தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் - வரலாறு - தீவிர தேசியவாதம் | 12th History : Chapter 2 : Rise of Extremism and Swadeshi Movement
தீவிர தேசியவாதம்
முன்னரே குறிப்பிட்டவாறு லாலா லஜபதி ராய்,
பாலகங்காதர திலகர், பிபின் சந்திர பால் (அடிக்கடி லால் - பால் - பால்
(Lal-Bal-Pal) எனக் குறிப்பிடப்படும் முப்பெரும் தலைவர்கள்) ஆகியோரின் இயக்க நடவடிக்கைகளின்
விளைவாக மகாராஷ்டிரம், வங்காளம், பஞ்சாப் ஆகிய மூன்றும் சுதேசி இயக்கக் காலப்பகுதியில்
தீவிர தேசியவாதத்தின் மையப்புள்ளிகளாகத் திகழ்ந்தன. தீவிர தேசியவாதத் தலைவர்களில் மற்றுமொரு
செல்வாக்குப் பெற்ற ஆளுமையாக இருந்தவர் அரவிந்த கோஷ் ஆவார். தொடக்ககால இந்திய தேசியவாதத்துடன்
ஒப்பிடுகையில் இவ்வகைப்பட்ட தேசியவாதம் மிகவும் உறுதியுடையதாய் இருந்தது.
மிதவாத தேசியவாதிகள், தீவிர தேசியவாதிகள் ஆகிய
இரு குழுவினருமே ஆங்கில ஆட்சியின் தீமைகளை நன்கறிந்தவர்கள் ஆவர். மிதவாத தேசியவாதிகள்
பேச்சுவார்த்தைகள், விண்ணப்பங்கள் மூலம் ஆள்வோரைச் சமாதானம் செய்து இந்தியாவைச் சீர்திருத்தி
விடலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் செயல்பட்டனர். மாறாகத் தீவிர தேசியவாதிகள்
காலனிய ஆட்சியாளர்கள் பேரரசுக்குச் சாதகமானவற்றை விட்டுத்தர விரும்பமாட்டார்கள்; அதனால்
அவர்கள் ஒருபோதும் காரணங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனக் கருதினர்.
தீவிர தேசியவாதம் அதுவரை தந்துகொண்டிருந்த
அரசியல் நெருக்கடியின் தன்மையை மாற்றியது. கற்றறிந்த இந்திய மக்களிடையே பொதுக்கருத்து
வழங்கிய நெருக்கடி என்பது வெகுஜனங்களின் எதிர்ப்பு ஏற்படுத்திய நெருக்கடியாக மாறியது.
இத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்த போதும் தீவிர தேசியவாதக் கூட்டம் மிதவாத தேசியக் கூட்டத்துடன்
ஒரு தொடர்பைத் தக்கவைத்துக் கொண்டது. அமைதி வழிப் போராட்ட முறைகளை மீறிச் செல்ல முடியவில்லை
என்பதிலும் பெரும்பாலுமான நேரங்களில் தீவிர தேசியவாதம் அறவழிப் போராட்ட முறைகளில் கட்டுண்டு
கிடந்ததிலும் இத்தன்மை வெளிப்பட்டது. இருந்தபோதிலும் மக்களின் தேசப்பற்று உணர்வுகளை
மதத்தின் அடையாளங்களைப் பயன்படுத்தித் தூண்டினர்.
1905இல் ஒரு சமயம் அரவிந்த கோஷிடம்
ஒருவர் எவ்வாறு நாட்டுப்பற்று உடையவராக ஆவது? எனக் கேட்டார். சுவரில் தொங்கிய இந்திய
வரைபடத்தைச் சுட்டிக்காட்டிய அரவிந்தர், "நீ அந்த வரைபடத்தைப் பார்க்கிறாயா? அது
ஒரு வரைபடமல்ல மாறாக பாரத மாதாவின் உருவப்படம் அதனுடைய நகரங்களும் மலைகளும் ஆறுகளும்
காடுகளும் அவளுடைய உடலை உருவாக்கியுள்ளன. அவளுடைய குழந்தைகளே அவளுடைய பெரிதும் சிறியதுமான
நரம்புகள்..... பாரதத்தை வாழ்கின்ற தாயாக நினைத்து கவனம் செலுத்தி ஒன்பது மடங்கு அதிக
பக்தியுடன் அவளை வழிபடு" என பதிலுரைத்தார்.
சுயராஜ்ஜியம் அல்லது அரசியல்
சுதந்திரம்
தீவிர தேசியவாதத்தலைவர்களின் பொதுவான குறிக்கோள்களில்
ஒன்று சுயராஜ்ஜியம் அல்லது சுயாட்சி என்பதாகும். ஆனால் சுயராஜ்ஜியத்தின் பொருள் குறித்து
தலைவர்கள் வேறுபட்டனர். திலகருக்கு சுயராஜ்ஜியம் என்பது நிர்வாகத்தின் மீதான இந்தியர்களின்
கட்டுப்பாடு அல்லது சொந்த மக்களின் நிர்வாகம் என்பது மட்டுமே தவிர இங்கிலாந்துடனான
உறவுகள் அனைத்தையும் துண்டித்துக் கொள்வதல்ல. பிபின் சந்திரபாலின் கருத்துப்படி சுயராஜ்ஜியம்
என்பது அந்நியர் ஆட்சியிலிருந்து முற்றிலுமாக விடுதலையடைதல் என்பதாகும்.
வங்காளம், பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகியப் பகுதிகளில்
வளர்ந்து வந்த புரட்சிகர தேசியவாதம் குறித்து தீவிர தேசியவாதிகள், மிதவாத தேசியவாதிகளிடமிருந்து
வேறுபட்டனர். மிதவாத தேசியவாதிகள் புரட்சிகரவாதிகளைப் பற்றி குறை கூறி விமர்சனம் செய்தனர்.
ஆனால் தீவிர தேசியவாதிகள் அவர்களின் மேல் அனுதாபம் கொண்டனர். ஆனால் அவர்களின் அரசியல்
படுகொலைகளையும் தனிநபர் பயங்கரவாதத்தையும் தீவிர தேசியவாதிகள் அங்கீகரிக்கவில்லை .
தேசபக்த புரட்சியாளர்களின் நோக்கங்களோடு தங்களை இணைத்துக் கொள்வதில் தீவிர தேசியவாதிகள்
மிக்க கவனமுடன் இருந்தனர்.
இந்து மத நம்பிக்கைகளால் முலாம் பூசப்பட்டு
வலியுறுத்திச் சொல்லப்பட்ட தேசப்பற்றை முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தங்களின் முந்தையத்
தலைவர்களைப் போலவே சுதேசி இயக்கத் தலைவர்கள் சமூகத்தின் பெரும்பகுதி மக்களை ஊடுருவத்
தவறினர். 1908 முதல் தீவிர தேசியவாதம் சரியத் தொடங்கியது. 1907இல் ஏற்பட்ட சூரத் பிளவு
அதன் வீழ்ச்சிக்கான மற்றுமொரு காரணமாகும்.
சூரத் பிளவு
1906இல் மிண்டோ பிரபு இந்திய அரசப்பிரதிநிதியாகப்
பணியமர்த்தப்பட்டதிலிருந்து மிதவாத தேசியவாதிகளுக்கும் தீவிர தேசியவாதிகளுக்கும் இடையில்
நிலவிய கருத்து வேற்றுமை மேலும் தீவிரமடைந்தது. வேற்றுமைகள் வளர்ந்து கொண்டிருந்த நிலையில்
1906இல் கல்கத்தா மாநாட்டில் மிதவாத தேசியவாதிகளின் கோரிக்கையை ஏற்று தாதாபாய் நௌரோஜி
தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் பிளவு தவிர்க்கப்பட்டது. பெரோஸ்ஷா மேத்தாவின் தலைமையிலான
பல மிதவாத தேசியவாதிகள் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டனர். சுதேசி, புறக்கணிப்பு, தேசியக்
கல்வி, சுயாட்சி ஆகியவை தொடர்பான நான்கு தீர்மானங்களைத் தீவிர தேசியவாதிகள் ஒருவாறு
நிறைவேற்றினர்.
காங்கிரசின் அடுத்த மாநாடு தீவிர தேசியவாதிகளின் கோட்டை எனக் கருதப்பட்ட பூனாவில் நடைபெறத் திட்டமிடப்பட்டது. கல்கத்தா மாநாட்டு முடிவுகளால் அச்சம் கொண்டிருந்த மிதவாத தேசியவாதிகள் மாநாடு நடைபெறுமிடத்தைச் சூரத் நகருக்கு மாற்றினர். காங்கிரசின் அடுத்த தலைவர் பொறுப்புக்கு மிதவாத தேசியவாதிகளின் வேட்பாளரான ராஷ்பிகாரி கோஷ் என்பாருக்கு எதிராகத் தீவிர தேசியவாதிகள் லாலா லஜபதி ராயின் பெயரை முன்மொழிந்தனர். இயக்கத்தில் பிளவு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக லாலா லஜபதி ராய் போட்டியிட மறுத்தார். 1906இல் கல்கத்தா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்களைப் பின்பற்றுவதா? இல்லையா என்ற கேள்வியை ஒட்டி நிலைமை கொதி நிலையை எட்டியது. பெரோஸ்ஷா மேத்தாவின் குழு இந்த தீர்மானங்களை நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கப்பட வேண்டுமெனக் கோரியது. பெரோஸ் ஷாவின் இத்தகைய திட்டத்தை எதிர்கொள்ளத் தீவிர தேசியவாதிகள் ராஷ் பிகாரி கோஷ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதை எதிர்க்க முடிவு செய்தனர் மாநாடு குழப்பத்தில் முடிந்தது.
டிசம்பர் 1885இல் உருவான காங்கிரஸ் இப்போது
மிதவாத தேசியவாதிகள், தீவிர தேசியவாதிகளென இரு குழுக்களாகப் பிரிந்தது. சூரத் பிளவுக்குப்
பின் உருவான காங்கிரஸ் முன்பிருந்ததைக் காட்டிலும் ஆங்கிலேயரிடம் அதிக விசுவாசத்துடன்
நடந்துகொண்டது. தீவிர தேசியவாதிகள் இல்லாத புதிய காங்கிரஸ் "மேத்தா காங்கிரஸ்"
என அழைக்கப்பட்டது. 1908இல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மிதவாத தேசியவாதிகள் மட்டுமே
கலந்து கொண்டனர். அவர்கள் ஆங்கில அரசின் மீதான தங்கள் விசுவாசத்தை மீண்டும் வலியுறுத்தினர்.
ஆங்கில ஆட்சிக்கு சவாலாக இருக்கும் எண்ணமில்லாத காங்கிரஸ் ஓர் வலுவற்ற அரசியல் சார்ந்த
அமைப்பாயிற்று. தீவிர தேசியவாதிகளினால் அதுபோன்ற அரசியல் சார்ந்த அமைப்பை உருவாக்க
இயலவில்லை. முக்கியத் தலைவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்த அரசின் அடக்கு
முறையே அதற்கான முக்கியக் காரணமாகும்.