Home | 6 ஆம் வகுப்பு | 6வது கணிதம் | இலாபம் மற்றும் நட்டம்

பருவம் 2 அலகு 3 | 6 ஆம் வகுப்பு கணக்கு - இலாபம் மற்றும் நட்டம் | 6th Maths : Term 2 Unit 3 : Bill, Profit and Loss

   Posted On :  22.11.2023 03:19 am

6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : பட்டியல், இலாபம் மற்றும் நட்டம்

இலாபம் மற்றும் நட்டம்

நாம் ஒரு பொருளை வாங்கும் போது அதன் விலையில் அப்பொருளைத் தயாரிப்பவரை விட முகவர்தான் அதிகத் தொகையை நிர்ணயிக்கிறார். ஏனெனில் முகவர் பொருள்களை வாங்கக் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதாலும், நேரத்தைச் செலவிட்டுத் தனது இடத்திற்குப் பொருள்களை எடுத்து வருவதாலும், தனது முதலீட்டுக்கு மேல் சிறிது தொகையை அதிகமாகப் பெற விரும்புகிறார். முகவர் பெறும் இந்தக் கூடுதல் தொகையே அவருக்கான இலாபம் ஆகும்.

இலாபம் மற்றும் நட்டம்

நமது அன்றாட வாழ்வில் உணவு, ஆடை, வண்டி, புத்தகம் போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். இவை ஒவ்வொன்றும் ஒருவரால் அல்லது குறிப்பிட்ட ஒரு குழுவால் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு நேரிடையாகவோ அல்லது முகவர்கள் மூலமாகவோ விற்பனை செய்யப்படுகின்றன. நாம் ஒரு பொருளை வாங்கும் போது அதன் விலையில் அப்பொருளைத் தயாரிப்பவரை விட முகவர்தான் அதிகத் தொகையை நிர்ணயிக்கிறார். ஏனெனில் முகவர் பொருள்களை வாங்கக் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதாலும், நேரத்தைச் செலவிட்டுத் தனது இடத்திற்குப் பொருள்களை எடுத்து வருவதாலும், தனது முதலீட்டுக்கு மேல் சிறிது தொகையை அதிகமாகப் பெற விரும்புகிறார். முகவர் பெறும் இந்தக் கூடுதல் தொகையே அவருக்கான இலாபம் ஆகும். முகவரின் அவசரத் தேவை அல்லது வேறு காரணங்களால் தயாரிப்பாளருக்கு முகவர் செலுத்திய தொகையைவிடக் குறைவாக விற்கும் சூழலில் முகவருக்கு இழப்பு ஏற்படுகிறது. அவருடைய முதலீட்டின் மீது ஏற்படும் இந்தத் தொகை இழப்பு நட்டம் ஆகும். பொருள்களை வாங்கி விற்கும் இந்தச் செயலில் இலாபமோ அல்லது நட்டமோ ஏற்படலாம். இதைப் பற்றி நாம் விரிவாகக் காண்போம்.

சிந்திக்க

வாங்கிய விலையானது தயாரிப்பாளர், முகவர், விற்பனையாளர் ஆகியோரைப் பொறுத்து மாறும். ஏன்? விவாதிக்க


அடக்க விலை

தயாரிப்பாளர் அல்லது முகவரிடமிருந்து ஒரு விற்பனையாளர் பொருள்களை வாங்குகிறார். இது வாங்கிய விலை எனப்படும். மேலும் அவர் போக்குவரத்து, கூலி போன்றவற்றிற்குக் கூடுதலாகச் செலவிடுகிறார். ஆகவே, முதலீடு, மூலப் பொருள்களின் விலை, வேலையாள்களின் கூலி, மின் கட்டணம், போக்குவரத்துச் செலவுகள் போன்றவற்றை உள்ளடக்கியதே அடக்க விலை ஆகும்.

அடக்க விலை = வாங்கிய விலை + கூடுதல் செலவுகள்

எடுத்துக்காட்டாக, ஏபிசி மகிழுந்து நிறுவனம், ஒரு மகிழுந்து தயாரிக்க மூலப் பொருள்கள் வாங்க ₹2,00,000; வேலையாள்களுக்கு ஊதியம் வழங்க ₹70,000; மின் கட்டணம் செலுத்த ₹15,000; போக்குவரத்துச் செலவுக்காக ₹10,000 எனச் செலவிடுகிறது. ஆகவே, தயாரித்த ஒரு மகிழுந்தின் அடக்க விலை = ₹2,00,000 + ₹70,000+ ₹15,000 + ₹10,000 = ₹2,95,000 ஆகும்.

குறிப்பு

வாங்கப்பட்ட பொருள்களைத் தனது இடத்திற்கு எடுத்து வரப் போக்குவரத்துச் செலவு, வேலையாள்களின் கூலி, சுங்க வரி போன்றவற்றிற்குச் செலவிடும் தொகையானது 'கூடுதல் செலவுகளில்' ஒரு பகுதியாகின்றன.


குறித்த விலை

ஒரு விற்பனையாளர் பொருள்களை முகவரிடமிருந்து விற்பனை நிலையத்திற்கு எடுத்துச் சென்றபின் அவர் தம் விற்பனையில் இலாபம் ஈட்ட வேண்டும். எனவே, அவர் அடக்க விலையை விட அதிகமாகப் பொருளின் மீது விலையைக் குறிக்கிறார். இதுவே, குறித்த விலை எனப்படும்.

மேற்கண்ட எடுத்துக்காட்டில், ஏபிசி மகிழுந்து நிறுவனம் ₹ 50,000 இலாபம் பெற விரும்புகிறது. எனவே, அந்நிறுவனம் மகிழுந்தின் விலையை ₹2,95,000 + ₹50,000 = ₹3,45,000 என குறித்த விலையாக அமைக்கிறது.


தள்ளுபடி


குறித்த விலையிலிருந்து நுகர்வோரை ஈர்ப்பதற்காகவோ அல்லது பிற காரணங்களுக்காகவோ வழங்கப்படும் விலைக்குறைப்பே தள்ளுபடி ஆகும்.

ஏபிசி மகிழுந்து நிறுவனம், தனது விற்பனையை அதிகபடுத்தும் பொருட்டு மகிழுந்து வாங்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு ₹5,000 விலையைக் குறைக்க முடிவு செய்கிறது. இங்குத் தள்ளுபடி ₹5,000 ஆகும்.

குறிப்பு

அதிகபட்ச விற்பனை விலை (MRP) என்பது தயாரிப்பவரால் நிர்ணயிக்கப்படுகிறது. எந்த ஒரு பொருளும் இந்த விலைக்கு மேலாக விற்பனை செய்யப்படக் கூடாது

சிந்திக்க: குறித்த விலை, அடக்க விலை இவற்றில் எது பெரியது? குறித்த விலை


விற்பனை விலை

தள்ளுபடி இருப்பின், குறித்த விலையில் தள்ளுபடியைக் குறைத்தபின் ஒரு பொருளுக்கு வாடிக்கையாளர் செலுத்தும் தொகை விற்பனை விலை எனப்படும்.

மகிழுந்தின் குறித்த விலை ₹3,45,000. ஏபிசி நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் மகிழுந்தின் விற்பனை விலை = ₹3,45,000 – ₹5,000 = ₹3,40,000.

அதாவதுகுறித்த விலைதள்ளுபடி = விற்பனை விலை

மேற்கண்ட விவரங்களிலிருந்து பின்வருவனவற்றைத் தீர்மானிக்கலாம்.

அடக்க விலை < விற்பனை விலை எனில் இலாபம் ஆகும். இலாபம் = விற்பனை விலைஅடக்க விலை

அடக்க விலை > விற்பனை விலை எனில் நட்டம் ஆகும். நட்டம் = அடக்க விலைவிற்பனை விலை

அடக்க விலை = விற்பனை விலை எனில் இலாபமுமில்லை நட்டமுமில்லை.

தள்ளுபடி = குறித்த விலைவிற்பனை விலை () விற்பனை விலை = குறித்த விலைதள்ளுபடி

தள்ளுபடி இல்லையெனில் குறித்த விலை = விற்பனை விலை.


இவற்றை முயல்க

ஏறு வரிசையில் அமைக்க.

(i) அடக்க விலை, குறித்த விலை,தள்ளுபடி 

தள்ளுபடி, அடக்க விலை, குறித்த விலை

(ii) குறித்த விலை, விற்பனை விலை, தள்ளுபடி

தள்ளுபடி, குறித்த விலை, விற்பனை விலை


எடுத்துக்காட்டு 3: பின்வரும் அட்டவணையில் பொருத்தமான விவரங்களை நிரப்புக.


தீர்வு:

(i) அடக்க விலை < விற்பனை விலை 

இலாபம் = விற்பனை விலைஅடக்க விலை

= ₹60 –₹50

= ₹10

(ii) அடக்க விலை > விற்பனை விலை

நட்டம் = அடக்க விலைவிற்பனை விலை

= ₹70 – ₹60

= ₹10

(iii) இலாபம் = விற்பனை விலைஅடக்க விலை

₹20 = விற்பனை விலை – ₹100

விற்பனை விலை = ₹20 + ₹100

= ₹120

(iv) நட்டம் = அடக்க விலைவிற்பனை விலை

₹15 = ₹80 – விற்பனை விலை

விற்பனை விலை = ₹80 – ₹15

= ₹ 65

(v) இலாபம் = விற்பனை விலைஅடக்க விலை

₹25 = ₹70 – அடக்க விலை

அடக்க விலை = ₹70 – ₹ 25

= ₹45

(vi) நட்டம் = அடக்க விலைவிற்பனை விலை

 ₹30 = அடக்க விலை – ₹100

அடக்க விலை = ₹30 +₹ 100

 = ₹ 130


சிந்திக்க: குறித்த விலை, விற்பனை விலை இவற்றில் எது பெரியது? குறித்த விலை


எடுத்துக்காட்டு 4: ஒரு மேசையானது ₹4500இக்கு வாங்கப்பட்டு ₹4800 இக்கு விற்கப்படுகிறது எனில் இலாபம் அல்லது நட்டம் காண்க.

தீர்வு:


அடக்க விலை = ₹ 4500

விற்பனை விலை = ₹4800

இங்கு, அடக்க விலை < விற்பனை விலை

இலாபம் = விற்பனை விலைஅடக்க விலை

= ₹4800 – ₹4500 

= ₹300


எடுத்துக்காட்டு 5: ஒரு பழ வணிகர் ஒரு கூடைப் பழங்களை ₹500இக்கு வாங்கினார். எடுத்து வரும்போது சில பழங்கள் நசுங்கிவிட்டன. மீதம் உள்ள பழங்களை ₹480இக்கு அவரால் விற்பனை செய்ய முடிந்தது எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.

தீர்வு:

அடக்க விலை = ₹500

விற்பனை விலை = ₹480

இங்கு, அடக்க விலை > விற்பனை விலை

நட்டம் = அடக்க விலைவிற்பனை விலை

= ₹500 – ₹480

= ₹20


எடுத்துக்காட்டு 6: பாரி ஓர் உந்து வண்டியை ₹55,000இக்கு வாங்கி ₹5500 இலாபத்திற்கு விற்பனை செய்தார் எனில் உந்து வண்டியின் விற்பனை விலை என்ன?

தீர்வு:

அடக்க விலை = ₹55,000

இலாபம் = ₹5,500

இலாபம் = விற்பனை விலைஅடக்க விலை

₹5,500 = விற்பனை விலை – ₹55,000

விற்பனை விலை = ₹5,500 + ₹55,000

             = ₹60,500


எடுத்துக்காட்டு 7: மணிமேகலை ₹25,52,500இக்கு ஒரு வீட்டை வாங்கி அதைச் சீரமைக்க ₹2,28,350 செலவு செய்தார். அவர் அவ்வீட்டை ₹30,52,000இக்கு விற்றார் எனில் அவரது இலாபம் அல்லது நட்டம் காண்க.

தீர்வு:

அடக்க விலை = ₹25,52,500 + ₹2,28,350

= ₹27,80,850

விற்பனை விலை = ₹30,52,000

அடக்க விலை < விற்பனை விலை

இலாபம் = விற்பனை விலைஅடக்க விலை

= ₹30,52,000 – ₹ 27,80,850

= ₹2,71,150


எடுத்துக்காட்டு 8: ஒருவர் ₹300 இக்கு 75 மாம்பழங்கள் வாங்கி அவற்றில் 50 மாம்பழங்களை ₹300 இக்கு விற்பனை செய்தார். அனைத்து மாம்பழங்களும் விற்பனையான பின் அவரது இலாபம் அல்லது நட்டம் காண்க.

தீர்வு:

75 மாம்பழங்களின் அடக்க விலை ₹300 எனில் 1 மாம்பழத்தின் அடக்க விலை = 300/75 = ₹4 

50 மாம்பழங்களின் விற்பனை விலை ₹300 எனில் ஒரு மாம்பழத்தின் விற்பனை விலை = 300/50 = ₹6 

எனவே 75 மாம்பழங்களின் விற்பனை விலை = 75 × 6 = ₹450

விற்பனை விலை  > அடக்க விலை

இலாபம் = விற்பனை விலைஅடக்க விலை

= 450 – 300 = ₹150


எடுத்துக்காட்டு 9: ஒரு பழ வணிகர் ஒரு டசன் ஆப்பிள்களை ₹84இக்கு வாங்கினார். 2 ஆப்பிள்கள் அழுகிவிட்டன. அவருக்கு ₹16 இலாபம் கிடைக்க வேண்டும் எனில், ஒரு ஆப்பிளின் விற்பனை விலையைக் காண்க.

தீர்வு:

12 ஆப்பிள்களின் அடக்க விலை = ₹84.

2 ஆப்பிள்கள் அழுகியதால், மீதமுள்ள ஆப்பிள்களின் எண்ணிக்கை = 10

இலாபம் ₹16 என்பதால் 10 ஆப்பிள்களின் விற்பனை விலை = அடக்க விலை + இலாபம்

= ₹84 + ₹16

= ₹ 100

1 ஆப்பிளின் விற்பனை விலை =100/10 = ₹10


எடுத்துக்காட்டு 10: 25 கி.கி எடையுள்ள கோதுமைப்பை ஒன்று ₹1550 இக்கு விற்பனை செய்யப்பட்டு ₹150 இலாபம் பெறப்படுகிறது எனில் கோதுமைப்பையின் அடக்க விலையைக் காண்க.

தீர்வு

விற்பனை விலை = ₹1550

இலாபம் = ₹ 150

இலாபம் = விற்பனை விலைஅடக்க விலை

₹150 = ₹1550 – அடக்க விலை

அடக்க விலை = ₹1550 – ₹ 150

= ₹1400


எடுத்துக்காட்டு 11: பின்வரும் அட்டவணையை பொருத்தமான விவரங்களைக் கொண்டு நிரப்புக.


தீர்வு

(i) அடக்க விலை = ₹110

  குறித்த விலை   = ₹130

    தள்ளுபடி      = ₹5

விற்பனை விலை    =  குறித்த விலைதள்ளுபடி

             = ₹130 – ₹5

              = ₹125

இலாபம் = விற்பனை விலைஅடக்க விலை

      = ₹ 125 – ₹110

      = ₹15

(ii) அடக்க விலை = ₹110

     குறித்த விலை = ₹ 130

      தள்ளுபடி = ₹20

விற்பனை விலை = குறித்த விலைதள்ளுபடி

= ₹130 – ₹20

= ₹110

அடக்க விலை = விற்பனை விலை

இலாபம் இல்லை / நட்டம் இல்லை.

(iii) குறித்த விலை = ₹130

தள்ளுபடி  = ₹15

விற்பனை விலை = குறித்த விலைதள்ளுபடி

= ₹ 130 – ₹15

= ₹ 115

இலாபம்  = ₹30

இலாபம் = விற்பனை விலைஅடக்க விலை

₹30 = ₹115 – அடக்க விலை

அடக்க விலை = ₹115 – ₹30

= ₹85

(iv) குறித்த விலை = ₹130

நட்டம் = ₹25

விற்பனை விலை = குறித்த விலைதள்ளுபடி

= ₹130 – ₹0

= ₹130

நட்டம் = அடக்க விலைவிற்பனை விலை

₹25 = அடக்க விலை – ₹130

அடக்க விலை = ₹25 + ₹130

= ₹155

(v) குறித்த விலை = ₹125

      தள்ளுபடி =  ₹0

விற்பனை விலைகுறித்த விலைதள்ளுபடி

= ₹125 – ₹0

= ₹125

இலாபம் இல்லை / நட்டம் இல்லை

அடக்க விலை = விற்பனை விலை

அடக்க விலை = ₹125

(vi) விற்பனை விலை = ₹350

தள்ளுபடி = ₹ 50

இலாபம் = ₹100

குறித்த விலை = விற்பனை விலை + தள்ளுபடி

 = ₹350 + ₹50

 = ₹400

  இலாபம்    =  விற்பனை விலைஅடக்க விலை

 ₹100     = ₹350 – அடக்க விலை

அடக்க விலை = ₹350 – ₹100

 = ₹250


எடுத்துக்காட்டு 12: பரதன் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சட்டையின் விலையில் ₹50 தள்ளுபடி செய்த பிறகும் ஒரு சட்டைக்கு ₹100 இலாபம் பெறுகிறார். குறித்த விலை ₹800 எனில் ஒரு சட்டையின் அடக்க விலை என்ன?

தீர்வு:

தள்ளுபடி = ₹50

இலாபம் = ₹100

குறித்த விலை = ₹800

விற்பனை விலை = குறித்த விலைதள்ளுபடி

= ₹800 – ₹ 50

= ₹750

 ₹இலாபம் = விற்பனை விலைஅடக்க விலை

₹100 = ₹750 – அடக்க விலை

அடக்க விலை = ₹750 – ₹ 100

= ₹650


எடுத்துக்காட்டு 13: இரகு ஒரு நாற்காலியை ₹3000இக்கு வாங்குகிறார். அந்நாற்காலியின் விலையில் ₹300 தள்ளுபடி செய்த பின் ₹500 இலாபம் பெறுகிறார் எனில் அந்நாற்காலியின் குறித்த விலை என்ன?

தீர்வு :


அடக்க விலை = ₹3000

இலாபம் = ₹500

தள்ளுபடி = ₹300

விற்பனை விலை = குறித்த விலைதள்ளுபடி

 = குறித்த விலை – ₹300

இலாபம் = விற்பனை விலைஅடக்க விலை

₹500 = குறித்த விலை – ₹300 – ₹3000

குறித்த விலை = ₹500 + ₹300 + ₹3000

= ₹3800


எடுத்துக்காட்டு 14 : மணி ஓர் அன்பளிப்புப் பொருளை ₹1500இக்கு வாங்குகிறார். அப்பொருளை விற்பனை செய்யும் போது ₹150 இலாபம் பெற விரும்பி ₹1800 என விலை குறிக்கிறார். அவர் தனது வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு தள்ளுபடி தர வேண்டும்?

தீர்வு:

அடக்க விலை = ₹1500

 இலாபம் = ₹150 

குறித்த விலை = ₹1800

விற்பனை விலை = குறித்த விலைதள்ளுபடி

= ₹1800 – தள்ளுபடி

இலாபம் = விற்பனை விலைஅடக்க விலை

₹150 = ₹1800 – தள்ளுபடி – ₹1500

தள்ளுபடி = ₹1800 – ₹1500 – ₹150

 = ₹ 150

Tags : Term 2 Chapter 3 | 6th Maths பருவம் 2 அலகு 3 | 6 ஆம் வகுப்பு கணக்கு.
6th Maths : Term 2 Unit 3 : Bill, Profit and Loss : Profit and Loss Term 2 Chapter 3 | 6th Maths in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் : இலாபம் மற்றும் நட்டம் - பருவம் 2 அலகு 3 | 6 ஆம் வகுப்பு கணக்கு : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : பட்டியல், இலாபம் மற்றும் நட்டம்