Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 5 | 12 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 12th Tamil : Chapter 5 : Nadunpa natin thalai

   Posted On :  03.08.2022 07:47 pm

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாடென்ப நாட்டின் தலை

கேள்விகள் மற்றும் பதில்கள்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாடென்ப நாட்டின் தலை : கேள்விகள் மற்றும் பதில்கள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 5

நாடென்ப நாட்டின் தலை

நாகரிகம், தொழில், வணிகம்


• உரைநடை - மதராசப்பட்டினம் 

• செய்யுள் - தெய்வமணிமாலை - இராமலிங்க அடிகளார் 

செய்யுள் - தேவாரம் - திருஞான சம்பந்தர் 

செய்யுள் - அகநானூறு - அம்மூவனார்

• துணைப்பாடம் - தலைக்குளம் - தோப்பில் முகமது மீரான்

இலக்கணம் - படிமம் 

திருக்குறள் - திருவள்ளுவர்


இயல் 5

உரைநடை உலகம்

மதராசப்பட்டினம்


பாடநூல் வினாக்கள்


பலவுள் தெரிக

1. சென்னை வெறும் நகரம் மட்டுமல்ல. அது நம்பிக்கை மையம். காரணம் -

அ) நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளின் களம் 

ஆ) மென்பொருள், வன்பொருள் வாகன உற்பத்தியில் பங்கு 

இ) மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை 

ஈ) அ, ஆ, இ அனைத்தும்

[விடை : ஈ) அ, ஆ, இ அனைத்தும்] 


2. கூற்று: இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர். 

காரணம்: கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவோ இருந்தது. 

அ) கூற்று சரி, காரணம் தவறு

ஆ) கூற்று தவறு, காரணம் சரி 

இ) கூற்று தவறு, காரணம் தவறு

ஈ) கூற்று சரி காரணம் சரி

[விடை : ஈ) கூற்று சரி காரணம் சரி] 


3. பொருத்துக. 

அ) திருவல்லிக்கேணி ஆறு - 1. மாவலி புரச் செலவு 

ஆ) பக்கிங்காம் கால்வாய் - 2. கல்கோடரி 

இ) பல்லாவரம் - 3. அருங்காட்சியகம் 

ஈ) எழும்பூர் - 4. கூவம் 

அ) 1, 2, 4, 3

ஆ) 4, 2, 1, 3

இ) 4, 1, 2, 3

 ஈ) 2, 4, 3, 1 

[விடை : இ) 4, 1, 2, 3]


குறுவினா


1. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் குறித்து எழுதுக.

• காலின் மெக்கன்சியின் தொகுப்புகளைக் கொண்டு 1869 இல் உருவாக்கப்பட்ட நூலகம். 

• ஓலைச்சுவடிகள், தாள்சுவடிகள், புத்தகங்கள் எனப் பெரும் தொகுப்புகள் காணப்படுகிறது.


சிறுவினா 


1. சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில் இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக.

• சென்னை நகரின் ஒவ்வொரு பகுதிக்கும் வரலாறு உண்டு. 

• அந்தப் பண்பாட்டு அடையாளங்களை எண்ணிக்கையில் அடக்குதல் மிகக் கடினம். 

• இந்திய சாரசனிக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட கட்டடங்கள் இன்று சென்னையின் பழமையைப் பறைசாற்றுகின்றன. 

• ஆவணங்களை முறையாகக் கையாளும் ஆவணக் காப்பகம் (மெட்ராஸ் ரெக்காட் ஆபிஸ்) சாரசனிக் கட்டட முறையில் அமைந்தது. 

• தென்னிந்திய வரலாற்றை, பண்பாட்டை அறிவதற்கு எழும்பூர் அருங்காட்சியகம், கோட்டை அருங்காட்சியகம் துணை நிற்கின்றன. 

• இந்தியாவின் பொது நூலகம் கன்னிமாரா நூலகம் நவீனமாக வளர்ந்து வரும் பெரிய நூலகம்.


நெடுவினா 


1. 'ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும்' நீங்கள் பார்த்த அல்லது வாழ்ந்த ஒரு நகரம் குறித்து இரு பக்க அளவில் கட்டுரை எழுதுக. 

முன்னுரை :

ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும் உண்டு என்பதில் நான் பார்த்து வளர்ந்த சென்னை நகரத்தைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். 

சென்னை : 

தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படும் சென்னை இன்று தமிழகதெங்கும் பரவி வாழும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம். சென்னை இந்தியாவின் முதன்மை நகரங்களுள் ஒன்று மற்றும் தமிழகத்தின் தலைநகரம். சென்னை என்று அழைக்கப்படும் பகுதியும் அதன் சுற்றுப்பகுதிகளும் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே வாழ்ந்ததற்கான தடயங்களைக் கொண்டுள்ளன. 

மானுட எச்சம் :

பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்கோடரி இந்திய அகழ்வாய்வுத்துறை வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கூடுவாஞ்சேரி, பல்லாவரம், புழல் போன்ற பகுதிகளில் இன்று கிடைக்கும் மானுட எச்சங்கள் நமது பழமையை உணர்த்துகின்றன. இன்று சென்னையின் ஒரு பகுதியாக விளங்கும் மயிலாப்பூர் 2ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் ‘மல்லியர்பா' எனும் துறைமுகமாகச் சுட்டப்பட்டுள்ளது.

பாடல் பெற்ற தலம் :

திருவொற்றியூர், திருவான்மியூர், மயிலாப்பூர் ஆகியவற்றில் உள்ள கோயில்கள் பாடல் பெற்ற, ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தலமாக உள்ளன. 

நீர்நிலை - வடிகால் :

வடசென்னைக்குக் கொற்றலையாறு, மத்திய சென்னைக்குக் கூவம், தென் சென்னைக்கு அடையாறு கீழே பாலாறு இவை நான்கும் இணைக்கும் பக்கிங்காம் கால்வாய், காட்டன் கால்வாய் இருந்தன. 18 பெரிய ஓடைகள், 540 க்கும் மேற்பட்ட சிறிய ஓடைகள் என இயற்கையாய் வடிகால் பெற்றிருந்தது. ஆனால் அவை எங்கு போயின என்று தெரியவில்லை. 

நகரம் - உருவாக்கம் :

செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே உள்ள வீடுகள் இருந்த பகுதி ‘வெள்ளை நகரம்' என்றும் வெளியே இருந்த குடியிருப்பு ‘கருப்பர் நகரம்' என்றும் அழைக்கப்பட்டது. கிழக்கிந்திய நிறுவனம் பெரும்பாலும் வணிகத்தையே செய்தது. இதனால் நெசவாளர்கள் சென்னையை நோக்கி வந்தனர். அவர்கள் வாழ்ந்த பகுதிதான் வண்ணத்துக்காரன் பேட்டை என்பது வண்ணாரப்பேட்டை என்றும் சின்னதறிப்பேட்டை சிந்தாதரிப் பேட்டை என்றும் தோன்றியது. வடசென்னையை மதராசப்பட்டினம் என்றும் தென்சென்னையை சென்னைப்பட்டினம் என்றனர். ஆங்கிலேயர் இரண்டையும் இணைத்து மதராஸ் என்று அழைத்தனர். அது இன்று சென்னையாக உள்ளது.  ஆங்கிலேயரின் அதிகார மையமான இந்நகரம் ஆங்கிலேயரை எதிர்க்க முதல் தளமாக அமைந்த நகரமாக விளங்கியது. 

கல்லூரிகள் - பள்ளிகள் : 

• 1715 இல் உருவான ‘புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி'. 

• 1812 இல் உருவான சென்னைக் கோட்டைக் கல்லூரி. 

• 1837 இல் உருவான கிறிஸ்துவக் கல்லூரி. 

• 1840 இல் பிரசிடென்சி பள்ளி (மாநிலக் கல்லூரி). 

• 1857 இல் சென்னைப் பல்கலைக்கழகம். 

• 1914 இல் உருவான இராணிமேரிக் கல்லூரி. 

போன்ற கல்லூரி பழமை வாய்ந்து அறிவின் நகரமாக விளங்குகிறது. 

பண்பாட்டு அடையாளங்கள் :

சென்னையின் ஒவ்வொரு பகுதிக்கும் வரலாறு உண்டு. பண்பாட்டு அடையாளங்களை  எண்ணிக்கையில் அடக்குவது கடினம். இந்திய சாரசனிக் கட்டடக்கலை இன்றும் சென்னையின் பழமையைப் பறைசாற்றுகின்றது. அந்த வகையில் உருவாக்கப்பட்ட கட்டடங்களாகத் தமிழ்நாடு ஆவணக் காப்பகம், எழும்பூர் அருங்காட்சியகம், கோட்டை அருங்காட்சியகம், கன்னிமாரா நூலகம் போன்றவை விளங்குகின்றன. 

நம் சென்னை (இன்றைய சென்னை):

இன்று சென்னை வெறும் நகரம் மட்டுமல்ல. அது நம்பிக்கை மையம். சென்னையை மையமிட்டு தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் ஏற்படுத்தி நேரடி, மறைமுக வாய்ப்புகள் உருவாகின்றன. கணினி மென்பொருள், வன்பொருள், வாகன உற்பத்தியில் இன்று சென்னை முதலிடம் வகிக்கிறது. இந்திய அளவில் மென்பொருள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது. மின்னணுப் பொருள்கள் உருவாக்கும் மையமாகவும் திகழ்கிறது. 

முடிவுரை:

இத்தகு பெருமைகொண்ட சென்னை நகரம் நான் பார்த்து வாழ்ந்த காலகட்டத்தில் பெருமை கொண்ட பழமையைப் பறைசாற்றும் நகரமாக விளங்குகிறது.


கற்பவை கற்றபின்


1. ஒரு திட்டமிட்ட பெருநகரம் உருவாவதற்கு நீவிர் தரும் பரிந்துரைகளை, ‘கனவு நகரம்' என்னும் தலைப்பில் ஒப்படைவாக உருவாக்குக.

கனவு நகரம் 

• தமிழகத்தின் திருச்சியை இரண்டாவது தலைநகரமாக மாற்றுவது. இதற்காக நாவல்பட்டு கிராமம் ஒன்றையும் உருவாக்கினர். ஆனால் அந்தக் கனவு திட்டம் இன்று காலாவதியாகிவிட்டது. அத்திட்டத்தைப் பரிந்துரை செய்து நிறைவேற்றுவதே என் கனவு. 

• திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்றி நாவல்பட்டு கிராமத்தில் 1000 ஏக்கரில் அண்ணா நகர் பகுதியைத் துணை நகரம் என்ற பெயரில் உருவாக்கினோம். பத்தாயிரம் குடும்பங்கள் வாழ்வதற்கு வசதி செய்யப்பட்டு அகலமான சாலைகள், ஆரம்ப சுகாதார திட்டம் உள்ளிட்ட பசுமை தொழிற்சாலைகள், தரமான கல்வி நிலையங்களின் பாதாள சாக்கடைகள் அமைக்க வேண்டும். 

• பாதாள சாக்கடை நீரைச் சுத்தம் செய்ய தனி இயந்திரம், இயற்கை வேளாண் அங்காடி, குளிரூட்டப்பட்ட நூலகம் சிறாருக்கான தனி நூலகம் எனத் தனி தனியாக நூலகங்கள் அமைக்க வேண்டும். 

• நெகிழி இல்லாத நகரமாகவும் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத நகரமாகவும் உருவாக்க வேண்டும். 

• வீட்டுக்கு ஒரு மரம் கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்று சட்டத்தை அமல்படுத்த வேண்டும். 

• தடையற்ற மின்சாரம், தூய்மையான குடிநீர்; பாதுகாப்புவசதி போன்ற வசதிகள் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்வேன்.இயல் 5

செய்யுள்

தெய்வமணி மாலை

- இராமலிங்க அடிகள்


பாடநூல் வினாக்கள்


பலவுள் தெரிக

1. 'உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்” - இத்தொடர் உணர்த்தும் பண்பு 

அ) நேர்மறைப் பண்பு

ஆ) எதிர்மறைப் பண்பு 

இ) முரண்பண்பு

ஈ) இவை அனைத்தும்

[விடை : ஆ) எதிர்மறைப் பண்பு]


குறுவினா 


1. ‘தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே' தொடருக்குப் பதவுரை எழுதுக. 

அறம் செய்வார் நிறைந்திருக்கும் சென்னையின் கந்தக்கோட்டத்துக் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே! 


சிறுவினா


1. இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார்? 

• சென்னை கந்தகோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே! குளிர்ந்த முகத்தையுடைய தூய்மையான மாணிக்க மணியே! அருள் நிறைந்த சைவமணியே! 

• எனக்கு ஒரு நெறிப்பட்ட மனதுடன் உன் மலர் போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும். உள்ளத்தில் ஒன்றும், புறத்தில் ஒன்றும் பேசும் வஞ்சகர் உறவு என்னைப் பற்றாதவாறு காக்க வேண்டும். 

• சிறந்த வாழ்வியல் நெறிகளைப் பின்பற்ற எனக்கு அருள்புரிய வேண்டும். மதமான பேய் என்னை அணுகாதிருக்க வேண்டும். பெண்ணாசையை என் மனம் துறக்க வேண்டும். என்றும் உன்னை மறவாதிருக்க வேண்டும். 

• நின் கருணையாகிய நிதி, நோயற்ற வாழ்வு உடையவனாக இருக்க வேண்டும் என்று கந்தகோட்டத்துக் கந்தவேளிடம் இராமலிங்கர் வேண்டுகிறார். 


நெடுவினா 


1. சென்னையில் உள்ள மயிலாப்பூர், கந்தக்கோட்டப்பகுதிகள் செய்யுளில் எவ்விதம் காட்சிப்படுத்தப் படுகின்றன? 

மயிலாப்பூர்: 

• இளம்பெண்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் திருவிழாக்கள் நிறைந்த வீதிகளையுடைய பெரிய ஊர் திருமயிலை.

• அங்கு எழுச்சிமிக்க விழாக்கள் நிகழும் மயிலை கபாலீச்சரம் என்னும் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனுக்குப் பூசையிடும் பங்குனி உத்திர ஆரவார விழா அன்று முதல் இன்று வரை சிறப்பாக நடைபெறுகிறது. அவ்விழாவினைக் கண்குளிரக் காண வேண்டும். 

கந்தகோட்டம்: 

• அறம் செய்வோர்கள் நிறைந்திருக்கும் சென்னையின் கந்தக்கோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே! குளிர்ந்த முகத்தோற்றத்தையுடைய தூய மாணிக்க மணியே! மணிகளுள் அருள் நிறைந்த சைவமணியே! 

• எனக்கு ஒரு நெறிப்பட்ட மனதுடன் உன்னுடைய மலர் போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்களின் உறவு வேண்டும். உள்ளத்தில் ஒன்றும் புறத்தில் ஒன்றும் பேசும் வஞ்சகரின் உறவு என்னைப் பற்றாதவாறு காக்க வேண்டும். 

• உனது புகழைப் பேச வேண்டும்; பொய் பேசாமல் இருக்க வேண்டும். சிறந்த வாழ்வியல் நெறியைப் பின்பற்ற எனக்கு அருள வேண்டும். மதப்பேய் என்னை அணுகாதிருக்க வேண்டும். பெண்ணாசையை என் மனம் மறக்க வேண்டும். 

• நல்ல அறிவும், கருணையாகிய நிதியும் நோயற்ற வாழ்வும் உடையவனாக நான் இருக்க வேண்டும். ஆறுமுகங்கள் உடைய தெய்வமாகிய மணியே இத்தகைய சிறப்புகளை எனக்கு அருள்வாயாக என்று கந்தகோட்டத்தில் பெருமானிடம் வேண்டுகிறார். 


கற்பவை கற்றபின்


1. தெய்வமணிமாலைப் பாடல் கருத்துகளுக்கு இணையான திருக்குறள்களைத் தொகுத்துத் தருக. 

புறம்கூறிப் பொய்த்துஉயிர் வாழ்தலின் சாதல் 

அறங்கூறும் ஆக்கம் தரும் (குறள் - 183)


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் 

நிலமிசை நீடுவாழ் வார் (குறள் 3) 


பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை 

பெருகலின் குன்றல் இனிது (குறள் - 811) 


அந்தணர் என்போர் அறவோர்மற்(று) எவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான் (குறள் 30) 


பொறிவாயில் ஐந்து அவித்தான் பொய்தீர் ஒழுக்க 

நெறிநின்றார் நீடுவாழ் வார். (குறள் - 6)


பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று (குறள் 297) 


இனையர்இவர் எமக்கு இன்னம்யாம் என்று 

புனையினும் புல்லென்னும் நட்பு. (குறள் - 790) 


பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு (குறள் 350)


இயல் 5

செய்யுள்

தேவாரம்

- திருஞானசம்பந்தர்


பாடநூல் வினாக்கள்


குறுவினா


1. கலிவிழா, ஒலிவிழா விளக்கம் தருக. 

• கலிவிழா - திருமயிலையில் கொண்டாடும் எழுச்சிமிக்க விழா 

• ஒலிவிழா - கபாலீச்சரம் இறைவனுக்குப் பூசையிடும் பங்குனி உத்திர ஆரவார விழா.


சிறுவினா 


1. பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்ற முறையைத் திருஞான சம்பந்தர் எவ்வாறு பதிவு செய்கிறார்?

• கோவில் திருவிழா மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் நாகரிகத்தின் வெளிப்பாடு. 

• ஊரின் பெருமைக்குரிய அடையாளங்களுள் ஒன்று. 

• விழாக்கள் நிறைந்த ஊர் திருமயிலை. 

• இங்கு இளம் பெண்கள் ஆரவாரத்தோடு கொண்டாடும் விழாக்கள் நிறைந்த வீதியுடைய ஊர்.

• எழுச்சிமிக்க விழாக்கள் நிகழும். 

• மயிலை கபாலீச்சரம் என்னும் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனுக்குப் மிசையிடும் பங்குனி உத்திர ஆரவார விழாவினைக் கண்டு இறைவன் அருள்பெற திருஞானசம்பந்தர் பதிவு செய்கிறார்.


கற்பவை கற்றபின்


1. உங்கள் பகுதியில் கொண்டாடப்படும் திருவிழக்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி நாளிதழ் ஒன்றின் செய்திப்பிரிவிற்கு அளிக்கும் வகையில் செய்தியாக எழுதுக. 

மேலாளர், 

தினத்தந்தி நாளிதழ் (செய்திப்பிரிவு), 

கடலூர் அலுவலகம், 

கடலூர்.


வணக்கம்,

சிதம்பரம் நடராசர் கோயில் ஆருத்ரா தரிசனம் விழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. அவ்விழாவினைப் பற்றிய தகவல்கள் நாங்கள் தருகிறோம். அதை உங்கள் நாளிதழிலில் வெளியிட்டு மக்கள் வருகைத்தந்து இறையருளை வேண்டுகிறோம். 

செய்தி

ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நிரல் 

பஞ்சசபை, பொற்சபை, ஆகாய தலம் எனப் போற்றப்படும் சிதம்பரம் நடராசருக்கு ஆருத்ரா தரிசன விழா.

உலகப்புகழ் பெற்ற நடராசர் ஆலயத்தில் ஆண்டுதோறும் இரண்டு விழாக்கள் நடைபெறும் ஆனி மாதம் திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும் நடைபெறும். கொடியேற்றத்துடன் தொடங்கிய மறுநாள் காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிவகாமிசுந்திரி அம்பாள் சமேத நடராஜ மூர்த்திக்குத் திருப்பள்ளி எழுச்சி, கோபூஜை, பஞ்சாங்கம் படித்தல்.

மார்கழி முதல் நாள் கொடியேற்றத்துடன் துவக்கம். தேரோட்டம் வரும் 25 ஆம் தேதியும், 26ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை சிவகாமி சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராசமூர்த்திக்கு மகா அபிஷேகம் மற்றும் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.

காலசந்தி பூஜை, ரகசிய பூஜை நடைபெறும். காலை 9.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் நடராசர் சன்னதியின் எதிரே உள்ள கொடிமரம் முன்பு காட்சி தருவார்.

தீட்சிதர்கள் சிறப்பு பூஜைகள் செய்வர். 9.30 மணியளவில் மகாதீபாரதனை காண்பிக்கப்படும். தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் உட்பிரகாரம், வெளிப்பிரகாரத்தில் ஊர்வலமாகச் செல்வர்.

இரவு 8 மணிக்கு கொடிமர பூஜை பிறகு பஞ்சமூர்த்திகள் தங்கம் வெள்ளி வாகனத்தில் 4 வீதிகளில் உலா,. 

• ஞாயிறன்று வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா 

• 21 ஆம் நாள் கருட வாகனத்தில் வீதி உலா

• 22 ஆம் நாள் யானை வாகனத்தில் வீதி உலா 

• 23 ஆம் நாள் தங்ககைலாச வாகனத்தில் வீதி உலா 

• 24 ஆம் நாள் தங்கரதத்தின் பிஷாடனர் வெட்டுக்குதிரையில் வீதி உலா. 

• 25 ஆம் நாள் தேரோட்டம். 

• 26 ஆம் நாள் அதிகாலை 3 மணி முதல் 6 மணிவரை ராஜசபை என்கிற ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமி சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராச மூர்த்திக்கு மகா அபிஷேகத்துடன் மதியம் 2 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. 

இறையன்பர்கள் வருகை தந்து இறையருள் பெற வேண்டுகிறோம்.இயல் 5

செய்யுள்

அகநானூறு

  •  அம்மூவனார்


பாடநூல் வினாக்கள்


பலவுள் தெரிக

1. 'விளியறி ஞமலி’ - இதில் குறிப்பிடப்படும் விலங்கு எது? 

அ) எருது 

ஆ) குதிரை

இ) நாய் 

ஈ) யாழி

[விடை : இ) நாய் ]


குறுவினா


1. 'பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்' தொடரில் உள்ள முரண் நயத்தைக் குறிப்பிடுக.

பெருங்கடல் - சிறுகுடிப் பரதவர். 


சிறுவினா 


1. ‘நெல்லின் நேரே வெண்கலம் உப்பு' - இத்தொடரின் வழி பண்டமாற்று வணிகத்தை விளக்குக.

உப்புக்குப் பதிலாக (மாற்றாக) நெல்லை விற்றனர் என்ற செய்தியின் மூலம் சங்கக் காலத்தில் பண்டமாற்று வணிகம் நிகழ்ந்தது என்பதை அறிய முடிகிறது. 

விளக்கம் :

உமணர் ஒருவரின் மகள் அழகும் இளமையும் வாய்ந்தவள். தன் கைகளில் அணிந்திருந்த வளையல்கள் ஒலிக்க வீதிக்குச் சென்றாள். அப்போது அந்த வீதி வழியாக வந்த வணிகனை நோக்கி. 

‘உப்புக்கு மாற்றாக நெல்லைத் தந்து உப்பினைப் 

பெற்றுக் கொள்ள வாரீரோ! என்று கூவினார்'. 

'நெல்லின் நேரே வெண்கல் உப்பு எனச்

சேரி விலைமாறு கூறலின் மனைய்' 


கற்பவை கற்றபின்


1. தற்காலத்தில் வணிகத்தில் சிறந்து விளங்கும் மகளிர் குறித்து ஒரு கட்டுரை எழுதுக.

ஒரு பெண் நம் சமூகத்தில் வெற்றி பெற வேண்டுமானால் 100 சதவீதம் வேலை செய்தால் போதாது. 200 சதவீதம் உண்மையான கடுமையான உழைப்பைக் கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் இன்றையக்காலத்தில் திருவாரூரில் பெண்கள் தங்கள் வாழ்க்கையை வணிகத்திலும் ஈடுபடுத்தி, சிறந்து விளங்குகின்றனர்.

அவ்வகையில் திருவாரூரில் பிறந்து சென்னையில் பிழைப்புத் தேடி வந்த பெண் இன்று வணிகத்தில் சிறந்து விளங்குகிறாள். அவரைப் பற்றி சில வரிகள்.

வறுமை, கல்வி, பொருளாதாரம், கவலை, சோகச்சூழல் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய சூழலில் சென்னை வந்த பெண் ஏதாவது செய்யத் துடிக்கிறாள்.

முன் அனுபவம் இல்லாத நிலையில் வடமாநில தோழி மூலம் பினாயில் தயாரிக்க ஆரம்பித்தார். பிறகு 500 ரூபாய் கடன் வாங்கி மூலப்பொருள் மூலம் பொருட்கள் வாயிலாக தாமே தனியாக தொழில் செய்ய ஆரம்பித்தார். தான் தயாரித்த பினாயிலை, அரசு அலுவலகங்கள், தபால் நிலையங்கள், உணவகங்களில் நேரிடையாகச் சென்று விற்க ஆரம்பித்தார். போதிய வருமானம் கிட்டியது. வியாபாரத்தை மேலும் சிறக்கச் செய்ய அதிக மூலதனம் வைத்து இரண்டு பெண்களை உதவிக்கு வைத்துக் கொண்டார்.

தரம் உயர்தரம் என்ற நோக்கத்தோடு உழைத்த பெண்மணி இன்று தன்னிடம் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்களையும் வணிகத்தில் ஈடுபடச் செய்தார். தன் நிறுவனத்துக்கு நிலை ஏஜென்ஸி என்ற பெயர் வைத்து பினாயில் வணிகத்தில் சிறந்து விளங்குகிறார் என்றால் மிகையாகாது.

ஆணுக்குப் பெண் சமம் என்று மகளிர் தற்காலத்தில் வணிகத்தில் சிறந்து விளங்குகின்றனர் என்பதற்கு இதுவே சான்றாகும். 


2. பழங்காலத் தொழில்கள் குறித்துக் கருத்தரங்க உரை உருவாக்குக.

பழந்தமிழ் மக்கள் வாழ்வதற்காகப் பொருள் தேடுவதைக் கடமையாகக் கொண்டனர். அதற்காகப் பற்பல தொழில் வகைகளை மேற்கொண்டனர். தம் வாழிடங்களுக்கு ஏற்ப தொழில்களை தேர்ந்தெடுத்தனர். மலைநாட்டு மக்கள் தேனெடுப்பது தினை விதைப்பது, காட்டுப் பகுதியில் வாழ்பவர் நிரை மேய்ப்பது; பால் கடைவது; வயல்வெளியில் உள்ளோர் உழவு செய்து நகர் அமைத்து ஆட்சி செய்வது போன்ற பணிகளையும் செய்தனர். கடற்கரைப் பகுதியில் வாழ்வோர் உப்பு விளைத்தல்; முத்து குளித்தல்; அலை கடல் ஏறி வாணிகம் செய்தல்.

தொழில் செய்தே பொருள் தேடுவதே அவர் கொள்கை. பசுக்களுக்கு நீர் வேண்டும் என்று கருதி இரத்தல் கூட இழிவான செயலாகக் கருதினர். தாமே முயற்சி செய்து நீரைப்பெற்றுப் தர வேண்டும் என்றனர்.

தாமே முயன்று தேடும் பொருளையே தமக்குரியதாகக் கருதினர். எளிய முயற்சியில் வருவதை ஏற்க மறுத்தனர்.

முயற்சி உடையார் இகழச்சியுடையார் என்பதற்கு ஏற்ப இயன்று பழந்தமிழர் தொழில்கள் செய்தனர்.இயல் 5

துணைப்பாடம்

தலைக்குளம்

- தோப்பில் முகமது மீரான்


பாடநூல் வினாக்கள்


நெடுவினா


1.“கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன” - இது குறித்து உங்கள் கருத்தை விவரிக்க

முன்னுரை:

மக்கள் தொகைப் பெருக்கம், நாகரீக வளர்ச்சி, புலம்பெயர்வு, தலைமுறை மாற்றம் இதன் விளைவாக கிராமங்கள் தங்கள் முகவரியை இழக்கின்றன. 


நகரத்தை நோக்கிச் செல்ல காரணம் : 

• இயற்கையோடு இயைந்து வாழ்ந்த நம் தலைமுறையினர் காலமாற்றத்தாலும், பல்வேறு காரணங்களாலும் கிராமத்தைவிட்டு நகரத்தை நோக்கி நகர்கின்றனர். 

• பெரும்பாலும் கிராமங்களின் செயல்பாடுகள் அனைத்தும் கையேடு வாழ்க்கை போன்றது. 

• அங்கு கடினமான உழைப்பும், விவசாயமும் தவிர பிற தொழில் சார்ந்த வளர்ச்சி காணப்படுவதில்லை. 

• முறையான தொலைதொடர்பு, மருத்துவ வசதி சுகாதார அமைப்பு காண்ப்படுவதில்லை. 

• இந்தியாவில் 57 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளனர். இவர்களில் பெரும்பாலும் கிராமங்களில் வசிப்பவரே. 

• இன்றும் சில கிராமங்களில் கோயில் நுழைவு தீண்டாமை, சாதி அமைப்பு, மதக்கலவரம் போன்ற சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகிறது. 

• நகரத்திலோ எந்தவித பாகுபாடு இல்லாமல் சமவாய்ப்போடு வாழ இயலுவதால் நகரத்தை நோக்கி புலம் பெயர்கின்றனர். 

• மிகச்சரியான உள்கட்டமைப்புடன் கூடிய தரமானக் கல்வி. போதிய ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் நகர வாழ்க்கையை நோக்கி இடம் பெயர்கின்றனர். 


அடிப்படை வசதியை நோக்கி நகர்வு : 

• வறுமை, கல்வியில் பின்னடைவு, குழந்தைத் தொழிலாளர்கள் போன்றவை இன்றும் கிராமங்களில் காண முடிகிறது. 

• மின்சாரம், பேருந்து வசதி, தொழிற்சாலை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் நகர வாழ்க்கையை நாடுகின்றனர். 

• சாதிப் பாகுபாடு இல்லாமல் தரமான கல்வியோடு தொழிற்கல்வி, போட்டித்தேர்வை எதிர்கொள்ளும் பயிலகம், மின்னணு போன்ற நிறுவனங்கள் நகர்ப்புறத்தில் மேலோங்கி வருவதால் கிராமங்களை மக்கள் வெறுக்கின்றனர் 

• இன்று நகரம் என்பது கிராமத்தைவிட பெரிய மனித குடியிருப்பு உள்ளதாக அமைகிறது. மக்கள் தொகைப் பெருக்கத்தால் வங்கிகள், வணிக நிறுவனங்கள் மேலும் வளர்ச்சியடைகிறது.


முடிவுரை :

இத்தகைய காரணங்களால் கிராமங்களை விட்டு மக்கள் நகர்ப்புறம் நோக்கிச் செல்கின்றனர். இதனால் கிராமங்கள் தங்கள் அடையாளங்களை இழந்து முகவரியற்று கதியின்றி அமைகிறது.


கற்பவை கற்றபின்


1. நீங்கள் இருக்கும் ஊரை வாழ ஏற்றதாய் மாற்ற மேற்கொள்ளும் வழிமுறைகளைத் தொகுக்க.

• கழிவுநீர் வாய்க்கால் ஊரின் உள்ளே கழிவுநீர்த் தேங்காமல் செய்தல் வேண்டும். 

• உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை (டுழகூ) மாதம் இருமுறை குளோரின் போட்டு சுத்தம் செய்தல் வேண்டும். காரணம் குடிக்கும் நீரால்தான் அனைத்து நோய்களும் உருவாகுவதால் கவனம் செலுத்த வேண்டும். 

• வீட்டுக் குப்பைகளை பொது இடத்தில் கொட்டாமல், துப்பரவு பணியாளர்களிடம் தரம் பிரித்து ஒப்படைக்க வேண்டும். 

• தெருவில் இடம் இருப்பின் வேப்பங்கன்று, புன்கன் கன்று இவற்றை நட்டு பராமரிக்கலாம். 

• ஆடு, மாடுகளைத் தெருவில் இரவு நேரங்களில் கட்டி அசுத்தம் செய்யக் கூடாது.

• தேவை இல்லாமல் தெருக்குழாய்களில் தண்ணீரைத் திறந்து விடுதல் கூடாது. 

• தெருக்குழாய்களிலேயே குளிப்பது, துணி துவைப்பது கூடாது. 

• சாலையோரங்களில், வெளியிடங்களில் மலம் கழிக்கக்கூடாது. ஏனெனில் மலம் கழிப்பதால்தான் மிகத் தொற்று நோய்கள் பரவுகிறது எனப் புரிந்து கொள்ள வேண்டும். 

• பொது நலம் காக்கும் எண்ணம் இயல்பாக இருக்க வேண்டும். 

• மேலும், தெருக்களில் எதையும் எரிப்பதைத் தவிக்க வேண்டும். 

• சுத்தம் சோறு போடு என்று எண்ண வேண்டும். - சுற்றுப்புறமே சுகாதாரம். 


2. கடந்த முப்பது ஆண்டுகளாக உங்கள் குடும்பம் வாழ்ந்த வீட்டினைப் பற்றியும் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றியும் பெரியோர்களிடம் அறிந்து வகுப்பறையில் பகிர்ந்து கொள்க. 

மாணவர்களே வணக்கம், வாழ்த்துக்கள்!

நாங்கள் முப்பது ஆண்டுகளாக வாழ்ந்திருந்த வீடும் - சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாறுதல்கள் பற்றி நான் கேட்டு அறிந்து கொண்டவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். 

• பண்புடையவர்களால்தான் இன்னும் இவ்வுலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று சான்றோர் கூறுவர்.

• நல்லார் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை - என்பது போல நல்லவர்களால் தான் மழை பொழியும்.

• உள்ளத்தால் (ஒருவன்) பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன். 

• மேற்கண்ட பொன் மொழிகளுக்கு ஏற்ப என் குடும்பத்தார், என் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா அனைவருமே நல்லொழுக்கத்துடன் வாழ்ந்தவர்கள். 

• அன்புடையவர்கள், புறம் பேசாதவர்கள், பொய் பேசாதாவர்கள், ஒப்புரவு உடையவர்கள், உண்டை விளம்பிகள் என எல்லா நற்குணங்கள் பெற்றவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். 

• அவர்களின் வழித்தோன்றலாகிய எங்களை ஊதில் அனைவரும் அன்புடன் நடத்துவர். 

• உயிர்களிடத்து அன்பு வேணும் - என்னும் கொள்கையோடு வாழ்ந்ததால் ஊர் மக்களும் எங்கள் குடும்பத்தையே எடுத்துக்காட்டாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். 

• வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை. 

எனவே, மாணவச் செல்வங்களே நீங்கள் பிறர் விரும்புமாறு நல்லதை செய்து நலமோடு வாழுங்கள்.இயல் 5

இலக்கணம்

படிமம்


இலக்கணத் தேர்ச்சி கொள்

1. படிமம் என்பதன் பொருள் 

அ) சொல் 

ஆ) செயல்

இ) காட்சி 

ஈ) ஒலி 

[விடை: இ) காட்சி] 


2. ‘காலை இளம் வெயில் நன்றாக மேய தும்பறுத்துத் துள்ளிவரும் புதுவெயில்' இக்கவிதையில் ............ பயின்று வந்துள்ளது. 

அ) பயன் படிமம் 

ஆ) வினைப்படிமம் 

இ) மெய்ப்படிமம் 

ஈ) உருப்படிமம் 

[ விடை: ஆ) வினைப்படிமம் ] 


3. கூற்று : உவமை உருவகம் போல படிமமும் வினை, பயன், மெய், உரு ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும். 

காரணம் : எவ்வகையான படிமமாக இருந்தாலும் அது காட்சி வழியே கருத்தினை விளக்குவதில்லை. 

அ) கூற்று சரி, காரணம் தவறு

ஆ) கூற்று தவறு, காரணம் சரி 

இ) கூற்றும் சரி, காரணமும் சரி

ஈ) கூற்றும் தவறு, காரணமும் தவறு 

[ விடை: அ) கூற்று சரி, காரணம் தவறு ] 


4. மெய்ப்படிமத்துக்குரிய பாடலைத் தேர்வு செய்க. 

அ) நெருஞ்சிக் கட்கின் புதுமலர் முட்பயந் தாங்கு 

ஆ) கட்டில் நிணக்கும் இழிசினன் கையது 

இ) சிவப்புக் கோட்டுக் கழுத்தும் பாசிமணிக் கண்ணும் 

ஈ) வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப

[ விடை: இ) சிவப்புக் கோட்டுக் கழுத்தும் பாசிமணிக் கண்ணும் ] 


5. “மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தியிருக்கிறது” - இதில் எவ்வகைப் படிமம் வெளிப்படுகிறது? 

• இப்பாடலடிகளில் மெய் (வடிவப்) படிமம் வெளிப்படுகிறது.

• மாந்தோப்பு பருவ காலத்தின் அழகு பட்டாடையாக மரத்தைப் போர்த்தியிருப்பது பூக்களும் தளிர்களும் பட்டாடையை உடுத்திய பெண்ணின் தோற்றத்தை அல்லது பூத்திருக்கும் மரத்தின் தோற்றத்தோடு ஒப்பிட்டுள்ளது.


கற்பவை கற்றபின்


இரவும் பகலும் 

எதிரெதிர் மோதிட 

உடைந்த பகலின் துண்டுகள் - இக்கவிதையில் படிம உத்தி பயன்படுத்தப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுக. 

இரவும் பகலும் மோதிக்கொள்ளும் வினையைக் காட்சிப்படுத்தியதால் இது வினைப்படிமம் ஆகும்.

என்ற பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது. 


நம்மை அளப்போம்


பலவுள் தெரிக.

1. சென்னை வெறும் நகரம் மட்டுமல்ல. அது நம்பிக்கை மையம். காரணம் -

அ) நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளின் களம் 

ஆ) மென்பொருள், வன்பொருள் வாகன உற்பத்தியில் பங்கு 

இ) மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை 

ஈ) அ, ஆ, இ அனைத்தும்


2. கூற்று: இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர். காரணம்: கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவோ இருந்தது. 

அ) கூற்று சரி, காரணம் தவறு

ஆ) கூற்று தவறு, காரணம் சரி 

இ) கூற்று தவறு, காரணம் தவறு

ஈ) கூற்று சரி காரணம் சரி  


3. பொருத்துக. 

அ) திருவல்லிக்கேணி ஆறு - 1. மாவலி புரச் செலவு 

ஆ) பக்கிங்காம் கால்வாய் - 2. கல்கோடரி 

இ) பல்லாவரம் - 3. அருங்காட்சியகம் 

ஈ) எழும்பூர் - 4. கூவம் 

அ) 1, 2, 4, 3| 

ஆ) 4, 2, 1, 3

இ) 4, 1, 2, 3

 ஈ) 2, 4, 3, 1


4. ‘உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்’  - இத்தொடர் உணர்த்தும் பண்பு 

அ) நேர்மறைப் பண்பு 

ஆ) எதிர்மறைப் பண்பு 

இ) முரண்பண்பு

ஈ) இவை அனைத்தும் 


5) 'விளியறி ஞமலி' - இதில் குறிப்பிடப்படும் விலங்கு எது? 

அ) எருது 

ஆ) குதிரை

இ) நாய் 

ஈ) யாழி


குறுவினா 


1) கலிவிழா, ஒலிவிழா - விளக்கம் தருக. 

2) கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் குறித்து எழுதுக. 

3) 'தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள்வளர் தலமோங்கு கந்தவேளே' - தொடருக்குப் பதவுரை எழுதுக. 

4) 'பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்' - தொடரில் உள்ள முரண் நயத்தைக் குறிப்பிடுக.


சிறுவினா 


1) சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில், இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக. 

2) இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார்? 

3) பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்ற முறையைத் திருஞான சம்பந்தர் எவ்வாறு பதிவு செய்கிறார்? 

4) 'நெல்லின் நேரே வெண்கல் உப்பு - இத்தொடரின் வழி பண்டமாற்று வணிகத்தை விளக்குக. 


நெடுவினா 


1) "ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும் உண்டு" - நீங்கள் பார்த்த அல்லது வாழ்ந்த ஒரு நகரம் குறித்து இருபக்க அளவில் கட்டுரை எழுதுக. 

2) "கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன" - இது குறித்து உங்கள் கருத்தை விவரிக்க. 

3) சென்னையில் உள்ள மயிலாப்பூர், கந்த கோட்டப் பகுதிகள் செய்யுளில் எவ்விதம் காட்சிப்படுத்தப்படுகின்றன?மொழியை ஆள்வோம்


சான்றோர் சித்திரம்

ஒருமுறை எட்டயபுரம் அரண்மனைக்கு யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு புலவர் வந்திருந்தார். அரண்மனை அவையில் நடந்த புலவர் கூட்டத்தில் ஈற்றடி ஒன்றைக் கொடுத்துப் பாடல் ஒன்றை இயற்றித் தருமாறு வேண்டினார். அக்கூட்டத்திற்கு இரண்டு நண்பர்கள் சென்றிருந்தனர். பலரும் பாடல் இயற்றிக் கொடுக்க அனைத்துப் பாடல்களிலும் நண்பர்கள் இருவரின் பாடல்களே சிறந்ததெனத் தேர்ந்தெடுத்த அப்புலவர், இருவருக்கும் 'பாரதி' என்ற பட்டத்தையும் வழங்கிச் சிறப்பித்தார். அவ்விருவரில் ஒருவர்சோமசுந்தர பாரதியார் சுப்பிரமணிய பாரதியார், மற்றொருவர் சோமசுந்தர பாரதியார்.

பேச்சாளர், சமூக சீர்திருத்தவாதி, விடுதலைப் போராட்ட வீரர், இலக்கிய ஆய்வாளர் எனப் பன்முக ஆளுமைகொண்ட நாவலர் சோமசுந்தர பாரதியார் சிறந்த வழக்கறிஞராகவும் திகழ்ந்தார். வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு வ. உ. சி. யின் அழைப்பை ஏற்று ரூ.100 சம்பளத்தில் சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். 'என்னிடம் இரண்டு சரக்குக் கப்பலோடு மூன்றாவதாக ஒரு தமிழ்க் கப்பலும் உள்ளது' என்று வ. உ.சி. பெருமிதத்துடன் இவரைக் குறிப்பிடுவார். இவர் தமிழ் இலக்கண, இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டவர்; அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று செயலாற்றியவர். தசரதன் குறையும் கைகேயி நிறையும், திருவள்ளுவர், சேரர் தாயமுறை, தமிழும் தமிழரும் முதலிய பல நூல்களை இவர் இயற்றியுள்ளார். தொல்காப்பியப் பொருளதிகார அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல் ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார். இவர் சமூக சீர்திருத்தங்களில் ஈடுபாடுகொண்டு சடங்குகள் இல்லாத திருமண விழாக்களை முன்னின்று நடத்தினார். வ. உ. சி., சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீதான வழக்குகளில் அவர்களுக்காக இவர் வாதாடியது குறிப்பிடத்தகுந்தது.

அவருடைய தீந்தமிழுக்குச் சான்று: "கட்டளை அல்லது நல்ல தமிழ் நடைக்கு, எளிதில் பொருள் விளங்கும் தெளிவு இன்றியமையாதது. இயல் வழக்கில்லா அருஞ்சொற்களும் பொருள் பல குறித்து மருளவைக்கும் பொதுச்சொற்களும் விரவும் நடையைச் செய்யுள் வழக்கில் ஒருவரும் விரும்பார். எளிமையும் தெளிவும் எழுத்திலும் பேச்சிலும் எம்மொழி நடைக்கும் இனிமையும் எழிலும் என்றும் உதவும் என்பது எல்லார்க்கும் உடன்பாடு".

(நாவலர் சோமசுந்தர பாரதியின் நூல்தொகுதி 4 - 'நற்றமிழ்' என்னும் கட்டுரையிலிருந்து.) 

வினாக்கள்: 

1. பாரதி பட்டம் பெற்ற இருவர் யார்? 

2. பின்வரும் தொடருக்கு இலக்கணக்குறிப்பு எழுதுக: எளிமையும் தெளிவும் 

3. புணர்ச்சி விதி தருக: வழக்கறிஞர்

4. சோமசுந்தர பாரதியார் எழுதிய நூல் ஒன்றினை எழுது. 

5. சோமசுந்தர பாரதியார் ஈடுபட்ட போராட்டம் எது? 


விடைகள்: 

1. சுப்பிரமணிய பாரதியார், சோம சுந்தர பாரதியார் 

2. எளிமையும் தெளிவும் - எண்ணும்மை 

3. வழக்கறிஞர் - வழக்கு + அறிஞர்

• உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் என்ற விதிப்படி, வழக்க் + அறிஞர் என்றானது. 

• உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதிப்படி, (க் + அ = கி) வழக்கறிஞர் எனப் புணர்ந்தது. 

4. தசரதனன் குறையும் - கைகேயின் நிறையும் 

5. இந்தி எதிர்ப்புப் போராட்டம் 


தமிழாக்கம் தருக.

Periyar was not only a great social revolutionary; he was something more than that.He is known as a great champion of the underprivileged; even in this sphere he was much more than that. His sphere of activity was very wide and when he took up any issue he went deep into it, understood all the aspects of it and did not rest until he had found a permanent solution to it. Communal differences in our society were deep-tooted and appeared to be permanent features of our society until Periyar came on the scene.

தமிழாக்கம்: 

பெரியார் சமூக சீர்திருத்தவாதி மட்டுமல்லாமல், அதையும் தாண்டி அவரிடம் பல சிறப்புகள் உள்ளன. அவர் பிற்படுத்தப்பட்டோர்களுக்காகப் போராடி வெற்றி கண்டவர். அதுமட்டுமல்லாமல் அவருடைய செயல்கள் தொலைநோக்குப் பார்வை உடையது. எந்தப் பிரச்சினைக்கும் அவர் கூக்குரல் கொடுத்தார். அதனை ஆராய்ந்து புரிந்த பின் அதற்கான நிரந்தர தீர்வையும் கண்டுபிடித்து நிறைவேற்றினார். பெரியார் அவர்களின் வருகைக்கு முன்னர் சாதிகளுக்கு இடையே வேற்றுமை நம் சமூகத்தில் பரவி இருந்தது. 


இலக்கிய நயம் பாராட்டுக. 

பிறப்பினால் எவர்க்கும் - உலகில் 

பெருமை வாராதப்பா! 

சிறப்பு வேண்டுமெனில் – நல்ல 

செய்கை வேண்டுமப்பா! 

நன்மை செய்பவரே - உலகம் 

நாடும் மேற்குலத்தார் ! 

தின்மை செய்பவரே - அண்டித் 

தீண்ட ஒண்ணாதார் ! 

- கவிமணி தேசிக விநாயகம்

தலைப்பு :

தீண்டாமையை விரட்டுவோம். 

ஆசிரியர் குறிப்பு :

பெயர் : கவிமணி தேசிக விநாயகம் 

பெற்றோர் : சிவதாணு - ஆதிலட்சுமி 

பிறப்பு : 1976 - 1954

ஊர் : கன்னியாகுமரி - தேரூர் 

நூல்கள் : ஆசிய ஜோதி, மலரும் மாலையும்

திரண்ட கருத்து:

மனிதனுக்கு பிறப்பால் புகழ் வராது. சிறப்பான புகழ் வரவேண்டுமெனில் நல்ல செயல்கள் செய்ய வேண்டும். நல்ல செயல்கள் செய்பவரை உலகம் நாடும். தீமை செய்பவரை ஒருவரும் தீண்டமாட்டார். 

தொடை நயம்: 

தொடையற்ற பாக்கள் 

நடையற்று போகும் 

என்பதற்கு ஏற்ப மோனை, எதுகை, இயைபு அளபெடை நயங்கள் அமைந்துள்ளன. 

மோனை நயம் : 

காட்டுக்கு யானை 

பாட்டுக்கு மோனை 

முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை. 

சான்று:

ன்மை நாடும் 

தின்மை தீண்ட 

எதுகை நயம் : 

மதுரைக்கு வகை 

செய்யுளுக்கு எதுகை 

முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வரத்தொடுப்பது எதுகை. 

சான்று:

பிப்பினால் சிப்பு

தின்மை தீண்ட 

இயைபு : 

இறுதி எழுத்தோ ஓசையோ ஒன்றிவரத் தொடுப்பது இயைபு. 

சான்று:

வாராதப்பா வேண்டுமப்பா 

மேற்குலத்தார் ஒண்ணாதார் 

அணி நயம் : 

குளத்துக்கு தாமரை அழகு 

கண்ணுக்கு மை அழகு 

செய்யுளுக்கு அணி அழகு 

என்பதற்கு ஏற்ப இயல்பு நவிற்சி அணி வந்துள்ளது.

முடிவுரை :

கற்றாருக்கும், கல்லாருக்கும் ஏற்ற வகையில் எதுகை, மோனை, இயைபு இயைந்தோட, கற்பனை காட்சியளிக்க, சந்தம் தாளமிட, சுவை உண்டாகி, நா ஏக்கமுற, அணியோடு அழகுபெறும் வகையில் இக்கவிதை அமைந்துள்ளது.


பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.

எ.கா. இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு. நீயும் புரிஞ்சிக்கோ  

இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது. நீயும் புரிந்துகொள். 

1. நிலத்தக் கௌறணும்டா அப்பதான் வகுறு நிறையும்

நிலத்தை உழுதால்தான் வயிறு நிறையும். 

2. அண்ணைக்கு அவனுக்குப் பணம் குடுத்து ஒதவியிருக்க வேண்டியதான.

அன்று அவனுக்குப் பணம் கொடுத்து உதவியிருக்க வேண்டியதுதான். 

3. வூட்டாண்ட வெளையாண்ட கொயந்தையை அப்பா எங்க இஸ்துகினு போனாரு. 

வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அப்பா எங்கு அழைத்துக்கொண்டு போனார். 

4. புள்ளைக்கு உடம்பு சரியில்லை மூணு நாளா சிரமப்படுது 

பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை. மூன்று நாட்களாக துன்பப்படுகிறது. 

5. ரவைக்கு சித்தப்பன காவலுக்குப் போவ சொல் 

இரவு சித்தப்பாவை காவலுக்குப் போகச் சொல்.


வெட்டியும் ஒட்டியும் பேசுதல் 

கிராமங்கள் நகரமாவது வளர்ச்சியா?

• கிராமங்களில் அழிவால் நகரங்கள் வளர்ச்சியடைந்தன. அதுமட்டுமல்லாமல் நவீன உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லக்கூடியதாக நகரங்கள் அமைகிறது.

• நகரங்களின் வளர்ச்சியால் கிராமங்கள் அழிக்கப்படுகிறது. இயற்கைப் பாதிப்பு, தொழிற்சாலைப் பெருக்கத்தால் நீர் மாசுபாடு, மனவளம் குன்றல், (வேளாண்மை) விவசாயம் பாதிப்பு ஏற்பட்டு உணவுக்கு கையேந்தும் நிலை ஏற்படக்கூடும். 


மொழியோடு விளையாடு


எண்ணங்களை எழுத்தாக்குக.


உழைத்து உழவு செய்த 

உப்பையெல்லாம் 

வண்டியில் பூட்டி எருதோடு வணிகர்கள் 

வாழ வழி கண்டு 

உப்புக்கு மாற்றாக நெல்லைப் பெற 

தன் மகளிரோடு உள்நாட்டுச் சந்தைக்குச் 

செல்கின்ற காட்சி 

வணிகர்களின் வீதிஉலாபோல் 

காட்சி தருகிறது


ஈற்றடி எழுதித் துளிப்பாவை நிறைவு செய்க.

எ.கா:

பூட்டிய வீட்டிலும் பூத்துச் சிரிக்கிறது - முல்லை.

1. விழும் மரங்கள் அழியும் காடு - வீடு

2. அப்படியென்ன சொல்லியது காற்று கதித்தாடுகிறது மேகம் - இடி

3. பூத்த மலரொன்று பறக்கிறது - தென்றல்

4. வானம் அழுகிறது பூமி சிரிக்கிறது. - மழை


கருத்துப்படத்தைப் புரிந்துகொண்டு பத்தியாக எழுதுக.


பத்தி அமைத்தல்:

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை சங்க இலக்கியங்கள். அவை இரண்டு வகைப்படும். ஒன்று எட்டுத்தாகை. மற்றொன்று பத்துப்பாட்டு. எட்டுத்தொகை என மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. அகம் சார்ந்த இலக்கியங்கள் ஐந்து: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை. புறம் சார்ந்த நூல்கள்: புறநானூறு, பதிற்றுப்பத்து. அகமும் புறமும் சார்ந்த நூல் பரிபாடல் ஆகும். பத்துப்பாட்டு அகம், புறம் என இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அகம் சார்ந்த நூல்கள்: குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை. புறம் சார்ந்த நூல்கள்: மதுரைக் காஞ்சி, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை. இவற்றுள் ஆற்றுப்படை நூல்கள் ஐந்து ஆகும்.


கீழ்க்காணும் பகுதியைப் படித்துப் பார்த்து, பிறமொழிச் சொற்களைக் கண்டறிந்து தமிழ்ப்படுத்துக.

சர்க்கார் கொடுக்கும் சம்பளம் ஜீவனத்துக்குப் போதுமா? அதற்குள் ஜீவனம் நடத்த முடியுமா? என்று அவர் சிந்தித்தது கிடையாது. சிந்திக்க முயன்றதும் கிடையாது; எல்லாம் மாயை; உள்ளூர் நிற்கும் ஆத்மா மாசுபடவில்லை. தான் வேறு இந்த மாயை வேறு. தான் இந்தப் பிரபஞ்சத்தை ஆட்டிவைக்கும் சக்தியின் ஒரு அம்சம் என்று திடமாக நம்பியிருந்தார். ஏனென்றால், அவரது ஆத்ம விலாசத்தைச் சோதனை போட்டுப் பார்க்க இதுவரை தெய்வத்துக்கோ மனுஷனுக்கோ அவகாசம் கிடைத்ததில்லை. மனுஷ வர்க்கம் முழுவதுமே தன்னைப் படைத்தவனுடைய தன்மையை ஸ்புடம் போட்டுப் பார்ப்பது போல தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருந்தது. 

விடை :

அரசு கொடுக்கும் ஊதியம் வாழ்வுக்குப் போதுமா? அதற்குள் வாழ்க்கை நடத்த முடியுமா? என்று அவர் சிந்தித்தது கிடையாது. சிந்திக்க முயன்றதும் கிடையாது. எல்லாம் பொய்த்தோற்றம். உள்ளூர நிற்கும் உயிர் மாசுபடவில்லை. தான் வேறு தோற்றம் வேறு. தான் இந்த உலகத்தை ஆட்டிவைக்கும் சக்தியின் ஒரு வடிவம் என்று திடமாக நம்பியிருந்தார். ஏனென்றால், அவரது உயிர் அடையாளத்தைச் சோதனைப் போட்டுப் பார்க்க இதுவரை தெய்வத்துக்கோ, மனிதனுக்கோ நேரம் கிடைத்ததில்லை. மனித வர்க்கம் முழுவதுமே தன்னைப் படைத்தவனுடைய தன்மையைப் புடம் போட்டுப் பார்ப்பது போல தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருந்தது. செய்து கற்போம்

நீங்கள் அறிந்த ஊர்களின் பெயர்க்காரணங்களைனத் தொகுத்து ஒப்படைவு உருவாக்குக. 

சிதம்பரம்: 

இறைவன் நடராசர் அம்பலத்தில் ஆடல் புரிதலால் சிற்றம்பலம் என்றும் அதுவே சிதம்பரம் என்றாயிற்று என்பர். சித் + அம்பரம் = சிதம்பரம் என்றாயிற்று. சித் என்றால் அறிவு, அம்பரம் என்றால் ஆகாயம் அல்லது வெட்டவெளி. வெட்டவெளிக்கு எல்லைக் கிடையாது. அதுபோல எல்லையற்ற அறிவைக் கொண்டவராலும் புரிந்துகொள்ள முடியாதவர் நடராசர். 

குற்றாலம்:

குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால் குற்றாலம் என்று பெயர் பெற்றது. சங்ககாலத்தில் இது தேனூர் என்னும் பெயருடன் திகழ்ந்தது. 

சிவகாசி:

தென் மதுரையை ஆண்ட ஹரிகேசரிபராக்கிரம பாண்டியன் வாரனாசியிலிருந்து (வாரனாசி என்பது காசி) ஒரு சிவலிங்கத்தைக் கொண்டுவந்து நிறுவினார். காசியிலிருந்து வந்த சிவலிங்கம் இங்கு நிறுவப்பட்டதால் காசி சிவலிங்கம் பெயராலே சிகவாசி ஆயிற்று. 

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு சென்னையின் புறநகர் பகுதியாகும். சென்னையின் நுழைவாயில் என்றழைக்கப்படுகிறது. முன்பு இங்கு நீர்நிலைகளில் செங்கழுநீர் பூக்கள் நிறைந்திருந்தன என்பர். எனவே செங்கழுநீர்ப்பட்டு என்று அழைக்கப்பட்டது. அது மருவி செங்கல்பட்டு என்றானது.


நிற்க அதற்குத் தக


[ஆளுமைத்திறன் என்பது ஒருவரது ஒழுங்கமைந்த இயங்கியல் நடத்தை, உணர்வு, சிந்தனை ஆகியவற்றைக் குறிக்கிறது. தன்னம்பிக்கை, நேர்மறைச் சிந்தனைகள், அடிப்படை ஒழுக்கம், உடற்பயிற்சி ஆகிய அனைத்துமே ஆளுமைப் பண்புகளுள் அடங்கும்]

இமயா இருசக்கர வாகனம் ஓட்டப் பழகுகிறாள். ஓட்டுகையில் இடையில் தடுமாறிக் கீழே விழுகிறாள். கற்றுக்கொடுக்கும் அவளுடைய அண்ணன். 'உன்னால் இருசக்கர வாகனம் ஓட்ட இயலாது' என்கிறான். நீங்கள் இமயாவாக இருந்தால் என்ன சொல்வீர்கள்?

அண்ணா நீங்கள் எனக்குத் தொடர்ந்து ஒரு வாரம் பழக்கிக் கொடுங்கள். நிச்சயம் கற்றுக்கொள்வேன். முடியாது என்பது வெறும் பேச்சு, முடியும் என்பது உயிர் மூச்சு. எனவே, பயிற்சி மேற்கொண்டால் எந்த வேலையும் எளிமையாகும் அண்ணா. 


• பள்ளி ஆண்டுவிழாவிற்கு வருகை புரிந்த சிறப்பு விருந்தினருக்கு நன்றியுரை நிகழ்த்த ஆசிரியர் அழைக்கின்றார். அந்நிலையில் நீவிர் என்ன செய்வீர்?

நன்றியுரை ஆற்ற வருவதற்கு நிச்சயம் ஒத்துக்கொள்வேன். தலைவர், சிறப்பு விருந்தினர், ஆசிரியர், மாணவ மாணவியர், பெற்றோர் என வரிசைப்படுத்தி நன்றி என்றாலே போதுமே! மேலும், சிறப்பு விருந்தினர் கல்வியை விலைக்கு வாங்க முடியாது. கல்விக்கூடங்களில் கற்றால் மட்டுமே கல்வியைப் பெறலாம் என்று கூறியதை முன்வைத்து நன்றி சொல்வேன்.


படிப்போம் பயன்படுத்துவோம் (நீதி மன்றம்) 

Affidavit - ஆணையுறுதி ஆவணம்

Allegation - சாட்டுரை

Conviction – தண்டனை

Jurisdiction - அதிகார எல்லை 

Plaintiff - வாதி


அறிவை விரிவு செய்

• ஒரு குட்டித்தீவின் வரைபடம் (சிறுகதைத் தொகுப்பு) - தோப்பில் முகமது மீரான் 

• சென்னைப் பட்டணம் – ராமச்சந்திர வைத்தியநாத்

• ஒரு பார்வையில் சென்னை நகரம் - அசோகமித்திரன்

• இராமலிங்க அடிகள் வரலாறு - ஊரன் அடிகள் 


Tags : Chapter 5 | 12th Tamil இயல் 5 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 5 : Nadunpa natin thalai : Questions and Answers Chapter 5 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாடென்ப நாட்டின் தலை : கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 5 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாடென்ப நாட்டின் தலை