Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | தொல்பழங்காலத் தமிழகம்

வரலாறு - தொல்பழங்காலத் தமிழகம் | 9th Social Science : History : Evolution of Humans and Society - Prehistoric Period

   Posted On :  11.09.2023 10:15 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 1 : மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம்

தொல்பழங்காலத் தமிழகம்

மண்ணில் புதைந்துள்ள கற்கருவிகள், பானைகள், விலங்குகளின் எலும்புகள், மகரந்தங்கள் ஆகியவற்றை அகழ்ந்தெடுத்து மனிதர்களின் கடந்த கால வாழ்க்கைமுறையைப் புரிந்துகொள்வது ‘தொல்லியல் அகழாய்வு’ ஆகும்.

தொல்பழங்காலத் தமிழகம்

 

பிற் பழங்கற்காலப் பண்பாடு

ஹோமினின் என அழைக்கப்படும் மனித மூதாதை இனத்தால் உருவாக்கப்பட்ட கற்காலக் கருவிகளிலேயே காலத்தால் முந்தைய பகுதியைச் சேர்ந்த கற்கருவிகள் தமிழ்நாட்டில்தான் உருவாக்கப்பட்டன. இப்பழங்கற்காலக் கருவிகள் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பாக அதிரம்பாக்கம், குடியம் உள்ளிட்ட இடங்களில் கிடைத்துள்ளன. அதிரம்பாக்கத்தில் நடந்த தொல்லியல் அகழாய்வுகளும், அங்கு கிடைத்த செய்பொருட்களைக் காஸ்மிக்கதிர் மூலம் காலத்தைக் கணிக்கும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதும் அங்கு சுமார் 1.5 - 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்திருப்பதைக் காட்டுகின்றன. கொசஸ்தலையாறு உலகில் மனித மூதாதையர்கள் வசித்த மிக முக்கியமான இடங்களில் ஒன்றாகும். இங்கு வாழ்ந்த மனித மூதாதையர்கள் ஹோமோ எரக்டஸ் என்ற வகையைச் சேர்ந்தவர்கள்.

தொல்லியல் அகழாய்வு

மண்ணில் புதைந்துள்ள கற்கருவிகள், பானைகள், விலங்குகளின் எலும்புகள், மகரந்தங்கள் ஆகியவற்றை அகழ்ந்தெடுத்து மனிதர்களின் கடந்த கால வாழ்க்கைமுறையைப் புரிந்துகொள்வது தொல்லியல் அகழாய்வுஆகும்.

காஸ்மிக்-கதிர் பாய்ச்சி கணித்தல் மாதிரிகளின் காலத்தைக் கணிக்க காஸ்மோஜெனிக் கதிர்களை வெளிப்படுத்தி அறியும் முறை.

பொ.ஆ. 1863இல் சர். இராபர்ட் புரூஸ் ஃபூட் என்ற இங்கிலாந்து நிலவியலாளர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் பழங்கற்காலக் கருவிகளை முதன்முறையாகக் கண்டுபிடித்தார். இந்தியாவில் இப்படிப்பட்ட கருவிகள் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது இங்குதான். எனவே, இங்கு கண்டெடுக்கப்பட்ட கைக்கோடரிகள் சென்னை கற்கருவித் தொழிலகம் என்று அழைக்கப்படுகின்றன. அவர் கண்டெடுத்த கருவிகள் சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன.

பழங்கற்கால மக்கள் காட்டுவிலங்குகளை வேட்டையாடினர். இயற்கையாகக் கிடைத்த பழங்கள், கிழங்குகள், விதைகள், இலைகளைச் சேகரித்தனர். அவர்களுக்கு இரும்பு, மட்பாண்டம் செய்வது பற்றித் தெரியாது. அவையெல்லாம் வரலாற்றில் மிகவும் பிற்காலத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டன.

 கீழ்ப் பழங்கற்காலத்தில் கைக்கோடரிகளும் பிளக்கும் கருவிகளும்தான் முக்கியமான  கருவி வகைகள். இந்தக் கருவிகளை மரத்தாலும்  எலும்பாலுமான கைப்பிடியில் செருகி வெட்டுவதற்குகுத்துவதற்கு, தோண்டுவதற்குப்பயன்படுத்தினார்கள். அவர்கள் சுத்தியல் கற்களையும், கோளக் கற்களையும்  கூடப் பயன்படுத்தினார்கள். அதற்காகக் குவார்சைட் வகை கூழாங்கற்களைத் தேர்ந்தெடுத்தார்கள். இந்தக் கருவிகள் மணல் திட்டுகளிலும் ஆற்றங்கரைகளிலும் பகுதியைச் சேர்ந்த கற்கருவிகள் தமிழ்நாட்டில்தான் காணப்படுகின்றன. அவை பல்லாவரம், குடியம்  குகை, அதிரம்பாக்கம், வடமதுரை, எருமை வெட்டிப்பாளையம், பரிக்குளம் ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன.

கீழ்ப் பழங்கற்காலக் கருவிகள் வட ஆற்காடு, தர்மபுரி பகுதிகளிலும் கிடைத்துள்ளன. இப்பகுதி மக்கள் செய்பொருட்களுக்கு பசால்ட் எனும் எரிமலைப் பாறைகளைப் பயன்படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டின் தென்பகுதியிலும் இலங்கையிலும் இந்தக் கீழ் பழங்கற்காலப் பண்பாட்டிற்கான சான்றுகள் கிடைக்கவில்லை.

பசால்ட் பாறைகள்: இவை எரிமலைப்பாறைகள் அல்லது தீப்பாறைகள் ஆகும். பூமிக்கடியில் இருந்து வெளிப்படும் உருகிய எரிமலைக் குழம்பிலிருந்து தோன்றியவை எரிமலைப்பாறைகள் ஆகும்.

அதிரம்பாக்கத்தின் கீழ்ப்பழங்கற்காலப் பண்பாடு சுமார் 2 - 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டம் இந்தியாவின் மற்ற பகுதிகளில் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை நீடித்தது.

 

இடைப் பழங்கற்காலப் பண்பாடு தமிழ்நாடு

இடைப் பழங்கற்காலப் பண்பாடு 3,85,000-1,72,000 காலகட்டத்தில் உருவானது. இக்காலகட்டத்தில் கருவிகளின் வகைகளில் மாறுதல்கள் ஏற்பட்டன. அளவில் சிறிய செய்பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. கருக்கற்கள், கற்செதில்கள், சுரண்டும் கருவி, கத்தி, துளைப்பான், லெவலாய்சியன் செதில்கள், கைக்கோடரி, பிளக்கும் கருவி ஆகியன இக்காலகட்டத்தின் கருவிகள் ஆகும். முந்தைய கட்டத்தோடு ஒப்பிடும்போது, இவை அளவில் சிறியவையாக உள்ளன.

இடைப்பழங்கற்கால பண்பாட்டின் சான்றுகள் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் காணப்படுகின்றன. தமிழ்நாட்டின் தென்பகுதியில் தே.புதுப்பட்டி, சீவரக்கோட்டை ஆகிய இடங்களில் மத்திய பழங்கற்காலக் கருவிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதே போல தஞ்சாவூர், அரியலூர் அருகிலும் இத்தகைய கருவிகள் கிடைத்துள்ளன.


 

இடைக்கற்காலப் பண்பாடு - தமிழ்நாடு

உலகின் பல பாகங்களிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும், இடைப் பழங்கற்காலப் பண்பாட்டைத் தொடர்ந்து, மேல் பழங்கற்கால  பண்பாடு உருவானது. தமிழ் நாட்டில் மேல் பழங்கற்காலப் பண்பாட்டுக்கான சான்றுகள் கிடைக்கவில்லை. ஆனால் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வசித்த மக்கள் நுண்கற்கருவிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.


இப்பண்பாட்டுக் காலகட்டம் பழங்கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடையில் உருவானதால் இது இடைக்கற்காலம் என்று அழைக்கப்படுகிறது. இடைக்கற்காலத்தின் வேட்டையாடி - உணவு சேகரிப்போர் பற்றிய சான்றுகள் சென்னை , வட ஆற்காடு, தர்மபுரி, சேலம், கோயம்புத்தூர், அரியலூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. தூத்துக்குடி அருகே உள்ள 'தேரி' பகுதிகளில் இடைக்கற்கால கற்கருவிகள் பல கிடைத்துள்ளன. இப்பகுதியில் உள்ள சிவப்பு மணல் குன்றுகள் உள்ள பகுதி 'தேரி' என்று அழைக்கப்படும்.

இக்கால மக்கள் செர்ட் (Chert), குவார்ட்ஸாலான (Quartz, பளிங்கு) சிறிய செதில்களையும் கருவிகளையும் பயன்படுத்தினர். இக்காலத்தின் கருவி வகைகள் சுரண்டும் கருவிகள், பிறை வடிவம், முக்கோண வடிவம் என்று பல வடிவங்களில் இருந்தன. மக்கள் உயிர் வாழ விலங்குகளை வேட்டையாடினார்கள். பழங்கள், கொட்டைகள் மற்றும் கிழங்குகளைச் சேகரித்தார்கள்.

சுரண்டும் கருவிகள்: சுரண்டும் கருவிகள் ஒரு மேற்பரப்பைச் சுரண்டுவதற்குப் பயன்படுகின்றன. இவை இன்று சமையலறையில் காய்கறிகளின் தோலை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகளைப் போன்றவை.

முக்கோணக் கருவிகள்: முக்கோண வடிவில் அமைந்திருக்கும் கருவிகள்.

பிறை வடிவக் கருவிகள்: பிறை வடிவில் அமைந்திருக்கும் கருவிகள்.

புதிய கற்காலப் பண்பாடு - தமிழ் நாடு

விலங்குகளைப் பழக்கப்படுத்தி, வேளாண்மை செய்த பண்பாடு புதியகற்காலப் பண்பாடு என்று அழைக்கப்படுகிறது. புதிய கற்கால பண்பாட்டின் மக்கள் செல்ட் (Celt) என்று அழைக்கப்பட்ட மெருகேற்றப்பட்ட கற்கோடரிகளைப் பயன்படுத்தினர். கால்நடை மேய்த்தல் அவர்களது முக்கியமான தொழிலாக இருந்தது. இவர்கள் சிறு கிராமங்களில் வசித்தார்கள். வீடுகள் கூரை வேயப்பட்டிருந்தன. தட்டிகளின் மீது களிமண் பூசி உருவாக்கப்படும் முறையில் சுவர்கள் கட்டப்பட்டன. புதியகற்கால ஊர்களுக்கான சான்று வேலூர் மாவட்டத்தின் பையம்பள்ளியிலும் தர்மபுரி பகுதியில் உள்ள சில இடங்களிலும் கிடைத்துள்ளன.

உங்களுக்குத் தெரியுமா?

புதியகற்கால மனிதர்கள்தான் -முதலில் மட்பாண்டங்களைச் செய்திருக்க வேண்டும்.  மட்பாண்டங்களை அவர்கள் கையாலோ - அல்லது மெதுவாகச் சுற்றும் சக்கரத்தைக் கொண்டோ வனைந்தார்கள். மட்பாண்டங்களைச் சுடுவதற்கு முன்னால் அவற்றைக் கூழாங்கற்கள் கொண்டு மெருகேற்றினார்கள். இதனைத் தேய்த்து மெருகிடுதல் (burnishing) என்பர்.

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் பையம்பள்ளி என்ற ஊர் உள்ளது. இங்கு இந்திய அரசின் தொல்லியல் துறை, அகழாய்வு செய்துள்ளது. தமிழகத்தில் முதன்முதலில் மட்பாண்டங்களும் வேளாண்மை செய்ததற்கான சான்றும் கிடைத்துள்ளன. இங்கு கேழ்வரகு, கொள்ளு, பச்சைபயறு ஆகிய தானியங்கள் கிடைத்துள்ளன.

 

இரும்புக் காலம் - பெருங்கற்காலம்

புதியகற்காலத்தைத் தொடர்ந்து வந்த பண்பாட்டுக் காலம் இரும்புக் காலம் என்று அழைக்கப்படுகிறது. அதன் பெயர் குறிப்பிடுவதைப் போல, இக்காலகட்ட மக்கள் இரும்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர். இது சங்ககாலத்திற்கு முந்தைய காலம் ஆகும். இரும்புக் காலம் நல்ல பண்பாட்டு வளர்ச்சி உருவான காலகட்டம். இக்காலத்தில்தான் சங்ககாலத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. இரும்புக் காலத்தில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் குடியேறிவிட்டார்கள். மக்களிடையே பரிமாற்ற உறவுகள் வளர்ந்தன.


லெமூரியாவும் தமிழர்களும்

சில ஆய்வாளர்கள், மூழ்கிய லெமூரியா கண்டத்தில் தமிழர்கள் தோன்றியதாகக் கருதுகின்றனர். லெமூரியா கண்டம் குறித்த இந்தக் கருத்து 19ஆம் நூற்றாண்டில் முன்வைக்கப்பட்டது. புவித்தட்டு நகர்வியல் கோட்பாட்டில் (plate tectonics) ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் காரணமாக இப்போது இந்தக் கருத்து குறித்துப் பல்வேறு பார்வைகளை அறிஞர்கள் முன்வைக்கின்றனர்.

 தமிழ் இலக்கியக் குறிப்புகள் கடல் கொண்டதைப் பற்றிக் கூறுகின்றன. இவை கன்னியாகுமரியைச் சுற்றியுள்ள சில பகுதிகள் கடலுக்கடியில் மூழ்கடிக்கப்பட்டதாகச் சொல்கின்றன. கி.மு. (பொ.ஆ.மு.) 5000க்கு முன் இலங்கையின் சில பகுதிகளும் தமிழ்நாடும் நிலத்தால் இணைக்கப்பட்டிருந்தன. எனவே கடல் மட்ட உயர்வின் காரணமாகக் கன்னியாகுமரிக்கருகே சில நிலப்பகுதிகளும், இலங்கை இந்திய இணைப்பும் கடலுக்கடியில் சென்றிருக்கலாம். இப்பகுதியில் கூடுதல் ஆழ்கடல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளில் இடைக் கற்காலம் முதல் புதிய கற்காலம் வரை மனித இனம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொடர்ந்து வாழ்ந்திருப்பதற்கான சான்றுகளை அகழ்வாய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

மக்களுக்கு உலோகவியல் மற்றும் மட்பாண்டத் தொழில் குறித்துத் தெரிந்திருந்தது. அவர்கள் இரும்பு, வெண்கலப் பொருட்களையும், தங்க அணிகலன்களையும்பயன்படுத்தினார்கள்.அவர்கள் சங்காலான அணிகலன்களையும். செம்மணிக்கல் (கார்னீலியன்) மற்றும் பளிங்காலான (குவார்ட்ஸ்) மணிகளையும் பயன்படுத்தினார்கள். தூத்துக்குடி மாவட்டத்தின் ஆதிச்சநல்லூர், மதுராந்தகத்திற்கு அருகிலுள்ள சாணூர், புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள சித்தன்னவாசல் எனப் பல இடங்களில் இரும்புக் காலத்திற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. தமிழகம் முழுவதும் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன.

 

பெருங்கற்கால ஈமச்சின்ன வகைகள்

மக்கள் இறந்தவர்களைப் புதைப்பதற்கு பெரிய கற்களைப் பயன்படுத்தியதால், இரும்புக் காலம், பெருங்கற்காலம் என்றும் அழைக்கப்படுகிறது. இறந்தவர்களின் உடலோடு ஈமப்பொருட்களாக, இரும்புப் பொருட்கள், கார்னீலியன் மணிகள், வெண்கலப் பொருட்கள் ஆகியவையும் புதைக்கப்பட்டன. ஈமச்சின்னங்கள் சிலவற்றில் மனித எலும்புகள் கிடைக்கவில்லை . மற்ற பிற ஈமப்பொருட்களே கிடைத்துள்ளன. இவற்றை ஈம நினைவுச் சின்னங்கள் என்று குறிப்பிடலாம்.

ஈமப்பொருட்கள் என்பவை இறந்தவரின் எலும்புகளோடு ஈமச்சின்னத்தில் புதைக்கப்படும் பொருட்கள், மரணத்திற்குப் பிறகான இறந்தவரின் வாழ்விற்கு அவை உதவக்கூடும் என்று மக்கள் நம்பியிருக்கலாம். எகிப்து பிரமிடுகளிலும் இதுபோன்ற ஈமப்பொருட்கள் உண்டு.

பண்டைய வரலாற்றுக் காலம் அல்லது சங்க காலத்தில் இதுபோன்று புதைப்பது நிகழ்ந்துள்ளது. சங்க இலக்கியங்கள் புதைப்பது குறித்த மக்களின் பல்வேறு வழக்கங்களைக் கூறுகின்றன. பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் டோல்மென் எனப்படும் கற்திட்டை, சிஸ்ட் எனப்படும் கல்லறைகள், மென்ஹிர் எனப்படும் நினைவுச்சின்ன குத்துக் கல், தாழி, பாறையைக் குடைந்து உருவாக்கிய குகைகள், சார்க்கோபேகஸ் எனப்படும் ஈமத்தொட்டிகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.


கொடக்கல் அல்லது குடைக்கல் (குடை வகை), தொப்பிக்கல், பத்திக்கல் ஆகிய வகைகள் கேரளாவில் காணப்படுகின்றன. மேஜை போன்ற கல்லால் உருவாக்கப்பட்ட டோல்மென்கள் ஈமச் சடங்கின் நினைவுச்சின்னமாக நிறுவப்பட்டன. சிஸ்ட் என்பது மண்ணில் புதைக்கப்படும் கல்லறை போன்றது. இவை நான்கு புறமும் நான்கு கற்பாளங்களை நிறுத்தி, மேலே ஒரு கற்பாளத்தை வைத்து மூடி உருவாக்கப்படும். அர்ன் என்பவை மட்பாண்ட சாடிகள். இவை இறந்தவர்களைப் புதைக்கப் பயன்படுத்தப்பட்டவை. சார்க்கோபேகஸ் என்பவை சுட்ட களிமண்ணாலான சவப்பெட்டி போன்றவை. இவற்றிற்கு சில சமயங்களில் பல கால்களை வைத்துத் தயாரிப்பார்கள். மென்ஹிர் என்பவை புதைத்ததன் நினைவுச் சின்னம் போல நிறுவப்படும் தூண் போன்ற நடுகற்கள்.

கல்லறை (Cist), கற்திட்டைகளில் "போர்ட் ஹோல்" (Porthole) எனப்படும் இடு துளை ஒன்று ஒருபுறம் இடப்பட்டிருக்கும். இது அவற்றின் நுழைவாயில் போலப் பயன்பட்டன. இவை ஆன்மா வந்து செல்வதற்காக வைக்கப்பட்டவை என்ற கருத்தும் உள்ளது.

நடுகற்கள் (மென்ஹிர்கள்) இரும்புக் காலத்தில் வீரர்களுக்காகக் கட்டப்பட்டிருக்கலாம். நடுகல் மரபு இரும்புக் காலத்திலோ அல்லது அதற்கு முன்போ தொடங்கியிருக்கக் கூடும்.

 

வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும்

இரும்புக் கால மக்கள் வேளாண்மையும் மேற்கொண்டார்கள். ஆடு, மாடுகளையும் வளர்த்தார்கள். சில குழுக்கள் வேட்டையாடிக் கொண்டும், உணவு சேகரித்துக் கொண்டும் இருந்தன. தினையும் நெல்லும் பயிரிடப்பட்டன. இந்தக் காலகட்டத்தில்தான் பாசன நிருவாகம் மேம்பட்டது. ஏனெனில் பல பெருங்கற்கால இடங்கள் நதிகள், குளங்களுக்கு அருகே இருந்தன. ஆற்றுப்படுகைகளில் (டெல்டா பகுதிகளில்), பாசன தொழில்நுட்பம் வளர்ந்தது. பெருங்கற்கால இடங்களான தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரிலும், பழனிக்கு அருகே உள்ள பொருந்தலிலும் ஈமச்சின்னங்களுக்குள் நெல்லை வைத்துப் புதைத்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

 

இரும்புக்காலச் சமூகமும் அரசியலும்

இரும்புக்காலத்தில் வேளாண்மைச் சமுதாயங்கள், ஆடு மாடு வளர்ப்போர், வேட்டையாடி உணவு சேகரிப்போர் ஆகியோரும் இருந்தனர். இக்காலகட்டத்தில் கைவினைக் கலைஞர்கள், மட்பாண்டம் செய்பவர்கள், உலோக வேலை செய்பவர்கள் (கம்மியர்) தொழில்முறையாளர்களாக இருந்தார்கள். சமூகத்தில் பல குழுக்கள் இருந்தன. கல்லறைகளின் அளவுகளும், ஈமப்பொருட்களின் வேறுபாடுகளும், இக்காலத்தில் ஏராளமான சமூகக் குழுக்கள் இருந்ததையும், அவர்களுக்குள் வேறுபட்ட பழக்கங்கள் இருந்ததையும்காட்டுகின்றன. இவற்றில் சில, ஒரு தலைவருக்குக் கீழான சமூகங்களாகத் தம்மை அமைத்துக்கொண்டன. கால்நடைகளைக் கவர்வது, போர்களுக்கும் அத்துமீறல்களுக்கும் வழிவகுத்தது. இக்காலத்தில்தான் எல்லைகள் விரிவாக்கம் தொடங்கியது.

மட்பாண்டங்கள்

தொல்லியல் ஆய்வு நடந்த இடங்களில் கிடைக்கும் முக்கியமானசான்று மட்பாண்டங்களாகும். இரும்புக்கால, சங்ககால மக்கள் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களை மட்பாண்டங்களுக்குப் பயன்படுத்தினார்கள். மட்பாண்டங்கள் சமையல், பொருள்களைச் சேமிப்பதற்கு, சாப்பிடுவதற்கு எனப் பயன்படுத்தப்பட்டன. கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்கள் உள்ளே கருப்பாகவும், வெளியே சிவப்பாகவும் காணப்படும். வெளிப்புறம் பளபளப்பாக இருக்கும்.


 

இரும்புத் தொழில்நுட்பமும் உலோகக் கருவிகளும்

பெருங்கற்காலக் கல்லறைகளில் ஈமப் பொருட்களாக ஏராளமான இரும்புப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. வாள், குறுவாள் போன்ற கருவிகள். கோடரிகள், உளிகள், விளக்குகள், முக்காலிகள் ஆகியவை கிடைத்துள்ளன.

இப்பொருட்களில் சிலவற்றிற்கு எலும்பு அல்லது மரம் அல்லது கொம்பாலான கைப்பிடி பொருத்தப்பட்டிருக்கிறது. இரும்புக் கருவிகள் வேளாண்மைக்கும், வேட்டையாடுதலுக்கும், உணவு சேகரிப்பதற்கும், போர்களுக்கும் பயன்படுத்தப்பட்டன. வெண்கலக் கிண்ணங்கள், விலங்கு, பறவை உருவங்களால் அணிவேலைப்பாடு செய்யப்பட்ட கலங்கள், வெண்கலத்திலான முகம்பார்க்கும் கண்ணாடி, மணிகள் ஆகியவையும் கிடைத்துள்ளன.

Tags : History வரலாறு.
9th Social Science : History : Evolution of Humans and Society - Prehistoric Period : Prehistoric Tamilagam History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 1 : மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம் : தொல்பழங்காலத் தமிழகம் - வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 1 : மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம்