விலங்கியல் - நரம்புத் திசு (Neural Tissue) | 11th Zoology : Chapter 3 : Tissue Level of Organisation
நரம்புத் திசு (Neural Tissue)
தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருக்கும் சூழ்நிலைக்கேற்ப நமது உடல் செய்யும் பதில் வினைகள் அனைத்தும் நரம்புத்திசுவால் கட்டுப்படுத்தப்படுகின்றன. நரம்பு மண்டலத்தின் அலகுகளான நியூரான்கள் எனப்படும் நரம்பு செல்கள் நரம்பு மண்டலத்தில் காணப்படும் கிளர்ச்சியுறும் செல்கள் ஆகும் (படம் 3.8). நரம்பு மண்டலத்தின் மீதப் பகுதியை நியூரோகிளியா செல்கள் ஆக்கிரமித்துள்ளன. இவை நரம்பு செல்களுக்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் செயல்படுகின்றன. நமது உடலில் உள்ள நரம்புத்திசுவின் கன அளவில் பாதிக்கும் மேலாக நியூரோகிளியா செல்கள் காணப்படுகின்றன.
நரம்பு செல்கள் தகுந்த முறையில் தூண்டப்படும் போது மின்னூட்ட மாறுபாடு உருவாக்கப்படுகிறது. இம்மாறுபாடு அச்செல்களின் பிளாஸ்மா சவ்வின் வழியாக விரைந்து பயணிக்கிறது. இந்த மின்னூட்ட மாறுபாடு இறுதியாக வெளிப்படும் பகுதியான நரம்பு செல்லின் முடிவில் சென்று அடுத்தடுத்த நரம்பு செல்களில் (அ) மற்ற செல்களில் தூண்டுதலையோ அல்லது தடையையோ ஏற்படுத்தலாம் (10 வது அத்தியாயத்தில் இது குறித்து மேலும் கற்பீர்கள்).
பாடச் சுருக்கம்
நமது உடல் செல்கள் பல விதங்களில் இணைந்து எபிதீலியத்திசு, இணைப்புத்திசு, தசைத்திசு மற்றும் நரம்புத்திசு என வேறுபட்ட நான் வகைத்திசுக்களை உருவாக்கியுள்ளன. இத்திசுக்கள் சில பொதுவான பண்புகளைப் பெற்றிருப்பினும் அவை ஒரு போதும் ஒரே வகையானதாகக் கருதப்படாது. அவை திசுக்கள் என்னும் பார்வையில் ஒன்றுபட்டவை. ஏனெனில், அடிப்படையான சில ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன. திசுக்கள் தங்கள் தனிப்பட்ட திறமையினாலும், கூட்டுறவு செயல்பாட்டாலும் நமது உடலைப் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக நம்மை உயிருடன் முழுமையாக வைத்துள்ளன என்பதை உனது மனதில் நிலை நிறுத்தவேண்டும்.
செயல்பாடு:
1. பெயர் குறிப்பிடப்பட திசு நழுவங்களை மாணவர்ளுக்குக் காண்பித்து அவற்றறைக் கண்டறியச் செய்தல், இதே போன்று பெயர் குறிப்பிடப்படத திசுவகைகளைத் திரையில் காண்பித்தும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கலாம். இதனால், நுண்ணோக்கி வழியே பார்க்கப்படும் பலவகையான திசுக்களை மாணவர்கள் கண்டறிய ஏதுவாகும்.
2. கன்னத்தின் உட்பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட அடுக்கு தட்டை எப்பிதீலியத்தை உயிரியல் சாயத்தைக் கொண்டு சாயமிட்டு, மாணவர்கள் தாங்களாகவே நழுவம் தயாரிக்கும் செயல்திறனைப் பெறுதல். மாணவர்கள் உட்கன்ன செல்களை ஆய்வு செய்யும் அனுபவத்ததை பெறுதல்.
இணையச்செயல்பாடு
The Online Epithelium
எபிதீலிய திசுக்களின் உள் அமைப்பு மற்றும் அதன் பணிகளைப் பற்றி இணையத்தில் தெரிந்து கொள்வோமா!
படிகள்
1. "The Online Epithelium' என்ற பக்கத்தினை உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தித் திறக்கவும். அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு உறுப்பினைச் சொடுக்கி அந்தக் குறிப்பிட்ட உறுப்பில் காணப்படும் எபிதீலிய திசுவினைப் பற்றி அறிவோம்.
2. இந்தப் பொத்தானைச் சொடுக்கிய பின், சுட்டியைப் பயன்படுத்தி எபிதீலிய திசுவை 360° யிலும் பார்க்க முடியும்.
3. ஊடாடும் படத்தின் மீது உள்ள எண்ணைச் சொடுக்கியோ அல்லது கீழ் உள்ள பட்டியலில் உள்ள பெயரைச் சொடுக்கியோ குறித்த பாகத்தினைப் பற்றிய விளக்கத்தினை அறியலாம்.
4. முப்பரிமாண ஊடாடும் படத்தின் கீழ் எபிதீலிய திசுக்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் தரப்பட்டிருக்கும்.
இணைய எபிதீலிய திசுவின் உரலி
http://www.epithelium3d.com/index.html
* படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.