அன்றாட வாழ்வில் விலங்குகள் | மூன்றாம் பருவம் அலகு 5 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - பட்டு மற்றும் கம்பளி ஆலைகளில் ஏற்படும் அபாயங்கள் | 7th Science : Term 3 Unit 5 : Animals in Daily Life
பட்டு மற்றும் கம்பளி ஆலைகளில் ஏற்படும் அபாயங்கள்
ஆலைகளில் பணிபுரிவோருக்குக் காயங்கள் ஏற்படலாம். ஆலைகளில் சூழ்நிலை காரணமாகச் சில பாதிப்புகள் மற்றும் ஆரோக்கியமற்ற நிலை ஏற்படலாம்.
பட்டாலைகளில் ஏற்படும் பாதிப்புகள்
பொதுவாகப் பட்டாலைகளில் பணிபுரிபவர்கள் நின்றுகொண்டே பட்டுநூலை நூற்பதால் அவர்கள் மூட்டு வலியால் அவதிப்படுகிறார்கள். மேலும் இவர்கள் முதுகு வலியினாலும், பார்வைக் கோளாறுகள் மற்றும் தோல் காயங்களாலும் துன்புறுகிறார்கள். குறைந்த காற்றோட்டமுள்ள பகுதிகளில் இவர்கள் பணிபுரிவதால் சில சமயம், சுவாச சம்பந்தமான நோய்களான ஆஸ்துமா மற்றும் மார்புச் சளியாலும் அவதிப்படுகிறார்கள்.
கம்பளி ஆலைகளில் ஏற்படும் பாதிப்புகள்
கம்பளி ஆலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் வெவ்வேறு வேதிப்பொருள்கள் மற்றும் சலவைத்தூள்களையும் பயன்படுத்துவதால் ஒவ்வாமை மற்றும் தோல் நோயால் துன்புறுகிறார்கள். இறந்த விலங்குகளைக் கையாளுவதால் கம்பளி ஆலை பணியாளர்கள் ஆந்தராக்ஸ் பாக்டீரியா தொற்றால் அவதிப்படுகிறார்கள். இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டால் உயிர் சேதம் எற்படுகிறது இது பிரித்தெடுப்போர்கள் நோய் என்றும் அழைக்கப்படுகிறது.
பேசில்லஸ் ஆந்த்ராசிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் நோய் ஆந்தராக்ஸ். இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட, விலங்குகளின் உரோமம் மற்றும் அங்கு வாழும் விலங்குகளைக் கையாளுவோர்க்கும் ஆந்தராக்ஸ் நோய் எற்பட வாய்ப்புள்ளது. இந்நோயின் அறிகுறிகள் - காய்ச்சல், இருமல், மூச்சுவிடுதலில் சிரமம். இவை நிமோனியாவை ஒத்த அறிகுறிகளாகும். சில சமயம் இவர்களுக்கு வாந்தி எடுக்கும் சூழ்நிலையும் மற்றும் வயிற்றுப்போக்கும் ஏற்படுகின்றன.
சிகிச்சை
* பெனிசிலின் மற்றும் சிப்ரோஃப்ளோக்சாசின் போன்ற சிறந்த மருந்துகள் ஆந்த்ராக்ஸ் நோயைக் குணமாக்க உதவுகின்றன.
* விலங்குகளுக்கு ஆந்தராக்ஸ் தடுப்பூசி போட வேண்டும் மற்றும் ஆந்த்ராக்ஸ் நோயால் இறந்த விலங்குகளை ஆழ்குழி தோண்டி அதில் புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டும்
* முதலாளிகள் தங்களின் பணியாளர்களுக்குச், சுத்தமான சுற்றுச்சூழலும் நல்ல காற்றோட்டம் மற்றும் பாதுகாப்பும் அளிக்க வேண்டியது அவர்களின் கடமையாகும்
பட்டுபுழு வளர்த்தல் மற்றும் அமைதிப்பட்டு
பட்டுப்பூச்சிகளை வளர்த்து பட்டு நூலை உருவாக்கும் முறை பட்டுபுழு வளர்ப்பு (Sericulture) எனப்படும். இது அதிகப் பட்டு இழைகளைப் பெறுவதற்காக ஏராளமான பட்டுப்பூச்சிகளை வளர்க்கும் முறை ஆகும்.
அகிம்சைப்பட்டு
ஆண்டாண்டு காலமாகக் கொதிக்கும் நீரில் கூட்டுப்புழுக்களைப்போட்டு, அவற்றைக் அழித்து அதிலிருந்து பட்டு இழைகளை எடுத்தனர். இந்தியாவில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரியாகப் பணியாற்றிய குசுமா ராஜய்யா என்பவர், 1992ஆம் ஆண்டு கூட்டுப்புழுக்களைக் அழிக்காமல், அவற்றிலிருந்து பட்டு நூலை எடுக்கலாம் என்பதைக் கண்டறிந்தார். ஆனால், மென்மையான முறை ஒன்றை உருவாக்கினார். கூட்டுப்புழுக்கள், கூட்டை உடைத்துக்கொண்டு வெளியேறும் போது அவற்றைக் கொல்லாமல், அவை உண்டாக்கும் பட்டு இழைகளை எடுக்கலாம் என்றார். இந்தப் பட்டு, மனித நேயத்தின் அடிப்படையில், பராம்பரிய முறைகளைத் தாண்டி உருவாக்கப்பட்டதாகும். எனவே இது, அகிம்சைபட்டு அல்லது அமைதிபட்டு என்று அழைக்கப்படுகின்றது. இவரைப் பின்பற்றி, விலங்குகளின் நலனில் அக்கறையுள்ள ஏராளமான மக்களும் இதில் ஆர்வம் காட்டினர்.