Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | புரட்சிகர தேசியவாதம்

தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் - வரலாறு - புரட்சிகர தேசியவாதம் | 12th History : Chapter 2 : Rise of Extremism and Swadeshi Movement

   Posted On :  08.07.2022 09:58 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 2 : தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும்

புரட்சிகர தேசியவாதம்

1908இல் தீவிர தேசியவாதம் சரிவுற்று புரட்சிகரச் செயல்பாடுகள் மேலெழுந்தன வன்முறை சாராத நடவடிக்கைகளிலிருந்து வன்முறையை நோக்கி, எனும் மாற்றத்தை அது சுட்டிக்காட்டியது.

புரட்சிகர தேசியவாதம்

1908இல் தீவிர தேசியவாதம் சரிவுற்று புரட்சிகரச் செயல்பாடுகள் மேலெழுந்தன வன்முறை சாராத நடவடிக்கைகளிலிருந்து வன்முறையை நோக்கி, எனும் மாற்றத்தை அது சுட்டிக்காட்டியது. மேலும் ஆங்கில ஆட்சிக்கு வெகுஜனங்களின் எதிர்ப்பு என்பதற்குப் பதிலாக சமூகத்தின் உயர்மட்டத்தைச் சார்ந்தோரின் எதிர்ப்பு என்ற மாற்றத்தையும் அது உணர்த்தியது. வங்காளத்தில் புரட்சிகர பயங்கரவாதமானது முன்னதாகவே வளர்ந்துவிட்டது. 1870களில் விவேகானந்தர் விளக்கியவாறு எஃகினாலான உடலையும் நரம்புகளையும் வளர்ப்பதற்காக பல்வேறு இடங்களில் அக்காரா எனப்படும் உடற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்பட்டன. பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் ஆனந்மத் (ஆனந்த மடம்) எனும் நாவலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்நாவல் வங்காளத்துப் புரட்சிகர தேசியவாதிகளால் பரவலாகப் படிக்கப் பெற்றது. அந்நாவலின் ஒருபகுதியான வந்தே மாதரம் பாடல் சுதேசி இயக்கத்தின் கீதமாயிற்று.


சுதேசி இயக்கத்தின் போது தனிநபர் வன்முறை எழுச்சி பெறுவதற்கு மூன்று காரணிகள் பங்களிப்புச் செய்தன.

• அந்நிய அடக்குமுறை ஆட்சியின் கீழ் வெகுவாகப் பொறுமை இழந்து கொண்டிருந்த இளைஞர்கள் அரசியலற்ற ஆக்கசார் செயல்பாடுகளை ஓரளவே ஏற்றுக் கொண்டனர்.

• இளம் வயது மக்களுக்குத் தலைமையேற்று அவர்களை ஒரு நீண்டகால வெகுஜனப் போராட்டத்தில் ஈடுபடுத்துவதில் தீவிர தேசியவாதிகள் தோல்வியடைந்தது தனிநபர் செயல்பாடுகள் வளர்வதற்குக் காரணமாயிற்று. • புரட்சிகர செயல்பாடானது இந்திய தறுகாண்மையை (வீரத்தை) மீட்டெடுக்கும் குறியீட்டு முயற்சியின் ஒரு பகுதியாகவும் கருதப்பட்டது. அத்தன்மையை ஆங்கிலேயர் அடிக்கடி எதிர்ப்பதாயும் இகழ்வதாயும் புரட்சிகர தேசியவாதிகள் நம்பினர்.

இவ்வாறான நடவடிக்கைகள் ரஷ்யாவில் நடந்ததைப் போல திட்டமிடப்பட்ட ஒரு புரட்சிக்கு இட்டுச் செல்லவில்லை . பெரும்பாலுமான புரட்சிகர நடவடிக்கைகள் சில குறிப்பிட்ட அடக்கியாளும் ஆங்கில அதிகாரிகளைக் கொலைசெய்யும் முயற்சிகளாகவே அமைந்தன.

 

(அ) அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கு

வங்காளத்தில் 1902இல் பல ரகசிய சங்கங்கள் நிறுவப்பட்டதிலிருந்தே புரட்சிகர தேசியவாதத்தின் கதை தொடங்குகிறது. அவைகளுள் ஜதிந்தரநாத் பானர்ஜி, அரவிந்த கோஷின் சகோதரரான பரீந்தர்குமார் கோஷ் ஆகியோரால் கல்கத்தாவில் நிறுவப்பெற்ற அனுசீலன் சமிதி மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதைப்போலவே புலின் பிகாரி தாஸ் என்பவரின் முயற்சியினால் டாக்கா அனுசீலன் சமிதி 1906இல் உருவானது. இதன் தொடர்ச்சியாக புரட்சிகர வார இதழான யுகாந்தர் தொடங்கப்பெற்றது. கல்கத்தா அனுசீலன் சமிதி விரைவில் தன்னுடைய செயல்பாடுகளைத் துவங்கியது. இது நிதி திரட்டுவதற்காக ஆகஸ்ட் 1906இல் ரங்பூரில் முதல் சுதேசிக் கொள்ளையை நடத்தியது.

அதே ஆண்டில் ஹேம்சந்திர கனுங்கோ இராணுவப் பயிற்சி பெறுவதற்காக பாரிஸ் சென்றார். 1908இல் நாடு திரும்பிய அவர் மணிக்தலா எனுமிடத்திலிருந்த ஒரு பண்ணை வீட்டில் ஒரு மதச்சார்புப் பள்ளியோடு குண்டுகள் தயாரிப்பதற்கான ஒரு தொழிற்கூடத்தையும் நிறுவினார். அதே பண்ணை விடுதியில் தங்கியிருந்தோர் பல்வேறு உடற்பயிற்சிகளைப் பெற்றனர். இந்து செவ்வியல் நூல்களையும், உலகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற புரட்சிகர இயக்கங்கள் குறித்த நூல்களையும் வாசித்தனர்.சுதேசி போராட்டக்காரர்களை கொடூரமாக நடத்திய டக்ளஸ் கிங்ஸ்போர்டு எனும் ஆங்கில அதிகாரியை கொல்வதற்கான திட்டமும் அங்கு தீட்டப்பட்டது. கொலை செய்யும் பொறுப்பு இளம் புரட்சிவாதிகளான 18 வயது நிரம்பிய குதிராம் போஸ், 19 வயதான பிரஃபுல்லா சாக்கி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1908 ஏப்ரல் 30இல் அவர்கள் தவறுதலாக ஒரு சாரட் வண்டியின் மீது குண்டை வீச கிங்ஸ் போர்டுக்குப் பதிலாக வேறு இரண்டு ஆங்கிலப் பெண்கள் அதில் கொல்லப்பட்டனர். பிரஃபுல்லா சாக்கி தற்கொலை செய்து கொள்ள, குதிரம் போஸ் கைது செய்யப்பட்டு பின்னர் கொலைக் குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டார்.

அரவிந்த கோஷ், அவரின் சகோதரர் பரீந்தர் குமார் கோஷ் அவர்களுடன் மேலும் முப்பந்தைந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர். சித்தரஞ்சன் தாஸ் இவ்வழக்கில் புரட்சிகர தேசியவாதிகளுக்காக வாதாடினார். இது அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கு எனப்படுகிறது.

ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரவிந்த கோஷ் சதியில் ஈடுப்பட்டார் என்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை என வழங்கப்பட்ட தீர்ப்பால் அனைத்துக் குற்றச் சாட்டுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார். பரீந்தர் கோஷ், உல்லாஸ்கர்தத் ஆகியோருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது (பின்னர் அது ஆயுட்கால நாடு கடத்தல் தண்டனையாக மாற்றப்பட்டது) ஏனையோர் ஆயுட்காலத்திற்கும் நாடு கடத்தப்பட்டனர். ஒரு வருடகாலம் நடைபெற்ற அலிப்பூர் வெடிகுண்டு வழக்கு மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பொதுமக்களுக்கு முன்னர் புரட்சிகர தேசியவாதிகளை கதாநாயகர்களாகச் சித்தரித்தது.

விசாரணையும் பின்விளைவுகளும்

அரவிந்த கோஷ் விடுதலைக்குப் பின்னர் ஒரு ஆன்மிகப் பாதையை தேர்ந்தெடுத்து தனது இடத்தைப் பாண்டிச்சேரிக்கு மாற்றிக் கொண்டு 1950இல் தான் இயற்கை எய்தும் வரை அங்கேயே தங்கியிருந்தார். ஒரு ஆயுதமேந்தியப் புரட்சியை முன்னெடுப்பது எனும் அரவிந்தரின் கருத்து நிறைவேறவேயில்லை. அரசு அடக்குமுறை மக்களின் மறுப்பு ஆகிய இரு காரணங்களும் இணைந்து வங்காளத்தில் புரட்சிகர இயக்கம் படிப்படியாக வீழ்ச்சியடையக் காரணமாயிற்று. புரட்சிகர இயக்கத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலோர் பிராமணர், காயஸ்தர், வைசியர் ஆகிய மூன்று உயர்வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் புரட்சிகர பயங்கரவாதம் சில சமூகம் தொடர்பான பாதிப்புக்குள்ளானது.

 

(ஆ) ஆங்கிலேயரின் அடக்குமுறை

டிசம்பர் 1908இல் மிண்டோ -மார்லி அரசியல் அமைப்புச் சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன. சீர்திருத்தங்களை மிதவாத தேசியவாதிகள் வரவேற்றனர். ஆனால் அதிகாரங்கள் எதுவும் மாற்றப்படவில்லை என்பதை அவர்கள் விரைவில் உணர்ந்தனர். ஆனால் மிண்டோ மேற்கொண்ட நடவடிக்கைகள் பிரிவினைகளை ஏற்படுத்துவதாக அமைந்தன. அது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நிறுவனப்படுத்தி இந்து, முஸ்லிம்களைப் பிரித்தது. மேலும் சில அடக்கு முறைச் சட்டங்களையும் காலனிய அரசு அறிமுகம் செய்தது.

•1908 செய்தித்தாள் சட்டம் (குற்றம் செய்யத் தூண்டுதல்). இச்சட்டம் ஆட்சேபனைக்குரிய வகையிலான செய்திகளை வெளியிடும் அச்சகங்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் அதிகாரத்தை நீதிபதிகளுக்கு வழங்கியது. இதனால் ஆங்கிலேயே ஆட்சியை விமர்சிக்கும் எதையும் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது.

•1910 இந்தியப் பத்திரிக்கைச் சட்டம் அச்சக உரிமையாளர்களும் வெளியீட்டாளர்களும் பிணைத்தொகை கட்டுவதைக் கட்டாய மாக்கியது. விரும்பத்தகாத தீங்கு விளைவிக்கக்கூடிய செய்திகளை அவர்கள் வெளியிட்டால் அத்தொகை எடுத்துக் கொள்ளப்படும்.

•இந்தியக் குற்றவியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் விசாரணையின்றி முடிவுகளை மேற்கொள்ள அனுமதித்தது. மேலும் பொது அமைதிக்கு ஆபத்தான அமைப்புகளைத் தடை செய்தது.

அடக்குமுறை நடவடிக்கைகள் பரந்த அளவில் மேற்கொள்ளப்பட்டாலும் இந்திய தேசிய இயக்க கட்சியிலிருந்து புரட்சிகர தேசியவாத செயல்பாடுகளின் வசீகரம் மறையவேயில்லை . செயல்பாடுகளின் மையம் வங்காளத்திலிருந்து பஞ்சாபிற்கும் உத்திரப்பிரதேசத்திற்கும் நகர்ந்தது.

Tags : Rise of Extremism and Swadeshi Movement | History தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் - வரலாறு.
12th History : Chapter 2 : Rise of Extremism and Swadeshi Movement : Revolutionary Extremism Rise of Extremism and Swadeshi Movement | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 2 : தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் : புரட்சிகர தேசியவாதம் - தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 2 : தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும்