Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | வாழ்வியல்: திருக்குறள்

இயல் 3 | 12 ஆம் வகுப்பு தமிழ் - வாழ்வியல்: திருக்குறள் | 12th Tamil : Chapter 3 : Sutrathar kanne Ula

   Posted On :  01.08.2022 05:53 pm

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள

வாழ்வியல்: திருக்குறள்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள : வாழ்வியல்: திருக்குறள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

வாழ்வியல்

இயல் 3

திருக்குறள்

05 இல்வாழ்க்கை


1. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 

   பண்பும் பயனும் அது.

அன்பும் அறமும் உடையதாக இல்வாழ்க்கை விளங்குமானால், அதுவே வாழ்க்கையின் பண்பும் பயனும் ஆகும். (நிரல்நிறை அணி) 

2. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் 

 முயல்வாருள் எல்லாம் தலை. 

அறத்தின் இயல்போடு இல்வாழ்க்கை வாழ்பவர், முயற்சிச் சிறப்புடையோரை விடமேம்பட்டவர் ஆவார். 

3. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் 

  தெய்வத்துள் வைக்கப் படும்.*

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவர், வானுலகத்தில் உள்ள தெய்வத்துக்கு இணையாக மதிக்கப்படுவார்.


11. செய்ந்நன்றி அறிதல் 


4. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

   வானகமும் ஆற்ற லரிது.* 

தான் ஓர் உதவியும் செய்யாதிருந்தும் தனக்கு உதவி செய்த ஒருவருக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடாகாது. 

5. காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்

 ஞாலத்தின் மாணப் பெரிது. 

உரிய காலத்தில் ஒருவர் செய்த உதவி அளவில் சிறியதாக இருந்தாலும், அது உலகத்தின் அளவைவிட மிகப் பெரியதாகும். 

6. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 

   நன்மை கடலிற் பெரிது. 

இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவர் நமக்குச் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலைவிடப் பெரிதாகும். 

7. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

  கொள்வர் பயன்தெரி வார். 

ஒருவர் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயன் தெரிந்தவர்கள், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர். 

8. நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது

  அன்றே மறப்பது நன்று.* 

ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதன்று; அவர் செய்த தீமையை அப்பொழுதே மறந்துவிடுவது நல்லது. 

9. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை 

   செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வாய்ப்பிருக்கும்; ஒருவர் செய்த உதவியை மறந்துவிட்டவர்க்கு உய்வே இல்லை.


18. வெஃகாமை


10. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்

   நடுவன்மை நாணு பவர்

நடுவுநிலைமையை விட்டுவிட நாணம் கொள்ளும் பண்பாளர்கள் பெரும்பயன் கிடைப்பினும், பிறர் பொருளைக் கவரும் பழியான செயல்களைச் செய்யார். 

11. இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற 

   புன்மைஇல் காட்சி யவர்

ஐம்புலன்களையும் வென்ற தெளிவுடையோர், தாம் வறியர் என்ற காரணத்தைக் காட்டிப் பிறர் பொருளை விரும்புதலைச் செய்ய மாட்டார். 

12. அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை 

    வேண்டும் பிறன்கைப் பொருள்.* 

ஒருவருடைய செல்வம் குறையாமலிருக்க வழி எது என்றால், அவர் பிறருடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.


26. புலால் மறுத்தல்

13. தினல்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்  விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்

உலகத்தார் புலால் தின்னும்பொருட்டு உயிர்களைக் கொல்பவர்கள் இல்லையாயின், வருவாயின் பொருட்டு ஊன் விற்பவர் யாரும் இருக்க மாட்டார்.


31. வெகுளாமை


14. செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக் 

   காக்கின்என் காவாக்கால் என்? 

தன் சினம் செல்லுபடியாகும் மெலியவரிடத்தில் கொள்ளாமல் காப்பவரே உண்மையில் சினம் காப்பவர்; செல்லுபடியாகாத வலியவரிடத்தில், காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன ?

15. மறத்தல் வெகுளியை யார்மாட்டும்; தீய 

   பிறத்தல் அதனான் வரும்.* 

தீமையான விளைவுகள் சினத்தாலேயே ஏற்படும் என்பதால் யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்துவிட வேண்டும்.

16. நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் 

    பகையும் உளவோ பிற? 

முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தைவிட நமக்கு வேறு பகை இல்லை.

17. தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால்

   தன்னையே கொல்லும் சினம்.* 

ஒருவர் தன்னைத்தான் காத்துக்கொள்ள விரும்பினால், சினம் வாராமல் காத்துக்கொள்ள வேண்டும்; காக்காவிட்டால், சினம் நம்மையே அழித்துவிடும்.

18. சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் 

   ஏமப் புணையைச் சுடும்.

சினம், தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பு. அஃது ஒருவரது சுற்றம் என்னும் பாதுகாப்புத் தெப்பத்தையும் சுட்டழிக்கும். (ஏகதேச உருவக அணி)


38. ஊழ்


19. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்

    உண்மை அறிவே மிகும்.* 

ஒருவர் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றிருந்தாலும், அவருக்கு இயல்பாக உள்ளதாகும் அறிவே மேலோங்கித் தோன்றும்.

20.  இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு

     தெள்ளியர் ஆதலும் வேறு

உலக இயல்பு இரு வேறு வகைப்படும்; செல்வம் உடையவர் அறிவுடையவராக இருப்பதில்லை; தெளிந்த அறிவுடையோர் செல்வமுடையவராக இருப்பதில்லை.


நூல்வெளி

திரு + குறள் = திருக்குறள். சிறந்த குறள் வெண்பாக்களால் ஆகிய நூல் ஆதலால் இப்பெயர் பெற்றது. இது பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று. குறள் - இரண்டடி வெண்பா, திரு - சிறப்பு அடைமொழி. திருக்குறள் என்பது அடையடுத்த கருவி ஆகுபெயர் ஆகும். குறள், உலகப்பொது மறை; அறவிலக்கியம்; தமிழர் திருமறை; மனித நாகரிகம் பிற நாடுகளில் தோன்றும் முன்னரே மனித வாழ்வின் மேன்மைகளையும் வாழ்வியல் நெறிகளையும் வகுத்துக் காட்டிய நூல். ஆங்கிலம், இலத்தீன், கிரேக்கம் முதலிய உலக மொழிகள் பலவற்றிலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி, பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில் என்னும் பழமொழிகள் இந்நூலின் பெருமையை விளக்குகின்றன. இவற்றுள் 'நால்' என்பது நாலடியாரையும் இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும்...

தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் 

பரிதி பரிமேலழகர் திருமலையார் 

மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர் நூற்கு 

எல்லையுரை செய்தார் இவர்.

என்று ஒரு பழம்பாடல் திருக்குறளுக்கு உரை எழுதியவர்களின் பட்டியலொன்றைத் தருகிறது. ஏட்டுச் சுவடியிலிருந்து திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு 1812.

"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து 

 வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" எனப் பாரதியாரும், 

"வள்ளுவனைப் பெற்றதால்

பெற்றதே புகழ் வையகமே" - எனப் பாரதிதாசனும் புகழ்ந்து பாடியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையினை, கன்னியாகுமரியில் நிறுவியுள்ளது. திருவள்ளுவரின் நினைவைப் போற்றும் வகையில் வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது.



Tags : Chapter 3 | 12th Tamil இயல் 3 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 3 : Sutrathar kanne Ula : Valviyal: Thirukkural Chapter 3 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள : வாழ்வியல்: திருக்குறள் - இயல் 3 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள