தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் - வரலாறு - பிரிவினை எதிர்ப்பு இயக்கம் | 12th History : Chapter 2 : Rise of Extremism and Swadeshi Movement
பிரிவினை எதிர்ப்பு இயக்கம்
டிசம்பர் 1903 இல் வங்கப்பிரிவினை அறிவிக்கப்பட்டதில்
இருந்தே தீவிர தேசியவாதிகள், மிதவாத தேசியவாதிகள் ஆகிய இருதரப்பினரும் அதை விமர்சனம்
செய்தனர். ஆனால் சுரேந்திரநாத் பானர்ஜி, K. K. மித்ரா, பிரித்விஸ் சந்திர ரே போன்றவர்களின்
எதிர்வினையானது வேண்டுகோள் விடுப்பது மனுச்செய்வது என்ற அளவோடு சுருங்கிப் போனது. பிரிவினைக்கு
எதிராக இங்கிலாந்து மக்களின் கருத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது எனும் அளவில் அதன்
நோக்கமும் கட்டுக்குள்ளேயே இருந்தது. எப்படியிருந்தபோதிலும், பரவலான எதிர்ப்புகளுக்கிடையே
1905 ஜூலை 19 இல் வங்கப் பிரிவினை அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
வங்கப் பிரிவினையைத் தடுப்பதில் ஏற்பட்ட தோல்வி,
பிபின் சந்திர பால், அஸ்வினி குமார் தத்தா, அரவிந்தகோஷ் போன்ற தலைவர்கள் கொடுத்த அழுத்தம்
ஆகியவற்றால் மிதவாத தேசியவாதிகள் தங்கள் உத்திகள் குறித்து மறுபரிசீலனை செய்து புதிய
எதிர்ப்பு முறைகளைக் கண்டறிய வற்புறுத்தப்பட்டனர். அவைகளுள் ஒன்றுதான் ஆங்கிலப் பொருட்களைப்
புறக்கணிப்பது. நீண்ட விவாதத்திற்குப் பின்னர் இந்திய தேசிய காங்கிரசின் மிதவாத தேசியத்
தலைமை இதனை ஏற்றுக் கொண்டது. முதன்முறையாக மிதவாத தேசியவாதிகள் தங்களின் மரபு சார்ந்த
அரசியல் முறைகளை மீறினர். 1905 ஜூலை 17 இல் கல்கத்தாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் எதிர்ப்பை
மக்களிடையே விரிவுபடுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதே கூட்டத்தில் ஆங்கிலப்பொருட்களையும்
நிறுவனங்களையும் புறக்கணிக்க சுரேந்திரநாத் பானர்ஜி அறைகூவல் விடுத்தார். ஆகஸ்டு 7
இல் கல்கத்தா நகர அரங்கில் (Town Hall) நடைபெற்ற மற்றொரு கூட்டத்தில் சுதேசி இயக்கம்
முறையாகப் பிரகடனம் செய்யப்பட்டது.
இருந்தபோதிலும் சுதேசி இயக்கத்தின் நிகழ்ச்சி
நிரலானது வங்கப்பிரிவினையை ரத்து செய்யப் போதுமான அளவிற்கு கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தது.
மேலும் மிதவாத தேசியவாதிகள், இவ்வியக்கத்தைப் பயன்படுத்தி முழு அளவிலான அமைதி வழியில்
எதிர்ப்பைத் தொடங்குவதற்கு முற்றிலும் எதிராக இருந்தனர். ஆனால் தீவிர தேசியவாதிகள்
இவ்வியக்கம் ஏனைய மாகாணங்களுக்கு விரிவுப்படுத்தப்படவும் முழு அளவிலான வெகுஜன இயக்கத்தைத்
துவங்குவதற்கும் ஆதரவாக இருந்தனர்.
இயக்கத்தின் பரவல்
தலைவர்களின் திட்டமிடப்பட்ட முயற்சிகளுக்கும்
மேலாக வங்கப்பிரிவினைக்கு எதிராகத் தன்னெழுச்சியான எதிர்ப்புக்கள் ஏற்பட்டன. குறிப்பாக
மாணவர்கள் பெருமளவில் பங்கேற்றனர். பிரிவினைக்கு எதிரானப் போராட்டத்தில் மாணவர்களின்
பங்கேற்பு அதிகம். இதன் எதிர்வினையாக ஆங்கில அதிகாரிகள் நேரடி நடவடிக்கை நிகழ்வுகளில்
பங்கேற்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் மானியங்களும் நிறுத்தப்படும் எனப்
பயமுறுத்தினர். இதற்கு எதிர்வினையாக தேசிய கல்வி நிறுவனங்களை, பள்ளிகளை உருவாக்குவதற்கான
முயற்சிகளை மேற்கொள்வதெனவும் முடிவு செய்யப்பட்டது. வங்காளம் முழுமையிலும் நகரங்களிலும்
கிராமங்களிலும் ஆயிரக்கணக்கில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பெற்றன. மத விழாக்களான துர்காபூஜை
போன்றவற்றை புறக்கணிப்புப் பற்றிய வேண்டுகோள் விடுப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன. அதிகாரபூர்வமாக
வங்காளம் பிரிக்கப்பட்ட நாளான 1905 அக்டோபர் 16 துக்கதினமாக கடைபிடிக்கப்பட வேண்டுமென
அறிவிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கில் மக்கள் கங்கையில் நீராடி வந்தே மாதரம் பாடலைப் பாடிக்கொண்டு
வீதிகளில் ஊர்வலமாகச் சென்றனர்.