அன்றாட வாழ்வில் விலங்குகள் | மூன்றாம் பருவம் அலகு 5 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - உடையாகப் பயன்படும் விலங்கினப் பொருள் | 7th Science : Term 3 Unit 5 : Animals in Daily Life
உடையாகப் பயன்படும் விலங்கினப் பொருள்
விலங்குகளின் உரோமங்களுக்கு மிகப் பெரிய தேவை உள்ளது. ஆடுகளின் உரோமத்தைக் கொண்டு கம்பளி ஆடைகள், சால்வைகள், போர்வைகள், தலை முக்காடு மற்றும் காலுறைகளைத் தயாரிக்கஉதவும் இதே போல் குதிரையின் உரோமம், ஓவியம் தீட்டும் தூரிகையை உருவாக்கப் பயன்படுகிறது. விலங்கின் உரோமத்தோடு, அதன் தோலும், வெதுவெதுப்பான மற்றும் நவீன ஆடைகளும் தயாரிக்க உதவுகிறது.
விலங்கு இழைகள்
பஞ்சு, சணல், கம்பளி, பட்டு போன்ற நார்கள் இயற்கை இழைகளாகும். பஞ்சு மற்றும் சணல் போன்றவை தாவர இழைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். கம்பளி மற்றும் பட்டு இழைகள், விலங்கு இழைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். இவை துணிகள் நெய்யவும் உதவுகின்றன. கம்பளி என்பது, ஆடு மென் உரோமக் கற்றையிலிருந்து எடுக்கப்படும் இழையாகும். இதைத் தவிர, முயல், யாக், அல்பாகா (உரோம ஆடு) மற்றும் ஒட்டகத்திலிருந்து கம்பளி இழைகள் எடுக்கப்படுகின்றன. பட்டுப்புழுவின் கூட்டிலிருந்து எடுக்கப்படும் இழையே பட்டு இழையாகும்.
கம்பளி
உறைபனி மிகுந்த இடங்களில் வாழ்வோர் எந்த வகை உடைகளை அணிவார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஏன் அவர்கள் அவ்வகை உடைகளை விரும்பி அணிகிறார்கள்?
கம்பளி என்ற இழை, கேப்ரினே என்ற குடும்பத்தைச் சார்ந்த விலங்குகளின் மென்முடிக் கற்றையிலிருந்து பெறப்படுகிறது. கம்பளி, ஆட்டின் புறத்தோல் பகுதியிலிருக்கும் உரோமம் ஆகும்.
இது பெரும்பாலும் ஆடு, செம்மறி ஆடு, முயல், காட்டெருமையிலிருந்து பெறப்படுகிறது. இந்தக் கம்பளியை உருவாக்க ஐந்து படிகள் உள்ளன. அவை பின்வருமாறு.
i. கத்தரித்தல் (Shearing)
ii. தரம் பிரித்தல் (Grading or sorting)
iii. கழுவுதல் (Washing or Scouting)
iv. சிக்கெடுத்தல் (Carding)
v. நூற்றல் (Spinning)
❖ கத்தரித்தல்: ஆடுகளின் உடலிலிருந்து உரோமங்கள் கத்தரிக்கப்படுகின்றன. உடலின் சதைப் பகுதிகளிலிருந்து பிரித்து எடுக்கப்படுகின்றன. இது கத்தரித்தல் எனப்படும்.
❖ தரம் பிரித்தல்: ஒரே ஆட்டின் வெவ்வேறு பாகங்களிலிருந்தும் எடுக்கப்படும் உரோமங்கள் வெவ்வேறானவை. இவை பின்னர் தனித்தனியாகப் பிரித்தெடுக்கப்படும். இது தரம் பிரித்தல் எனப்படும்.
❖ தரம் பிரித்தல், கழுவுதல், சிக்கெடுத்தல், நூற்றல்
கழுவுதல் : தோலில் இருந்து கத்தரித்த தோலின் உரோமங்கள் உள்ள தூசி, அழுக்கு மற்றும் எண்ணெய் பிசின் போன்றவற்றை நீக்க, அதைச் சலவைத்தூள் கொண்டு நன்கு கழுவ வேண்டும்.
சிக்கெடுத்தல் : காய வைத்த கம்பளி இழைகளைக் கவனத்துடன் பிரிக்க வேண்டும். இதை, ஆலைகளில் உள்ள உருளைகளில் செலுத்தி, பின்னர் மெல்லிய கம்பி போன்ற இழையாக மாற்ற வேண்டும். இப்படிக் கம்பளியைத் தட்டையான தாளாக மாற்றுவது வலை எனப்படும்.
நூற்றல் : இந்த வலையைக் குறுகிய தனித்த இழையாக மாற்ற, அவற்றை நூற்பு இயந்திரங்களில் அனுப்ப வேண்டும். இந்த நூல், பின் பந்துபோல் உருண்டையாக மாறும். இந்த நூல் பந்து, பின் பின்னல்களாக மாற்றப்பட்டு, ஆடைகள் நெய்ய உதவும்.
கம்பளியின் சிறப்பம்சங்கள்
❖ வெப்பம் மற்றும் தண்ணீருக்கு எதிர்ப்புத் தன்மை உடையது மற்றும் இவை கிழிவதில்லை .
❖ ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையுடையது.
❖ கம்பளி, குளிருக்கு எதிராகச் செயல்படுகின்றது. எனவே, கம்பளி சிறந்த வெப்பக் கடத்தியாகக் கருதப்படுகிறது.
❖ இது எளிதில் சுருங்காது.
கம்பளியின் பயன்கள்
கம்பளி என்பது, பல்வேறு வகையான பொருள்கள் செய்ய உதவும் இழையாகும். இந்த இழைகளின் விட்டம் ஆடைகள், வீட்டிற்குத் தேவையான துணிகள் மற்றும் தொழிற்சாலைக்குத் தேவையான பொருள்கள் செய்ய உதவுகின்றன. மூன்றில் இரண்டு பங்கு கம்பளி இழைகள், ஸ்வெட்டர், ஆடைகள், கோட் மற்றும் விளையாட்டு வீரர்கள் அணியும் ஆடைகள் தயாரிக்க உதவுகின்றன. கம்பளி இழை மற்றும் இயற்கை அல்லது செயற்கை இழைகளோடு சேரும்போது அவை மடிப்புக்கு எதிர்ப்புத் தன்மை உடைய போர்வைகள் மற்றும் இரைச்சலை உறிஞ்சும் விரிப்புகள் தயாரிக்க உதவுகின்றன.
பட்டு
நீங்கள் எப்போதாவது திருமண விழாவிற்குச் சென்றிருக்கிறீர்களா? அதில் மணமகனும், மணமகளும் எந்த ஆடையை உடுத்துவார்கள்? அந்த உடைகள் எவற்றால் ஆனவை?
பட்டு என்பது, பட்டுப் பூச்சியின் கூடுகளில் சுரக்கும் இழையாகும். மல்பெரி இலைகளை உணவாக உண்ணும் பட்டுப் புழுக்களிலிருந்து பட்டு இழைகள் பெறப்படுகின்றன. பட்டுப்புழுக்கள் குறுகிய காலமே வாழும். அதாவது, இரண்டு மாதங்கள் மட்டுமே வாழும். இந்த காலத்தில் அவை வாழ்க்கையில் நான்கு வளர்ச்சி நிலைகளைக் கடக்க வேண்டும். அவை முட்டை, லார்வா நிலை (கம்பளிப்பூச்சி), கூட்டுப்புழு (குக்கூன்) மற்றும் பட்டுப் பூச்சியாகும். இந்த வாழ்க்கை நிலைகள் பட்டுப்பூச்சியின் வாழ்க்கை சுழற்சியாகும்.
பட்டுப் பூச்சியின் வாழ்க்கை சுழற்சி
பட்டுப்பூச்சிகளை வளர்த்து, அதிலிருந்து பட்டு தயாரிக்கப்படுவது, பட்டுப்பூச்சி வளர்ப்பு அல்லது செரிகல்சர் எனப்படும். ஒரு முதிர்ந்த பெண் பட்டுப் பூச்சி சுமார் 500 முட்டைகளை இடும். இந்த முட்டைகள் ஆறு வாரங்கள் குளிர் வெப்பநிலையில் வைக்கப்படும். பின் இவற்றை அடைகாக்கும் பெட்டியில் (இன்குபேட்டர்) வைக்க வேண்டும். பத்து நாள்கள் கழித்து முட்டைகள் பொரிந்து லார்வாக்கள் வெளிவரும். இவை 35 நாட்கள் மல்பெரி இலைகளை உண்டு வாழும். பிறகு பட்டுப்புழு ஐந்து நாளில் பட்டு இழைகளை உற்பத்தி செய்யும். இவை கூட்டுப் புழுக்களாக மாறும். பட்டுக்கூடு இழைகள் தனித்த நீண்ட இழையாக இருக்கும்.
கூட்டுப்புழுக்களைக் கொதிநீரில் இட்டால், அதிலிருந்து பட்டு இழைகளை மிக எளிதாகச் சிக்கலின்றி பிரித்துவிடலாம். ஆனால் அவை பட்டு இழைகளை உருவாக்கட்டும் என்று விட்டு விட்டால் கூட்டுப்புழு உடையும் போது நீண்ட பட்டு இழைகளும் கிழியும். இதனால் தான் கூட்டுப்புழுக்களைக் கொதி நீரில் இட்டு, மிக நீளமான பட்டு நூலை எடுத்து, அதைச் சுத்தமாக்கி, சாயமேற்றி ஆடையாக நெய்கிறார்கள்.
பட்டின் சிறப்பம்சங்கள்
❖ கவர்ச்சியாகவும், மிகவும் மென்மையான, அணிவதற்கு வசதியானது, பலதுறைகளில் பயன்படுகிறது.
❖ இதை எளிதில் சாயமேற்றலாம்.
❖ இயற்கை இழைகளிலேயே பட்டு இழைதான் வலிமையான இழையாகும்.
❖ இது சூரிய ஒளியை எளிதில் கடத்தும்.
பட்டின் பயன்கள்
பட்டு இயற்கை அழகுடையது, கோடை காலத்தில் இது இதமானதாகவும், குளிர் காலத்தில் வெப்பத்தைத் தரக் கூடியதாகவும் உள்ளது. நாகரிகமான, நவீன உடைகளைத் அழகாகத் தயாரிக்கவும், சிறப்பு வாய்ந்த அழகிய பட்டாடைகளை வடிவமைக்கவும் முக்கியமாக சேலைகள் தயாரிக்க இது பயன்படுகிறது. வீட்டு உபயோகப் பொருள்களான சுவர் அலங்காரப் பொருள்கள், திரைச் சீலைகள், கம்பளம் மற்றும் இதர விரிப்புகள் தயாரிக்கவும் பயன்படுகின்றன. பட்டு இழையானது, மருத்துவத் துறையில், அறுவை சிகிச்சையின் போது தையல் நூலாகப் பயன்படுத்தப்படுகிறது.
பட்டு உற்பத்தியில், உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பெறுவது நம் இந்திய நாடு. தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம், திருபுவனம் மற்றும் ஆரணி போன்ற இடங்கள் பட்டு உற்பத்திக்குப் புகழ் பெற்றவை.