Home | 12 ஆம் வகுப்பு | 12வது தமிழ் | துணைப்பாடம்: உரிமைத்தாகம்

பூமணி | இயல் 3 | 12 ஆம் வகுப்பு தமிழ் - துணைப்பாடம்: உரிமைத்தாகம் | 12th Tamil : Chapter 3 : Sutrathar kanne Ula

   Posted On :  01.08.2022 05:40 pm

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள

துணைப்பாடம்: உரிமைத்தாகம்

12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள : துணைப்பாடம்: உரிமைத்தாகம் - பூமணி | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

விரிவானம்

பண்பாடு – ங

உரிமைத் தாகம்

- பூமணிநுழையும்முன்

நிலம் சடப்பொருள் அல்ல. நிலத்தோடு பேசக்கூடிய மனிதர்கள் இன்றைக்கும் கிராமங்களில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். வருவாய் பெரிதாக வரவில்லையென்றாலும் நில உரிமை, நிலம் சார்ந்த வேளாண்மை ஆகியவற்றை ஒரு பண்பாடாகவே கொண்டிருக்கிற மனிதர்கள் இருக்கிறார்கள். நிலத்தோடு உயிர்த்தொடர்பு கொண்டிருக்கிற பண்பாடு, எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே என்னும் பழம்பண்பாட்டு மரபை நினைவூட்டுகிறது. நிலத்துடனான உறவு குடும்ப உறவையும் வலுப்படுத்துகிறது.

அந்தச் சங்கதி இதுவரைக்கும் முத்தையனுக்குத் தெரியாது. அவன் பெண்டாட்டி சொல்லித்தான் தெரியும்.

"மேலக்காட்ல கீழத்தாருமேல நம்பிக்கக்கெரையம் எழுதியிருக்குதாமில்ல ஒங்க தம்பி."

முற்றத்தில் எருமைச்சாணியுடன் பருத்திவிதையை ரோசி விதைப்பெட்டியில் நிரப்பிக்கொண்டிருந்தாள் மூக்கம்மா. பெட்டியை வாங்கிக் கடகத்தில் எண்ணிக் கொட்டிய முத்தையன் அவளை ஒருமாதிரியாகப் பார்த்தான். அவன் கண்ணில் கோவமும் ஆச்சரியமும் கலந்திருந்தது. 

'என்ன இப்படிச் சொல்ற."

அவனுக்கு மனசு துருதுருத்து, சாட்டைக் கம்பை எடுத்துக் கயிறின் பிரிந்த பாகத்தைத் தொடையில் வைத்துத் திரிக்க ஆரம்பித்தான்.


"நேத்து கோழிகூப்புட எந்திரிச்சு கஞ்சி காய்ச்சீட்ருந்தென். அப்ப புருசனும் பொண்டாட்டியும் கடுகடுன்னு பேசிக்கிட்டாக. மனக்கசப்பு போலருக்கு. மேலூரு பங்காருசாமிகிட்ட எரநூறு ரூவா வாங்கித் திருப்பிக் குடுக்கமுடியாம கடசிக்கு அந்த ஒரு குறுக்கத்தவும் நம்பிக்கக்கெரையம் எழுதிக் குடுத்துச்சாம் ஒங்கதம்பி. ஆறு மாசத்துக்குமேல ஆச்சாம் இது நடந்து. பொண்டாட்டிக்காரி சண்டையத் தொடக்கியிருக்கா."

தொடைமயிரில் சாட்டைக்கயிறு பின்னிச் சுளீரிடவும் அவன் முகஞ்சுளித்தான்.

ரெண்டு வீடுகளுக்கும் நடுவிலிருந்த குறுக்குச்சுவரை வெறித்திருந்தான் அவன்.

மேலக்கரிசலில் ஏர்பூட்டிக் கலப்பை முக்கச் சாலடிக்கும்போது பிச்சிப் பூவாக மண்விரிந்து விழும் அழகில் அவன் மனசு லயித்தது. கம்பு விளைந்தால் தட்டையொண்ணு விரல்தண்டிவாய்க்கும். மூக்கை அறுக்கிறமாதிரி ஒரு முழத்துக்குக் கருது வாங்கும். கருதுகளைப் பிணையல்விட்டால் அயிரைக் குஞ்சுகளாகக் களம் நிறையத் தவசம் பெருகும்.

மூக்கம்மா அந்த வீட்டில் காலெடுத்து வைத்துப் பதினஞ்சு வருசமாகிறது. இன்றைக்கு மூணு பிள்ளைகளுக்குத் தாய். வீட்டுக்கு வந்த நாளில் முத்தையனுக்கு மட்டும் அவள் காய்ச்சிப் போடவில்லை. அவன் தம்பி வெள்ளைச்சாமிக்கும் மாமியாருக்கும் சேர்த்தே பொங்கினாள்.

வெள்ளைச்சாமிக்கு அப்போது சின்ன வயசு. என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் வந்து "மதனி கஞ்சி வேணும்" என்று சிணுங்குவான். அவள் அலுத்துக்கொள்ள மாட்டாள்.

வெள்ளைச்சாமி எளவட்டமாகி கலியாணம் முடிக்கும் வரை மூக்கம்மாளின் கைக்குள் மகனைப் போல் வளர்ந்தான். எந்த நேரமும் மதினியின் வாயிலிருந்து "இந்தாடா வெள்ள தான்.

எல்லாம் கலியாணம் ஆனதுடன் சரி. அத்தனை பாசமும் அடிமனசுக்குள் அமுங்கிவிட்டது. கலியாணமாகி ஒருமாசம் வாந்தக்கமாக இருந்தான். பிறகு பெண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கொண்டு அண்ணனுடன் தகராறு பங்கு பாகம் சொத்துச்சொகம்... அப்பப்பா அதெல்லாம் நடக்கக் கூடாத கதை.

வெள்ளைச்சாமி தனியாக உலைவைத்த அன்றைக்குக்கூட அவள் சந்தோசமாகத் தன் கைப்பட தானியம் அளந்து கொடுத்தாள். 

முத்தையனுக்குத் தம்பிமேல் அப்படியொண்ணும் பெரிய கோவமில்லை. பங்குபாகம் பிரிக்கும்போது அவன் பேசிய வார்த்தைகளைத்தான் தாங்க முடியவில்லை.

"நீ எனக்கு அண்ணனாக்கும்."

தகப்பன் செத்த நாளிலிருந்து தோளில் சுமந்து வளர்த்த கதையெல்லாம் சொல்லிச்சொல்லித் தம்பியின் கன்னத்தில் அடித்தால்தான் மனசாறும் போலிருந்தது. அவனை எப்போதாவது கடிந்து பேசியதுண்டுமா. வேலைக்குப் போகாமல் படுத்துக் கிடந்தால் கூட பேச்சுவாக்கில் சொல்லிவிட்டு மாட்டுப்பக்கம் போவான்.

"அடே நெலத்தக் கௌறணும்டா. அப்பத்தான் வகுறு நெறையும்."

அப்படி வளர்த்த பயல் நெஞ்சைக் கீறிவிட்டானே என்ற ஆத்திரத்தில அழுகை வந்துவிட்டது.

"ஏலே ஒனக்கு தகப்பன் மொகம் சரியாத் தெரியுமாடா. இண்ணைக்குப் பேசவந்துட்டயாக்கும். நானா அண்ணனில்ல."

அவன் படபடத்தான். கண்ணீரை அடக்கமுடியாமல் நகர்ந்துவிட்டான்.

அன்றைக்கிலிருந்து இதுவரை தம்பியுடன் முகங்கொடுத்துப் பேசியது கிடையாது. தம்பியும் ஒருசோடி மாடு, காடுகரை, வீடுவாசல் என்று குறைவில்லாமல் தான் பிழைத்தான். 

திருகைமேல் உட்கார்ந்திருந்த முத்தையன் படக்கென்று வாசல்பக்கம் வந்து எட்டிப்பார்த்தான். தம்பியின் வீடு பூட்டியிருந்தது.

"வெள்ளப்பெய எங்கயோ போயிட்டான் போலருக்கு. வீடு பூட்டிக் கெடக்குதே."

அவள் உஸ்ஸென்று இரைந்தாள்.

"மேலூருக்குத்தான் போயிருக்கும். வெதப்பு நேரமில்லையா. அவர எப்படியாச்சும் சரிக்கெட்டி வெதைக்கவேணாமா. பின்ன அவரு வந்து நின்னுக்கிட்டாக் கேவலந்தான. முந்தாநாளு சொல்லிவுட்டாராம். பணத்த எல்லாம் கெட்டச் சொல்லி. அப்படியில்லன்னா அவரு வீட்டு வெதப்பொட்டி பிஞ்சைக்கு வந்துரும்னு சொன்னாராம்.

குத்துக்குத்தாக விதையை அள்ளிக் கரிசலுக்குள் சாலுக்குச் சால் எட்டுப்போட்டு விதைப்பெட்டியில் சலோரென வீசி விதைக்கும் தனக்குப் பதிலாக இன்னொரு உருவத்தை நினைத்துப் பார்த்தாலே அவனுக்குப் புளிப்பெடுத்தது.

"கையில துட்டுல்லாமப் போயி என்ன செய்யப்போறான். அதுலவேற அவருட்ட வசமா புடியும் குடுத்தாச்சு. வெறும் வாயிட்டுச் சரிக்கெட்ட முடியுமா. அவருக்கென்ன இது பத்தோட ஒண்ணு. நமக்குச்சொல்லு. கூறுகெட்ட பெய இப்படிச் செய்வானாக்கும். இப்ப என்ன செய்றது. நம்ம கையிலயும் காத்துட்டுக் கெடையாது. பருத்தி வெத புண்ணாக்குன்னு வாங்கிப்போட்டு..."

தனது கவலையைப் பகிர்ந்துகொள்ள ஆள் தேடும் பாவனையில் மூக்கம்மாளைப் பார்த்தான். அவள் ஈரக்கையைச் சீலையில் துடைத்துவிட்டுக் காதில் கிடந்த நகைகளைக் கழற்றிக் கொண்டிருந்தாள்.

"இந்தாங்க இதக் கொண்டுபோயி வச்சு வாங்கி அவருக்குப் பணத்த அடச்சிட்டு மறுசோலி பாருங்க. அது என்னமோ சின்னப்புள்ள தெல்லு தெறிச்சமாதிரி இப்படிக் காரியம் பண்ணீருச்சு. நம்ம அதப் பாத்துட்டுச் சும்மாருக்க முடியுமா.

அவன் தலை குனிந்துகொண்டான்.

வெள்ளைச்சாமி வீடு வந்து சேர மதியமாகிவிட்டது. வந்ததும் ஒரு செம்பு தண்ணீர் குடித்துவிட்டு நடுவீட்டில் துண்டு விரித்து மல்லாக்கப் படுத்துக் கூரைமுகட்டைப் பார்த்தபடி கிடந்தான். வாசலில் உட்கார்ந்திருந்த அவன் பெண்டாட்டி குழந்தைக்குப் பால் கொடுத்துக்கொண்டிருந்தாள்.

முத்தையனுக்குத் தம்பி வீட்டுக்குள் காலெடுத்து வைக்க மனசில்லைதான். இருந்தாலும் ஒரு வைராக்கியத்தில் புறப்பட்டான்.

"வெள்ள இருக்கானா..."

யாரிடமோ பேசுவது போல் கேட்டுக்கொண்டு வாசலுக்குள் நுழைந்தான். பெண்டாட்டி வெள்ளைச்சாமியின் எதிர்வீட்டுத் திண்டில் எழுந்துபோய் உட்கார்ந்து கொண்டாள். வாசலைத் தாண்டிப் வெள்ளைச்சாமி துண்டைச் சுருட்டி எழுந்து போய் உள்ளே உட்கார்ந்தான் முத்தையன். மூலையில் சாய்ந்தான். அண்ணனுடைய முகத்தில் முழிக்கவில்லை.

நடுச்சுவர்மேல் பின்னியிருந்த பத்துக்கால் பூச்சி வலையைப் பார்த்தபடி முத்தையன் கேட்டான்.

"என்னடா வெள்ளங்காட்டியிலிருந்து ஆளு தட்டுப்படல. ஊரு முழுக்க வெதப்பு மும்முரத்துல அலையிது. நீ பாட்டுக்கு மாட்டக் கெட்டிப் போட்டுட்டு உக்காந்துட்ருந்தா எப்படி. எங்க போயிருந்த இன்னேரவரைக்கு."

விசயத்தைத் தம்பியின் வாயிலிருந்தே வரவழைக்கணுமென்று அவனுக்கு எண்ணம். வெள்ளைச்சாமி செருமிக் கொண்டான். 

"மேலூரு பங்காருசாமிகிட்டப்  போயிருந்தேன்."

"அவருட்ட என்ன சோலி."

“ஒரு எரநூறு தரணும். வாங்கி ரெண்டு வருசமாச்சு. ஆறு மாசத்துக்கு முன்னால் மேலக்காட்டக் கெரையம் எழுதி வச்சேன். இப்ப அதுமேல திரும்புவாரு போலருக்கு”.

வெள்ளைச்சாமியின் முகத்தில் வருத்தம் கலந்த வெட்கம் நிழலாடியது.

"அப்படியென்னடா வந்துருச்சு பாடுபடுற நெலத்த எழுதிக் குடுக்கணும்னு. ஒருத்தன் நான் கெடக்கன்ல அடுத்த வாசல்ல. சொல்றதுக்கென்ன. சரி என்ன வுடு. ஒன் மதினிகிட்டயாச்சும் சொல்லியிருக்கலாமில்ல. இண்ணைக்குக்கூட அவ சொல்லித்தான் தெரியும். வீட்லபொண்டாட்டிக்காரி ஒருத்திதான் பெழப்புன்னு நெனைக்காத. அண்ணன், தம்பி "அக்கா தங்கச்சின்னு சுத்துலயும் நாலு இருக்கணும். அத ஒணந்துக்கோ மொதல்ல."

முத்தையனுக்குக் குரல் தழுதழுத்தது. அவன் மனசில் இப்போது கோவமில்லை. தம்பியைக் கனிவுடன் பார்த்தான்.

வெள்ளைச்சாமியின் பெண்டாட்டிக்கு இது கேட்டிருக்கணும். அவள் குழந்தையின் சிரிப்பில் கரைந்திருந்தாள்.

வெள்ளைச்சாமிக்கு வாயெழும்பவில்லை. முத்தையன் கேட்டான்.

"சரிசரி அது போகட்டும். நெலத்த அறுதியா எழுதிக்குடுத்துட்டயா இல்ல நம்பிக்கையாவா. பத்தரம் முடிச்சாரா.”

"நம்பிக்கையாத்தான். வட்டிக்கீடா எழுதி வாங்குனாரு. வட்டியக்கெட்டியாச்சு. முழுப்பணமும் இப்பயே வேணுமாம். மேலூருலவச்சு எழுதுனாக. தலைய ஒட்டிக் கையெழுத்துப் போட்டேன். கெராமுனுசுதான் எழுதுனாரு.

"அம்புட்டுத்தானா. நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்ருந்தேன். அவரு இனியென்ன செய்வாருன்னு பாப்பொம். பெரியமனுசனாம் பெரியமனுசன். எங்கிட்ட ஒருவார்த்த சொல்லியிருக்கலாமில்ல. சே.. பெரிய மனுசங்கெல்லாம் ஊரான் சொத்துக்கு வாயப்பௌந்துக்கிட்டுத்தான் அலையுறான். ஒழச்சுத் தேடுனவுகளுக்கில்ல வலிக்குது. நம்ம ஒண்ணுக்கொண்ணு வேண்டாற புழுக்கத்த மனசில வச்சுக்கிட்டு கொத்திக் கொதறிக்கிறதுனாலதான் அவனுக்கும் தொக்காப் போகுது. நேரங்காலத்தோட மாட்டப் பத்தீட்டுப்போயி செவக்காட்ட ஒரு ஒழவு எழுப்பிப் போடு. மேலக்காட்டுக்கு வெதவித்து இருக்குதுல்ல. நாளைக்கு ரெண்டு தாரவும் வெதச்சிறலாம். நான் மேலூருவரைக்கும் போயித் திரும்புறென்."

முத்தையன் புறப்பட்டான். அவன் காதில் வெள்ளைச்சாமியின் தோரணையான குரல் கேட்டது.

"இந்தா வெருசனா கஞ்சி ஊத்து. ரெண்டு மடக்கு ஒழவடிச்சிட்டுத்தான் திரும்பணும்"

திருணையில் உத்திரத்தை அணைந்து பூசணிப்பழமாக உட்கார்ந்திருந்தார் மேலூர் பங்காருசாமி. சப்பிய பனங்கொட்டையாக நரைத்திருந்த முடியை வசக்கி முடிந்த குடுமி.

"கும்புடுறேன் சாமி." 

தலைக்குமேல் கைகூப்பினான். சத்தம் கேட்டதும் பங்காருசாமி செனாய்த்துக்கொண்டார்.

"வாப்பா." 

பெரிய ஏப்பம் போட்டார். அவன் திருணைக்குக் கீழே ஒடுங்கி உட்கார்ந்திருந்தான்.

"என்ன முத்தையன் ஆளு இந்தப்பக்கம் தட்டுப்பட மாட்டயே. புதுசா வந்தாப்புலருக்கு. என்ன சங்கதி."

பங்காருசாமி ஆச்சரியத்துடன் விசாரித்தார்.

அடிக்கடி அவரைத்தேடி ஆள்வருவார்கள். பணம் வாங்குவார்கள். கொடுப்பார்கள். எழுதிக்கொடுத்த நோட்டைத் திருப்புவார்கள். அவருக்குக் கொடவாங்கல் தான் தொழிலென்று சொல்லணும். வசமான பிடியில்லாமல் கடன் கொடுக்க மாட்டார். ஈடாக நகை கொடுத்தாலும் நிலம் கொடுத்தாலும் வட்டியை மட்டும் குறைப்பதில்லை ,

"எந்தம்பி என்னமோ பாக்கி குடுக்க வேண்டியதா கேள்விப்பட்டென். அவன் ஒரு சின்னப்பெய. எனக்குத் தெரியாம நடந்து போச்சு. அதக் கணக்குப் பாத்துத் தீர்த்துக்கிறலாம்னுதான்....

அவர் இதை எதிர்பார்க்கவில்லை. முகத்தில் வினயம் பரவியது.

"என்னப்பா இது ஒனக்கும் ஒந்தம்பிக்கும் மனக்கசப்பாச்சே. அவனுக்காக நீ வந்து நிக்கயே."

"அண்ணன் தம்பிக்குள்ள ஆயிரம் இருக்கும் சாமி. இண்ணைக்கு அடிச்சுக்கிறதுதான் நாளைக்குக் கூடிக்கிறதுதான். சிறிசுக முண்டிக்கிருச்சுன்னா நம்மதான பொறுத்துப் போக வேண்டியிருக்கு."

"அது சரிதான்.. ஆமா கையேந்தி ரூவா வாங்குனவன் வெள்ளையனாச்சே. நானூறுக்கு கெரையம் வேற இருக்குது."

நானூறு என்ற வார்த்தை மட்டும் அவன் காதைக் குடைந்தது. 

"எரநூறுன்னுதான் சொன்னான். நம்பிக்கக் கெரையத்துல பிஞ்சைய எழுதியிருக்கான்போலத் தெரியிது. வட்டிவேற குடுத்துட்டானாம். அசலக் கொண்டுவந்துருக்கென். கணக்கு முடிச்சுவுடுங்க. அண்ணன் தம்பிக்குள்ள ஆரு வந்தென்ன."

அவருக்குச் சூடு கிளம்பியது. 

தெரிந்து தெளிவோம்

அனயம்  - நிறைவானது 

எச்சௌந்தவன் - ஏழை எளியவன். 

கீழத்தார்  - புன்செய்யின் ஒரு பகுதி 

கெராமுனுசு - கிராம நிர்வாக

அலுவலர் கொடவாங்கல் - கொடுக்கல் வாங்கல் 

திருணை - திண்ணை 

தெகஞ்சத - முடிந்ததை 

பிஞ்சை - புன்செய் 

ரோசி - உரசுதல் 

வாந்தக்கமாக - இணக்கமாக 

வெதப்பெட்டி - விதைப்பெட்டி 

வெள்ளங்காட்டி - விடியற்காலை 

வேண்டாற  - வேண்டாத 

திருகை - மாவு அரைக்கும் கல் 

குறுக்கம் - சிறிய நிலப்பரப்பு 

கடகம் - ஓலைப்பெட்டி

"இந்தாப்பாஒம்பாட்டுக்கு பேசீட்டே போனா எப்படி. ஒன்ன நான் பாத்துக்கிட்டனா வச்சனா. கடன் வாங்குனது அவன். நம்பிக்கக்கெரையம்னு ஒனக்கு அனயம் தெரியுமோ. நானூறுக்கு அறுதிக் கெரையம் எழுதியாச்சு. பிஞ்சையில் வெதைக்க எறங்காதன்னு அவங்கிட்டச் சொல்லியனுப்பிட்டனே. இதுல ஒனக்கென்ன வந்துபோச்சு. அவன் நெலம் அவன் பாடு."

அவனுக்கு உடம்பு கொதித்தது. பொறுமையிழந்தான்.

"நீங்க பாத்து அப்படிச்சொல்லலாமா. ஒங்க பணத்த ஆரும் இல்லன்னு சொல்லீட்டாகளா. வாங்குன கடனத் திருப்பிக் குடுத்தா நோட்டக் கிழிச்செறியிறதுதான் மரியாத."

"அண்ணைக்கு அவனுக்குப் பணம் குடுத்து ஒதவியிருக்க வேண்டியதுதான. இப்பமட்டும் என்ன புதுசா அக்கற வந்துருச்சு."

"இந்தப் பேச்செல்லாம் வேணாம். நல்லபடியா காரியத்த முடிச்சுட்டுப் போகலாம்னு வந்தென். முடியாது போலருக்கு. அவன் நெலம் வேற, என் நெலம் வேற இல்ல. எரநூறு வச்சிருக்கேன். கணக்க முடிச்சு நோட்டக் குடுக்கணும்னா குடுங்க. அதுக்குமேல அவரவருக்குத் தெகஞ்சதப் பாத்துக்கிற வேண்டியதுதான். எதுக்கும் ஒரு அளவு வேணாமா. நாளைக்குப் பிஞ்ச வெதப்பு நடக்கும். ஓரெட்டு வந்து பாத்துட்டுப் போங்க."

அவன் அவரைத் தைரியமாக ஏறிட்டுப் பார்த்தான். உதடு துடித்தது. அவனது பார்வையைத் தாங்க முடியாதவர் போல் அவர் முகஞ்சுளித்தார்.

வெள்ளைச்சாமியின் நிலத்தைச் சட்டப்படி சொந்தமாக்கிக் கொள்ள முடியாதென்று அவருக்குத் தெரியும். இருந்தாலும் பயமுறுத்தி இருநூறுக்கு நானூறு கழட்டிவிடலாமென்ற எண்ணம். முத்தையனின் பேச்சுவேறு கடுப்பேற்றியிருந்தது.

"அந்தளவுக்கு வந்துட்டயா. நான் தெரிஞ்சமட்டுக்கும் பாத்துக்கிறென். அதுக்குமேல் வார்த்தைய வளத்துக்கிறாத. சங்கடம் வந்து சேரும்."

அவர் விருட்டென்று உள்ளே போய்விட்டார். அவரைப் பதட்டத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது வீட்டுக்கார அம்மா. 

விறைப்பாகத் திரும்பிய முத்தையன் முணுமுணுத்தான். ஆருக்குத்தான் சங்கடம் வரப்போகுதுன்னு தெரியல."

புரட்டாசி பிறந்துவிட்டால் போதும். ஊர்முழுக்கச் சுறுசுறுப்புத் தட்ட ஆரம்பித்துவிடும். சம்சாரிகளுக்கும் சரி கூலிக்காரர்களுக்கும் சரி, இந்த மாசம் அப்பேர்ப்பட்டது. ஏற்கெனவே எழுப்புழவு அடித்துப் போட்டிருந்த மானம்பாரிக் கரிசல்களுக்குப் புரட்டாசி மழையால் நல்ல காலம் பிறக்கும்.

மறுநாள் வெள்ளங்காட்டி, மூலை முடுக்குகளில் முடங்கிக் கிடந்த ரெட்டைக் கலப்பைகள் கொட்டாரங்களில் ஏராளமாகத் தட்டுப்பட்டன.

கஞ்சிக்கலயம் கூடையுடன் பனைமரத்துப் பாதையில் மூக்கம்மா வந்துகொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னால் கையில் தூக்குவாளியுடன் சின்னவள்.

ஏர் பூட்டியாகிவிட்டது. முத்தையன் நிலத்தைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டுக் கயிற்றைப் பிடித்தான்.

பொம்பளைகள் எலந்தமுள் வெட்டுவதிலும் கல் பொறுக்கிப் போடுவதிலும் மும்முரமாக இருந்தார்கள்.

முதலில் மேலிட்டாற் போல எழுப்புழவு. அதற்குப் பிறகு பருத்தி விதைக்கணும். ரெண்டாம் உழவுக்குக் கட்டை போடாமல் கலப்பையை அமுக்கிப் பிடிக்கணும்.

வெயிலேறியது. விதைப்பு முடிந்து மாடுகள் கீழத்தாரில் சாலடித்துக் கொடுக்க பொம்பளைகள் பயத்தாம்பட்டம் போட்டார்கள்.

மேலூர் பங்காருசாமிக்கென்னமோ அன்றைக்குக் கோயில்பட்டி போய் வக்கீலிடம் வெள்ளைச்சாமியின் நோட்டைக் கொடுத்து நோட்டீஸ் விட்டுப் பயமுறுத்தணுமென்று ஆத்திரம். பசியாறியதும் நோட்டை எடுத்து மடியில் கட்டிக்கொண்டு வேகமாகக் கிளம்பினார். போகிறவழியில் புஞ்சையில் நின்று ஒரு அரட்டு அரட்டிவிட்டுப் போனாலாவது காரியம் பலித்துவிடாதா என்ற நினைப்பு வேறு.

பாதையில் நின்று கிழக்காமல் பார்த்தார். புஞ்சையில் உழவு நடந்தது. வேகமாகப் புஞ்சைக்கு நடந்தார்.

"ஏ... முத்தையா ஒன்னத்தாம்ப்பா.. ரெண்டு பேருக்கும் போங்காலம் வந்துருச்சா. பேசாம உண்டான ரூவாயக் கெட்டீட்டுப் பிஞ்சைய உழுங்க. கோர்ட்டுக்குப் போனாத்தான் பின்னால் வலியெடுக்கும்."

மேலக்கடைசி வரப்பில் பங்காருசாமி கடுகடுப்பாக நின்று கொண்டிருந்தார்.

எல்லாரும் திடீரென்று திரும்பிப் பார்த்தார்கள். வெள்ளைச்சாமிக்குக் கோவம். மட்டியைக் கடித்துச் சாட்டைக் கம்பை மாறிப்பிடித்தான்.

"அடே நீ சும்மாருடா. அவன நான் கவனிச்சுக்கிறேன். எச்சௌத்தவன்னா தலமேல ஏறுறானே. இவனால என்ன வந்தாலுஞ் சரி."

முத்தையனுக்குத் தொடையிரண்டும் துடித்தது.

"யோவ். என்ன சொன்ன. எங்க தகப்பனுக்கு ரெண்டு புள்ளதான். இப்ப ஆருக்கு வலிக்கப்போகுதுன்னு பாக்கயா?"

அவன் ஆவேசமாகக் கத்திக்கொண்டு ஓடினான். சாட்டைக் கம்பை ஓங்கியபடி வெள்ளைச்சாமி அவனுக்குப் பின்னால் பாய்ந்தான்.

பங்காருசாமி பதறிப்போனார். சே.. காரியம் கெட்டுப் போச்சே. விவகாரம் இந்தளவுக்கு முற்றிவிட்டதே. பயல்கள் வருகிற வருத்தைப் பார்த்தால் சரியாகத் தெரியவில்லை. இனியும் நின்றால் மோசம் போய்விடும். 

மேலவரப்பைத் தாண்டிக் கரிசல்கட்டிகளுக்கிடையில் அவுந்த வேட்டியைக் கையிலேந்தியபடி தொபுக்தொபுக்கென்று மேலூரை நோக்கி ஓட ஆரம்பித்தார் அவர்.


நூல்வெளி

‘உரிமைத்தாகம்’ என்னும் இச்சிறுகதை பூமணி சிறுகதைகள் என்னும் தொகுப்பில் உள்ளது. பூமணி, கரிசல் எழுத்தாளர்களில் ஒருவர். பூ. மாணிக்கவாசகர் என்ற தனது பெயரைச் சுருக்கிப் பூமணி என்ற பெயரில் எழுதி வருகிறார். தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையில் துணைப்பதிவாளராகப் பணியாற்றியவர். அறுப்பு, வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகியன இவரது சிறுகதைத் தொகுப்புகள். வெக்கை, பிறகு, அஞ்ஞாடி, கொம்மை உள்ளிட்ட புதினங்களை எழுதியுள்ளார். கருவேலம்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அஞ்ஞாடி என்னும் புதினத்திற்காக 2014இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார்.


Tags : by Poorni | Chapter 3 | 12th Tamil பூமணி | இயல் 3 | 12 ஆம் வகுப்பு தமிழ்.
12th Tamil : Chapter 3 : Sutrathar kanne Ula : Supplementary: Urimai thaagam by Poorni | Chapter 3 | 12th Tamil in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள : துணைப்பாடம்: உரிமைத்தாகம் - பூமணி | இயல் 3 | 12 ஆம் வகுப்பு தமிழ் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 3 : சுற்றத்தார் கண்ணே உள