Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | இலக்கணம்: படிமம்

இயல் 5 | 12 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: படிமம் | 12th Tamil : Chapter 5 : Nadunpa natin thalai

   Posted On :  02.08.2022 12:54 am

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாடென்ப நாட்டின் தலை

இலக்கணம்: படிமம்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாடென்ப நாட்டின் தலை : இலக்கணம்: படிமம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இனிக்கும் இலக்கணம்

நாகரிகம் – ரு

படிமம்


படிமம் (Image) என்றால் காட்சி என்பது பொருள். விளக்க வந்த ஒரு காட்சியையோ, கருத்தையோ காட்சிப்படுத்திக் காட்டுகிற உத்தி, படிமம். காட்சித்தன்மை கொண்ட ஒன்றை அப்படியே காணும் வகையில் வெளியிடுவதன் மூலம் தெளிவை ஏற்படுத்தலாம்; ஓவிய அனுபவத்தைத் தரலாம்; புதிய முறையில் தோற்றக் கூறுகளை எடுத்துக்காட்டலாம். கருத்துத் தன்மையுள்ள ஒன்றுக்கு ஒப்பீட்டைக் காட்டிக் காட்சித்தன்மை தரலாம்; கருத்துகளைப் புரிய வைக்கலாம். காட்சிக்குத் தெளிவு தருவதும் கருத்தைக் காட்சிப்படுத்துவதும் படிமத்தின் பணிகள். படிமத்தை உருவாக்க உவமை, உருவகம், சொல்லும் முறை போன்றவை பயன்படுகின்றன. 

வெயில் மழைக்குச் 

சொரணையற்ற எருமை 

குத்திட்ட பாறையாக 

நதிநீரில் கிடக்கும். (தேவதேவன்) 

எருமையின் சுரணையற்ற தன்மையைப் பாறையின் ஒப்பீட்டால் படிமப்படுத்துகிறார் கவிஞர். இது, ஒரு காட்சியைப் படிமப்படுத்திய கவிதை.

கத்தல்களின் நெருக்கடியில் 

தத்துவங்கள் 

குழந்தைகள்  போல் 

அடிக்கடி தொலைந்துபோகும் (ஆ.வே. முனுசாமி)

குழந்தைகள் தொலைந்து போதல் என்பது காட்சியாக நாம் கண்ட அனுபவம். கூச்சல்களுக்கிடையில் நல்ல தத்துவங்கள் தெரியாமல் போய்விடுகின்றன என்ற கருத்தை உணர்த்துவதற்கு மேற்கண்ட உவமை பயன்படுகிறது. இங்கு உவமை, படிமம் அமைக்க உதவுகிறது. இது ஒரு கருத்தைப் படிமப்படுத்திய கவிதை.

சங்க இலக்கியப் பாடல்களில் பல உவமைகள் படிமங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

"அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும் 

தலைநாள் செருந்தி தமனியம் மருட்டவும் 

கடுஞ்சூல் முண்டகம் கதிர்மணி கழாஅலவும் 

நெடுங்கால் புன்னை நித்திலம் வைப்பவும்” (சிறுபாண். 146-149)

நல்லியக்கோடன் ஆட்சி செய்த ஓய்மா நாட்டின்கண் உள்ள எயிற்பட்டினமானது அக்காலத்தே சிறப்புற்று விளங்கியது. அவ்வூர்க் கடற்கரையின் கண் தாழைமலர் அன்னம் போன்று மலர்ந்திருக்கும்; காண்பவர் பொன்னோ என்று மருளச் செய்யும் செருந்தி மலர் செறிவாய்த் தோன்றும்; நீலமணியோ எனக் கழிமுள்ளிப்பூ ஒளியுடன் நிறைந்து காணும்; முத்துக்கள் ஒத்த அரும்புகளை உடைய புன்னை மரங்கள் செழித்து ஓங்கிக் காட்சிதரும்.

இங்குத் தாழைமலர் அன்னம் போலவும் செருந்தி மலர் பொன்னைப் போலவும் முள்ளிமலர் நீலமணியைப் போலவும் புன்னை மரத்தில் அரும்புகள் முத்துக்களைப் போலவும் இருப்பதாகக் காட்சிப்படுத்துவதால் இப்பாடல் படிமமாகிறது.

இதுபோன்று சங்கப்பாடல்களில் உவமைகள், உள்ளுறை உவமைகள் தோறும் படிமங்களின் மிகுதியைக் காண முடியும்.

படிமம் உவமையிலும் அமையும்; உவமையின்றிப் பிறவற்றாலும் அமையும். உவமை கருத்துத் தன்மையாலும் அமையும். ஆனால் படிமம் காட்சித் தன்மையால் மட்டுமே அமையும். படிமத்தை அழகுபடுத்த மட்டுமே பயன்படுத்துவது கூடாது. கருத்தையோ உணர்ச்சியையோ ஆழப்படுத்தவும் படிமம் பயன்பட வேண்டும். 

“மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தியிருக்கிறது” (ந.பிச்சமூர்த்தி ) 

மாந்தோப்பு, பருவகாலத்தின் அழகுதோன்ற இருப்பதை இப்படிமம் உணர்த்துகிறது. பூக்களும் தளிர்களுமாகப் பட்டாடையை மரம் போர்த்தியிருப்பதாகக் காட்டி அதைப் பெண்ணாகக் காட்சிப்படுத்துகிறது இக்கவிதை. உவமை உருவகமின்றிப் பட்டாடை உடுத்திய பெண்ணின் தோற்றத்தை, அல்லது பூத்திருக்கும் மரத்தின் தோற்றத்தோடு இணைக்கிறது. உள்ளார்ந்த ஒப்பீடு இதில் இருக்கிறது.

உவமை, உருவகம் போலப் படிமமும் வினை, பயன், மெய் (வடிவம்), உரு (நிறம்) ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும் என்பர். எவ்வகையான படிமமாக இருந்தாலும் அது காட்சி வழியே கருத்தினை விளக்கும் ஓர் உத்தியாகவே பயன்படுத்தப்படுகிறது. 

வினைப்படிமம்

“கட்டில் நிணக்கும் இழிசினன் கையது 

போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ; 

ஊர்கொள வந்த பொருநனொடு 

ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே!" (புறம். 82 : 4-7)

"கட்டிலைப் பின்னுகின்ற ஒருவனின் கை ஊசி எவ்வளவு வேகமாக வாரைச் செலுத்துமோ, அவ்வளவு விரைவானது, ஊரைக் கைப்பற்ற எண்ணி வந்த வீரனுடன், இந்நெடுந்தகை நடத்திய பெரும்போர்", என வினையைக் காட்சிப்படுத்துகிறது இப்பாடல்.

"காலை இளம் வெயில் 

நன்றாக மேய 

தும்பறுத்துத் 

துள்ளிவரும் 

புதுவெயில்" (கல்யாண்ஜி)

இணைத்துக் கட்டப்பட்ட தும்பிலிருந்து அறுத்துக்கொண்டு கன்று துள்ளிக் குதித்தல்" என்பது எல்லோரும் அறிந்த ஒரு காட்சியாகும். இக்காட்சியைக் கொண்டு காலை இளம் வெயிலின் அழகை, கன்றின் செயலோடு ஒப்பிட்டுப் படிமப்படுத்துகிறது இக்கவிதை. 

பயன் படிமம்

நோம்என் நெஞ்சே! நோம்என் நெஞ்சே! 

புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக் 

கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்கு 

இனிய செய்தநம் காதலர் 

இன்னா செய்தல் நோம்என் நெஞ்சே! (குறுந். 202)

இனியசெய்தல், இன்னா செய்தல் என்ற பயன்களை (இனிய) நெருஞ்சிப்பூ, (இன்னா) முள் என்ற காட்சிப்பொருள்களால் படிமப்படுத்தியுள்ளது இக்கவிதை. 

மெய்ப்படிமம் (வடிவம்) 

யானைதன் வாய்நிறை கொண்டவலிதேம்பு தடக்கை 

குன்றுபுகு பாம்பின் தோன்றும் (அகம். 391: 11-12)

மதங்கொண்ட யானையானது தன் வாய்க்குள் பெரிய துதிக்கையின் மூலம் உணவை வைக்கிறது. யானையின் வாய் மலைக்குகையின் வாயினைப் போல உள்ளதாகவும், உணவை எடுத்துச்செல்லும் துதிக்கை, மலைக்குகையில் நுழையும் பாம்பினைப் போல உள்ளதாகவும் வடிவத்தைக் காட்சிப்படுத்தியமை இங்குப் படிமமாகிறது. 

"கோவைப்பழ மூக்கும் 

பாசிமணிக் கண்ணும் 

சிவப்புக்கோட்டுக் கழுத்தும் 

வேப்பிலை வாலும்" (ந.பிச்சமூர்த்தி )

தெரியுமா?

உவமையும் படிமமும்

தொல்காப்பியர் உவமை ஒன்றையே அணியாகக் கூறினார். காட்சி தருகிற உவமைகள், காட்சிதரா வெறும் உவமைகள் என இரு பிரிவாக உவமைகளைப் பிரிக்கலாம். சங்க இலக்கியப் பாடல்களில் பெரும்பாலும் உவமைகளின் வழியே சொல்லவந்த கருத்தை மேலும் அழகுபடக் கூறுவர். சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் காட்சி தரும் உவமைகளையே ஆண்டுள்ளன. படிமம் என்பது உவமையினாலும் அமைவது. படிமம், காட்சி தரும் உத்தி என்பதால் காட்சி தரும் உவமைகளை மட்டுமே அது பயன்படுத்திக் கொள்கிறது. அந்த வகையில் உவமைக் கோட்பாடு, படிமத்திற்குத் தோற்றுவாயாக இருக்கிறது. படிமச் சிந்தனை, இவ்வகையில் நம்மிடம் இருந்த ஒன்றுதான்; புதியதாக மேலை நாட்டிலிருந்து பெற்றுக் கொண்டதன்று.

இதில் கோவைப்பழம் போன்ற மூக்கும், பாசிமணி போன்ற கண்ணும், சிவப்பு நிறத்தில் வளைந்த கழுத்தும், வேப்பிலை போன்ற வாலும் உள்ளதாக வடிவப்படிமம் அமைந்துள்ளது. 

உரு(நிறம்)ப் படிமம்

பொருள்தேடிவரப் பிரிந்த தலைவன் சொல்லிச் சென்ற காலம் வந்தது. தலைவன் வரவில்லை. அந்நிலையில் மாலை வேளையில் தலைவி படும் துன்பமிகுதியைத் தோழி கூறுகிறாள். உலைக்களத்திலே நன்றாக வெந்து, பின் மெல்ல மெல்ல ஆறிக் கொண்டிருக்கும் பொன்னின் நிறம் போல், அந்தி வானம் விளங்கிய காட்சியை

"வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப"  (அகம். 71:6) 

என்று இப்பாடல் உருப்படிமமாக அமைந்துள்ளது.

நாம் விரும்பிய (அ) சிந்தித்த ஏதாவது ஒரு கருத்து வடிவத்திற்கு விளக்கம் தருவதற்காகவும் புலன்களின் உணர்வுகளை வெளிக்கொண்டு வருவதற்காகவும் செய்யப்படும் மனத்தின் மொழிபெயர்ப்பே படிமமாகும். படிமங்கள் பொருள் வளம் மிக்கன ; கருத்துச் செழிப்புடையன. பாடலின் மொத்தப் பொருளையும் சிறப்புச் செய்வன. இவ்வாறு இலக்கியங்களில் காட்சிகளையும் கருத்துகளையும் உண்மைகளையும் உணர்வுகளையும் வெளிக்கொணரும் கருவியாகப் படிமம் ஆளப்படுகிறது.


Tags : Chapter 5 | 12th Tamil இயல் 5 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 5 : Nadunpa natin thalai : Grammar: Padimum Chapter 5 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாடென்ப நாட்டின் தலை : இலக்கணம்: படிமம் - இயல் 5 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாடென்ப நாட்டின் தலை