அலகு 2 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - குடியுரிமையை பெறுதல் | 8th Social Science : Civics : Chapter 2 : Citizens and Citizenship
குடியுரிமையை
பெறுதல்
1955ஆம்
ஆண்டு இந்தியக் குடியுரிமைச் சட்டம் குடியுரிமை பெறுவதற்கான ஐந்து வழிமுறைகளை பரிந்துரைக்கிறது.
அவைகள் பின்வருவனவாறு வகைப்படுத்தப்படுகின்றன.
1. பிறப்பால் குடியுரிமை பெறுதல்
• இந்தியாவில்
1950 ஜனவரி 26 அன்று அல்லது அதன் பிறகு அதேசமயம் 1987 ஜூலை 1க்கு முன்பு பிறந்த ஒரு
நபர் அவரது பெற்றோர்கள் எந்த நாட்டவராயினும் பிறப்பால் இந்திய குடியுரிமை பெறுகிறார்.
• 1987
ஜூலை 1 மற்றும் அதற்குப் பின் இந்தியாவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் ஒருவர்
அச்சமயத்தில் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
• 2004
டிசம்பர் 3 மற்றும் அதற்குப் பின் இந்தியாவில் பிறந்தவர்கள் பிறப்பால் குடியுரிமை பெறுகின்றனர்.
அல்லது பெற்றோரில் ஒருவர் இந்தியக்குடிமகனாகவும் மற்றொருவர் சட்ட விரோதமாக இந்தியாவிற்குள்
இடம்பெயர்ந்தவராக இல்லாதிருந்தால் குடியுரிமை பெறுகின்றனர்.
2. வம்சாவளியால் குடியுரிமை
பெறுதல்
•1950
ஜனவரி 26 முதல் 1992 டிசம்பர் 10 க்கு முன்னர் வெளிநாட்டில் பிறந்திருந்தாலும் அவருடைய
தந்தை இந்தியக் குடிமகனாக இருக்கும் பட்சத்தில் அவர் வம்சாவளி மூலம் இந்திய குடியுரிமையைப்
பெறுகிறார்.
•1992
டிசம்பர் 10 மற்றும் அதற்கு பின்னர் வெளிநாட்டில் பிறந்தவர்களின் பெற்றோரில் எவரேனும்
ஒருவர் அச்சமயத்தில் இந்திய குடிமகனாக இருந்தால் அவர் இந்தியக் குடியுரிமையைப் பெறுகிறார்.
•2004
டிசம்பர் 3ஆம் நாள் முதல் வெளிநாட்டில் பிறந்தவர்கள் அவர்களுடைய பிறப்பினை ஒரு வருடத்திற்குள்
இந்திய தூதரகத்தில் பதிவு செய்யவில்லை எனில் இந்திய வம்சாவளிக் குடிமகனாக முடியாது.
3. பதிவு செய்தல் மூலம் குடியுரிமை
பெறுதல்
•இந்திய
வம்சாவளியைச் சார்ந்த ஒரு நபர் எந்த ஒரு நாட்டில் வசித்தாலும் அல்லது பிரிக்கப்படாத
இந்தியாவிற்கு வெளிப்பகுதியில் வசிப்பவராக இருந்தாலும் பதிவு செய்தலின் மூலம் குடியுரிமை
பெறலாம்.
•இந்திய
வம்சாவளியை சேர்ந்த ஒரு நபர் எந்தவொரு நாட்டில் வசித்தாலும் இந்தியாவில் ஏழு ஆண்டுகள்
வசித்த பிறகே பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்க முடியும்.
•இந்தியக்
குடிமகனை திருமணம் செய்த ஒருவர் பதிவின் மூலம் விண்ண ப்பிக்கும் முன் ஏழு ஆண்டுகள்
இந்தியாவில் வசித்தவராக இருத்தல் வேண்டும்.
4. இயல்புக் குடியுரிமை
ஒருவர்
விண்ண ப்பிப்பதன் மூலம் மத்திய அரசு அவருக்கு இயல்பு குடியுரிமைக்கான சான்றிதழை வழங்குகிறது.
•எந்த
ஒரு நாட்டிலும் குடிமகனாக இல்லாத ஒரு இந்தியர் அவர் வசிக்கும் நாட்டின் குடிமகனாவதை
தடுக்கும் பொருட்டு இயல்பு குடியுரிமை வழங்கப்படுகிறது.
•வெளிநாட்டுக்
குடியுரிமையை ஒருவர் துறக்கும் பட்சத்தில் அவருக்கு இயல்பு குடியுரிமை வழங்கப்படுகிறது.
•ஒருவர்
இந்தியாவில் வசிக்கும் பட்சத்தில் அல்லது இந்திய அரசுப்பணியில் இருக்கும் பட்சத்தில்
(அ) ஆண்டுமுழுவதும் இந்தியாவில் தங்கியிருக்கும் பட்சத்தில் இக்குடியுரிமையை பெறுகிறார்.
•நல்ல
பண்புகளையும் இந்திய அரசியலமைப்பில் எட்டாவது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள ஏதேனும்
ஒரு மொழியில் (தற்போது 22 மொழிகள்) போதிய அறிவினையும் பெற்ற ஒருவர் இயல்புக் குடியுரிமையைப்
பெற தகுதியுடையவராவார்.
5. பிரதேசங்களை இணைத்தல் மூலம்
பெறும் குடியுரிமை
•எந்தவொரு
வெளிநாட்டுப் பகுதியும் இந்தியாவுடன் இணையும் போது, இந்திய அரசு அப்பகுதி மக்களை இந்திய
குடிமக்களாக ஏற்றுக்கொள்கிறது. அந்த குறிப்பிட்ட நாளில் இருந்து அவர்கள் இந்திய குடிமக்களாகின்றனர்.
உதாரணமாக பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைந்த பொழுது, இந்திய அரசு அம்மக்களுக்கு
1962இல் இந்தியக் குடியுரிமைக்கான ஆணையை வழங்கியது.