Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | செய்யுள்: கம்பராமாயணம்

இயல் 3 | 12 ஆம் வகுப்பு தமிழ் - செய்யுள்: கம்பராமாயணம் | 12th Tamil : Chapter 3 : Sutrathar kanne Ula

   Posted On :  03.08.2022 10:15 pm

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள

செய்யுள்: கம்பராமாயணம்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள : செய்யுள்: கம்பராமாயணம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கவிதைப்பேழை

பண்பாடு – ங

கம்பராமாயணம்



நுழையும்முன்

'யாவரும் கேளிர்' என்பது தமிழர் நற்பண்பின் வளர்ச்சி; 'சிறியோரை இகழ்தல் இலமே' என்பது அந்நற்பண்பின் மலர்ச்சி; 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பது அவ்வுயிர்ப்பண்பின் முதிர்ச்சி; காக்கை குருவி எங்கள் ஜாதி என்பது அத்தமிழ்ப்பண்பின் தொடர்ச்சி. கம்பனின் காவியம் இராமனை இப்பண்பின் படிமமாகப் படைத்திருப்பது உயர்ச்சி. தந்தை தாய் மீதான அன்பு, உடன் பிறப்பியம் ஆகியவற்றை, எல்லைகள் அனைத்தையும் கடந்து இராமன் விரிவுபடுத்துகிறான். வேடன், பறவை, எளிய முதியவள், வானரம், எதிரியின் தம்பி என்ற வேலிகள் அவன் அன்பிற்கு இல்லை.




அயோத்தியா காண்டம் - குகப் படலம்

குகன்

வேடுவர் தலைவன் குகன். பாறை உடலுக்குள் பஞ்சு உள்ளம் கொண்டவன் அவன். காட்டிற்குச் செல்லும் இராமன், கங்கையைக் கடக்க அவன் உதவுகிறான். அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லை என்பதை நிறுவும் வகையில் இராமன் குகன் நட்பு முகிழ்க்கிறது. இராமன் இளவரசனாக இருப்பினும் வேடனான குகனை உடன்பிறப்பாக ஏற்றுக் கொள்கிறான்.

பின்னாளில் அவனைச் சந்திக்கும் பரதனும் "எனக்கும் மூத்தோன்" எனக் குகனை ஏற்கிறான்.


1. அன்னவன் உரை கேளா

  அமலனும் உரை நேர்வான் 

  என்உயிர் அனையாய் நீ

  இளவல் உன் இளையான்; இந் 

  நன்னுதலவள் நின் கேள்;

  நளிர் கடல் நிலம் எல்லாம் 

  உன்னுடையது; நான் உன் தொழில்

  உரிமையின் உள்ளேன். (1994)

சொல்லும் பொருளும் 

அமலன் - இராமன்; 

இளவல் - தம்பி; 

நளிர்கடல் - குளிர்ந்தகடல் 

பொருள் 

குகன் கூறியவற்றைக் கேட்ட இராமன் "என் உயிர் போன்றவனே! நீ என் தம்பி; இலக்குவன் உன் தம்பி; அழகிய நெற்றியைக் கொண்ட சீதை, உன் அண்ணி ; குளிர் கடலும் இந்நிலமும் எல்லாம் உனதேயாகும். நான் உன்னுடைய ஏவலுக்கேற்பப் பணிபுரிபவன்" என்று கூறினான். 


2. 'துன்பு உளது எனின் அன்றோ

  சுகம் உளது? அது அன்றிப் 

  பின்பு உளது; இடை மன்னும்

  பிரிவு உளது என உன்னேல்; 

  முன்பு உளெம் ஒரு நால்வேம்

  முடிவு உளது என உன்னா 

  அன்பு உள, இனி, நாம் ஓர்

  ஐவர்கள் உளர் ஆனோம்* (1995) 

சொல்லும் பொருளும் 

துன்பு - துன்பம்; 

உன்னேல் - எண்ணாதே 

பாவகை : கலி விருத்தம் 

பொருள்

இராமன் காட்டிற்குச் சென்று துன்புறுவானே என்று குகன் வருந்தினான். அதை உணர்ந்த இராமன் கூறுகிறான், குகனே! துன்பம் என்று ஒன்று இருந்தால்தானே இன்பம் என்பது புலப்படும். துன்பத்திற்குப் பின் இன்பம் உறுதியாக உண்டு. நமக்கிடையே இப்போது இப்பிரிவு நேர்கிறது என்று எண்ணாதே. இதுவரை நாங்கள் நால்வரே உடன்பிறந்தவர் என்றிருந்தோம். உறவு என்பது எங்கள் நால்வரோடு நின்றுவிடவில்லை. இப்போது உன்னையும் சேர்த்து நாம் ஐவர் ஆகின்றோம்.


ஆரணியகாண்டம் - சடாயு உயிர் நீத்த படலம்

சடாயு

இராவணன் சீதையைச் சிறையெடுத்தபோது கழுகு வேந்தன் சடாயு தடுத்துச் சண்டையிட்டுக் காயப்படுகிறான். இராமனிடம் நடந்ததைக் கூறுகிறான்; பின் இறந்துவிடுகிறான். இராமன், தன் தந்தையின் நண்பனான அக்கழுகு வேந்தனையும் தன் தந்தையாகவே கருதி, மகன் நிலையில் அவனுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்கிறான்.

3. இந்தனம் எனைய என்ன கார்

  அகில் ஈட்டத்தோடும் 

  சந்தனம் குவித்து வேண்டும்

  தருப்பையும் திருத்தி, பூவும் 

  சிந்தினன் மணலின் வேதி

  தீது அற இயற்றி, தெண் நீர் 

  தந்தனன் தாதை தன்னைத் தடக்

  கையான் எடுத்துச் சார்வான். (3356)

பொருள்

"எப்படிப்பட்ட சிறப்பான விறகுகள் இவை" என்று கண்டவர் வியக்கும்படியான கரிய அகில் கட்டைகளையும் சந்தனக் கட்டைகளையும் இராமன் கொண்டு வந்து வைத்தான். தேவையான அளவு தருப்பைப் புற்களையும் ஒழுங்குபட அடுக்கினான். பூக்களையும் கொண்டுவந்து தூவினான். மணலினால் மேடையைத் திருத்தமாக அமைத்தான். நன்னீரையும் எடுத்து வந்தான். இறுதிச்சடங்கு செய்யப்படக்கூடிய மேடைக்குத் தன் தந்தையாகிய சடாயுவைப் பெரிய கைகளில் தூக்கிக் கொண்டு வந்தான்.


ஆரணிய காண்டம் - சவரி பிறப்பு நீங்கு படலம் 

சவரி

இராமனிடம் மிகுதியான அன்பையும் பக்தியையும் கொண்டவள் சவரி . சீதையைத் தேடிவரும் இராமனை, சுக்ரீவனுடன் நட்புக்கொள்ளுமாறு செய்தவள் இவள். அவ்வகையில் காப்பியத்தின் போக்கில் ஒரு திருப்பத்தை உருவாக்குபவள் சவரி. இராமன், அன்பளாகிய சவரியிடம் தாயிடம் காட்டும் அன்பைக் காட்டினான்.


4. அன்னது ஆம் இருக்கை நண்ணி,

  ஆண்டுநின்று, அளவு இல் காலம் 

  தன்னையே நினைந்து நோற்கும் சவரியைத்

  தலைப்பட்டு, அன்னாட்கு 

  இன்னுரை அருளி, தீது இன்று

  இருந்தனை போலும் என்றான் 

  முன் இவற்கு இது என்று எண்ணல் ஆவது 

  ஓர் மூலம் இல்லான். (3700)

பொருள்

இவனுக்கு முன்னே இப்படியொருவர் இருந்தார் என்று பிறிதொருவரைக் காட்ட இயலாத நிலையிலுள்ள முதற்பொருளாகிய இராமன், சவரியிடம் இனிதாகப் பேசினான். தன்னையே நினைத்துத் தவமிருந்த சவரியிடம், "இவ்வளவு காலம் நீ துன்பம் ஏதுமின்றி நலமுடன் இருந்தாய் அல்லவா?" என்று பரிவுடன் கேட்டான்.


5. ஆண்டு, அவள் அன்பின் ஏத்தி,

  அழுது இழி அருவிக் கண்ணள், 

  மாண்டது என் மாயப் பாசம்;

  வந்தது, வரம்பு இல் காலம் 

  பூண்ட மா தவத்தின் செல்வம்;

  போயது, பிறவி, என்பாள் 

  வேண்டிய கொணர்ந்து நல்க.

  விருந்து செய்து இருந்த வேலை (3701)

பொருள்

அப்போது சவரி, இராமனைப் புகழ்ந்து அன்பின் கனிவினால் அருவி இழிவது போலக் கண்ணீர் வடித்தாள். (இராமனைக் கண்டதால்) " என் பொய்யான உலகப்பற்று அழிந்தது; அளவற்ற காலம் நான் மேற்கொண்டிருந்த தவம் பலித்தது; என் பிறவி ஒழிந்தது" என்று கூறினாள். வேண்டிய எல்லாம் கொண்டுவந்து அவள் இராம இலக்குவனுக்கு விருந்து செய்விக்க, அவர்களும் விருந்தை ஏற்றனர். 


கிட்கிந்தா காண்டம் - நட்பு கோட்படலம் 

சுக்ரீவன்

சீதையைத் தேடி வரும் இராம இலக்குவரைக் கண்ட அனுமன், சுக்ரீவனை அழைத்து வந்தான். சுக்ரீவனை நண்பனாக ஏற்றுக் கொள்கிறான் இராமன்.


6. தவா வலி அரக்கர் என்னும்

  தகா இருள் பகையைத் தள்ளி, 

  குவால் அறம் நிறுத்தற்கு ஏற்ற

  காலத்தின் கூட்டம் ஒத்தார் 

  அவா முதல் அறுத்த சிந்தை

  அனகனும் , அரியும் வேந்தும் 

  உவா உற வந்து கூடும்

  உடுபதி, இரவி ஒத்தார். ( 3806)

சொல்லும் பொருளும்

அனகன் - இராமன்; 

உவா - அமாவாசை; 

உடுபதி - சந்திரன்

பொருள்

குறையாத வலிமை உடையவர்களும் வேண்டாத இருள் போன்றவர்களுமாகிய பகைவர்களை அழித்து அறங்கள் அனைத்தையும் நிலைபெறச் செய்வதற்கு ஏற்ற உரிய காலம்போல் இராமனும் சுக்ரீவனும் ஒருங்கிருந்தார்கள். ஆசையை அறவே அழித்த சிந்தையான் இராமனும் வானரத் தலைவன் சுக்ரீவனும் அமாவாசைக் காலத்தில் ஒன்றாக இணைந்திருக்கிற சந்திரனையும் சூரியனையும் ஒத்து இருந்தார்கள்.


7. மற்று இனி உரைப்பது என்னே ?

  வானிடை மண்ணில், நின்னைச் 

  செற்றவர் என்னைச் செற்றார்;

  தீயரே எனினும் உன்னோடு 

  உற்றவர் எனக்கும் உற்றார்; உன்

  கிளை எனது; என் காதல் 

  சுற்றம் உன் சுற்றம்; நீ என்

  இன் உயிர்த் துணைவன் என்றான். (3812) 

சொல்லும் பொருளும்

செற்றார் - பகைவர், 

கிளை - உறவினர்

பொருள்

இராமன் சுக்ரீவனிடம், "இனி நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? விண்ணிலும் மண்ணிலும் உள்ள உன் பகைவர் என் பகைவர்; தீயவராக இருப்பினும் கூட உன் நண்பர்கள் என் நண்பர்கள்; உன் உறவினர் என் உறவினர்; அன்பு மிகுந்த என் சுற்றத்தினர் உன் சுற்றத்தினர்; நீ, என் இனிய உயிர் நண்பன்!" என்றான். 


யுத்த காண்டம் - வீடணன் அடைக்கலப் படலம் 

வீடணன்

சீதையைக் கவர்ந்து வந்தது தவறென வீடணன், இராவணனிடம் கூறுகிறான். அவன் கூற்றை மதியாத இராவணன், வீடணனைக் கடிந்தான். இலங்கையை விட்டு வந்த வீடணன், இராமன் இருக்குமிடம் வந்து அடைக்கலம் வேண்டினான். இராமன் அவனை உடன் பிறந்தவனாக ஏற்று இலங்கை அரசை அவனுக்கு உரிமையாக்கினான்.


8. ஆழியான் அவனை நோக்கி,

  அருள்சுரந்து, உவகை கூர 

  ஏழினோடு ஏழாய் நின்ற

  உலகும் என் பெயரும் எந் நாள் 

  வாழும் நாள், அன்றுகாறும்,

  வாள் எயிற்று அரக்கர் வைகும் 

  தாழ்கடல் இலங்கைச் செல்வம்

  நின்னதே, தந்தேன் என்றான். (6503)

பொருள்

ஆணைச்சக்கரத்தையுடைய இராமன் உள்ளத்தில் கருணை பொங்க வீடணனிடம், "ஒளிபொருந்திய பற்களை உடைய அரக்கர் வாழ்வதும் ஆழமான கடல் நடுவே உள்ளதுமான இலங்கை அரசாட்சி, ஏழேழாகிய பதினான்கு உலகங்களும் எனது பெயரும் இங்கு எவ்வளவு காலம் இருக்குமோ அவ்வளவு காலம் உனக்கே உரிமை எனக் கொடுத்தேன்" என்று கூறினான். 


9. குகனோடும் ஐவர் ஆனேம்

  முன்பு; பின் குன்று சூழ்வான் 

  மக னொடும் அறுவர் ஆனேம்;

  எம்முழை அன்பின் வந்த 

  அகன் அமர் காதல் ஐய!

  நின்னொடும் எழுவர் ஆனேம்; 

  புகல் அருங் கானம் தந்து,

  புதல்வரால் பொலிந்தான் நுந்தை.* (6507) 

பாவகை: அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

பொருள்

(நாங்கள் நால்வர் உடன்பிறந்தவர்களாக இருந்தோம்). குகனுடன் சேர்த்து நாங்கள் ஐவர் ஆனோம். பின்னர் மேருமலையைச் சுற்றி வரும் கதிரவனின் மகனான சுக்ரீவனுடன் அறுவர் ஆனோம். உள்ளத்தில் அன்பு கொண்டு எங்களிடம் வந்த அன்பனே, உன்னுடன் சேர்த்து எழுவர் ஆனோம். புகுதற்கரிய கானக வாழ்வை மேற்கொள்ளும்படி என்னை அனுப்பிய உன் தந்தையாகிய தயரதன், இதனால் புதல்வர்களைக் கூடுதலாக அடைந்து பெருமை பெறுகிறான். 


இலக்கணக் குறிப்பு

உளது - இடைக்குறை

மாதவம் - உரிச்சொற்றொடர்

தாழ்கடல் - வினைத்தொகை

செற்றவர் - வினையாலணையும் பெயர் 

நுந்தை - நும் தந்தை என்பதன் மரூஉ


உறுப்பிலக்கணம்

(i) தந்தனன் - தா(த) + த்(ந்) + த் + அன் + அன் 

தா - பகுதி (த) எனக் குறுகியது விகாரம்)

த் - சந்தி ('ந்' ஆனது விகாரம்)

த் - இறந்தகால இடைநிலை

அன் - சாரியை

அன் - படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி


(ii) பொலிந்தான் - பொலி + த்(ந்) + த் + ஆன்

பொலி - பகுதி 

த் - சந்தி ('ந்' ஆனது விகாரம்) 

த் - இறந்தகால இடைநிலை 

ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி 


புணர்ச்சி விதி 

அருங்கானம் = அருமை + கானம்; 

விதி : ஈறு போதல் - அரு + கானம்; 

விதி : இனமிகல் - அருங்கானம்


நூல்வெளி

கம்பராமாயணம் பல்வேறுவிதமான பண்புகளை அடிப்படையாகக் கொண்ட பாத்திரங்களால் படைக்கப்பட்டிருக்கிறது. இராமன் அனைத்து உயிர்களையும் கீழ் மேல் எனக் கருதாது சமமாக அன்பு காட்டும் பகுதிகள் பாடமாக இடம்பெற்றுள்ளன. அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், யுத்த காண்டம் ஆகியவற்றிலிருந்து குகன், சடாயு, சவரி, சுக்ரீவன், வீடணன் ஆகியோரைப் பற்றிய பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உடன்பிறப்பியப் பண்பையும் அன்பையும் வெளிப்படுத்தும் பாடல்கள் இவை. இந்நூலை இயற்றியவர் கம்பர். இதற்குக் கம்பர் இராமாவதாரம் என்னும் பெயர் சூட்டினார். கம்பனது கவிநலத்தின் காரணமாக இது "கம்பராமாயணம்" என்றே அழைக்கப்படுகிறது. கம்பரது காலம் 12ஆம் நூற்றாண்டு. எழுதப்பட்ட காலம்தொட்டு மக்கள் இலக்கியமாகப் போற்றப்படுவதற்குக் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் கவிநலமே காரணம்.


Tags : Chapter 3 | 12th Tamil இயல் 3 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 3 : Sutrathar kanne Ula : Poem: Kamba Ramayanam Chapter 3 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள : செய்யுள்: கம்பராமாயணம் - இயல் 3 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள