மூன்றாம் பருவம் அலகு 5 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - அன்றாட வாழ்வில் விலங்குகள் | 7th Science : Term 3 Unit 5 : Animals in Daily Life
அலகு 5
அன்றாட வாழ்வில் விலங்குகள்
கற்றல் நோக்கங்கள்
* உணவு மற்றும் உடை தயாரிக்க நமக்கு விலங்குகள் எவ்வாறு உதவுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளுதல்
* கம்பளி மற்றும் பட்டு எவ்வாறு உருவாகிறது என்பதையும் அறிந்து கொள்ளுதல்
* கம்பளி மற்றும் பட்டாலைகளில் ஏற்படும் அபாயங்கள் குறித்தும், அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்பதையும் புரிந்து கொள்ளுதல்
* அஹிம்சைபட்டு அல்லது அமைதிபட்டு பற்றிய அறிவினைப் பெறுதல்
* விலங்குகளைப் பாதுகாத்தல் மற்றும் பராமரிப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுதல்
அறிமுகம்
முந்தைய வகுப்பில் அன்றாட வாழ்வில் தாவரங்கள் எவ்வாறு உதவுகின்றன என்பதைப் பற்றிப் படித்தோம். இப்பொழுது அன்றாட வாழ்வில் விலங்குகள் நமக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதைப் படிக்கலாமா?.
இயற்கையின் மிகப்பெரிய கொடைகளுள் ஒன்று விலங்குகளாகும். அவை அன்றாட வாழ்வில் மனிதரோடு மிகவும் நெருக்கமாக இணைந்துள்ளன. நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வணிக மேம்பாட்டிற்கும் விலங்குகள் உதவுகின்றன. நமக்கு உணவு, உடை மற்றும் போக்குவரத்து ஆகியவற்றிற்கு விலங்குகள் பயன்படுகின்றன. விலங்குகளின் பொருளாதார முக்கியத்துவம் மற்றும் அவற்றின் பாதுகாப்பு, பராமரிப்பு பற்றியும் நாம் இப்பாடத்தில் அறிந்து கொள்வோம்.