Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | செய்யுள்: தேவாரம்

திருஞானசம்பந்தர் | இயல் 5 | 12 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள்: தேவாரம் | 12th Tamil : Chapter 5 : Nadunpa natin thalai

   Posted On :  02.08.2022 12:24 am

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாடென்ப நாட்டின் தலை

செய்யுள்: தேவாரம்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாடென்ப நாட்டின் தலை : செய்யுள்: தேவாரம் - திருஞானசம்பந்தர் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கவிதைப்பேழை

நாகரிகம் – ரு

தேவாரம்

- திருஞானசம்பந்தர்



நுழையும்முன்

மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் நாகரிகத்தின் வெளிப்பாடு, கோவில் திருவிழா. கோவில் ஓர் ஊரின் பெருமைக்குரிய அடையாளங்களுள் ஒன்று. அதன் புகழைப் பறைசாற்றும் எழுச்சியே திருவிழாக்கள். அத்தகைய விழாக்கள் நிறைந்த ஊர் 'திருமயிலை' என்று அழைக்கப்படும் மயிலாப்பூர். இவ்வூர் சென்னை மாநகரின் ஒரு பகுதி. அங்குள்ள இறைவனுக்குக் கொண்டாடப்படும் பங்குனி உத்திர விழா அன்று முதல் இன்றுவரை தொடர்கிறது.


திருமயிலாப்பூர்

மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்

கலிவிழாக் கண்டான் கபாலீச் சரம்அமர்ந்தான்

பலிவிழாப் பாடல்செய் பங்குனி உத்திரநாள்

ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய் (7)


முத்துப்பல்லக்கில் தேவாரம் தந்த திருஞானசம்பந்தர்... 17ஆம் நூற்றாண்டுச் சுவரோவியம், திருநெல்வேலி.


சொல்லும் பொருளும்

மலிவிழா - விழாக்கள் நிறைந்த

மடநல்லார் - இளமை பொருந்திய பெண்கள்

கலிவிழா - எழுச்சி தரும் விழா

பலிவிழா - திசைதோறும் பூசையிடும் உத்திரவிழா

ஒலிவிழா - ஆரவார விழா

பாடலின் பொருள்

பூம்பாவாய்! இளம் பெண்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் திருவிழாக்கள் நிறைந்த வீதிகளையுடைய பெரிய ஊர் திருமயிலை. அங்கு எழுச்சிமிக்க விழாக்கள் நிகழும். மயிலை கபாலீச்சரம் என்னும் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனுக்குப் பூசையிடும் பங்குனி உத்திர ஆரவார விழாவினைக் காணாமல் செல்வது முறை ஆகுமா?


இலக்கணக் குறிப்பு

மாமயிலை     - உரிச்சொற்றொடர்


புணர்ச்சி விதி

பூம்பாவாய் = பூ + பாவாய் 

விதி : பூப்பெயர்முன் இனமென்மையும் 

தோன்றும் – பூம்பாவாய்


உறுப்பிலக்கணம்

கண்டான் = காண்(கண்) + ட் + ஆன் 

காண் - பகுதி (கண் எனக் குறுகியது

ட் - இறந்தகால இடைநிலை

ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி

அமர்ந்தான் = அமர் + த்(ந்) + த் + ஆன் 

அமர் - பகுதி விகாரம்

த் - சந்தி (ந் ஆனது விகாரம்) 

த் - இறந்தகால இடைநிலை

ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி 


மயிலாப்பூர் சிறப்புகள்:

1. மடலார்ந்த தெங்கின் மயிலை

2. இருளகற்றும் சோதித் தொன்மயிலை

3. கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சரம் 

4. கண்ணார் மயிலைக் கபாலீச்சரம்

5.கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம்

6. மங்குல் மதிதவழும் மாடவீதி மயிலாப்பூர்

7. ஊர்திரை வேலை உலாவும் உயர்மயிலை

மயிலைப் பதிகத்தில் காணப்பெறும் விழாக்கள்

1. ஐப்பசி - ஓண விழா

2. கார்த்திகை - விளக்குத் திருவிழா

3.மார்கழி - திருவாதிரை விழா

4. தை - தைப்பூச விழா

5. மாசி - கடலாட்டு விழா

6. பங்குனி - பங்குனி உத்திர விழா


நூல்வெளி 

பாடப்பகுதியாக உள்ள பாடல், இரண்டாம் திருமுறையில் உள்ள திருமயிலாப்பூர் பதிகத்தில் இடம்பெற்றுள்ளது. பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களின் தொகுப்புகள். இவர் பாடல்கள் இசைப் பாடல்களாகவே திகழ்கின்றன. இப்பாடல்கள் நம்பியாண்டார் நம்பி என்பவரால் தொகுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்களுக்குத் தேவாரம் என்று பெயர். சமுதாயத்தின் பொருளாதார கலை பண்பாட்டு நிலைகள், தமிழுக்கு இருந்த உயர்நிலை, இசை தத்துவம் சமயக் கோட்பாடுகள் அனைத்தும் சம்பந்தர் பாடல்களில் விரவிக் கிடக்கின்றன.


Tags : by Samandar | Chapter 5 | 12th Tamil திருஞானசம்பந்தர் | இயல் 5 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 5 : Nadunpa natin thalai : Poem: Devaram thirunana by Samandar | Chapter 5 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாடென்ப நாட்டின் தலை : செய்யுள்: தேவாரம் - திருஞானசம்பந்தர் | இயல் 5 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாடென்ப நாட்டின் தலை