தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் - வரலாறு - புறக்கணித்தலும், வங்காளத்தில் சுதேசி இயக்கமும் (1905 -1911) | 12th History : Chapter 2 : Rise of Extremism and Swadeshi Movement
புறக்கணித்தலும், வங்காளத்தில் சுதேசி இயக்கமும் (1905 -1911)
திட்டமிடப்பட்ட, தன்னெழுச்சியான போராட்ட முயற்சிகள்,
ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு நீண்டகாலப் போராட்டத்திற்கு அடித்தளம் அமைத்தன. புறக்கணிப்பும்
சுதேசியமும் எப்போதும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டதாகவும் இந்தியாவைத் தன்னிறைவு பெற்ற
நாடாக ஆக்குவதும் இவ்விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. சென்னையைச் சேர்ந்த
தேசியவாதியான G.சுப்பிரமணியம் சுதேசி இயக்கத்தின் குறிக்கோள் குறித்து “தேசிய வாழ்வின்
அனைத்துத் தளங்களிலும் தங்களின் சார்பு நிலைக்கு எதிரான புரட்சி" எனச் சுருக்கமாக
விளக்கினார். கோபால கிருஷ்ண கோகலேயின் வார்த்தைகளில் சுதேசி இயக்கமானது நம்முடையத்
தொழில்களின் முனனேற்றத்திற்கானது மட்டுமல்ல; நமது தேசிய வாழ்க்கை சார்ந்த அனைத்துத்
துறைகளின் மேம்பாட்டிற்குமானது. இயக்கத்தின் வளர்ச்சியோடு சுதேசி இயக்கம் குறித்த பல
விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன. எப்படியிருந்த போதிலும் சுதேசி இயக்கமும் புறக்கணிப்புப்
போராட்டங்களும் வாழ்வில் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் பெறுவதற்கான சாத்தியமான வழிமுறையாக
அல்லாமல் காலனிய எதிர்ப்புப் போராட்டமாகவே நடத்தப் பெற்றது. இவ்விளக்கம் பின்னர் மகாத்மா
காந்தியடிகளின் வருகையோடு உட்புகுத்தப்பட்டது.
ஆக்கபூர்வமான சுதேசி திட்டம் பெருமளவு சுய
உதவிக்கு முக்கியத்துவம் கொடுத்தது. அது ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிலிருந்து முழுவதுமாக
விடுதலை பெற்ற, சுயாட்சிக்கான மாற்று நிறுவனங்களைக் கட்டமைப்பதில் கவனம் செலுத்தியது.
மக்கள் தங்களைச் சுயவலிமை உள்ளவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டிய தேவைக்கு முக்கியத்துவம்
வழங்கியது அதுவே அரசியல் போராட்டங்களை நடத்துவதற்கு முன்பாக அதற்குத் தகுதியான குடிமக்களை
உருவாக்கும்.
தனிச்சிறப்புடையவர்களில் ஒருவரான ரவீந்திரநாத்
தாகூர் தனது எழுத்துக்கள் மூலம் இக்கருத்துகளைப் பிரபலமடையச் செய்தார். சுயஉதவி (ஆத்ம
சக்தி ) எனும் ஆக்கத் திட்டத்தினை அவர் கோடிட்டுக் காட்டினார். தாகூர் சுய பொருளாதார
வளர்ச்சிக்கு அழைப்பு விடுத்தார். கல்வியானது தாய்மொழியில் வழங்கப்பட வேண்டுமென வற்புறுத்தினார்.
சுயஉதவி (ஆத்ம சக்தி) எனும் செய்தியை மக்களிடம் பரப்புவதற்கு மேளாக்கள் எனும் திருவிழாக்களைப்
பயன்படுத்த அவர் அழைப்பு விடுத்தார். இதுவே ஒட்டு மொத்த வங்காளத்தின் தாரக மந்திரமாகி
அதன் விளைவாக அனைத்து இடங்களிலும் ஜவுளி , கைத்தறித் துணிகள், சோப்புகள், மட்பாண்டங்கள்,
தீப்பெட்டி, தோல் பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் சுதேசி விற்பனை நிலையங்கள்
பெருகின.
1905 நவம்பர் 5இல் விடிவெள்ளிக் கழகத்தின்
முன்னெடுப்பில் கல்விக்கான தேசிய கழகம் உருவாக்கப்பட்டது. ஆகஸ்ட் 1906இல் வங்காள தேசியக்
கல்லூரியும் பள்ளியும் நிறுவப்பட்டன. அடிமை நிறுவனங்களிலிருந்து வெளியே வரும்படி சதிஷ்
சந்திரா மாணவர்கட்கு ஒரு உணர்ச்சிகரமான வேண்டுகோள் விடுத்தார். இருந்தபோதிலும் இவ்வாறான
முயற்சிகள் வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் எதுவும் இல்லாததால் தோல்வியடைந்தன.
சுதேசி சிந்தனையின் பரிணாம வளர்ச்சி
விடுதலைப் போராட்டத்தின்போது
சுதேசி இயக்கம் என்ற எண்ணம் முதன்முதலாக 1905இல் ஒரு சில காங்கிரஸ் தலைவர்களாலும்,
பின்னர் 1920களில் மகாத்மா காந்தியடிகளின் தலைமையிலும் ஒரு தத்துவமானது.
'சுதேசி'
என்பதன் பொருள் 'ஒருவரது சொந்தநாடு' என்பதாகும். இத்தத்துவத்தின் தோற்றமானது 1872இல்
பூனாவில் மகாதேவ் கோவிந்த் ரானடே தனது தொடர் சொற்பொழிவுகளின்மூலம் இச்சிந்தனையைப் பிரபலப்படுத்தியதிலிருந்துத் தொடங்குகிறது. ரானடேயின் கருத்துப்படி ஒருவரது சொந்த நாட்டில் உற்பத்திசெய்யப்படும்
பொருட்களுக்கு அப்பொருட்களின் பயன்பாடு குறைவான மனநிறைவைக் கொடுத்த போதிலும் முன்னுரிமை
வழங்கப்படல் வேண்டும்.
1920களில் காந்தியடிகள் இதை
அனைத்து இந்தியர்களும் தாங்கள் பிறந்த நாட்டிற்குச் செய்யவேண்டிய கடமைகளோடு இணைத்துச்
சுதேசி சிந்தனைக்குப் புதிய பொருளைக் கொடுத்தார். காந்தியடிகளைப் பொருத்தமட்டில் சுதேசி
என்பது ஒருவர் தனது சொந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மட்டும் பயன்படுத்துவது
என்பது மட்டுமல்ல. அவர் பின்வரும் வார்த்தைகளில் சுதேசியை விளக்குகிறார். சுதேசி என்பது
நமக்குள்ளிருக்கும் ஆன்மபலம் அது வெகு தொலைவிலிருந்து கிடைப்பனவற்றை ஒதுக்கி வைத்து
நமக்கு வெகு அருகேயுள்ள சுற்றுப்புறத்திலிருந்து கிடைக்கும் பயன்களையும் சேவைகளையும்
பயன்படுத்தும் வண்ணம் இங்கு உள்ளவர்களால் தயார் செய்யப்படும் பொருட்களை மட்டுமே நாம்
பயன்படுத்த வேண்டும். அப்படியான தொழில்கள் எங்கு தேவைப்படுகின்றனவோ அங்கே அவைகள் திறம்படவும்
முழுமையாகவும் செயல்படச் சேவை செய்ய வேண்டும்.
வட்டார மொழியில் கல்வி, எனும்
கருத்து சுதேசி இயக்கத்திற்கு வெகு முன்னரே 1902இல் சதீஷ் சந்திர முகர்ஜியால் விடிவெள்ளிக்
கழகம் (Dawn Society) நிறுவப்பட்ட போதே உருவாகி விட்டது.
பெருவாரியான மக்களை ஒன்று திரட்ட மேற்கொள்ளப்பட்ட
மற்றொரு வெற்றிகரமான முறை சமிதிகள் (தொண்டர் படைகள்) எனும் அமைப்புகள் உருவாக்கப்பட்டமையாகும்.
உறுப்பினர்களுக்கு உடற்பயிற்சி அளித்தல், அறநெறிகளைக் கற்றுக் கொடுத்தல், பஞ்சங்களின்
போதும் நோய்களின் தாக்கத்தின் போதும் சேவையாற்றுதல், விழாக்காலங்களில் சுதேசி செய்தியைப்
பரப்புரை செய்தல், உள்ளூரளவில் பள்ளிகளையும் நடுவர் நீதிமன்றங்களையும் உருவாக்குதல்
போன்ற பல பணிகளில் இச்சமிதிகள் ஈடுபடுத்தப்பட்டன. தனது இயல்பான அமைதிவழிப் போராட்டத்தின்
மூலம் ஆங்கில அரசு நிர்வாகத்திற்கு ஒத்துழைப்புத் தராமல் இருப்பதே அதன் நோக்கம்.
மக்களைப் பெருமளவில் ஒன்று திரட்ட மேற்கொள்ளப்பட்ட
இம்முயற்சிகள் முஸ்லிம் விவசாயிகள், ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோரிடையே தனது தளத்தை விரிவுப்படுத்த
இயலாமல் போனதால் செழித்தோங்க இயலவில்லை . சமிதிகளின் தொண்டர்களில் பெரும்பாலோர் கற்றறிந்த
மத்தியதர வர்க்கத்திலிருந்தும் இந்து உயர் வர்க்கத்திலிருந்தும் அணி திரட்டப்பட்டிருந்தனர்.
தவிரவும் சுதேசி இயக்கவாதிகள் பல சமயங்களில் சமூக ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வலுக்கட்டாயமான
முறைகளைக் கையாண்டனர். எடுத்துக்காட்டாக அந்நியப் பொருட்களை வாங்குவோரைச் சமூகப் புறக்கணிப்பு
செய்வது சாதாரணமாக நடைபெற்றது. அந்நடவடிக்கைகள் சாதி அமைப்புகளின் மூலமாகவும் ஏனைய
தேசியவாத அமைப்புகளின் வழியாகவும் மேற்கொள்ளப்பட்டன.
வங்கப்பிரிவினையை ரத்து செய்வதற்கான அறிகுறிகள்
தென்படாத நிலையில் 1906-லிருந்து சுதேசி இயக்கம் முக்கிய மாற்றம் பெற்றது. பெரும்பாலான
தலைவர்கள் இவ்வியக்கத்தைப் பயன்படுத்தி நாடு முழுவதும் அரசியல் சுதந்திரம் அல்லது சுயராஜ்ஜியம்
எனும் கருத்தைப் பரப்ப வேண்டுமெனக் கருதினர். ஆக்கச் சார்பான சுதேசிச் செயல்பாடுகள்
அரவிந்தகோஷ், பிபின் சந்திரபால் போன்ற தலைவர்களாலும் ஏனைய தீவிர தேசியவாதத் தலைவர்களாலும்
கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டன. அவர்களின் புதிய வழிகாட்டுதலின் கீழ் சுதேசி நிகழ்ச்சி
நிரலில் பின்வருவன இணைத்துக் கொள்ளப்பட்டன. அவை அந்நியப் பொருட்களைப் புறக்கணிப்பது,
அரசுப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் புறக்கணிப்பது, நீதிமன்றங்களைப் புறக்கணித்தல்,
பட்டங்களைத் துறந்து விடுதல், அரசுப் பணிகளைக் கைவிடுதல், ஆங்கிலேயரின் அடக்குமுறை
தாங்க இயலாத அளவிற்குச் சென்றால் ஆயுதப் போராட்டத்தைக் கைக்கொள்வது. இத்தகைய இயல்புகளைக்
கொண்ட போராட்டங்களுக்கு மிகப்பெருமளவிலான மக்களைத் திரட்டுவது அவசியமாயிற்று. மதத்தோடு
பண்டைய பாரம்பரியப் பெருமைகளையும் இணைத்துக் கொள்வது இவ்வியக்கங்களின் மிக முக்கியக்
கூறுகளானது.