இராமலிஙக அடிகள் | இயல் 5 | 12 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள்: தெய்வமணிமாலை | 12th Tamil : Chapter 5 : Nadunpa natin thalai
கவிதைப்பேழை
நாகரிகம் – ரு
தெய்வமணிமாலை
- இராமலிங்க அடிகள்
நுழையும்முன்
ஆன்மநேய ஒருமைப்பாட்டையும் சமய ஒருமைப்பாட்டையும் ஒளி வழிபாட்டையும் முன்வைத்த சீர்திருத்தச் சிந்தனை உருவான இடம் சென்னை. இவ்வுண்மை நெறியை உருவாக்கி வளர்த்த வள்ளலார், சென்னையில் வாழ்ந்து வடலூர் சென்று ஆன்மிக மையத்தை ஏற்படுத்தினார். அவரது சிந்தனைகளின் ஊற்றுக்களமாக இருந்தது கந்தகோட்டம்.
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவுகல வாமைவேண்டும்
பெருமைபெறும் நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்கவேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
பிடியா திருக்க வேண்டும்*
மருவுபெண் ணாசையை மறக்கவே வேண்டும்உனை
மறவா திருக்கவேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலமோங்கு கந்தவேளே!
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே! (8)
பாவகை : பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பாடலின் பொருள்
அறம் செய்வார் நிறைந்திருக்கும் சென்னையின் கந்தகோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே! குளிர்ந்த முகத்தோற்றத்தையுடைய தூய மாணிக்க மணியே! அம்மணிகளுள் அருள்நிறைந்த சைவமணியே! எனக்கு ஒருநெறிப்பட்ட மனத்துடன் நின்னுடைய மலர்போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்; உள்ளத்தில் ஒன்றும் புறத்தில் ஒன்றுமாகப் பேசும் வஞ்சகர்தம் உறவு என்னைப் பற்றாதவாறு காக்க வேண்டும்; பெருமை சான்ற நினது புகழையே நான் பேச வேண்டும்; பொய் பேசாதிருக்க வேண்டும்; சிறந்த வாழ்வியல் நெறியைப் பின்பற்றுமாறு எனக்கு அருள வேண்டும்; மதமான பேய் என்னை அணுகாதிருக்க வேண்டும்; துறவுக்கு எதிரான பெண்ணாசையை என் மனம் மறக்க வேண்டும்; என்றும் உன்னை மறவாதிருக்க வேண்டும்; மதியும் நின் கருணையாகிய நிதியும் நோயற்ற வாழ்வும் உடையவனாக நான் இருக்க வேண்டும்; ஆறுமுகங்களை உடைய தெய்வமாகிய மணியே, இத்தகைய சிறப்புகளை நீ எனக்கு அருள்வாயாக.
இலக்கணக் குறிப்பு
மலரடி - உவமைத்தொகை
வளர்தலம் - வினைத்தொகை
உறுப்பிலக்கணம்
(i) நினைக்கின்ற = நினை + க் + கின்று + அ
நினை - பகுதி
க் - சந்தி
கின்று - நிகழ்கால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி
(ii) வைத்து = வை + த் + த் + உ
வை - பகுதி
த் - சந்தி
த் - இறந்தகால இடைநிலை
உ - வினையெச்ச விகுதி
(iii) பேசுவார் = பேசு + வ் + ஆர்
பேசு - பகுதி
வ் - எதிர்கால இடைநிலை
ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி
புணர்ச்சி விதி
உள்ளொன்று = உள் + ஒன்று
விதி : தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்' - உள்ள் + ஒன்று
விதி : 'உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' – உள்ளொன்று.
ஒருமையுடன் = ஒருமை + உடன்
விதி: 'இ ஈஐவழி யவ்வும்' - ஒருமை + ய் + உடன்
விதி : 'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' - ஒருமையுடன்.
நூல்வெளி
பாடப்பகுதியிலுள்ள பாடல், இராமலிங்க அடிகள் இயற்றிய திருவருட்பாவில் ஐந்தாம் திருமுறையில் இடம்பெற்ற தெய்வமணிமாலை என்னும் பாமாலையில் உள்ளது. இப்பாடல் சென்னை, கந்தகோட்டத்து முருகப்பெருமானின் அருளை வேண்டும் தெய்வமணிமாலையின் 8ஆம் பாடல். சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவரும் பசிப்பிணி போக்கியவருமான அடிகள் சிதம்பரத்தை அடுத்த மருதூரில் பிறந்தார். சிறுவயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார். இம்மண்ணில் ஆன்மநேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்கவும் உண்மைநெறி ஓங்கவும் உழைத்தவர் அடிகளார். வாடிய பயிரைக் கண்டபோது வாடிய அவ்வள்ளலின் பாடல்கள் ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் தன்மையுடையவை. திருவருட்பா, ஆறு திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. மனுமுறை கண்ட வாசகம்', 'ஜீவகாருண்ய ஒழுக்கம்' ஆகியவை இவருடைய உரைநடை நூல்கள்.