Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 3 | 12 ஆம் வகுப்பு தமிழ் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 12th Tamil : Chapter 3 : Sutrathar kanne Ula

   Posted On :  03.08.2022 07:37 pm

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள

கேள்விகள் மற்றும் பதில்கள்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள : கேள்விகள் மற்றும் பதில்கள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 3

சுற்றத்தார் கண்ணே உள

பண்பாடு


• உரைநடை - தமிழர் குடும்ப முறை - பக்தவத்சல பாரதி 

• செய்யுள் - விருந்தினர் இல்லம் - ஜலாலுத்தீன் ரூமி

செய்யுள் கம்பராமாயணம்  - கம்பர்

• துணைப்பாடம் - உரிமைத்தாகம் - பூமணி 

• இலக்கணம் - பொருள் மயக்கம் 

• வாழ்வியல் - திருக்குறள் - திருவள்ளுவர்இயல் 3

உரைநடை உலகம்

தமிழர் குடும்ப முறை

- பக்தவத்சல பாரதி


பாடநூல் வினாக்கள்


பலவுள் தெரிக 

1. சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன. அவை 

அ) அறவோர், துறவோர்

ஆ) திருமணமும் குடும்பமும் 

இ) மன்றங்களும் அவைகளும்

ஈ) நிதியமும் சுங்கமும்

[விடை : ஆ) திருமணமும் குடும்பமும்]


2. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க. 

அ) உரிமைத்தாகம் - 1. பாரசீகக் கவிஞர் 

ஆ) அஞ்ஞாடி - 2. பூமணி 

இ) ஜலாலுத்தீன் ரூமி - 3. பக்தவச்சல பாரதி 

ஈ) தமிழர் குடும்ப முறை - 4. சாகித்திய அகாதெமி 

அ) 2, 4, 3, 1 

ஆ) 3, 4, 1, 2 

இ) 2, 4, 1, 3 

ஈ) 2, 3, 4, 1 

[விடை: ஈ) 2, 3, 4, 1]


3. “எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு 

சக்தி பிறக்குது மூச்சினிலே” - என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது 

அ) தனிக்குடும்ப முறை

ஆ) விரிந்த குடும்ப முறை 

இ) தாய்வழிச் சமூக முறை

ஈ) தந்தைவழிச் சமூகமுறை 

[விடை : ஈ) தந்தைவழிச் சமூகமுறை]


குறுவினா


1. புக்கில், தன்மனை - சிறு குறிப்பு எழுதுக.

புக்கில் : 

• 'புக்கில்' என்பது தற்காலிகமாகத் தங்கும் இடத்தைக் குறிப்பதாகும். 

• "துகள் அறுகேள்வி உயர்ந்தோர் புக்கில்” என்ற புறநானூறு பாடல் (222 : 6) சான்றாகும். 

தன்மனை : 

திருமணத்திற்குப் பின் கணவனும், மனைவியும் பெற்றோர்களிடமிருந்து பிரிந்து தனியாக வாழும் இடம் ‘தன்மனை' என அழைக்கப்பட்டது. 


சிறுவினா


1. பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக்குடும்பம் - விளக்கம் எழுதுக.

தந்தையும் உடன் வாழ்ந்தனர் 

• சங்க காலத்தில் முதல் நிலை உறவை மட்டும் காணமுடிகிறது. 

• நற்றாய் ஒருபுறம் செவிலியும், மகளின் தோழியும் குடும்பத்தில் முதன்மைப் பெற்றனர். இம்முறை பண்டை இனக்குழு மரபின் மாறுபட்ட தொடர்ச்சி பண்டைய காலத்தில் காண முடிகிறது. 

• இல்லற வாழ்வின் இறுதிக் காலத்தில் மக்களோடு நிறைந்து. அறம் செய்து, சுற்றத்தாரோடு சேர்ந்து வாழ்தலே தலைவன் தலைவின் இல்லறப் பயன் ஆகும். 

• சங்கச் சமூகம் குடும்பம் என்ற அமைப்பை அடிப்படை அலகாகக் கொண்டு அதன் தொடர்ச்சியாக இன்றைய சமூகமும் கூட்டுக் குடும்பம், தனிக்குடும்பம் கொண்டதாக, தந்தைவழிக் குடும்ப அமைப்பைக் கொண்டதாகவும் அமைகிறது. 


2. தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்திற்குச் செய்யும் உதவிகள் யாவை? 

• காலையில் 4 மணிக்குப் படிக்க வேண்டிய தேவைகள் அனைத்தையும் செய்து முடித்துவிடுவேன். 

• அவர்களுக்கு நானே தேநீர் தயார் செய்து கொடுப்பேன். தாயுடன் சேர்ந்து உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபடுவேன். 

• தாய், தந்தை பணிக்கு ஆயத்தம் ஆவதற்குள் மூன்று பேருக்கும் உணவு எடுத்து வைப்பேன். 

• பள்ளிக்கு என் பெற்றோர் உதவியில்லாமல் நானே மிதிவண்டியில் செல்வேன். வீட்டிற்குத் திரும்பியவுடன் வீட்டைச் சுத்தம் செய்து, பெற்றோருக்குத் தேநீர் தயார் செய்து வைப்பேன். 

• பெற்றோர் வந்தவுடன் மறுநாளுக்குத் தேவையான பொருள்களை கடைக்குச் சென்று வாங்கி வருவேன். 

• பிறகு சிறிது நேரம் படித்து விட்டு இரவு உணவை உண்ட பிறகு 10.00 மணி வரை படிப்பேன்.


நெடுவினா 


1. குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது - எவ்வாறு? விளக்குக. 

குடும்பம் என்ற அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமே.

குடும்பம், திருமணம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து உள்ளது. நாணயத்தின் இருபக்கங்கள் போல குடும்பமும் திருமணமும் உள்ளது. திருமணம், குடும்பம் தொல்காப்பியத்திலோ சங்க இலக்கியத்திலோ இடம் பெறவில்லை; குடும்பம் என்ற சொல் திருக்குறளில் பயின்றுவருகிறது.

கட்டமைப்பு: 

• 'குடும்பு' எனும் சொல் கூடிவாழ்தல் என்று பொருள்படுகிறது. பண்டைத்தமிழர்கள் குடும்பம் என்ற அமைப்புடன் வாழ்ந்த இடங்கள் பல. அவற்றுள் சில: புக்கில், தன்மனை. 

• புக்கில் என்பது தற்காலிகத் தங்குமிடம் ஆகும். தன்மனை என்பது திருமணம் ஆன கணவன், மனைவி பெற்றோரை விட்டு வாழும் இடம் ஆகும். 

• மணந்தகம் என்பது மணம் புரிந்த கணவன் மனைவியும் சேர்ந்து வாழத் தொடங்கி முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலக்கட்டத்தைக் குறிப்பது ஆகும். 

• சங்க காலத்தில் பெரும்பான்மையான சமூகத்தில் தாயே தலைமை ஏற்றிருப்பாள். பெண் திருமணம் செய்த பின்னும் தன் வீட்டிலே வாழ்க்கை நடத்தும் முறை இருந்தது. பெண் குழந்தைகள் பேறு முதன்மைப்படுத்தப்பட்டது 

தந்தை வழிக் குடும்பம்:

• சங்க காலத்தில் தாய் வழிக் குடும்பம் போலவே தந்தை வழிக் குடும்பமும் வேரூன்றியது.

• பெண் திருமணம் ஆன பிறகு கணவனின் தந்தை வீட்டில் வாழ வேண்டும் என்பதை 'மனையுறை மகளிர்க்கு ஆடவர்' என்கிறது குறுந்தொகை. 

தனிக்குடும்பம்: 

• தனிக்குடும்பம் என்பது படிமலர்ச்சியில் இறுதியில் ஏற்பட்டது. இது இன்று தொழிற் சமூகத்தில் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது. 

• தனிக்குடும்பம், ஆதிக்குடிகளிடமும் இருந்தது என்று இனவரைவியல் ஆய்வுச் சுட்டுகிறது. 

விரிந்த சமூகம்: 

• சங்க காலத்தில் தனிக்குடும்ப அமைப்பு விரிவு பெற்று இவர்களோடு பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழும் விரிந்த குடும்பமாகக் காணமுடிகிறது. 

• கணவன், மனைவி, குழந்தைகள் சேர்ந்து பெற்றோர்கள் சேர்ந்து வாழும் நேர்வழி விரிந்த குடும்ப முறை காணமுடிகிறது. 

• இன்றைய மனித சமூக கட்டமைப்பில் தாய்வழிக் குடும்பம், தந்தைவழிக் குடும்பம் என்ற நிலையைக் கடந்து தனிக்குடும்பம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

சங்கச் சமூகம் குடும்பம் என்ற அமைப்பிலிருந்தே மனித சமூகம் கட்டமைக்கப்படுகிறது. அவற்றின் தொடர்ச்சியாகவே இன்றைய கூட்டுக்குடும்பம், தனிக்குடும்பம் என்ற அலகைக் கொண்டதாக அமைகிறது. அதுவும் தந்தைவழிக் குடும்ப அமைப்பைக் கொண்டதாக இருக்கிறது. தொன்மைமிக்க இக்குடும்ப அமைப்பு முறை தமிழ்ச் சமூகத்தின் அடையாளமும் பெருமிதமும் ஆகும். 

குடும்பமே சமூகத்தைக் கட்டமைக்கும் களம் : 

• குடும்பம் தனி மனிதருக்காகவும் சமுதாயத்திற்காகவும் பெரும் பங்காற்றுகிறது. மனித சமூகத்தின் அடிப்படைகளான அன்பு செலுத்துதல், பொருளாதாரப் பகிர்வு, பொழுதுபோக்கு, பாதுகாப்பு, சமயச்செயல்கள், கல்விபெறுதல் ஆகியவை குடும்பத்திலே கற்பிக்கப்படுகின்றன. 

• பண்பாட்டைக் குழந்தைப் பருவத்தில் குடும்பம் கற்றுக் கொடுக்கிறது. சமுதாயத்தின் நெறிமுறைகள் அன்றாட வாழ்வில் பின்பற்றப்பட வேண்டிய பழக்கவழக்கங்கள் பொருளாதாரச் செயல்களாகச் செய்யும் முறைகள், சமுதாய சமய வாழ்வில் ஆற்ற வேண்டிய கடமைகள் போன்ற எண்ணற்ற வகைகளில் குடும்பம் குழந்தைகளுக்குப் பயிற்சியளிப்பதால் மனித சமூகம் சிறப்பாகக் கட்டமைக்கப்படும்.

• பண்பாட்டு வயமாக்கல் நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் ஒரு மாதிரி குழுவாகச் செயல்படுகின்றனர். 

• குடும்பம் என்பது தனது உறுப்பினர்கள் என்ற நிலையில் குடும்ப உறுப்பினர்களுக்குப் பயிற்சிகளை வழங்கி அமைதியும் ஒழுங்கும் கொண்ட ஒரு சிறந்த சமுதாயம் அமைய அடிப்படையாக விளங்குவதால், குடும்பம் என்னும் சிறிய அமைப்பில் இருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்புக் கட்டமைக்கப்படுகிறது.


கற்பவை கற்றபின்


கூட்டுக்குடும்பம் - தனிக்குடும்பம் குறித்து உங்களது கருத்துகளைத் தொகுத்து உரை நிகழ்த்துக. 

இனிய வணக்கம். 

கூட்டுக்குடும்பத்தில் அன்பும் அரவணைப்பும் கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புண்டு. 

• கூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் உடன்பட்டுப் பேசுதல், ஒரு வேலையில் பலரும் ஈடுபடுதல் மகத்தான வெற்றி தரும். விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு வளரும். 

• தலைமை ஒருவரின் அறிவுரை எல்லாருக்கும் பொருந்துமாறு அமைந்து விருப்பு வெறுப்புகள் களையப்பட வாய்ப்புண்டு. தனிமை நம்மைவிட்டு அகலும். 

தனிக்குடும்பத்தில் செலவுகள் குறையும். 

• மனச்சுமையை இறக்கி வைக்க, தன் கருத்தை வெளியிட நேரம் இருக்காது. 

• பிள்ளைகள் பராமரிப்பிற்கு அதிகக் கவனம் செலுத்த நேரிடும். தனிமை ஏற்பட்டுவிடும். 

• அவசர நேரங்களில் உதவி செய்ய ஆள் இருக்கமாட்டார்கள். 

எனவே, கூட்டுக்குடும்பம் ஒரு குதூகலம். தனிக்குடும்பம் ஒரு மௌனம். நன்றி! வணக்கம்!


2. குடும்ப உறுப்பினர்களின் உறவுமுறைப் பெயர்களை அட்டவணைப்படுத்தி எழுதுக.


இயல் 3 

செய்யுள்

விருந்தினர் இல்லம்

- ஜலாலுத்தீன் ரூமி


பாடநூல் வினாக்கள்


பலவுள் தெரிக

1. இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது யாது? 

அ) வக்கிரம்

ஆ) அவமானம் 

இ) வஞ்சனை

ஈ) இவை அனைத்தும்

[ விடை : ஈ) இவை அனைத்தும் ]


குறுவினா  


1. எதிர்பாரத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்? 

• வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத நிகழ்வுகள் அனைத்தையும் ஆனந்தம், மனச்சோர்வு, அற்பத்தனம், விழிப்புணர்வு என்று உருவகப்படுத்துகிறார். இவைகளை நமது இல்லத்திற்கு வரும் எதிர்பாராத விருந்தாளிகளாக எண்ண வேண்டும். 

• எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்பாராத விருந்தாளிகளாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. 


சிறுவினா 


1.“வருபவர் எவராயினும் நன்றி செலுத்து” - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக. 

இடம் :

இக்கவிதை வரிகள் ஜலாலுத்தீன் ரூமி அவர்கள் எழுதிய கவிதையின் ஆங்கில மொழியாக்கத்தைத் தமிழில் ‘தாகங்கொண்ட மீளொன்று' என்ற தலைப்பில் கவிதைத் தொகுப்பாக வெளியிட்டுள்ளார் என். சத்தியமூர்த்தி. அத்தொகுப்பில் உள்ள 'விருந்தினர் இல்லம்' என்னும் கவிதையில் இடம்பெற்றுள்ளது. 

பொருள் :

வாழ்கின்ற இந்த வாழ்க்கையில் நம்மைத் தேடி வரும் நன்மையோ, தீமையோ எது வந்தாலும் அதற்காக நன்றி சொல்ல வேண்டும். 

விளக்கம் :

வாழ்க்கை என்பது எல்லாம் கலந்த கலவை. நம் வாழ்க்கை விருந்தினர் இல்லம் போன்றது. நமது வீட்டிற்கு வரும் விருந்தினர்களில் மகிழ்ச்சியுடனும் வருபவர்களும் இருப்பர். துக்கங்களைக் கொண்டு வருபவர்களும் இருப்பர். அதுபோன்றுதான் நம் வாழ்க்கையும். ஆனந்தம், மனச்சோர்வு, அற்பத்தனம், சிறிது விழிப்புணர்வு என பல வாழ்வியல் வடிவங்கள் நம்மைத் தினம் தினம் விருந்தினர்களைப் போலச் சந்திக்கலாம் அவற்றை எல்லாம் நாம் வரவேற்க வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு நிகழ்வும் நமக்குப் புதுப்புது அனுபவங்களைத் தரும். மகிழ்ச்சியால் மகிழ்ந்தாலும், துக்கத்தால் வெறுமையடைந்தாலும் துவண்டுவிடக் கூடாது. ஏனெனில் எல்லாமே நமக்கு அனுபவங்களைக் கற்றுத் தரும். எனவே, எது வந்தாலும் விருந்தினரை எதிர்கொண்டு வரவேற்பது போல வரவேற்று அனுபவங்களைக் கற்றுத்தரும் வாழ்வியல் வடிவங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும்.


கற்பவை கற்றபின்


தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகளில் உங்கள் மனம் கவர்நத சிலவற்றை வகுப்பறையில் படித்துக்காட்டுக.

லாங்ஸ்டன் ஹியூஸ் கவிதைகள் 

மௌனம்

உன் மௌனத்தின் அடுக்குகளிலிருந்த 

வார்த்தைகளைப்

பிடித்துக் கொள்கிறேன்

சொற்களின் ஒலிகள்

செவிகளை வந்தடைத்

தேவையில்லை

எல்லா மௌனங்களும்

உன் வார்த்தைகளையே

பேசிக் கொண்டிருக்கின்றன.

கனவுகள்

கனவுகளைச் சட்டெனப் பற்றிக் கொள்

கனவுகள் இறந்துவிடலாம் 

வாழ்வென்பது பறக்கவியலாத 

இறக்கை உடைந்த ஒரு பறவையைப் போன்றது 

கனவுகளைச் சட்டெனப் பற்றிக் கொள் 

கனவுகள் தொலைந்து போகலாம் 

வாழ்வென்பது வறண்டுபோன வயல் அதில் 

பனி கெட்டியாக உறைந்து கிடக்கிறது. 

எனது மக்கள்

இரவு அழகானது 

எனது மக்களின் முகங்களைப் போலவே...... 

விண்மீன்கள் அழகானவை 

எனது மக்களின் கண்களைப் போலவே..... 

சூரியனும் அழகானதுதான் 

எனது மக்களின் ஒளிரும் ஆன்மாவைப் போலவே.....


இயல் 3

செய்யுள்

கம்பராமாயணம்

- கம்பர்


பாடநூல் வினாக்கள்


பலவுள் தெரிக

1. உவா உற வந்து கூடும் 

உடுபதி, இரவி ஒத்தார்’ - யார் யார் ? 

அ) சடாயு, இராமன்

ஆ) இராமன், குகன் 

இ) இராமன், சுக்ரீவன்

ஈ) இராமன், சவரி

[ விடை : இ) இராமன், சுக்ரீவன் ]


குறுவினா 


1.  நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து யாது?

• நிலையாமை என்பது உலக வாழ்வு நிலை இல்லாதது என்பதைக் குறிக்கும். 

• “என் பொய்யான உலகப்பற்று அழிந்தது; என் பிறவி ஒழிந்தது” என்று சவரி நிலையாமை குறித்துக் கூறுகிறாள். 


2. “துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது” என்ற இராமனின் கூற்று பின்வரும் இரு பழமொழிகளில் எதற்குப் பொருந்தும்? 

அ) நிழலின் அருமை வெயிலில் தெரியும். 

ஆ) சிறு துரும்பும் பல்குத்த உதவும்.

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்ற பழமொழிக்கு இப்பாடலடிகள் பொருந்தும். 

விளக்கம்: 

குகனின் வருத்தத்தை உணர்ந்த இராமன் கூறியது. துன்பம் என்று ஒன்று இருந்தால் இன்பம் என்பது புலப்படும் - என்பதே பொருத்தம். 


குறுவினா


1. குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுக. 

குகன் :

இராமன் காட்டிற்குச் சென்று துன்புறுவான் என்று குகன் வருந்துவான் என்பதை உணர்ந்த இராமன், “குகனே! துன்பம் இருந்தால் தான் இன்பம் வரும். நம்மிடையே பிரிவு இப்போது ஏற்படுகிறது.  இதுவரை நாங்கள் நால்வர். இப்போது உன்னையும் சேர்த்து ஐவர்” என்று குறிப்பிடுகிறார். (அன்புள இனி நாம் ஓர் ஐவர் ஆனோம்)

சுக்ரீவன் : 

• சுக்ரீவன் இராமன் மீது கொண்ட அளவற்ற அன்பினால் சீதையைத் தேடி இலங்கை சென்றான். 

• இராவணனைக் கொன்று வருவதாகக் கூறி சென்றவன் அவன் மணிமுடியை மட்டும் கொண்டு வந்தான்.

• இராமன் மீது அவன் கொண்டிருந்த அளவற்ற அன்பைக் கண்ட இராமன் நீ, என் இனிய உயிர் நண்பன் என்று கூறி, நான்கு பேராக இருந்த நாங்கள் குகனுடன் சேர்த்து ஐந்து பேராகும். 

• உன்னையும் இணைத்து ஆறுபேர் ஆனோம் என்றான். 

வீடணன்

• சீதையைக் கவர்ந்து வந்த செயல் தவறு என்று கூறியதற்காக இராவணனை வீடணன் கடிந்தான். 

• இலங்கை விட்டு வந்த வீடணன் இராமனிடம் அடைக்கலம் வேண்டினான். 

• இராமன் அவனை உடன்பிறந்தவனாக ஏற்று இலங்கை அரசனை அவனுக்கு உரிமையாக்கினான். 

• குகனுடன் ஐவர், சூரியனின் மகன் சுக்கிரீவன் உடன் ஆறுபேர் உன்னையும் சேர்த்து எழுவர் ஆனோம்.


2. சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமையை எழுதுக. 

இராமன் ஆற்றிய கடமைகள் : 

• இராவணன் சீதையைச் சிறையெடுத்த போது தடுத்துச் சண்டையிட்டுக் காயப்பட்டவன் சடாயு. 

• அவன் இராவணனோடு சண்டையிட்டுத் தன் உயிரை இழந்ததை அறிந்த இராமன் தன் தந்தையாகவே சடாயுவைக் கருதினான். 

• ஒரு தந்தைக்கு மகன் எவ்வாறு இறுதிச் சடங்குகளைச் செய்வானோ அதைப் போன்று இராமன் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டான். 

• பார்ப்பவர்கள் வியக்கும்படியான கரிய அகில் கட்டைகளையும் சந்தனக் கட்டைகளையம் இராமன் கொண்டு வந்தான். 

• தேவையான தருப்பைப் புற்களை ஒழுங்குபட அடுக்கினான். பூக்களையும் தூவினான். மணலினால் திருத்தமான மேடை அமைத்து, நன்னீரும் கொண்டு வந்தான்.  

• இறுதிச்சடங்கு செய்யப்படக்கூடிய மேடைக்குத் தன் தந்தையாகக் கருதிய சடாயுவைத் தன் பெரிய கைகளினால் தூக்கிக் கொண்டு வந்தான்.


நெடுவினா


1. பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக

குகனுடன் கொண்ட உறவுநிலை : 

• தன்மீது அளவற்ற அன்பு கொண்ட குகன் தன்னைப் பிரிய விருப்பமின்மை என்பதை உணர்ந்து ‘என் உயிர் அணையாய்' என்றான். “நீ என் உயிர் போன்றவன்' என்று கூறியது மட்டுமல்லாது, நீ சொல்லும் வேலைகளைச் செய்யும் பணியாளனாய் இருக்கின்றேன். 

• குகனின் அன்பால் தன்னை அவனுடைய பணியாளாய்' கருதும் உரிமையை இராமன் குகனுக்குக் கொடுத்திருந்தான். சகோதரனாக ஏற்றுக் கொள்கிறான் இராமன். 

சடாயுடன் கொண்ட உறவு நிலை : 

• தனது மனைவிசீதையை இராவணன் சிறையெடுத்தபோது தடுத்து, சண்டையிட்டுக் காயப்பட்டு இறந்தான் சடாயு என்பதை அறிந்து அவனது உயிர்த்தியாகத்தின் உத்தமத்தை உணர்கிறான். 

• தனக்காக உயிரைவிட்ட சடாயுவின் உடலை இறுதிச் சடங்கிற்குத் தயார்படுத்தும்போது, தந்தைக்கு மகன் ஆற்றும் கடமையாகக் கருதுகிறான். சடாயுவின் தியாகத்தால் ‘மகனாய்' கருதும் உரிமையை இராமன் சடாயுவுக்குக் கொடுத்தான்.

சவரியுடன் கொண்ட உறவு நிலை : 

• தன்னைக் கண்ட பிறகுதான் பிறவி ஒழிப்பேன் என்று தவம் இருந்த சவரியிடம் பரிவு காட்டி பேசினான் இராமன். 

• இராமனைக் கண்டதால்தான் பிறந்ததின் பயனை அடைந்ததாக உணர்ந்த சவரி, இராமன், இலக்குவனுக்கு விருந்து அளித்து மகிழ்ந்தான். தனது அன்புக்குரியவராக விளங்கிய சவரியிடம் தாயிடம் காட்டும் அன்பைக் காட்டினான் இராமன். 

சுக்ரீவனிடம் கொண்ட உறவு நிலை : 

• தனக்காக இலங்கை சென்று கடும்போர் புரிந்து இராவணனின் மணிமகுடத்தை எடுத்து வந்த சுக்ரீவனை நினைத்துப் பெருமைப்பட்டான் இராமன். 

• நீ வேறு நான் வேறு அல்ல; உன் பகைவர் என் பகைவர், உன் உறவினர், என் உறவினர்; என் உறவினர் உன் உறவினர், “நீ என் இனிய உயிர் நண்பன்' என்று கூறினான் இராமன். 

• சுக்ரீவனைத் தன் உயிர்நண்பனாகக் கருதும் உரிமையைக் கொடுத்தான் இராமன், மேலும் அவனைச் சகோதரனாக ஏற்றுக் கொள்கிறான் இராமன். 

வீடணனிடம் கொண்ட உறவு நிலை : 

• தன் மனைவியைக் கவர்ந்து சென்ற இராவணனின் செயலைக் கண்டிக்கும் இராவணின் தம்பியாகிய வீடணின் இராமன் மிகுந்த அன்பு கொள்கிறான். 

• தன்னிடம் அடைக்கலம் அடையும் வீடணனை உடன்பிறந்தவனாக ஏற்றுக் கொள்கின்றான். 

• தன்னை நம்பி வந்த வீடணனுக்கு இலங்கையைக் கொடுக்கின்றான்.

• இலங்கையை வழங்குவதால் தன்னை நம்பும் யாவரும் நலம் பெறவேண்டும் என்று நினைக்கும் உரிமையைக் கொடுக்கின்றான் இராமன்.

இவ்வாறாக, இராமபிரான் பணியாளனாய், சகோதரனாய், தந்தைக்கு உற்ற மகனாய், தாய்க்கு உற்ற மகனாய், நண்பனாய், உரிமையை வழங்கும் சகோதரனாய்ப் பிற உயிர்களுடன் பல உறவு நிலைகளைக் கொண்டு இராமன் பண்பின் படிமமாக விளங்குகிறார்.


கற்பவை கற்றபின்


உங்கள் மனம் கவர்ந்த கம்பராமாயணப் பாத்திரம் எது? ஏன்? வகுப்பறையில் உரையாடுக.

என் மனங்கவர்ந்த கம்பராமாயணப் பாத்திரம் அனுமன். 

• அனுமன் அஞ்சனனையின் மைந்தன், காற்றின் மைந்தன், சொல்லின் செல்வன், இராமனின் தூதன் என்றெல்லாம் புகழப்படுபவன். 

• பஞ்சவடியில் இராமனும் சீதையும் பிரிகின்றனர். பல இடங்களிலும் சீதையைத் தேடி இராம இலக்குவர் அலைகின்றனர். இடையே அனுமன், சடாயு, சுக்ரீவன், சவரி போன்ற உறவுகள் கிடைக்கின்றன. 

• எனினும், கடல் தாண்டி இலங்கை சென்று, சீதாபிராட்டியை அடையாளம் கண்டு, சூளாமணியோடு அனுமன் இராமனிடம் திரும்புகிறான். வந்தவுடன் அனுமன் இராமனை வணங்கவில்லை . சீதை இருக்கும் தென்திசை நோக்கி வணங்கினான். இராமனும் சீதை நலமுடன் இருக்கிறான் என்பதை அனுமனின் செயலால் உணர்ந்தான். அனுமனின் நற்சொல்லுக்காகக் காத்திருக்கும் இராமனிடம், 

'கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால் 

தெண்டிரை அலைகடல் இலங்கைத் தென்னகர்' 

என்று கூறிச் சாந்தப்படுத்துகிறான்.

மேலும்,

'விறபெருந் கடந்தோள்வீர! வீங்கு இலங்கை வெற்பில் 

நற்பெரும் தவத்தாளாய நங்கையைக் கண்டேன் அல்லேன் 

இற்பிறப்பதென்பதொன்றும் இரும்பொறையென்ப தொன்றும் 

கற்பெனும் பெயரதொன்றும் களிநடம் புரியக்கண்டேன்.' 

என்ற அனுமனின் இந்த பதில்களே இராம அவதாரத்தில் இராமனுக்கு மகிழ்வும் அமைதியும் தந்ததாகக் கொள்ளப்படுகிறது. 

எனவேதான் இராமனுக்குப் பிடித்த அனுமனை எவர்க்கும் பிடிக்கும்.


இயல் 3

துணைப்பாடம்

உரிமைத்தாகம்

- பூமணி


பாடநூல் வினாக்கள்


நெடுவினா  


1. 'உரிமைத்தாகம்' கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால் ........... கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க.

கதைமாந்தர்கள்: முத்தையா, வெள்ளைச்சாமி, பங்காருசாமி, முத்தையா மனைவி மூக்கம்மாள்.

முன்னுரை :

ஆசிரியர் பூமணி எழுதிய உரிமைத்தாகம் என்னும் சிறுகதையில் அண்ணன், தம்பியின் மன விரிசலால், தம்பி படும் துன்பத்தை எழுத்தோவியமாக்கித் தந்திருக்கிறார். அண்ணன் முத்தையன், தம்பி வெள்ளைச்சாமி.

தம்பி வெள்ளைச்சாமி கடன் வாங்குதல் :

வெள்ளைச்சாமி தன் திருமணத்திற்குப் பிறகு அண்ணனைவிட்டுப் பிரிந்து விடுகிறான். இந்நிலையில் ரூ.200 நிலத்தின் மீது பங்காருசாமியிடம் கடனாகவாங்குகிறான். இது முத்தையனுக்குத் தெரியாது. ஆனால், முத்தையனின் மனைவி இதைத் தெரிந்து கொண்டு முத்தையனிடம் கூறுகிறான். வெள்ளைச்சாமியால் கடனை அடைக்க முடியவில்லை. இதற்கிடையே முத்தையனின் மனைவி தன் நகைகளை அடகு வைத்துக் கடனை அடைக்கச் சொல்கிறாள். 

முத்தையன் பங்காரு வீட்டிற்குச் செல்லுதல் :

முத்தையன் ரூ.200-யை எடுத்துக் கொண்டு பங்காருசாமி வீட்டுக்குச் செல்கிறான். அண்ணன் தம்பிக்காக வந்திருப்பதை அறிந்த பங்காரு ரூ.400 தந்தால் எழுதிக் கொடுத்த பத்திரத்தைத் தருவதாகக் கூறுகிறார். வீடு திரும்பிய முத்தையன் தம்பியோடு சென்று நிலத்தை உழுகிறான். செய்தியறிந்த பங்காரு முத்தையன் மற்றும் வெள்ளைச்சாமியுடன் சண்டை புரிகிறார். கடைசியில் நீதிமன்றத்திற்குப் போவேன் என்று மிரட்டுகிறார் பங்காரு. அதை ஏற்காத அண்ணன் தம்பிகள் பங்காருவை விரட்டுகிறார்கள். அவரும் பயந்து ஓடிவிடுகிறார். இது கதையின் முடிவு. 

அண்ணன் தம்பி இணையாதிருந்தால்.... 

பங்காருசாமி நீதிமன்றத்திற்குச் சென்றார். வழக்கறிஞர் ஒருவரைப் பார்த்து வெள்ளைச்சாமி மீது வழக்குத் தொடுத்தார். இந்தச் செய்தியை வெள்ளைச்சாமி யாரிடமும் சொல்லவில்லை. நீதிமன்றத்திற்கு இரண்டுமுறை சென்று வந்தான். ஒரு நாள் பங்காருசாமியைப் பார்த்து என் நிலத்தைத் திருப்பிக் கொடுங்கள். விவசாயம் செய்து கடனை அடைக்கிறேன் என்கிறான். பங்காருசாமி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. மனம் உடைந்த வெள்ளைச்சாமி வீட்டின் வாயில் படியிலேயே விஷம் சாப்பிட்டு மயக்க மடைகிறான்.

மருத்துவமனையில் வெள்ளைச்சாமி :

வெள்ளைச்சாமியை பங்காருசாமியே மருத்துவமனையில் சேர்க்கிறார். சிகிச்சை பெறுகிறான் வெள்ளைச்சாமி, செய்தியறிந்த முத்தையன் மருத்துவமனை சென்று விபரம் அறிகிறான். முத்தையன் தன் தம்பிக்காக, பணம் கேட்டு பங்காரு மிரட்டியதால்தான் விஷம் குடித்தான் என்று காவல் துறையில் புகார் கொடுக்கச் சென்றான் பங்காருசாமி முத்தையனை வழிமறித்து அடமானப் பத்திரத்தைத் திருப்பிக் கொடுப்பதாகவும் வாங்கிய 200 ரூபாயைக் கொடுத்தாலே போதும் என்று வேண்டுகிறார். ஒப்புக்கொண்ட முத்தையன் புகார் கொடுப்பதைத் தவிர்த்து தம்பி வெள்ளைச்சாமியோடு வீடு திரும்பினான்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!


கற்பவை கற்றபின்


1. ‘நமது நிலமே நமது அடையாளம்’ - இக்கூற்றை விவாதிக்க.

நம்மை யார் என்று கேட்பவருக்குப் பெயரைச் சொன்னவுடன் உன் ஊர் எது என்று கேட்பார்கள்: காரணம் என்னவென்றால், எந்த ஊர் என்றால் எந்தவிதமான (மண்ணில்) நிலத்தில் வாழ்ந்தவன், அவனது பண்புகள் என்னவாக இருக்கும் என்று கூறிவிடலாம். இது அனுபவத்தால் மட்டுமே முடியும்.

ஒவ்வொரு நிலத்தில் வாழும் மண்ணிற்குத் தகுந்தாற்போல்தான் வாழ்பவரின் குணம் ஒத்திருக்கும். சங்க காலத்திலேயும் திணைக்குத் தகுந்தாற்போல பண்புகள் பெற்றிருப்பதை அறிய முடிகிறது. மண்ணின் அடிப்படையில்தான் மனங்கள் இருப்பதுண்டு.

நமது நிலமே, நமது அடையாளம் - என்பது நமது பரம்பரையின் அடையாளமாகவே கொள்ளலாம். 


2. வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உறவினர்களின் பங்கு முக்கியமானது என்பதைக் குறித்துப் பேசுக. 

அனைவருக்கும் வணக்கம்!

உலகில் மக்கள் பெருக்கம் அதிகமாகிவிட்டது. ஆனால், உறவுகள் சுருங்கிவிட்டது. வேலைப் பளுவின் காரணமாக நாள்தோறும் உழைப்பில் மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது. உண்ணும் உணவில் கூட சிரத்தை எடுத்துக் கொள்வது கிடையாது.

பிள்ளைகளின் படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்ள நேரமில்லை. உடலைப்பற்றிய சிந்தனை இல்லாமல் இருக்கிறோம். எல்லாம் அவசரக் கோலங்கள். இந்நிலையில் எங்கள் வீட்டில் என் பெண்ணின் காதணி விழா. முதன் முதலில் எங்கள் வீட்டில் ஒரு விழா.

அவ்விழாவிற்கு எனக்கு ஒன்றுவிட்ட மாமா மகள் வந்திருந்தாள். ஏழ்மையான தோற்றம். ஏண்டா வந்தாள் என்று நினைத்தேன். ஆனால் காதணி விழாவின் அடுத்த அடுத்த நிகழ்வுகள், பந்தி பரிமாறுதல், உறவினர்களை நலம் விசாரித்தல் போன்ற எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்தாள். என் உடன்பிறப்புகள் எல்லாம் வேடிக்கைப் பார்க்க, தனி ஒருவராக என் வீட்டு விழாவை நன்முறையில் நடத்திக் கொடுத்த உறவின் முக்கியத்தை என்றும் மறவேன். உறவுகள் அது நமது சிறகுகள்.


இயல் 3

இலக்கணம்

பொருள் மயக்கம்


இலக்கணத் தேர்ச்சி கொள்

1. பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களுள் பொருந்துவதைத் தேர்க.

அ) தேவையான இடங்களில் இடைவெளி விடாமல் எழுதுதல் 

ஆ) தேவையற்ற இடங்களில் இடைவெளி விட்டு எழுதுதல் 

இ) நிறுத்தற்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்

 ஈ) வல்லின மெய்களைத் தேவையான இடங்களில் இடாமல் எழுதுதல்

[விடை: இ) நிறுத்தற்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்] 


2. வல்லினம் மிகும், மிகாத் தொடர்களின் பொருளறிந்து பொருத்துக. 

அ) பாலை பாடினான்   - 1. தேரை என்னும் உயிரினத்தைப் பார்த்தான் 

ஆ) பாலைப் பாடினான் - 2. தேரினைப் பார்த்தான் 

இ) தேரை பார்த்தான்   - 3. பாலினைப் பாடினான் 

ஈ) தேரைப் பார்த்தான் - 4. பாலைத் திணை பாடினான் 

அ) 4, 1, 3, 2 

ஆ) 2, 3, 1, 4 

இ) 4, 3, 1, 2 

ஈ) 2, 4, 1, 3 

[விடை: இ) 4, 3, 1, 2 ]


3. வேறொரு பொருள் அமையுமாறு சொற்களைச் சேர்த்துத் தொடரமைக்க

மாணவர்கள் வரிசையில் நின்று அறிவியல் கண்காட்சியைக் கண்டனர். 

அறிவியல் மாணவர்கள் வரிசையில் நின்று கண்காட்சியைக் கண்டனர். 


4. கீழ்க்காணும் சொல்லுருபுகளைப் பிரித்தும் சேர்த்தும் இருவேறு தொடர்களை அமைக்க. 

(எ.கா)

முன்

அவன் முன்வந்து கூறினான். 

அவன்முன் வந்து கூறினான்.

தானே

அவன்தானே செய்தான். 

அவன் தானே செய்தான்.

கொண்டு 

கத்திக் கொண்டு வந்தான். 

கத்திக்கொண்டு வந்தான்.

விட்டான்

அண்ணன் அடித்து விட்டான் . 

அண்ணன் அடித்துவிட்டான். 


5. காற்புள்ளி இடாமல் எழுதுவதானல் ஏற்படும் பொருள் மயக்கத்திற்குச் சான்று தருக. 

எழுதும்போது காற்புள்ளியிடாமல் எழுதினாலோ இடம்மாற்றிக் காற்புள்ளி இட்டாலோ, தொடரில் உள்ள சொற்கள், அத்தொடருக்குரிய முழுமையான பொருளைத் தராமல் வேறு பொருளைத் தரும். 

சான்று: அவன், அக்கா வீட்டிற்குச் சென்றான், அவள் அக்காள், வீட்டிற்குச் சென்றான்.


6. சல சல, வந்து வந்து, கல கல, விம்மி விம்மி, இவற்றில் இரட்டைக்கிளவித் தொடர்களை எழுதி, அவற்றை எழுதும் முறையைக் கூறுக. 

இரட்டைக்கிளவித் தொடர்கள் - சலசல, கலகல. 

இரட்டைக்கிளவிச் சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும். 

• நீர் சல சலவென ஓடியது (தவறு) 

• நீர் சலசலவென ஓடியது (சரி) 

• கல கலவென சிர்த்தாள். (தவறு) 

• கலகலவெனச் சிரித்தாள். (சரி)  


7. திருவளர்ச்செல்வன், திருவளர் செல்வன் - இவற்றில் சரியான தொடர் எது? அதற்கான இலக்கண விதி யாது? 

• 'திருவளர் செல்வன்' என்பதே சரியான தொடராகும். 

• திருவளர் செல்வன் என்பது வினைத்தொகை. 

• வினைத் தொகைக்கு சொல்லுக்கிடையில் வல்லினம் மிகக்கூடாது என்ற இலக்கண விதியின் படி திருவளர்செல்வன் என்பதே சரியான தொடராகும்.


கற்பவை கற்றபின்


தொடர்களைப் பொருள் மயக்கமின்றி எழுத வழிகாட்டும் உரைநடை நெறிகளைப் பின்பற்றி ஐந்து தொடர்களை எழுதுக.

• பணி முடிந்து நேற்று மாலை வீடு திரும்பினேன். 

• நேற்று நான் வைகையில் குளித்தேன். 

• மாநில அளவில் தமிழ்நாடு கல்வியில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

• ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது மாணவர்கள் பேசுவதைத் தவிர்த்தல் வேண்டும். 

• என் அம்மாவின் சமையல் என்றுமே சுவையாய் இருக்கும்.


நம்மை அளப்போம்


பலவுள் தெரிக.

1. சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன. அவை 

அ) அறவோர், துறவோர்

ஆ) திருமணமும் குடும்பமும் 

இ) மன்றங்களும் அவைகளும்

ஈ) நிதியமும் சுங்கமும்  


2. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க. 

அ) உரிமைத்தாகம் - 1. பாரசீகக் கவிஞர் 

ஆ) அஞ்ஞாடி - 2. பூமணி 

இ) ஜலாலுத்தீன் ரூமி - 3. பக்தவச்சல பாரதி 

ஈ) தமிழர் குடும்ப முறை - 4. சாகித்திய அகாதெமி 

அ) 2, 4, 3, 1 

ஆ) 3, 4, 1, 2 

இ) 2, 4, 1, 3 

ஈ) 2, 3, 4, 1


4. "உவா உற வந்து கூடும் உடுபதி, இரவி ஒத்தார்" - யார் யார்?

அ) சடாயு, இராமன் 

ஆ) இராமன், குகன் 

இ) இராமன், சுக்ரீவன் 

ஈ) இராமன், சவரி  


5. “எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு 

சக்தி பிறக்குது மூச்சினிலே” - என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது 

அ) தனிக்குடும்ப முறை

ஆ) விரிந்த குடும்ப முறை 

இ) தாய்வழிச் சமூக முறை

ஈ) தந்தைவழிச் சமூகமுறை


குறுவினா


1. புக்கில், தன்மனை - சிறு குறிப்பு எழுதுக. 

2. நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து யாது? 

3. எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்? 

4. 'துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது' என்ற இராமனின் கூற்று பின்வரும் இரு பழமொழிகளில் எதற்குப் பொருந்தும்?

அ. நிழலின் அருமை வெயிலில் தெரியும் 

ஆ. சிறு துரும்பும் பல்குத்த உதவும் 

5. சங்ககாலத்தில் தாய்வழிச் சமூகமுறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை?


சிறுவினா


1. பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் - விளக்கம் எழுதுக. 

2. குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுக. 

3. "வருபவர் எவராயினும்

நன்றி செலுத்து" - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக. 

4. தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்துக்குச் செய்யும் உதவிகள் யாவை? 

5. சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமையை எழுதுக.


குறுவினா 


1. குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது - எவ்வாறு? விளக்குக. 

2. பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக. 

3. 'உரிமைத்தாகம்' கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால் ..... கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க.


மொழியை ஆள்வோம்


சான்றோர் சித்திரம்


வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் பேராசிரியர். பாடத்தில் மனம் ஒட்டாது கவனமின்றி இருந்த மாணவர் ஒருவரிடம், "நமது சொற்பொழிவைப் பொருட்படுத்த விரும்பாத நீ இங்கிருந்து எழுவாய், நீ இங்கிருப்பதால் உனக்கோ பிறர்க்கோ பயனிலை, இங்கிருந்து உன்னால் செயப்படுபொருள் இல்லை, ஆதலால் வகுப்பில் இருந்து வெளியேறுக" என நயம்பட உரைத்து வெளியேற்றினார். அவர்தான் 'திராவிட சாஸ்திரி' என்று சி.வை. தாமோதரனாரால் போற்றப்பட்ட பரிதிமாற் கலைஞர். அவர் தந்தையாரிடம் வடமொழியையும் மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழும் பயின்றார்; எப்.ஏ (F.A - First Examination in Arts) தேர்வில் பரிதிமாற் கலைஞர் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று பாஸ்கர சேதுபதி மன்னரிடம் (1870 – 1903) உதவித்தொகை பெற்றார். 

சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ பயின்று, தமிழிலும் வேதாந்த தத்துவ சாத்திரத்திலும் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றார். 1893ஆம் ஆண்டு சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் உதவித் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, பின்பு தலைமைத் தமிழாசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.

ரூபாவதி, கலாவதி ஆகிய நாடக நூல்களையும் களவழி நாற்பது நூலைத் தழுவி மான விஜயம் என்னும் நூலையும் இயற்றியுள்ளார். ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாகக்கொண்டு நாடகவியல் என்னும் நாடக இலக்கண நூலையும் இயற்றினார். இவரது தனிப்பாசுரத் தொகை என்னும் நூல் ஜி.யு.போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. மு.சி.பூர்ணலிங்கனாருடன் இணைந்து இவர் நடத்திய ஞானபோதினி அக்காலத்தில் குறிப்பிடத்தகுந்த அறிவியல் இதழாகத் திகழ்ந்தது. தமிழை உயர்தனிச் செம்மொழி என்று தன் பேச்சின்மூலம் முதன்முதலில் மெய்ப்பித்தவர் இவரே. பின்னாளில் 2004ஆம் ஆண்டு நடுவண் அரசு தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது. பெற்றோர் தனக்கு இட்ட பெயரான சூரியநாராயண சாஸ்திரி என்ற வடமொழிப் பெயரைத் தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று பெயர்மாற்றம் செய்து கொண்டார். தமிழ், தமிழர் முன்னேற்றம் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றுவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்த இவர் தம் 33ஆவது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

தமிழைச் செம்மொழியென்று நிறுவி, அவர் எழுதிய கட்டுரையின் கீழ்வரும் சில வரிகள் அவருடைய உரைநடை ஆற்றலைத் தெரிவிக்கும். 

உயர்தனிச் செம்மொழி' என்னும் கட்டுரையிலிருந்து

"பலமொழிகட்குத் தலைமையும், மிக்க மேதமையும் உடைய மொழி, உயர்மொழி, தனித்து இயங்க வல்ல ஆற்றல் சார்ந்தது தனிமொழி. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி செம்மொழி. ஆயின் தமிழ் உயர் தனிச் செம்மொழியாம்.”

வினாக்கள்: 

1. சி.வை. தாமோதரனார் பரிதிமாற்கலைஞரை எவ்வாறு போற்றினார்? 

2. பரிதிமாற்கலைஞர் எழுதிய நாடக நூல்கள் யாவை? 

3. கீழ்வரும் சொல்லின் இலக்கணத்தையும், புணர்ச்சி விதியினையும் எழுதுக. 

4. பரிதிமாற்கலைஞர் தமிழுக்குத் தந்திட்ட பெருமைமிகு வரிகளுள் ஒன்றினை எழுதுக. 

5. சூரிய நாராயணர் - இதன் தமிழாக்கம் என்ன? 


விடைகள்: 

1. திராவிட சாஸ்திரி. 

2. ரூபாவதி, கலாவதி. 

3. செம்மொழி - பண்புத்தொகை

செம்மொழி - செம்மை + மொழி

ஈறுபோதல் - செம் + மொழி = செம்மொழி 

4. திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூய்மொழி செம்மொழி. 

5. பரிதிமாற்கலைஞர்.


தமிழாக்கம் தருக.

In terms of human development objectives, education is an end in itself, not just a means to an end. Education is a basic human right. It is also the key which opens many economic, social and political doors for people. It increases access to income and employment opportunities. While economists generally analyse the importance of education largely as a means for better opportunities in life-and that is the main theme of this chapter-let it be clearly stated that educating people is a worthy goal in itself, irrespective of the economic rates of return.

In terms of human development objectives, education is an end in itself, not just a means to an end. Education is a basic human right. It is also the key which opens many economic, social and political doors for people. It increases access to income and employment opportunities. While economists generally analyse the importance of education largely as a means for better opportunities in life. Educating people is a worthy goal in itself, irrespective of the economic rates of return.

கல்வி என்பது மனித வளர்ச்சி அடிப்படையில் ஒன்று. அதுவே இறுதியானது. ஆயினும் அது முடிவானது அன்று. கல்வி என்பது மனிதனுடைய அடிப்படை உரிமை. இது மக்களின் பொருளாதாரம் சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த துறைகளினுடைய கதவுகளைத் திறக்க உதவும் திறவுகோல். இது வேலைவாய்ப்புகளையும், வருமானத்தையும் உயர்த்துகிறது. மனிதனுடைய வாழ்கையில் நல்ல வாய்ப்புகளைப் பற்றி பொருளாதார வல்லுநர்கள் விரிவாக ஆய்ந்துள்ளனர். மக்களுக்கு கல்வியறிவு வழங்குவது சிறந்த குறிக்கோளாகும். அது எந்த விதமான பொருள் மதிப்பையும் திருப்பி அளிக்காது. 


இலக்கிய நயம் பாராட்டுக

பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளி 

பிறமொழிக்கு சிறப்பளித்த பிழையை நீக்க 

ஊற்றெடுத்தே அன்புரையால் உலுங்க வைத்திவ் 

உலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டோ? 

கற்றுணர்ந்தே அதன் இனிமை காண்பாய் என்று 

கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித் 

தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்து விட்ட 

தெய்வக்கவி பாரதி ஓர் ஆசான் திண்ணம்.

- நாமக்கல் கவிஞர்

திரண்ட கருத்து:

தாய்மொழியாகிய தமிழைப் பின்னுக்குத் தள்ளி பிறமொழிக்கு நாம் செய்யும் சிறப்பை நீக்குவோம். தமிழக்கு நிகர் உலகில் எம்மொழியும் இல்லை. அம்மொழியைக் கற்று இனிமைக் காண்போம் என்று கம்பன், வள்ளுவன் போன்றோர் சுட்டி காட்டிய சிறப்பினை உடையதாக தமிழ்மொழி விளங்குகிறது. 

தொடை நயம்:

தொடையற்ற பாக்கள் 

நடையற்று போகும்

என்பதற்கேற்ப இப்பாடலில் தொடை நயங்கள் மோனை, எதுகை, இயைபு, அளபெடை, முரண் அமைந்துள்ளது. 

மோனை : 

குயவனுக்குப் பானை 

செய்யுளுக்கு மோனை

முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை. 

சான்று: 

பெற்றெடுத்த பிறமொழி

ற்றுணர்ந்த ம்பனோடு

தெற்றென தெய்வக்கவி 

எதுகை : 

மதுரைக்கு வைகை 

செய்யுளுக்கு எதுகை

முதல் எழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை. 

சான்று: 

பெற்றெடுத்த உற்றெடுத்த

ற்றுணர் தெற்றென் 

இயைபு :

இறுதி எழுத்தோ ஓசையோ ஒன்றி வரத் தொடுப்பது இயைபு. 

சான்று:

உண்டோ

விட் 

அணி நயம்:

குளத்துக்குத் தாமரை அழகு 

கண்ணுக்கு மை அழகு 

கவிதைக்கு பொய் அழகு 

செய்யுளுக்கு அணி அழகு

என்பதற்கு இப்பாடலில் கம்பன், பாரதி, வள்ளுவன் புகழும், தமிழின் புகழும் பாடுவதால் உயர்வு நவிற்சி அணி ஆகும். 

முடிவுரை :

கற்றாருக்கும், கல்லாருக்கும் ஏற்ற வகையில் எதுகை, மோனை, இயைபு இயைந்தோட, கற்பனை காட்சியளிக்க, சந்தம் தாளமிட, சுவை உண்டாகி, நா ஏக்கமுற, அணியோடு அழகுபெறும் வகையில் இக்கவிதை அமைந்துள்ளது.


கவிதையைப் படித்தபின், அக்கவிதை கிளர்த்தும் உணர்வுகள் குறித்து விழிப்புணர்வு உரை ஒன்றை எழுதுக. 

எங்களுக்கும் ஓர் ஆறுண்டு

வெறுமணல் பரப்பாய் விரிந்துகிடக்க

ஓணான்கள் முட்டையிட

கள்ளிகள் பிழைத்திருக்க

பிள்ளைகள் விளையாட

பன்றிகள் மேய்ந்திருக்க

வானத்தில் மேகமுண்டு

சூரியனில் மழையுண்டு

காகமோ குருவியோ 

நிழல் ஒதுங்க 

ஆறெங்கும் முள்மரமுண்டு 

எங்களுக்கும் ஓர் ஆறுண்டு 

ஆற்றுக்கோர் ஊருண்டு 

ஊருக்கோர் சனமுண்டு 

வாழ்வைப்போல் ஒன்றுண்டு. 

- இளங்கோ கிருஷ்ணன்

விழிப்புணர்வு உரை: 

• இயற்கையின் கொடையாம் மழைநீரை நாம் சேகரிக்காமல் விடுகிறோம். மழை நீர் சேகரிப்புப் பகுதிகளில் பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள் என எத்தனையோ கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. விண்ணிலிருந்து புறப்பட்டு மண்ணில் தங்கலாம் என வந்த மழை வீணாகக் கடலில் கலக்கிறது. 

• ஆற்று நீரைச் சேகரிக்க மறந்தோம். ஆனால் ஆற்று மணலைக் கொள்ளையடிக்க துணிந்தோம். மரம் வளர்க்க மறந்தோம். மரம் வெட்டத் துணிந்தோம். காக்கை குருவி எங்கள் ஜாதி என்றான் பாரதி. ஆனால் இன்று மழையும் மரமும் இல்லாததால் ஏதிலியாய் காக்கை குருவிகள் எங்கோ போயின?


வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக. 

1. என்னுடைய நம்பிக்கை முழுவதுமே புதியத் தலைமுறை மீதுதான்; அவர்கள் எல்லா பிரச்சினைகளையும் ஒரு சிங்கத்தை போல எதிர்கொண்டுத் தீர்ப்பார்கள். 

என்னுடைய நம்பிக்கை முழுவதுமே புதியத் தலைமுறை மீதுதான்; அவர்கள் எல்லாப் பிரச்சினைகளையும் ஒரு சிங்கத்தைப் போல எதிர்கொண்டுத் தீர்ப்பார்கள். 


2. எத்தனை முறை நீ மற்றவர்கள் மு’’’’ன்னேறி செல்வதனை கண்டு ஒன்றும் செய்வதறியாது நம்பிக்கையின்றி துன்புறுவாய். நிறைய தன்னம்பிக்கை கொள். 

எத்தனை முறை நீ மற்றவர்கள் முன்னேறிச் செல்வதனைக் கண்டு ஒன்றும் செய்வதறியாது நம்பிக்கையின்றித் துன்புறுவாய். நிறைய தன்னம்பிக்கைக் கொள். 


3. நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின் தரத்தை பொறுத்திருக்கிறது. புத்தகம் படிக்கும் பொழுது கூர்ந்தக் கவனம் அறிவை பெறுவதற்கும் வளர்ப்பதற்குமான அடிப்படை தேவையாகும். 

நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின் தரத்தைப் பொறுத்திருக்கிறது. புத்தகம் படிக்கும் பொழுது கூர்ந்தக் கவனம் அறிவைப் பெறுவதற்கும் வளர்ப்பதற்குமான அடிப்படைத் தேவையாகும். 


4. மாணவர்கள் பெற்றோர்களை தமது நண்பர்களாக பாவித்து நட்புக் கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களை பெற்றோர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும். 

மாணவர்கள் பெற்றோர்களைத் தமது நண்பர்களாகப் பாவித்து நட்புக் கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களைப் பெற்றோர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும். 


5. ஆசிரியருக்கு கீழ்படிதல் என்னும் குணம், உண்மையானவற்றை தெரிந்துக் கொண்டு, அறியாமையினை அகற்றி பல நல்லனவற்றை கற்று கொடுக்கும். 

ஆசிரியருக்குக் கீழ்ப்படிதல் என்னும் குணம், உண்மையானவற்றைத் தெரிந்துக் கொண்டு, அறியாமையினை அகற்றிப் பல நல்லனவற்றைக் கற்று கொடுக்கும்.


கீழ்க்காணும் பகுதியைப் படித்து அறிவிப்புப் பலகைக்கான செய்தியை உருவாக்குக.

வேர்களை விழுதுகள் சந்திக்கும் விழா, மே - 5, 2019

திருச்சிராப்பள்ளி

வேலை காரணமாக வெளிநாடுகளில் பிரிந்து வாழும் உறவினர்கள் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. 

திருச்சி உறையூர் அன்பு நகரில் வசிக்கும் தங்கவேல் - பொன்னம்மாள் இணையரின் மூன்று தலைமுறை வழித்தோன்றல்கள் சந்திக்கும் நிகழ்வு மே-5 ஆம் தேதி இனிதே நடைபெற உள்ளது. 

உறவினர் கூட்டத்தில் தங்கவேல் - பொன்னம்மாள் அவர்களின் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேரன்கள், கொள்ளுப் பேத்திகள் சந்தித்துப் பெரியோர்களிடம் வாழ்த்துப் பெறுகிறார்கள். இந்நிகழ்ச்சியைத் தங்கவேல் அவர்களின் கொள்ளுப் பேத்தி செல்வி கண்மணி அவர்கள் ஒருங்கிணைக்கிறார்.

வேர்களை விழுதுகள் சந்திக்கும் விழா 

“இணைந்த உறவும்”  “கசிந்த கண்ணீரும்” 

நாள் : 05.05.2019 இடம்

இடம் : திருச்சி - உறையூர் தங்கவேல் பொன்னம்மாள் இல்லம். 

நிகழ்வு : மூன்று தலைமுறை வழித் தோன்றல்கள் சந்திக்கும் நிகழ்வு.

பங்கேற்பு : தங்கவேல் - பொன்னம்மாள், மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேத்திகள் கொள்ளுப் பேரன்கள். 

நிகழ்வின் அவசியம் : தங்கவேல் - பொன்னம்மாள் இணையரிடம் வாழ்த்துப் பெறுதல் 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் : கொள்ளுப்பேத்தி கண்மணி 

விழைவு : உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் வருக. 

“உருகுது நெஞ்சம் பெருகுது கண்ணீர்”


மொழியோடு விளையாடு


பட்டிமன்றம்

தலைப்பு : தனி மனித வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுபவர்கள் உறவினர்களா? நண்பர்களா?

பெரிதும் உதவுபவர்கள் உறவினர்களா? (மறுத்துக்கூறல்) 

• மகாபாரத காலத்திலிருந்தே பங்காளிச் சண்டை இன்றும் நடந்தேறி வருவது தெரிந்ததே. 

• பசியைப் பகைவனிடம் சொல், பங்காளியிடம் சொல்லாதே என்பது பழமொழி 

• தான் வாழ பிறரைக் கெடுப்பவன் தான் உறவினர்

• பாச வார்த்தை முன்னால் பேசி பழித்துத் தூற்றுவான் பின்னால் அவன் உறவினன். 

• எனவே, உறவு என்பது உதவுதற்கு அல்ல, நம்மை உதறித் தள்ளுவதற்கே. 

பெரிதும் உதவுபவர்கள் நண்பர்களா? (உடன்பட்டுக் கூறுதல்) 

• உறவும் இல்லை ஒட்டும் இல்லை, ஒரே பலகையில் உட்கார்ந்து கற்றோம் பாடத்தை, உறவாக்கினோம் உள்ளத்தை. 

• துன்பத்தில் துவளும் போது தோள் கொடுத்துத் துவளாமல் பாதுகாத்து நட்பு.

• செய்வதறியாமல் தவித்த போது அமைச்சனாய் எனக்கு அறிவுரை தந்தது நட்பு 

• தோல்வி கண்ட போது, துயரம் போக்கி, உற்சாக மூட்டி ஊக்கமளித்தது நட்பு 

• தன் உதிரத்தையும் கொடுத்து உயிர் கொடுத்து தியாகத்தின் உச்சமாய் நிற்பது நட்பு.

மூழ்காத ஷிப் ப்ரெண்ட்ஷிப் 


சுழி குளம்


நவமதி மேவிடவே 

வசிகுற ளுடனட 

மகுடன ருளடவி 

திறனறி வருளுமே!

விளக்கம்:

புதிய ஒளிமிக்க அறிவினைப் பெற வேண்டுமென்றால், அறிவுச்சுரங்கமாக விளங்கும் திருக்குறளைக் கற்று அதன்வழி வாழ்க்கையை மேற்கொள்வாய்! மேலும், சிறந்த தலைவர்களின் வாழ்த்துகளையும் பெற்றுத் திறன்மிக்க பல்துறை அறிவினையும் பெறலாம். 

நவ மதி - புதுமையான ஒளிமயமான அறிவு 

வசி - உயர்ந்த 

மகுடன் - தலைவன் 

அடவி – பெருகுதல்

சுழி குளம்


பொதுமதி பலமேவு 

துணிதரம் தரமே 

மததவிர முதல 

திரவிய நிரம்ப

விளக்கம்:

பல துறைகளிலும் பொது அறிவை வளர்த்துக் கொள். அது நல்லதொரு துணிச்சலைத் தரும். முனைப்பு தவிர்ந்தால் முதன்மைப்படுத்தப்படுவாய். செல்வமும் நிரம்பும். 

மத(ம்) தவிர - முனைப்பு நீங்க 

திரவியம் - செல்வம்


எண்ணங்களை எழுத்தாக்குக


இருப்பதோ ஒரே அறை 

செய்வதோ நேறு மாறு 

தொழிலோ வேறு வேறு 

தொந்தரவோ பல நூறு 

ஆகுமோ நல்ல ஆறு 

தகுமோ தேர்ந்து பாரு.


பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடர்களாக ஆக்குக 

எ.கா. குமரன் வீடு பார்த்தேன் - குமரனை வீட்டில் பார்த்தேன் 

1. மாறன் பேச்சுத்திறன் யார் வெல்ல முடியும்.

மாறனின் பேச்சுத்திறனை யார் வெல்ல முடியும். 

2. போட்டி வெற்றி பெற்றது கலைச்செல்வி பாராட்டுகள் குவிந்தன.

போட்டியில் வெற்றி பெற்றதற்காக கலைச் செல்விக்குப் பாராட்டுகள் குவிந்தன. 

3. காலை எழுந்து படித்து நமக்கு நன்மை ஏற்படும்.

காலையில் எழுந்து படித்தால் நமக்கு நன்மை ஏற்படும். 

4. அனைவர் அன்பு அழைத்தவன் துன்பம் தர யார் மனம் வரும்.

அனைவரையும் அன்புடன் அழைத்தவனுக்குத் துன்பம் தர யாருக்கு மனம் வரும்? 

5. சான்றோர் மதிப்பு கொடுத்து வாழ்வு உயரலாம்.

சான்றோருக்கு மதிப்புக் கொடுத்து வாழ்ந்தால் உயரலாம். 


செய்து கற்போம் 

உங்கள் குடும்ப உறவு வழிமுறைகளைக் கொண்டு குடும்ப மரம் (Family tree) வரைக


நிற்க அதற்குத் தக
தவிர்க்க வேண்டிய ஆடம்பரச் செலவுகள் என நீவிர் கருதுவனவற்றைப் பட்டியலிடுக.

1. திறன் பேசியில் இணைய சேவையை அதிகமாக பயன் படுத்துவது.

2. தொலை தூரம் செல்வதற்கு மகிழுர்தி பயன்படுத்துவது.

3. நண்பர்களுடன் உணவகத்தில் உணவு அருந்தும் செலவுகள்

4. அதிகமாக திரைப்படம் பார்க்கும் செலவுகள்

பொறுப்புள்ள மகனாக / மகளாக உங்கள் பெற்றோர்க்கு என்னென்ன உதவிகள் செய்வீர்கள்? 

1. நானும் வேலைக்குச் செல்ல முற்படுவேன். 

2. நானே தாத்தா பாட்டியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வேன். 

3. வீட்டில் சமையல், துணி துவைத்தல், காய்கறி வாங்கி வருதல், வீட்டின் உட்புறம் சுத்தம் செய்தல் போன்ற வேலைகளில் பங்கெடுப்பேன். 


படிப்போம் பயன்படுத்துவோம் (உணவகம்) 

Lobby - ஓய்வறை

Tips - சிற்றீகை 

Checkout - வெளியேறுதல் 

Mini meals - சிற்றுணவு


அறிவை விரிவு செய்

• கம்பர் யார்? - வ.சுப. மாணிக்கம் 

• சக்கரவர்த்தி திருமகன் – இராஜாஜி 

• ஜலாலுத்தீன் ரூமியின் கவிதைகள்

• வயிறுகள் - பூமணி (சிறுகதைத் தொகுப்பு) 

• சிறை - அனுராதா ரமணன் 

• ஒரு புளிய மரத்தின் கதை - சுந்தர ராமசாமி


இயல் 3

வாழ்வியல்

திருக்குறள்

- திருவள்ளுவர்


கற்பவை கற்றபின்


1. படத்துக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடிக்க


அ) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது

ஆ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.

இ) சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும்.

[விடை : சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும்.]


2. கடலின் பெரியது

அ) உற்ற காலத்தில் செய்த உதவி 

ஆ) பயன் ஆராயாமல் ஒருவன் செய்த உதவி 

இ) திணையளவு செய்த உதவி 

[விடை : ஆ) பயன் ஆராயாமல் ஒருவன் செய்த உதவி]


3. பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.

நல்லார் நயவர் இருப்ப நயம் இலாக் 

கல்லார்க் கொன்றாகிய காரணம் - தொல்லை 

வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய் 

நினைப்ப வருவதொன் றில் 

அ) இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு

தெள்ளியர் ஆதலும் வேறு. 

ஆ) நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்

நல்லவாம் செல்வம் செயற்கு 

இ) ஊழில் பெருவலி யாஉள மற்று ஒன்று 

சூழினும் தான்முந்து உறும்.

[விடை : ஆ) நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு]


4. கீழ்க்காணும் புதுக்கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளைக் தேர்ந்தெடுக்க.

உயர் அலுவலரின் வருகை 

அலுவலகமே அல்லாடும் 

அவருடைய சினம் அனைவரும் அறிந்ததே 

கோப்புகளை விரைந்து முடிக்க 

ஒழுங்கு செய்ய 

நேரத்தில் இருக்க வேண்டும் 

விரைகிறது மனம்

பரபரப்பும் மனவழுத்தமுமாய் 

வண்டியை எடுக்கிறேன்

காலைக் கட்டிக் கொள்கிறது குழந்தை 

'போ அந்தப் பக்கம்' 

உதறிச் செல்கிறேன் குழந்தையை. 

[விடை: செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக் காக்கின்என் காவாக்கால் என்?] 


5. இலக்கணக் குறிப்புத் தருக. 

அன்பும் அறமும் - எண்ணும்மை 

நன்கலம் - பண்புத் தொகை 

மறத்தல் - தொழிற் பெயர் 

உலகு - இடவாகு பெயர் 


6. பொருள் கூறுக

வெகுளி - கோபம் 

புணை - தெப்பம் 

ஏமம் - பாதுகாப்பு

திரு - செல்வம்


7. வையகமும் வானகமும் ஆற்றலரிது - எதற்கு? 

அ) செய்யாமல் செய்த உதவி

ஆ) பயன் தூக்கார் செய்த உதவி

இ) தினைத்துணை நன்றி

ஈ) செய்ந்நன்றி

[விடை : அ) செய்யாமல் செய்த உதவி]


8. பகையும் உளவோ பிற? - பொருள் கூறுக. 

முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்லுகின்ற சினத்தை விட வேறுபகை இல்லை.


9. செல்லிடத்து - புணர்ச்சி விதி கூறுக. 

செல்லிடத்து = செல் + இடத்து 

• 'தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்' என்ற விதிப்படி, செல் + ல் + இடத்து என்றாகியது. 

• உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவதே இயல்பு என்ற விதிப்படி, ல் + இ = லி = செல்லிடத்து என்று புணர்ந்தது. 


10. பொருத்திக் காட்டுக.

அ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - 1. சேர்ந்தாரைக் கொல்லி 

ஆ) பயன்தூக்கார் செய்த உதவி - 2. ஞாலத்தின் மாணப் பெரிது 

இ) சினம் - 3. தெய்வத்துள் வைக்கப்படும் 

ஈ) காலத்தினாற் செய்த நன்றி - 4. நன்மை கடலின் பெரிது 

அ) 4, 3, 2, 1 

ஆ) 3, 4, 1, 2

இ) 1, 2, 3, 4

ஈ) 2, 3, 4, 1

[ விடை : ஆ) 3, 4, 1, 2 ]


குறுவினா 


1. முயல்வாருள் எல்லாம் தலை என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்? 

அறத்தின் வழியாக இல்லற வாழ்க்கை வாழ்பவர் முயல்வருள் எல்லாம் தலையானவர்.

2. ஞாலத்தின் பெரியது எது? 

ஒருவர் நமக்கு உரிய காலத்தில் செய்த உதவியானது அளவில் சிறியதாக இருந்தாலும், அஃது உலகைவிடப் பெரியதாகும். 

3. மறக்கக் கூடாதது, மறக்கக் கூடியது எவற்றை? 

• ஒருவர் நமக்குச் செய்த நன்மையை ஒருநாளும் மறக்கக்கூடாது. 

• ஒருவர் நமக்குச் செய்த தீமையை அப்பொழுதே மறந்து விட வேண்டும். 

• மறக்ககூடாதது - நன்மை ; மறக்கக்கூடியது - தீமை. 

4. செல்வம் இருப்பதற்கான வழியாக வள்ளுவம் உரைப்பன யாவை? ஒருவரிடம் இருக்கும் செல்வம் குறையாமலிருக்க வேண்டுமென்றால், அவர் பிறருடைய கைப்பொருளை விரும்பாமல் இருத்தல் வேண்டும். 

5.சினத்தை ஏன் காக்க வேண்டும்? 

சினமானது தன்னைக் கொண்டவனையே அழித்து விடும். எனவே தன்னைக் காத்துக் கொள்ள விரும்புகிறவன் சினத்தைக் காக்க வேண்டும்.


சிறுவினா 


1. ‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 

பண்பும் பயனும் அது’ - இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக. 

இக்குறட்பாவில் பயின்று வரும் அணி நிரல்நிறை அணியாகும். 

அணி இலக்கணம் :

ஒரு செய்யுளின் முதலில் சொல்லையும் பொருளையும் வரிசையாக (நிரலாக) நிறுத்தி, அவ்வரிசைப்படியே பொருள்கொள்ளும் முறையாகும். அதாவது சில சொற்களை முதலில் ஒரு வரிசையில் வைத்து, அச்சொற்களோடு தொடர்புடைய சொற்களை அடுத்த வரிசையில் முறைமாறாமல் சொல்வது நிரல் நிறை அணியாகும். 

பொருள் :

இல்வாழ்க்கையில் நாம் அன்பும் அறனும் கொண்டு ஒழுகினால், அதுவே நமக்கு வாழ்க்கையின் பண்பினையும் பயனையும் முழுமையாகத் தரும். 

அணிப்பொருத்தம் :

இக்குறட்பாவில் அன்பு, அறன் என்ற சொற்களை முதலில் ஒரு வரிசையில் நிறுத்திய திருவள்ளுவர் அவற்றோடு தொடர்புடைய பண்பு, பயன் என்பவற்றை முறையே அடுத்த வரிசையில் இணைத்து பொருள் கொள்ளுமாறு அமைத்துள்ளார். எனவே, இக்திருக்குறள் ‘நிரல் நிறை அணிக்குப்’ பொருத்தமாயிற்று. 

அன்பு - பண்பு ; அறன் - பயன் என்று நிரல்பட உள்ளது. 


2. இல்வாழ்க்கை சிறப்புற அறநெறியோடு வாழ்தலின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வழிநின்று விளக்குக. 

• ஒருவன் எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டியும், அறச்செயல்கள் செய்தும் வாழும் இல்லற வாழ்வைப் பெறுவான் என்றால், அவன் இல்வாழ்க்கை அன்பினால் உருவான நல்ல பண்பையும், அறச் செயலினால் உருவாகின்ற நல்ல புகழாகிய பயனையும் அடைவான். 

• அறத்தின் இயல்போடு இல்லற வாழ்க்கையை வாழ்பவன் முயற்சி செய்து புகழடைய விரும்பும் எல்லாரை விடவும் தலைசிறந்தவன் ஆவான்.

• உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் வானுலகத்தில் உள்ள தெய்வத்திற்கு இணையாக மதிக்கப்படுவார்.


3. எவற்றையெல்லாம் விட நன்றி உயர்ந்தது? குறள் வழி விளக்குக. 

• இந்நில உலகம், வானகம், கடல், பனை இவைகளை விடவும் நன்றி உயர்ந்தது. 

• நாம் பிறருக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமலிருக்கும் நிலையில் பிறர் நமக்குச் செய்த உதவியை நினைத்துப் பார்த்தால் விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் கொடுத்தாலும் ஈடாகாது. 

• ஒருவர் நமக்கு உரிய காலத்தில் செய்த உதவியானது அளவில் சிறியதாக இருந்தாலும், அது உலகை விடப் பெரியதாகும். 

• மறுபலனை எதிர்பார்க்காமல் ஒருவர் நமக்குச் செய்த உதவியின் அளவை ஆராய்ந்து பார்த்தால், அதன் நன்மை கடலை விடப் பெரியதாகும். 

• ஒருவர் தினையளவு உதவியைச் செய்தாலும் அதன் பயனை அனுபவித்து அறிந்தவர்கள் அவ்வுதவியை பனையளவாகக் கொள்வர்.


4. சினத்தால் வரும் கேட்டினைக் கூறுக. 

• நமக்கு ஏற்படும் தீமையான விளைவுகள் அனைத்தும் நாம் கொள்ளும் சினத்தால் வரும். அதனால், நாம் யாரிடமும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும். 

• சினம் என்னும் பகை, முகத்தில் அழகு கூட்டுகின்ற சிரிப்பையும், உள்ளத்தில் அருளைக் கூட்டுகின்ற மகிழ்ச்சியையும் கொள்ளும். 

• சினமானது தன்னைக் கொண்டவனையே அழித்து விடும். எனவே தன்னைக் காத்துக் கொள்ள விரும்புகிறவன் சினத்தைக் காக்க வேண்டும். 

• சினமானது, தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பாகும். அஃது ஒருவருடைய சுற்றம் என்கின்ற பாதுகாப்புத் தெப்பத்தையும் சுட்டழித்து விடும்.


5. கீழ்க்காணும் குறளில் ஏகதேச உருவக அணி எவ்வாறு பயின்று வருகிறது என்பதை விளக்குக. 

சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் 

ஏமப் புணையைச் சுடும். 

இக்குறட்பாவில் ஏகதேச உருவக அணி பயின்று வருகின்றது. 

அணி இலக்கணம் :

கவிஞர் செய்யுளில் இரு பொருள்களைக் கூறி அதில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, அதற்கேற்ப இணையானதொரு பொருளை உருவகம் செய்யாது விட்டுவிடுவது ஏகதேச உருவக அணியாகும். 

விளக்கம் :

சினம் தன்னைக் கொண்டவனை மட்டுமல்லாமல் அவனைச் சேர்ந்த சுற்றத்தாரையும் சேர்த்து அழிந்துவிடும். தன்னைச் சேர்ந்தவரையும் அழித்துவிடும் கொல்லியாகிய சினம், நம்மை மட்டுமில்லாமல் நமக்குப் பாதுகாப்பாக இருக்கக்கூடிய இனமென்னும் தெப்பத்தை அழித்துவிடும். 

அணிப்பொருத்தம் :

இக்குறட்பாவில் இனம் என்பதைத் தெப்பமாக உருவகப்படுத்தியுள்ள வள்ளுவர் சினத்தை உருவகப்படுத்தாமல் விட்டுள்ளார். எனவே, இக்குறட்பாவில் ஏகதேச உருவக அணி பயின்று வந்துள்ளது.


நெடுவினா


1. செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைக்கொண்டு நிறுவுக. 

விண் மண் :

“செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் 

வானகமும் ஆற்ற லரிது”

நாம் பிறருக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமலிருக்கும் நிலையில் பிறர் நமக்குச் செய்த உதவியை நினைத்துப் பார்த்தால் விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் கொடுத்தாலும் ஈடாகாது. 

உலகம் :

“காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும் 

ஞாலத்தின் மாணப் பெரிது”

ஒருவர் நமக்கு உரிய காலத்தில் செய்த உதவியானது அளவில் சிறியதாக இருந்தாலும் அது உலகத்தின் அளவை விடப் பெரியதாகும்.

கடல் :

"பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 

நன்மை கடலிற் பெரிது”

எந்தப் பயனையும் எதிர்பார்க்காமல் ஒருவர் நமக்குச் செய்த உதவியின் அளவை ஆராய்ந்து பார்த்தால், அதன் நன்மை கடலைவிடப் பெரியதாகும்.

பனை :

“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் 

கொள்வர் பயன்தெரி வார்”

ஒருவர் தினையளவு உதவியைச் செய்தாலும் அதன் பயனை அனுபவித்து அறிந்தவர்கள் அவ்வுதவியைப் பனையளவாகக் கொள்வர். 

வாழ வழி :

“நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது 

அன்றே மறப்பது நன்று”

ஒருவர் நமக்குச் செய்த நன்மையை ஒருநாளும் மறக்கக்கூடாது. ஒருவர் நமக்குச் செய்த தீமையை அப்பொழுதே மறந்துவிட வேண்டும். தப்பிக்க முடியாது.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை       

செய்ந்நன்றி கொன்ற மகற்கு”

எந்த அறத்தை அழித்தாலும் தப்பிப் பிழைக்கலாம். ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்தவர்க்குத் தப்பிப் பிழைக்கும் வழியே கிடையாது. 

எனவே, செய்ந்நன்றியறிதலே சிறந்த அறம் என்பதனை வள்ளும் உணர்த்துகின்றது. 


2. சினத்தைக் காத்தல் வாழ்வை மேன்மைப்படுத்தும். இக்கூற்றை முப்பால் வழி விரித்துரைக்க.

சினமானது அருள் உள்ளத்தை அழித்து மெய்யுணர்வை அடையாது செய்துவிடும். சினத்தைக் காத்தால் வாழ்வு மேன்மையடையும் சினத்தைக் காப்பான். 

சினம் செல்லுமிடம் :

"செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக் 

காக்கின்என் காவாக்கால் என்?''

தன் சினம் செல்லுபடியாகும் தன்னை விடவும் மெலியாரிடத்தில் சினம் கொள்ளாமல் சினத்தைக் காத்துக் கொள்பவனே உண்மையில் சினத்தைக் காப்பவனாவான்.

மறத்தல் நன்று :

"மறத்தல் வெகுளியை யார்மாட்டும்; தீய 

பிறத்தல் அதனான் வரும்”

ஒருவனுக்குத் தீமையான விளைவுகள் சினத்தாலேயே ஏற்படும் என்பதால் யாரிடத்திலும்  சினம் கொள்ளாமல் அதனை மறந்துவிடுவது நன்மையாகும். 

சினம் எனும் பகை :

“நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் 

பகையும் உளவோப் பிற?” 

சினம் எனும் பகை, முகத்தில் அழகு கூட்டுகின்ற சிரிப்பையும், உள்ளத்தின் அருளுக்கு அழகு கூட்டுகின்ற மகிழ்ச்சியையும் கொல்லும். 

தன்னைக்காக்க சினம் தவிர் :

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால் 

தன்னையே கொல்லுஞ் சினம்”

சினமானது தன்னைக் கொண்டவனையே அழித்துவிடும். எனவே, தன்னைக் காத்துக் கொள்ள விரும்புகிறவன் சினத்தைக் காக்க வேண்டும். 

சுற்றம் பேண சினத்தைத் தவிர்: 

“சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் 

ஏமப் புணையச் சுடும்" 

சினமானது, தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பாகும். அஃது ஒருவனுடைய சுற்றம் என்கின்ற பாதுகாப்புத் தெப்பத்தையும் சுட்டழித்து விடும். எனவே, சினத்தைக் காத்தோமென்றால், எளியவரோடு பகை மேற்கொள்ளமாட்டோம்; யாரிடத்தும் சினம் கொள்ள மாட்டோம்; முகமலர்ச்சியும், அகமகிழ்ச்சியும் அதிகமாகும்; தன்னையே காத்துக் கொள்வோம்; சுற்றத்தையும் காப்பாற்றுவோம். இதனால் வாழ்வு மேன்மைப்படுத்தப்படும் என்று முப்பால் கூறுகின்றது. 


Tags : Chapter 3 | 12th Tamil இயல் 3 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 3 : Sutrathar kanne Ula : Questions and Answers Chapter 3 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள : கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 3 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள