அத்தியாயம் 1
நுண்ணினப் பொருளியல்: ஓர் அறிமுகம்
"பொருளியல் எங்கும் நிறைந்தது; பொருளியலின் புரிதல் நல்ல முடிவுகளை எடுக்கவும் ஆனந்தமான வாழ்வைப் பெறவும் உதவும்"
- டைலர் கோவன்
கற்றல் நோக்கங்கள்
1 பொருளியல் பாடம் பற்றிய அடிப்படை அறிவைப் பெறுதல் மற்றும் அதன் இயல்பையும் எல்லையையும் புரிந்து கொள்ளுதல்.
2 பொருளியலின் சில அடிப்படைக் கருத்துக்களை புரிந்து கொள்ளுதல் மற்றும் பொருளியல் அறிவியலில் பல்வேறு வரையறைகளில் இவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளுதல்.
அறிமுகம்
ஓர் இயல் என்பது அதன் உள்ளடக்கத்தை, பெயர் மற்றும் தலைப்பிலிருந்து, தெளிவாகவும், சரியாகவும் புரிந்துகொள்ளும்படி இருத்தல் வேண்டும். பொருளியல் போன்ற பாடத்திற்கு 'பொருளியலின் அறிமுகம்', 'பொருளியல் ஓர் அறிமுகம்', 'அடிப்படைப் பொருளியல்', 'பொருளியலின் கூறுகள்', 'தொடக்கப் பொருளியல்', 'பொருளியலின் அடிப்படைகள்' போன்ற தலைப்புகளில் பொருளியல் நூல்கள் பல காணக் கிடைக்கின்றன. இவற்றில் காணப்படும் பொருளடக்கங்கள் ஒரே மாதிரியானவை என்றாலும், படிப்போரின் ஆர்வம் மற்றும் திறனுக்கு ஏற்றபடி ஒவ்வொரு நூலும் பயன்படுகின்றது.
ஓர் இயலின் நல்ல அறிமுகம் அதன் தலைப்பின் பொருளை மட்டும் கொண்டிராமல், அவ்வியலின் தன்மை மற்றும் எல்லைகளையும் விளக்குவதாக அமைய வேண்டும். அதாவது, அவ்வியல் தொன்மையானதா அல்லது நவீனமானதா, இயங்காததா அல்லது இயங்கக் கூடியதா என்பதை உணர்த்தும் வகையிலும் இருக்கவேண்டும். அவ்வியலைப்படிப்பவர்கள் அது கலையியல் மட்டுமா, அறிவியல் மட்டுமா, இரண்டையும் சார்ந்ததா என்பதையும் தெளிவாக வகைப்படுத்தும் நிலையில் இருக்க வேண்டும். அந்த இயலில் அனைத்து முக்கிய பிரிவுகளின் சிறப்பம்சங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். அறிமுகத்தைப் படிக்கும்போதே, அவ்வியலுக்கும் மற்ற இயல்களுக்கும் உள்ள தொடர்பினை படிப்பவர்கள் புரிந்து கொள்ளும்படி இருத்தல் வேண்டும்.
பாடப்பகுதியில் புதிய பகுதிகள் இடம் பெற்றிருப்பதோடு, அவற்றை எவ்வாறு புதிய வழிமுறைகளில் புரிந்து கொள்ள வேண்டுமென்பதையும் முன்னிலைப்படுத்த வேண்டும். மேலும் அறிமுகப் பகுதியில் அந்த பாடத்திட்டத்தில் இடம் பெறக் கூடிய கோட்பாடுகளை வருவிக்க பயன்படுத்தப்படும் முறைகளும் இடம் பெற வேண்டும்.
பொருளியல் பொருள்
பொருளியல் (Economics) என்ற சொல் ஆய்க்கனோமிக்ஸ் (Oikonomikos) என்னும் பழமையான கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது. ஆய்க்கோஸ் (oikos) என்றால் இல்லங்கள் மற்றும் நேமெயின் (Nenein) என்றால் நிர்வாகம், வழக்கம் அல்லது விதி என்று பொருள்படும்.
'பொருளியல்' என்றால் 'இல்லங்களின் நிர்வாகம்' என்று பொருள்படும். ஆரம்பத்தில் அரசியல் பொருளாதாரம் என்று அழைக்கப்பட்ட இவ்வியல், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 'பொருளியல்' என்று ஆல்ஃபிரட் மார்ஷலால் பெயர் மாற்றப்பட்டது.