Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | உரைநடை: மதராசப்பட்டினம்

இயல் 5 | 12 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை: மதராசப்பட்டினம் | 12th Tamil : Chapter 5 : Nadunpa natin thalai

   Posted On :  01.08.2022 10:17 pm

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாடென்ப நாட்டின் தலை

உரைநடை: மதராசப்பட்டினம்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாடென்ப நாட்டின் தலை : உரைநடை: மதராசப்பட்டினம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

உரைநடை உலகம்

நாகரிகம் – ரு

மதராசப்பட்டினம்நுழையும்முன்

தமிழ் மண்ணில் ஆற்றங்கரை நகரங்கள், கடற்கரை நகரங்கள் ஆகியவற்றைப் பற்றிய பதிவுகள் வரலாற்றின் பக்கங்களை ஆளுகின்றன. இந்தியாவில் மூன்று நூற்றாண்டுகளாக ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு அடித்தளமாகவும் அதிகார மையமாகவும் விளங்கிய கடற்கரை நகரமே மதராசப்பட்டினம். அது, இன்று பரபரப்பான சென்னை மாநகரமாக வளர்ந்திருக்கிறது. திட்டமிட்டு உருவாக்கப்படாத இந்நகரம் ஒரு காட்டுமரம் தன் மனம்போன போக்கில் வளர்வதுபோல வளர்ந்துள்ளது.


நகரங்கள், சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளுள் முதன்மையானவையாகும். சமூகத்தின் கடந்தகால வரலாற்றுக்கும் நிகழ்கால வாழ்விற்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் அவை துணை நிற்கின்றன. தென்னிந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படும் 'சென்னை' இன்று தமிழகமெங்கும் பரவி வாழும் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம். அவ்வகையில் இந்தியாவின் முதன்மை நகரங்களுள் ஒன்றாகவும் தமிழகத்தின் தலைநகராகவும் திகழ்கின்ற சென்னையின் வரலாறும் வளர்ச்சியும் நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று. 

சென்னையின் தொன்மை

இன்று சென்னை என்று அழைக்கப்படும் பகுதியும் அதன் சுற்றுப்பகுதிகளும் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே மனிதன் வாழ்ந்ததற்கான தடயங்களைக் கொண்டுள்ளன. சென்னைக்கு அருகேயுள்ள குடியம், அத்திரம்பாக்கம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணி, அப்பகுதியின் மனித நாகரிகத்தின் பழமையை ஒரு லட்சம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது என நிறுவுகிறது. அங்கு ஓடக்கூடிய கொற்றலையாற்றுப் படுகை மனித நாகரிகத்தின் முதன்மையான களங்களில் ஒன்று எனலாம். பல்லாவரத்தில் கண்டு பிடிக்கப்பட்ட கற்கோடரி, இந்திய அகழ்வாய்வுத்துறை வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. மேலும் கூடுவாஞ்சேரி, பல்லாவரம், புழல் போன்ற பகுதிகளில் இன்றும் கிடைக்கும் தொல் பழங்கால மானுட எச்சங்கள் இப்பகுதியின் பழமையை நமக்கு உணர்த்துகின்றன. இன்று சென்னையின் ஒரு பகுதியாக விளங்கும் மயிலாப்பூர், கி.பி. (பொ.ஆ.) 2 ஆம் நூற்றாண்டில் 'தாலமி' என்பவரால் 'மல்லியர்பா' எனும் துறைமுகமாகச் சுட்டப்பட்டுள்ளது.

சென்னை நகரத்தின் பழமையான கோயில்களான திருவொற்றியூர், திருவான்மியூர், மயிலாப்பூர், திருமுல்லைவாயில் ஆகியவற்றில் உள்ள கோயில்கள் பாடல் பெற்ற, ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தலங்களாக உள்ளன. பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை, முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது. இங்குள்ள கல்வெட்டைச் சென்னையில் கிடைத்தவற்றுள் பழமையான கல்வெட்டு எனலாம். திருவல்லிக்கேணியில் கிடைக்கும் நந்திவர்மன் கல்வெட்டும் பல்லவர் ஆட்சியில் இப்பகுதி சிறந்து விளங்கியதைக் காட்டுகிறது.

வள்ளல் பச்சையப்பர் கூவம் நதிக்கரையில் குளித்து விட்டு அருகில் உள்ள கோவிலில் வழிபட்டதாக குறிப்பு ஒன்று, அவரது நாட்குறிப்பில் உள்ளது. பாரதிதாசன், பக்கிங்காம் கால்வாயில் மயிலை சீனி. வேங்கடசாமி, ப. ஜீவானந்தம், உள்ளிட்ட நண்பர்களுடன் படகுப் பயணம் செய்திருக்கிறார். அதனை அவர்

சென்னையிலே ஒருவாய்க்கால் புதுச் 

சேரி நகர் வரை நீளும். 

அன்னதில் தோணிகள் ஓடும் - எழில் 

அன்னம் மிதப்பது போல. 

என்னருந் தோழரும் நானும் - ஒன்றில் 

ஏறி யமர்ந்திட்ட பின்பு 

சென்னையை விட்டது தோணி - பின்பு 

தீவிரப் பட்டது வேகம்

என்று, 'மாவலிபுரச் செலவு' எனும் தலைப்பில் கவிதையாக்கியிருக்கின்றார்.

சேத்துப்பட்டு (சேற்றுப்பட்டு), நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, மாதவரம், கோயம்பேடு, தாம்பரம் போன்ற பகுதிகள் கிழக்கிந்திய நிறுவனம் கால் பதிப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்னரே 12 - 13ஆம் நுற்றாண்டுகளில் புகழ்பெற்ற கிராமங்களாக இருந்துள்ளன.

அயலவர் குடியேற்றம் 

இன்று பெருநகராக வளர்ந்துள்ள சென்னை மாநகரத்தின் உருவாக்கம் நீண்ட வரலாற்றுப் பின்னணி கொண்டது. ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன் வங்கக் கடலோரம் சிறு குப்பமாக இருந்த பகுதியே இன்றைய சென்னைக்குத் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

கி.பி.(பொ.ஆ.) 1647 இல் எழுதப்பட்ட பத்திரம் ஒன்றில் "தொண்ட மண்டலத்துப் புழல் கோட்டத்து ஞாயிறு நாட்டுச் சென்னப்பட்டினம்" என்று காணப்படும் குறிப்பு, குப்பம் நகரமாக மாற்றம் பெற்ற வரலாற்றைக் கூறுகிறது.

சென்னைப் பகுதியில் போர்த்துகீசியர் மற்றும் டச்சுக்காரர்களின் வணிக வெற்றியைத் தொடர்ந்து ஆங்கிலேயரும் இங்கு தம் வணிகத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டனர். மயிலாப்பூருக்கு வடக்கே சில குப்பங்கள் மட்டுமே இருந்த மணல் வெளியைக் கிழக்கிந்திய வணிக நிறுவனத்தின் அலுவலர் பிரான்சிஸ்டே ஆங்கிலேயர் குடியேற்றத்துக்கான இடமாகத் தேர்ந்தெடுத்தார். அன்று அப்பகுதியின் இருபுறமும் கூவம் அழகான ஆறாகக் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. 'திருவல்லிக்கேணி ஆறு' என்றும் அதனை அழைத்தனர். 


தெரியுமா?

சென்னையின் நீர்நிலைகளும் வடிகால்களும்

சென்னை, வடசென்னைக்குக் கொற்றலையாறு, மத்திய சென்னைக்குக் கூவம், தென்சென்னைக்கு அடையாறு, அதற்கும் கீழே பாலாறு, இந்த நான்கு ஆறுகளையும் இணைக்கக்கூடிய பக்கிங்காம் கால்வாய் மற்றும் காட்டன் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், ஓட்டேரி நல்லா என 18 பெரிய ஓடைகள், 540க்கும் மேற்பட்ட சிறிய ஓடைகள் என இயற்கையாய் அக்காலத்தில் வடிகால்களைப் பெற்றிருந்தது. மழைநீர், சிறிய ஓடைகள் வழியாகப் பெரிய ஓடைகளைச் சென்றடையும்; பெரிய ஓடைகள் ஆறுகளைச் சென்றடையும்; ஆறுகள் கடலில் சென்று சேரும். இப்படி இயற்கை கொடுத்த வடிகால்களை நாம் என்ன செய்துள்ளோம்? எண்ணிப் பார்ப்போம்! 

அந்த இடத்தை, விஜயநகர ஆட்சியின் உள்ளூர் ஆளுநர்களான சென்னப்பரின் இரு மகன்களிடமிருந்து 22.08.1639 ஆம் நாளில் பிரான்சிஸ் டே வாங்கினார். கிழக்கிந்திய நிறுவனத்தின் நுழைவுக்குப் பிறகு ஆங்கிலேயர்களின் வணிகத்திற்காக நகரம் சீரமைக்கப்பட்டது. கோட்டையைச் சுற்றியுள்ள ஒவ்வொரு கிராமமும் இணைக்கப்பட்டுத் தொழில் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டது.

நகரம் - உருவாக்கம்


செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி 'வெள்ளையர் நகரம்' (White's Town) என்று அழைக்கப்பட்டது. கோட்டைக்குள் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியாளர்கள், வணிகர்கள் போன்றோருக்காக வெளியே அமைத்த குடியிருப்புகள் உள்ள பகுதி கருப்பர் நகரம்' (Black's Town) என அழைக்கப்பட்டது. இவ்விரு பகுதிகளும் இணைந்த பகுதியே மதராசப்பட்டினம் எனப்பட்டது. கிழக்கிந்திய நிறுவனம் பெரும்பாலும் துணி வணிகத்தையே செய்த காரணத்தால், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர். அவர்களால் வண்ணாரப்பேட்டை ( வண்ணத்துக்காரன் பேட்டை ) , சிந்தாதிரிப்பேட்டை (சின்னதறிப்பேட்டை) முதலான புதிய பகுதிகள் தோன்றின. ஏற்கெனவே இருந்த எழும்பூர் , திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் முதலிய கிராமங்களும் இணைக்கப்பட்டன. வடசென்னைப் பகுதிகள் மதராசப்பட்டினம் என்றும் தென் சென்னைப் பகுதிகள் சென்னைப்பட்டினம் என்றும் வழங்கப்பட்டன. ஆங்கிலேயர் இரண்டையும் இணைத்து மதராஸ் என்று அழைத்தனர். பின்பு அதுவே மெட்ராஸ் ஆகி, இன்று நம் சென்னையாக ஆகி இருக்கிறது.

நகராட்சி, மாகாணம்

1646ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மக்கள் தொகை 19,000 ஆகும். இவ்வளர்ச்சியினை அறிந்தே 1688 இல் சென்னை நகராட்சி உருவாக்கப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சி செய்வதற்கு வசதியாகத் தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கிச் சென்னை மாகாணத்தை உருவாக்கினர். 'எலி யேல்' (Elihu Yale) அதன் முதல் தலைவர் ஆனார். அவரைத் தொடர்ந்து 'தாமஸ் பிட்' (Thomas Pitt) சென்னை மாகாணத்தின் தலைவரானார். தாமஸ் பிட்டின் ஆட்சிக்காலத்தைச் சென்னையின் பொற்காலம் என்பர். இவர் பல பகுதிகளைச் சென்னையுடன் இணைத்தார். ஆங்கிலேயரின் அதிகார மையமான இந்நகரம், ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலை இயக்கத்தாருக்கும் முதன்மைக் களமாகத் திகழ்ந்தது.

அறிவின் நகரம்

இன்று சென்னையின் புகழுக்குச் சான்றாக நிற்கும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஆங்கிலேயரால் ஏற்படுத்தப்பட்டவை. 18 ஆம் நூற்றாண்டிலேயே சென்னையில் ஐரோப்பிய முறைக் கல்வி கற்பிக்கும் நிறுவனங்கள் தோன்றின. 1715இல் உருவான 'புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி ஆசியாவில் உருவான முதல் ஐரோப்பியக் கல்வி முறையிலான பள்ளியாகும். 19 ஆம் நூற்றாண்டில் பள்ளிகள் பெருகின. 1812 இல் உருவான சென்னைக் கோட்டைக் கல்லூரி, 1837 இல் தொடங்கப்பட்ட கிறித்தவக் கல்லூரி, 1840இல் உருவான பிரசிடென்சி பள்ளி (பின்னாளில் மாநிலக் கல்லூரி) போன்ற பல்வேறு  கல்வி நிறுவனங்கள் சென்னையின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றின.

பல்வேறு தென்னிந்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் வேராக இருந்து 19ஆம் நூற்றாண்டின் அறிவுப் புரட்சியில் பெரும்பங்காற்றிய சென்னைப் பல்கலைக்கழகம் 1857 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது 1914இல் பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட இராணிமேரி கல்லூரி பெண்கல்வி வரலாற்றில் குறிப்பிடத்தக்க கல்வி நிறுவனம் ஆகும். ஆங்கிலேயரின் நிதி உதவியின்றி இந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம் பச்சையப்பன் கல்லூரி. மேலும் மருத்துவக் கல்லூரி, ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி, உடற்பயிற்சிக் கல்லூரி, கவின்கலைக் கல்லூரி, மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளி எனச் சென்னை நகரின் கல்விக் கூடங்கள் பலவும் தமிழ்ச் சமூகத்தில் பெரும் அசைவுகளை ஏற்படுத்தின. 19ஆம் நூற்றாண்டில், கல்வி வளர்ச்சியின் உடனிகழ்வான அச்சுப்பரவல், நாளிதழ்ப் பெருக்கம் ஆகியவை சென்னையின் அறிவுவளர்ச்சிக்குத் துணை நின்றன. இதுவே, தமிழ்ச்சமூகம் அறிவுத்துறையில் பெரும் பாய்ச்சலை மேற்கொண்ட காலகட்டமாகும்.

தெரிந்து தெளிவோம்

இந்தோ - சாரசனிக் கட்டடக்கலை 


இது முகலாயக் கட்டடக்கலை, பிரித்தானியக் கட்டடக்கலை, இந்தியப் பாரம்பரிய பாணி ஆகியவற்றைக் கலந்து உருவாக்கப்பட்டது. இப்பாணியில் 1768இல் கட்டி முடிக்கப்பட்ட முதல் கட்டடம் சேப்பாக்கம் அரண்மனையே ஆகும். சென்னையின் புகழ்பெற்ற கட்டடங்களான மத்தியத் தொடர்வண்டி நிலையம், தென்னகத் தொடர்வண்டித் தலைமையகம், எழும்பூர் தொடர்வண்டி நிலையம், பொது அஞ்சல் அலுவலகம், உயர்நீதி மன்றம், சென்னைப் பல்கலைக்கழகம், ரிப்பன் கட்டடம், விக்டோரியா அரங்கு போன்றவை இந்திய - சாரசனிக் கட்டடக்கலையின் சிறப்புகளை நமக்குக் காட்டுகின்றன.

பண்பாட்டு அடையாளங்கள்:

சென்னை நகரின் ஒவ்வொரு பகுதிக்கும் வரலாறு உண்டு. அதன் பண்பாட்டு அடையாளங்களை எண்ணிக்கையில் அடக்குதல் மிகக் கடினம். இந்திய சாரசனிக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட பல கட்டடங்கள் இன்றும் சென்னையின் பழமையைப் பறைசாற்றுபவை.

ஆவணங்களை முறையாகக் கையாளும் பழக்கம் கொண்ட ஆங்கிலேயர் உருவாக்கிய மெட்ராஸ் ரெக்காட் ஆபிஸ் சாரசனிக் கட்டட முறையில் அமைந்தது. இது, இன்று தமிழ்நாடு ஆவணக் காப்பகம் என்று வழங்கப்படுகிறது. தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை அறிவதற்கான முதன்மைத் தரவுகள் பல இங்கே பாதுகாக்கப்பட்டுள்ளன.

தென்னிந்திய வரலாற்றை அறிவதற்கும் பண்பாட்டைப் புரிந்துகொள்வதற்கும் பேருதவி புரியும் எழும்பூர் அருங்காட்சியகமும் புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகமும் சென்னையின் அடையாளத்தைப் பேணுபவையாகும். இந்தியாவின் முதல் பொது நூலகமான கன்னிமாரா நூலகம் நவீனமாக வளர்ந்து வரும் பெரிய நூலகமாகும். இந்தியத் திரைப்படத் துறையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய சென்னைக்குத் திரைப்படத் தொழில் சார்ந்த இடங்கள், திரையரங்கம் ஆகியவை குறிப்பிடத்தக்க அடையாளங்கள்.

போக்குவரத்து:

நடந்து செல்லும் பாதைகளாகவும் மாட்டு வண்டிகள் சென்று கொண்டிருந்த பாதைகளாகவும் இருந்தவையெல்லாம் ஆங்கிலேயரின் குடியிருப்புகளை முன்னிட்டுச் சாலைகளாக மாறின. அண்ணாசாலைக்கு (மவுண்ட் ரோடு ) அடுத்ததாக மதராசப்பட்டினத்தின் மற்றொரு முக்கியமான சாலை பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையாகும்.

1856இல் தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் இராயபுரத்தில் அமைக்கப்பட்டது. இராயபுரம் தொடர்வண்டி நிலையம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை மத்தியத் தொடர்வண்டி நிலையம், எழும்பூர் தொடர்வண்டி நிலையம் ஆகியவை உருவாயின. சென்னை நகர வீதிகளில் டிராம் வண்டிகள் இயக்கப்பட்டன. இவ்வாறு சென்னையின் தரைவழிப் போக்குவரத்துப் பயணம் தொடர்ந்தது. 19ஆம் நூற்றாண்டில் பெரும் வளர்ச்சியடைந்த சென்னைத் துறைமுகமும் உலக நாடுகளைத் தமிழகத்துடன் இணைக்கும் பன்னாட்டு விமான நிலையமும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. ஆங்கிலேயருக்கும் சென்னை மாநகருக்கும் ஏறத்தாழ 300 ஆண்டு காலமாக இருந்த உறவு, 1947 ஆகஸ்டு 15ஆம் நாள் முடிவுக்கு வந்தது.

நம் சென்னை

இன்று சென்னை வெறும் நகரம் மட்டுமல்ல, அது நம்பிக்கை மையம். சென்னையை மையமிட்டு உருவான தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் ஏற்படுத்திய நேரடி, மறைமுக வேலை வாய்ப்புகள் நகரின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகின்றன. இன்று கணினி மென்பொருள், வன்பொருள், வாகன உற்பத்தி ஆகியவற்றில் சென்னை பெரும்பங்காற்றுகிறது. இந்திய அளவில் மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் சென்னை, மின்னணுப் பொருள்களை உருவாக்கும் மையமாகவும் திகழ்கிறது.

ஒரு நகரம் உலகப் புகழ்பெறுவதற்கு, அது தொன்மைச் சிறப்புடையதாக இருக்க வேண்டும்; தொழில் வளம் மிகுதியாகப் பெற்றிருக்க வேண்டும்; சிறந்த குடிமக்களைக் கொண்டிருக்கவேண்டும்; துறைமுக வசதியுள்ளதாகவும் இருத்தல் வேண்டும்; ஏற்றுமதி, இறக்குமதி, வணிகம் தொடர்ந்து நடைபெற வேண்டும். இவற்றுடன் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மிளிர வேண்டும். இத்தகைய தகுதிகள் உடைய நகரமே உலகப் புகழ்பெற்ற சிறந்த நகரமாக விளங்கும். அத்தனை சிறப்புகளையும் கொண்டதாய் விளங்கி வருவதே நம் சென்னை மாநகர் எனும் மதராசப்பட்டினம் ஆகும்.

ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும் உண்டு. அது சிதைந்துவிடாமல் வளர்ச்சி அமைவதே முறையானது. அதிலும் சென்னை போன்ற ஒரு மாநகருக்கென்று இருக்கின்ற தனித்துவமான அமைப்பையும் வரலாற்றுத் தடங்களையும் அழியாமல் பாதுகாக்கும் செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

தெரிந்து தெளிவோம்

சென்னை நூலகங்கள் : சென்னையின் பழமை, அறிவுப்புரட்சி ஆகியவற்றின் அங்கமாக விளங்கும்  நூலகங்கள் ஒவ்வொன்றும் சிறப்பு வாய்ந்த பண்பாட்டுத்தளங்கள் ஆகும். அவற்றுள் சில: 

சென்னை இலக்கியச் சங்கம்: 1812 இல் கோட்டைக் கல்லூரியின் இணைவாக உருவான இந்நூலகம், அரிய பல நூல்களைக் கொண்ட இந்தியாவின் பழமையான நூலகங்களில் ஒன்று. 

கன்னிமாரா நூலகம்: 1860இல் அருங்காட்சியகத்தின் அங்கமாகத் தொடங்கப்பட்ட இந்நூலகம், இந்தியாவின் முதல் பொது நூலகமாகும். 

கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்: காலின் மெக்கன்சியின் தொகுப்புகளை அடிப்படையாகக்கொண்டு 1869இல் உருவாக்கப்பட்ட இந்நூலகம் அரிய ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகள், புத்தகங்கள் எனப் பெரும் தொகுப்புகளைக் கொண்டது. 

அண்ணா நூற்றாண்டு நூலகம்: 2010ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்நூலகம் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகமாகும். 

தமிழாய்வு நூலகங்கள்: சிறப்பு நிலையில்  தமிழாய்வு நூல்களைக் கொண்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூலகம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், மறைமலையடிகள் நூலகம், செம்மொழித் தமிழாய்வு நூலகம், உ.வே.சா. நூலகம் போன்றவை முக்கியமானவை.

Tags : Chapter 5 | 12th Tamil இயல் 5 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 5 : Nadunpa natin thalai : Prose: Madrasapattinam Chapter 5 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாடென்ப நாட்டின் தலை : உரைநடை: மதராசப்பட்டினம் - இயல் 5 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : நாடென்ப நாட்டின் தலை