன்று தோற்றமளிக்கிறது. இதற்குக் காரணம் இதன் செல்களில் உள்ள உட்கருக்கள் வெவ்வேறு மட்டங்களில் காணப்படுகின்றன, எனவே இவை பொய் அடுக்கு எபிதீலியம் என அழைக்கப்படுகின்றன. பாதுகாப்பு, சுரப்பு, உறிஞ்சுதல் ஆகியவை இதன் பணிகளாகும். இவ்வகையில் உள்ள குறு இழை வடிவ எபிதீலிய செல்கள் சுவாசக் குழல்களிலும் சுவாசப் பாதையிலும் உறையாக உள்ளன. குறுஇழை அற்ற வகைகள் எபிடிடிமிஸ், பெரிய சுரப்பிகளின் குழல்கள் மற்றும் ஆண்களின் சிறுநீர் நாளம் போன்ற இடங்களில் உறையாகக் காணப்படுகின்றன.
குறிப்பு
முக்கிய எபிதீலியத் திசு சீர்குலைவுகள் எக்சீமா, சோரியாசிஸ், எபிதீலிய புற்றுநோய் மற்றும் கடுமையான ஆஸ்துமா.
சுரப்பு எபிதீலியம் (Glandular Epithelium)
சில கனச் சதுர வடிவ மற்றும் தூண்வடிவ எபிதீலிய செல்கள் சுரப்புத் தொழிலைச் செய்வதற்காகச் சிறப்புற்றுக் காணப்படுகின்றன. அவ்வகை செல்கள் சுரப்பு எபிதீலியம் (Glandular epithelium) (படம் 3.3) என அழைக்கப்படுகின்றன. அவை தனித்த சுரப்பு செல்களைக் கொண்ட ஒரு செல் சுரப்பிகள் எனவும் (எ.கா. உணவுப்பாதையில் காணப்படும் கோப்பை வடிவச் செல்), கூட்டமான செல்களைக் கொண்ட பல செல் சுரப்பிகள் எனவும் (எ.கா. உமிழ் நீர் சுரப்பிகள்) வகைப்படுத்தப்பட்டுள்ளன. தங்களது சுரப்புகளை வெளியேற்றும் பண்பின் அடிப்படையில்
சுரப்பிகள், நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகள் என இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கோழை, உமிழ்நீர், காதின் மெழுகுச் சுரப்பு, எண்ணெய், பால், செரிப்பு நொதிகள் மற்றும் இதர செல் பொருட்கள் நாளமுள்ள சுரப்பிகள் மூலம் சுரக்கப்படுகின்றன. இவை குழல்கள் (அ) குழாய்கள் மூலம் வெளியேற்றப்படுகின்றன. இதற்கு மாறாக, நாளமில்லாச் சுரப்பிகள் குழல்களைக் கொண்டிருப்பதில்லை. அவை, ஹார்மோன்கள் என்று அழைக்கப்படும் தங்களது சுரப்புகளை, அச்சுரப்பியை நனைத்துக் கொண்டிருக்கும் திரவத்தினுள் நேரடியாகச் சுரக்கின்றன.
நாளமுள்ள சுரப்பிகள், ஒரு செல் மற்றும் பல செல் சுரப்பிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் பல செல் சுரப்பிகள் அவற்றின் அமைப்பின் அடிப்படையில் எளிய சுரப்பிகள் (Simple glands) மற்றும் கூட்டுச்சுரப்பிகள் (Compound glands) என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை சுரப்பு அலகுகளின் அடிப்படையில், குழல் வடிவ (Tubular), பை வடிவ (Alveolar) மற்றும் குழல்பை வடிவ (Tubulo Alveolar) சுரப்பிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. சுரக்கும் வழிமுறையின் அடிப்படையில், நாளமுள்ள சுரப்பிகள் மீரோகிரைன் (Merocrine)
தெரிந்து தெளிவோம்
அடுக்கு எபிதீலியமானது தேய்மாத்தை தடுப்பதற்கும் பாதுகாப்பிற்காகவும் கட்டப்பட்டுள்ளது. எளிய எபிதீலியம் எவ்வகையில் இதிலிருந்து மேம்பட்டது?
ஹோலோகிரைன் (Holocrine) மற்றும் அபோகிரைன் (Apocrine) என சுரப்பிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கூட்டு எபிதீலியம் என்பவை பல அடுக்கு செல்களால் ஆனவை. இவை சுரத்தலிலும் உறிஞ்சுதலிலும் சிறிதளவே பங்குகொள்கின்றன (படம் 3.4). கூட்டு எபிதீலியம் அடுக்குகளாகவோ அல்லது இடைநிலையிலோ காணப்படுகின்றன. இவற்றின் முக்கியப் பணி வேதிய மற்றும் இயற்பிய அழுத்தங்களிலிருந்து பாதுகாத்தல் ஆகும். கூட்டு எபிதீலியமானது தோலின் உலர்ந்த பரப்புகளின் மீதும் வாய்க்குழி, தொண்டை உமிழ்நீர் சுரப்பிக்குழல், கணைய நாளம் ஆகியவற்றின் ஈரமான உள் பரப்புகளிலும் பரவியுள்ளன. நான்கு வகையான கூட்டு எபிதீலியம் காணப்படுகின்றன. அவையாவன, அடுக்கு தட்டை எபிதீலியம், கனசதுர வடிவ எபிதீலியம், தூண் வடிவ எபிதீலியம் மற்றும் இடைநிலை எபிதீலியம். தோலின் உலர்ந்த எபிடெர்மிஸ் மீது காணப்படும் கெராட்டின் நிரம்பிய வகை, ஈரப்பதமான உணவுக்குழல், வாய் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்பு ஆகியவற்றில் காணப்படும் கெராட்டின் அற்ற வகை என அடுக்குத்தட்டை எபிதீலியம் இரு வகைப்படும். அடுக்கு கனசதுர வடிவ எபிதீலியமானது வியர்வை சுரப்பிக்குழல்கள், பால் சுரப்பிகள் ஆகியவற்றில் காணப்படுகிறது. அடுக்கு தூண்வடிவ எபிதீலியமானது தொண்டை, ஆண் சிறுநீர் நாளம் மற்றும் சில சுரப்பிகளின் நாளங்களின் உள்ளுறை என, நமது உடலில் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே காணப்படுகிறது. இடைநிலை எபிதீலியமானது (Transitional epithelium) சிறுநீர்நாளம், சிறுநீர்ப்பை, சிறுநீர் புறவழியின் சில பகுதிகள் ஆகியவற்றில் காணப்படுகிறது. இவ்வகை எபிதீலியம் நீட்சியடையவும் தளரவும் செய்து உறுப்புகளைப் பாதுகாக்கிறது.
எபிதீலியத்தின் அனைத்துச் செல்களும் சிறிதளவு, செல்லிடைப் பொருளால் ஒன்றிணைக்கட்டுப்பட்டுள்ளன. பெரும்பாலான விலங்கு திசுக்களில் சிறப்பு இணைப்புகள் (அ) சந்திப்புகள் (Specialized Junctions) என்னும் அமைப்புகள் செல்களுக்கிடையே அமைப்புரீதியான மற்றும் செயல்ரீதியான பிணைப்புகளை ஏற்படுத்துகின்றன. எபிதீலியத் திசுக்களிலும் மற்றும் இதர வகைத் திசுக்களிலும் மூன்று வகையான செல் சந்திப்புகள் காணப்படுகின்றன. அவை, இறுக்கமான சந்திப்புகள், ஒட்டும் சந்திப்புகள் மற்றும் இடைவெளி சந்திப்புகள் ஆகும். செல்லில் உள்ள பொருட்கள் கசிந்து வெளியேறிவிடாமல் தடுப்பதற்கு இறுக்கமான சந்திப்புகள் (Tight junctions) உதவுகின்றன. அருகருகே அமைந்துள்ள செல்களை ஒட்டும் சந்திப்புகள் (Adhering junctions) பிணைக்கின்றன. அருகருகே உள்ள செல்களின் சைட்டோபிளாசத்தை இணைத்து அச்செல்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளும் பணியை இடைவெளி சந்திப்புகள் (Gap Junctions) செய்கின்றன. இதன் மூலம் அயனிகள் சிறிய, சில சமயம் பெரிய மூலக்கூறுகள் கடத்தப்படுதல் சாத்தியமாகிறது.