விலங்கியல் - இணைப்புத்திசு (Connective tissue) | 11th Zoology : Chapter 3 : Tissue Level of Organisation
இணைப்புத்திசு (Connective tissue)
உடல் முழுவதும் பரவிக்காணப்படும் இணைப்பு திசுவானது கருக்கோளத்தின் நடு அடுக்கிலிருந்து தோன்றியதாகும். இது தளர்வான இணைப்புத்திசுக்கள் மற்றும் அடர்வான இணைப்புத் திசுக்கள் மற்றும் சிறப்பு வகை இணைப்புத் திசுக்கள் என மூன்று வகையாக காணப்படுகின்றன. இணைப்புத்திசுக்களின் முக்கியப் பணி பிணைத்தல் மற்றும் ஆதரவு, பாதுகாத்தல், பாதுகாப்பு உறையாக அமைதல் மற்றும் பொருட்களைக் கடத்துதல் போன்றவையாகும்.
தெரிந்து தெளிவோம்
1. உனது ஆள்காட்டி விரல் தவறுதலாக வெட்டுப்பட்டால் உன் உடலில் என்ன வகையான இணைப்புத்திசு பாதிக்கப்படும்?
2. கொழுப்புப் பொருட்கள் சேமிக்கப்பட்டு அடிப்போஸ் திசுக்களாக உள்ளன. அதில் ஏதேனும் நிறம் உள்ளதா? ஏன்?
அனைத்து இணைப்புத்திசுக்களும் நாரிழைகள், அடிப்படைப் பொருட்கள் மற்றும் செல்கள் என்னும் மூன்று முக்கியக் கூறுகளைக் கொண்டுள்ளன. நாரிழைகள் எனப்படும் இணைப்புத்திசுக்கள் தாங்கு அமைப்பாக உள்ளன. இணைப்புத்திசுவின் தளத்தில் மூன்று வகை நாரிழைகள் காணப்படுகின்றன. அவையாவன, கொலாஜன், எலாஸ்டிக் மற்றும் ரெடிகுலார் நாரிழைகள். முறையான இணைப்புத்திசு (Connective tissue proper) இருவகைப்படும். அவையாவன தளர்வான இணைப்புத்திசுக்கள் (ஏரியோலார், அடிபோஸ் மற்றும் ரெட்டிகுலார்) மற்றும் அடர்வான இணைப்புத் திசுக்கள் (அடர்ந்த சீரான, அடர்ந்த சீரற்ற மற்றும் மீள் தன்மையுடைய திசுக்கள்). சிறப்பு வகை இணைப்புத் திசுக்கள் என்பவை குருத்தெலும்பு, எலும்பு, இரத்தம் ஆகியவற்றை உள்ளடக்கியவையாகும்.
இவ்வகை திசுக்களில் உள்ள செல்களும் நாரிழைகளும், அரை திரவ வடிவத்தில் காணப்படும் அடிப்படைப் பொருட்களில் தளர்வாக அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக, ஏரியோலார் இணைப்புத் திசுவானது எபிதீலியத்திற்கு தாங்கு சட்டமாகவும், சூழ்ந்துள்ள உடல் திசுக்களுக்கு நீர், உப்பு போன்றவற்றைத் தேக்கி வைக்கும் இடமாகவும் அமைவதால் 'திசுதிரவம்' எனப் பொருத்தமாக அழைக்கப்படுகிறது. இதில் ஃபைப்ரோபிளாஸ்ட்டுகள், மேக்ரோஃபேஜ்கள் மற்றும் மாஸ்ட் செல்கள் ஆகியவை காணப்படுகின்றன. (படம் 3.5).
தோலுக்கு அடியில் காணப்படும் அடிப்போஸ் திசுவானது, அமைப்பிலும் செயலிலும் ஏரியோலார் திசுவை ஒத்து காணப்படுகின்றது.
அடிபோஸ் (அ) கொழுப்புசெல்கள் எனப் பொதுவாக அழைக்கப்படும் அடிப்போசைட்டுகள் இத்திசுக்கூட்டத்தில் 90% மேலோங்கிக் காணப்படுகின்றன. இத்திசுவில் உள்ள செல்கள் நேரடியாகக் கொழுப்பையும், பயன்படுத்தப்படாத இதர அதிகப்படியான உணவுப் பொருட்களையும் கொழுப்பாக மாற்றித் திசுக்களில் சேமித்து வைக்கின்றன. அடிப்போஸ் வளர்சிதை மாற்றம் மிகுந்த இடம் என்பதை அதில் உள்ள அதிகப்படியான இரத்தக்குழாய்கள் (இரத்த ஓட்டம்) உணர்த்துகின்றன. நாம் உணவுண்ணாத நிலையில் இச்செல்கள் எரிபொருளாக அமைந்து ஆற்றலை உருவாக்கி, வழங்கி நமது வாழ்வைப் பராமரிக்கின்றன. தோலடித்திசுவாகவும், சிறுநீரகம், கண்கோளம், இதயம் ஆகிய உறுப்புகளைச் சூழ்ந்தும் அடிப்போஸ் திசுக்கள் காணப்படுகின்றன. அடிப்போஸ் திசுக்கள் வெள்ளைக் கொழுப்பு (அ) வெள்ளை அடிப்போஸ் திசு என அழைக்கப்படுகிறது. எண்ணற்ற மைட்டோகாண்ட்ரியாக்களைக் கொண்ட அடிப்போஸ் திசுவானது பழுப்புகொழுப்பு (அ) பழுப்பு அடிப்போஸ் திசு என அழைக்கப்படுகிறது.
வெள்ளைக் கொழுப்பானது ஊட்டச்சத்துக்களைச் சேகரித்து வைக்கும் இடமாக உள்ளது. அதே சமயம் இரத்த ஓட்டத்தையும் உடலையும் வெப்பப்படுத்தும் அமைப்பாகப் பழுப்பு நிறக்கொழுப்பு செயல்படுகிறது. பிறந்த குழந்தைகளின் உடலில், நடுக்கத்தை ஏற்படுத்தாமல் வெப்பம் உற்பத்தி செய்யும் செயலில் பழுப்பு நிறக் கொழுப்பு ஈடுபடுகிறது.
ரெட்டிகுலார் இணைப்புத் திசுவானது ஏரியோலார் இணைப்புத்திசுவை ஒத்திருந்தாலும் அதன் தளப்பொருளானது ஃபைப்ரோபிளாஸ்ட் என்னும் ரெட்டிகுலார் செல்களால் நிரப்பப்பட்டுள்ளது. நிணநீர் கணுக்கள், மண்ணீரல், எலும்பு மஜ்ஜை போன்ற உறுப்புகளில் இரத்தச் செல்களுக்கு (பெரும்பாலும் லிம்போசைட்டுகள்) அகச்சட்டகமாகவும் (ஸ்ட்ரோமா) இந்த இணைப்புத்திசு பயன்படுகிறது.
அடர்வான இணைப்புத்திசுவில் நாரிழைகளும் ஃபைப்ரோபிளாஸ்ட்களும் நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளன. நாரிழைகள் அமைந்திருக்கும் முறையான, முறையற்ற பாங்கினைப் பொறுத்து இந்த இணைப்புத் திசுவானது அடர்வான – சீரான இணைப்புத்திசு (Dense Regular Connective Tissue) எனவும் அடர்வான – சீரற்ற இணைப்புத்திசு (Dense Irregular Connective Tissue) எனவும் அழைக்கப்படுகிறது. அடர்ந்த சீரான இணைப்புத்திசுவில் முக்கியப் பொருளாகக் கொல்லாஜன் இழைகள் காணப்படுகின்றன. இவை இணையாக அமைந்த தசைக்கற்றைகளுக்கும் சில மீள்தன்மையுடைய இழைகளுக்கும் இடையில் அமைந்துள்ளன. இதில் உள்ள முக்கிய செல்வகை ஃபைப்ரோபிளாஸ்ட் ஆகும். இது, எலும்புத்தசையையும் எலும்புகளையும் இணைக்கிறது. மேலும் இது ஒரு குறிப்பிட்ட திசையிலிருந்து அளிக்கப்படும் இழுவிசை அழுத்தத்தைத் தாங்கும் வகையில் அமைந்துள்ளது. இவ்விணைப்புத் திசுவானது எலும்புத் தசைகளோடு எலும்பை இணைக்கும் தசை நாண்களிலும் (Tendon), எலும்பிணைப்பு நார்களிலும் (Ligament) காணப்படுகின்றன. எலும்பிணைப்பு நார்கள் ஒரு எலும்பை மற்றோர் எலும்புடன் இணைக்கின்றன.
சீரற்று அமைந்த தடித்த கொல்லாஜன் நாரிழைக்கற்றைகளும், ஃபைப்ரோபிளாஸ்ட்களும் அடர்ந்த சீரற்ற இணைப்புத்திசுக்கள் எனப்படும். இதில் ஃபைப்ரோபிளாஸ்ட் வகை செல்கள் முதன்மையானவையாகும். இது பல திசுக்களில் இருந்து வரும் இழுவிசையைத் தாங்கி அமைப்பு ரீதியான வலுவைத் தருகிறது. இதில் சில மீள் தன்மையுடைய நாரிழைகளும் காணப்படுகின்றன. இவ்வகை திசுக்கள் தோலில் டெர்மிஸ் அடுக்கில் காணப்படுகின்றன. மேலும் சிறுநீரகம், எலும்புகள், குருத்தெலும்புகள், தசைகள், மூட்டுகள் மற்றும் நரம்புகள் போன்றவற்றைச் சுற்றி நாரிழை உறைகளையும் உருவாக்குகிறது. மீள் தன்மை இணைப்புதிசுக்களில் மீள் தன்மை நாரிழைகள் அதிகம் காணப்படுகின்றன. இழுக்கப்பட்ட தசைகள் மீண்டும் சுருண்டு பழைய நிலையை அடைதல் மீள் தன்மை நாரிழையால் நடைபெறுகிறது. தமனிகளில் அலைபோன்ற துடிப்புடன் இரத்தம் பாய்வதற்கும் உட்சுவாசத்தைத் தொடர்ந்து நடைபெறும் வெளிச்சுவாசத்தில் நுரையீரல் சுருங்குவதற்கும் இவ்வகை நாரிழைகள் தான் காரணமாகும். பெரிய தமனிகளின் சுவரிலும், முதுகெலும்புத் தொடரில் காணப்படும் எலும்பிணைப்பு நார்களிலும் சுவாசக் குழல் சுவர்களிலும் இவ்வகை இணைப்புத்திசுக்கள் காணப்படுகின்றன.
சிறப்பு வகை இணைப்புத்திசுக்கள் மூவகைப்படும், அவையாவன, குருத்தெலும்பு, எலும்பு மற்றும் இரத்தம். குருத்தெலும்பின் செல்லிடைப் பொருட்கள் உறுதியானவை. அதேநேரம் அவை வளையும் தன்மையுடையதாகவும் அழுத்தத்தைத் தாங்கக்கூடியதாகவும் உள்ளன. இத்திசுவின் செல்கள் (கான்ட்ரோசைட்டுகள்) அவைகளால் உருவாக்கப்பட்ட தளத்திசுவில் உள்ள சிறிய குழிகளுக்குள் பொதிந்து காணப்படுகின்றன. (படம் 3.6) முதுகெலும்பிகளின் கருநிலையில் காணப்படும் பெரும்பாலான குருத்தெலும்புகளானது பெரியவர்களானதும் எலும்புகளாக மாற்றப்படுகின்றன. பெரியவர்களில் மூக்கின் நுனிப்பகுதி, வெளிக்காது இணைப்புகள், செவிமடல், அடுத்தடுத்த முள்ளெலும்புகளுக்கு இடைப்பட்டபகுதி, கை, கால்கள் ஆகிய பகுதிகளில் குருத்தெலும்பு காணப்படுகின்றன.
கடினமான, வளையும் தன்மை அற்ற, கால்சியம் உப்புகளாலும், கொல்லாஜன் இழைகளாலும் வலுவூட்டப்பட்ட தளப்பொருளைக் கொண்ட அமைப்புகள் எலும்புகள் ஆகும். உடலுக்குச் சட்டகமாக அமைந்து உருவத்தை அளிக்கக்கூடிய அமைப்பாக இவை உள்ளன. மென்மையான திசுக்களையும் உறுப்புகளையும் பாதுகாத்து ஆதரவு அளிக்கும் அமைப்புகள் எலும்புகள் ஆகும். லாக்குனே (lacunae) எனப்படும் குழிகளில் ஆஸ்டியோசைட்டுகள் எனப்படும் எலும்பு செல்கள் காணப்படுகின்றன. கால்களில் உள்ள நீளமான எலும்புகள் உடலின் மொத்த எடையைத் தாங்கும் பணியைச் செய்கின்றன. எலும்புத்தசைகளோடு இணைந்து உடலின் இயக்கத்திற்கு இவை உதவுகின்றன. சில வகை எலும்புகளில் உள்ள எலும்பு மஜ்ஜையில் இருந்து இரத்தச் செல்கள் உருவாகின்றன.
இரத்தம் என்பது பிளாஸ்மா, சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டைச் செல்கள் ஆகியவற்றைக்கொண்ட திரவ இணைப்புத்திசுவாகும். இதய இரத்தக்குழல் மண்டலத்தில், ஊட்டப்பொருட்கள், கழிவுப் பொருட்கள், சுவாச வாயுக்கள் ஆகியவற்றை உடல் முழுதும் கடத்தும் ஊடகமாக இரத்தம் உள்ளது. 7வது அத்தியாயத்தில் இது குறித்து மேலும் கற்பீர்கள்.
தெரிந்து தெளிவோம்
நுண்ணோக்கி வழியாக ஒரு திசுவை உற்று நோக்குகிறாய், அதில் வரியுடைய கிளைகளான செல்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து தென்படுகின்றன. நீ பார்க்கும் அத்திசு எவ்வகையானது?
குறிப்பு
முக்கிய இணைப்புத்திசு நோய்கள் (பாரம்பரியவகை):
1. எலர்ஸ் - டன்லாஸ் சின்ட்ரோம் (Ehler's – Danlos syndrome) - மூட்டுகள், இதய வால்வுகள், உறுப்புகளின் சுவர்கள் மற்றும் தமனியின் சுவர்கள் போன்ற இடங்களில் ஏற்படும் கொல்லாஜன் உற்பத்திக் குறைபாடு.
2. ஸ்டிக்ளர் சின்ட்ரோம் (Stickler Syndrome) - கொல்லாஜன் பாதிப்பினால் முகத்தசைகளில் ஏற்படும் குறைபாடுகள்.
3. ரேப்டோமயோசார்கோமா (Rhabdomyosarcoma) - தலை, கழுத்து மற்றும் சிறுநீரக இனப்பெருக்கப் பாதையில் உள்ள மென்திசுக்களில் உருவாகும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கட்டிகள்.
சுயதடைகாப்பு வகை இணைப்புத்திசு குறைபாடுகள்
1. ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ் (Rheumatoid arthritis) : நோய் எதிர்ப்பு செல்கள் மூட்டுகளைச்சுற்றிக் காணப்படும் பகுதிகளைத் தாக்கி சவ்வுகளை வீக்கமடையச் செய்தல். இதயம்,நுரையீரல், கண்கள் போன்ற உறுப்புகளும் பாதிப்படையும்.
2. ஜோகரன்ஸ் சின்ட்ரோம் (Sjogren's syndrome) - உமிழ்நீர் மற்றும் கண்ணீர் சுரப்பது படிப்படியாக பாதிக்கப்படுதல்.