Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | இந்தியாவில் சங்கங்கள் உருவாதல்

இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி - வரலாறு - இந்தியாவில் சங்கங்கள் உருவாதல் | 12th History : Chapter 1 : Rise of Nationalism in India

   Posted On :  08.07.2022 06:34 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 1 : இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி

இந்தியாவில் சங்கங்கள் உருவாதல்

(அ) சென்னைவாசிகள் சங்கம் (Madras Native Association - MNA) (ஆ) சென்னை மகாஜன சங்கம் (Madras Mahajana Sabha - MMS) (இ) இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress - INC) (ஈ) தொடக்ககால தேசியவாதிகளின் பங்களிப்பு (1885-1915)

இந்தியாவில் சங்கங்கள் உருவாதல்

 

(அ) சென்னைவாசிகள் சங்கம் (Madras Native Association - MNA)

1852 பிப்ரவரி 26இல் சென்னைவாசிகள் சங்கம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. மக்களை ஒருங்கிணைத்து கம்பெனிக்கு எதிராகக் குறைபாடுகளை எடுத்துரைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சிகளில் இது ஒன்றாகும். இதுவும் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த நிலவுடைமை வணிக வர்க்கத்தினரின் அமைப்பாகும். கம்பெனியின் நிர்வாகத்தில் வருவாய், கல்வி, நீதி ஆகியத் துறைகளில் தங்களுக்குள்ள குறைபாடுகளை இவர்கள் இவ்வமைப்பின் மூலம் எடுத்துரைத்தனர். சென்னையின் மிக முக்கிய வணிகரான கஜுலா லட்சுமிநரசு என்பவரே இவ்வமைப்பு உருவாவதற்கு உந்து சக்தியாய்த் திகழ்ந்தவர்.


இவ்வமைப்புத் தனது குறைகளை இங்கிலாந்துப் பாராளுமன்றத்தின் முன் வைத்தது. இங்கிலாந்துப் பாராளுமன்றம் இந்தியாவில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி குறித்து விவாதித்து 1853இல் பட்டயச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் இது நடைபெற்றது. இவ்வமைப்பு 1852 டிசம்பரில் சமர்ப்பித்த மனுவில் ரயத்துவாரி, ஜமீன்தாரி முறைகள் வேளாண் வர்க்கத்தினரைக் கடும் துன்பங்களுக்கு உள்ளாக்கியதைச் சுட்டிக் காட்டியது. ஜமீன்தார்கள், கம்பெனியின் அதிகாரிகள் ஆகியோரின் அடக்குமுறை சார்ந்த தலையீட்டிலிருந்து விவசாயிகளை விடுவிக்கப் பண்டைய கிராமமுறை மீட்டெடுக்கப்பட வேண்டுமென இவ்வமைப்பு வற்புறுத்தியது. நீதித்துறையானது தாமதமாக செயல்படுவதாகவும், சிக்கல்கள் நிறைந்ததாகவும் குறைபாடுகளுடையதாகவும் இருப்பதாக இம்மனுவில் புகார் கூறப்பட்டிருந்தது. நீதிபதிகளின் நியமனத்தின் போது அவர்களின் நீதித்துறை சார் அறிவுத்திறனும் வட்டார மொழிகளில் அவர்களுக்குள்ளத் திறமையும் மதிப்பீடு செய்யப்படாததால் நீதித்துறையின் திறமை பாதிக்கப்படுவதை இம்மனு சுட்டிக்காட்டியது. மானிய உதவித்திட்டத்தின் கீழ் சமயப்பரப்பு நிறுவனங்களின் கல்விக் கூடங்களுக்கு அரசின் நிதி மடைமாற்றம் செய்யப்படுவதும் இம்மனுவில் எதிர்க்கப்பட்டிருந்தது.

சென்னைவாசிகள் சங்கத்தின் மனு மார்ச் 1853இல் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இந்தியச் சீர்திருத்தக் கழகத்தின் தலைவரான H.D செய்மோர் அக்டோபர் 1853இல் சென்னை வந்தார். குண்டூர், கடலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களைப் பார்வையிட்டார். இருந்தபோதிலும் 1853 ஆம் ஆண்டு பட்டயச்சட்டம் இந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சித் தொடர அனுமதி வழங்கியது. இதனால் இவ்வமைப்பு இந்தியாவிலுள்ள ஆங்கிலேயருக்குச் சொந்தமான பகுதிகள் மகாராணியாரின் நேரடிக் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட வேண்டுமென ஒரு போராட்டத்தை நடத்தியது. இவ்வமைப்பு இந்தியாவில் கம்பெனியின் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையைக் கொண்ட பதினான்காயிரம் நபர்களால் கையெழுத்திடப்பட்ட தனது இரண்டாவது மனுவை ஆங்கிலப் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தது. இவ்வமைப்பின் ஆயுட்காலம் குறைவானதே. 1866இல் லட்சுமிநரசு இயற்கை எய்தினார். 1881இல் இவ்வமைப்பு இல்லாமல் போயிற்று. சீர்திருத்தங்கள் என்றளவில் இவ்வமைப்புப் பெருமளவில் சாதனைகள் செய்யாவிட்டாலும் இது இந்தியரின் கருத்தினை வெளியே சொல்ல மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த முயற்சியின் தொடக்கமாகும். தனது வாழ்நாளில் இவ்வமைப்பு சென்னை மாகாண எல்லைகளுக்குள்ளே மட்டும் செயல்பட்டது. இவ்வமைப்பு தனது மனுக்கள் மூலம் சுட்டிக்காட்டிய குறைபாடுகளும், நடத்தியப் போராட்டங்களும் செல்வந்தர்களின் குறிப்பாகச் சென்னை மாகாண நிலவுடைமையாளர்களின் எண்ணத்தின்படி நடந்தவையாகும். குறைபாடு யாதெனில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும், மக்களின் குறைகளை ஓங்கி ஒலிக்கச் செய்து, அக்குறைகளை நிவர்த்தி செய்ய காலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடும் தேசிய அளவிலான அரசியல் சார்ந்த அமைப்பாக இல்லாமல் போனதுதான். அந்த இடைவெளியை இந்திய தேசிய காங்கிரஸ் நிரப்பியது.

 

(ஆ) சென்னை மகாஜன சங்கம் (Madras Mahajana Sabha - MMS)

சென்னைவாசிகள் சங்கம் செயலிழந்த பின்னர் சென்னை மாகாணத்தில் அதைப் போன்ற வேறு அமைப்பு இல்லாமல் போனது. கற்றறிந்த பல இந்தியர்கள் இந்நிலையைக் கவலையுடன் நோக்கினர். ஓர் அரசியல் சார்ந்த அமைப்பின் தேவை உணரப்பட்டது. அதன் விளைவாய் மே, 1884இல் சென்னை மகாஜன சங்கம் நிறுவப் பெற்றது. 1884 மே 16இல் நடைபெற்ற தொடக்க விழாவில் பங்கேற்ற முக்கியப் பிரமுகர்கள் G. சுப்ரமணியம், வீரராகவாச்சாரி , அனந்தா சார்லு, ரங்கையா, பாலாஜிராவ், சேலம் ராமசாமி ஆகியோராவர். இதற்கிடையே இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப் பெற்றது. சென்னை மகாஜன சபையின் பிராந்திய மாநாடு நடைபெற்று முடிந்த பின்னர் அதன் தலைவர்கள் பம்பாயில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டில் கலந்துகொண்டு சென்னை மகாஜன சபையை இந்திய தேசிய காங்கிரசோடு இணைத்தனர்.

 

(இ) இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress - INC)

காலனிய ஆட்சிக்கு எதிராகக் குறைகளையும் பிரச்சனைகளையும் எழுப்பும் ஒரு அரசியல்சார் அமைப்பை நிறுவும் சிந்தனை வெற்றிடத்திலிருந்து உருவானதல்ல. 1875க்கும் 1885க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் ஆங்கிலேயரின் கொள்கைகளுக்கு எதிராகப் பல போராட்டங்கள் நடைபெற்றன. 1875இல் இறக்குமதியாகும் பருத்தி இழைத்துணிகளின் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட வேண்டுமென ஜவுளி ஆலை உரிமையாளர்கள் இயக்கம் நடத்தினர். 1877இல் அரசுப் பணிகள் இந்திய மயமாக்கப்பட வேண்டுமென்றக் கோரிக்கை ஓங்கி ஒலித்தது. 1878ஆம் ஆண்டு வட்டார மொழிப் பத்திரிகைச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன. இல்பர்ட் மசோதாவிற்கு ஆதரவாக 1883இல் கிளர்ச்சிகள் நடைபெற்றன.


ஆனால் இப்போராட்டங்களும் கிளர்ச்சிகளும் ஒருங்கிணைக்கப்படாமல் அங்கொன்றும் இங்கென்றுமாகவே நடைபெற்றன. தேசிய அளவிலான ஒரு அரசியல்சார் அமைப்பு உருவாக்கப்படாத நிலையில் இத்தகையப் போராட்டங்கள், கொள்கைகளை வடிவமைப்போர் மீது தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது ஆழமாக உணரப்பட்டது. இவ்வுணர்தலில் இருந்து உதயமானதே இந்திய தேசிய காங்கிரஸ். இந்தியா ஒரே நாடு எனும் கருத்து அவ்வமைப்பின் பெயரில் பிரதிபலித்தது. இவ்வமைப்பு தேசியவாதம் எனும் கருத்தையும் அறிமுகம் செய்தது.


ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (A.O. Hume) எனும் பணி நிறைவு பெற்ற இந்தியக் குடிமைப் பணி (Indian Civil Service - ICS) அதிகாரி டிசம்பர் 1884இல், சென்னையில் பிரம்ம ஞான சபையின் கூட்டமொன்றிற்குத் தலைமை ஏற்றிருந்தார். இக்கூட்டத்தில் அகில இந்திய அளவில் செயல்படும் ஒரு அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பாக விவாதிக்கப்படுகையில் இந்திய தேசிய காங்கிரசை உருவாக்குவது எனும் கருத்து உருவானது. இந்திய தேசிய காங்கிரஸ் 1885 டிசம்பர் 28இல் பம்பாயில் உருவாக்கப்பட்டது. A.O.ஹுயூம் தவிர இவ்வமைப்பை உருவாக்கிய முக்கிய உறுப்பினரான W.C. பானர்ஜி இவ்வமைப்பின் முதல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.


கோரிக்கை மனுகொடுப்பது, விண்ணப்பங்கள் அனுப்புவது போன்ற செயல்பாடுகளை மட்டுமே காங்கிரஸ் மேற்கொண்ட போதும், தொடக்கத்திலிருந்தே சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் தனது வரம்புக்குள் கொண்டுவரும் பணிகளை மேற்கொண்டது. இந்தியாவை ஒரே நாடாக ஒருங்கிணைப்பதே இந்திய தேசிய காங்கிரசின் இன்றியமையா நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. இந்தியர்கள் தாங்கள் அனைவரும் ஒரு நாட்டின் குடிமக்கள் என உணர்ந்தால் மட்டுமே காலனியாட்சிக்கு எதிரானப் போராட்டங்கள் வெற்றி பெறுமென்பதை அவர்கள் நன்குணர்ந்தனர். இம்முயற்சியில் வெற்றி பெறும் பொருட்டு நாட்டின் பல பகுதிகளிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இயக்கங்களின் பொது அரசியல் மேடையாகக் காங்கிரஸ் செயல்பட்டது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசியல் செயல்பாட்டாளர்கள் ஒன்று கூடவும் காங்கிரசின் பதாகையின் கீழ் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் காங்கிரஸ் இடமளித்தது. இவ்வமைப்பு நூற்றுக்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட சிறிய அமைப்பாக இருந்த போதிலும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளின் பிரதிநிதித்துவத்துடன் அகில இந்தியப் பண்பைப் பெற்றிருந்தது. இதுவே அகில இந்திய அளவில் மக்களைத் திரட்டும் தொடக்கமாய் ஆனது.

இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய நோக்கங்களும் கோரிக்கைகளும் :

அரசியல் அமைப்பு

அரசாங்கத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென்பது இந்திய தேசிய காங்கிரசின் முக்கியக் கோரிக்கையாகும். அரசில் இந்தியப் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டுமெனக் காங்கிரஸ் கோரியது.

பொருளாதாரம்

விவசாயிகளின் துன்பநிலைக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று அதிக நிலவரியாகும். நிலவரி குறைக்கப்பட வேண்டுமெனவும் ஜமீன்தார்களின் சுரண்டலிலிருந்து விவசாயிகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் காங்கிரஸ் கோரியது. சுதேசிப் பொருட்களுக்கு நன்மை அளிக்கும் விதத்தில் இறக்குமதி செய்யப்படும் பண்டங்களின் மீது அதிகவரி விதிக்கும்படி காங்கிரஸ் பரிந்துரை செய்தது.

நிர்வாகம்

இந்திய நிர்வாகத்திற்குப் பொறுப்பு வகிக்கும் உயர்நிலை அதிகாரிகள் இங்கிலாந்தில் நடத்தப்படும் குடிமைப்பணித் தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இதன் பொருள் தகுதியுடைய கற்றறிந்த இந்தியர்கள் லண்டனுக்குச் செல்லும் வசதியில்லாவிட்டால் நிர்வாகப்பதவிகளில் அமரும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லை என்பதுதான். எனவே, இந்தியக் குடிமைப்பணித் தேர்வுகளை இங்கிலாந்திலும் இந்தியாவிலும் ஒரே நேரத்தில் நடத்துவதன் மூலம் நிர்வாகப் பணிகளை இந்தியமயமாக்குவது காங்கிரசின் முக்கியக் கோரிக்கையாகும்.

நீதித்துறை

ஆங்கிலேய நீதிபதிகள் இந்திய அரசியல் செயல்பாட்டாளர்களிடம் ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வதால் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிர்வாகமும் நீதி நிர்வாகமும் தனித்தனியே முற்றிலுமாகப் பிரிக்கப்பட வேண்டுமெனக் காங்கிரஸ் கோரிக்கை வைத்தது.

 

(ஈ) தொடக்ககால தேசியவாதிகளின் பங்களிப்பு (1885-1915)

இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்த தொடக்க காலத் தலைவர்கள் சமூகத்தின் உயர்குடிப் பிரிவைச் சேர்ந்தோர் ஆவர். வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் போன்றோர் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தினர். இருந்தபோதிலும் அவர்கள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்களாயினும் இந்திய தேசிய காங்கிரசை உண்மையாகவே ஒரு தேசிய அரசியல்சார் அமைப்பாக ஆக்கினர். காங்கிரசின் இத்தலைவர்கள் அரசியல் சட்டம் அனுமதித்த வழிகளான மனுகொடுப்பது, மன்றாடுவது, விண்ணப்பம் செய்வது போன்ற முறைகளை மேற்கொண்டதால் "மிதவாத தேசியவாதிகள்" என்னும் புனைப் பெயரைப் பெற்றனர். காலனியம் பற்றிய ஒரு வகையான புரிதல் இந்தியாவில் உருவாகிக் கொண்டிருந்த காலமது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் உருவான காலப்பகுதியில் காலனிய எதிர்ப்பு தொடர்பான புரிதல் இருந்ததா என்பது பற்றித் தெரிந்து கொள்ள ஆயத்த நிலைக் குறிப்புகளில்லை. நாம் ஒரே நாடாக என்ற கருத்து வடிவம் பெற உதவியவர்கள் இத் தொடக்க கால தேசியவாதிகளே. அவர்கள் உண்மையாகவே இம்மண் சார்ந்த காலனிய எதிர்ப்புச் சித்தாந்தத்தையும் தாங்களாகவே தங்களுக்கென ஒரு செயல் திட்டத்தையும் உருவாக்கிக் கொண்டனர். இது உண்மையில் காந்தியடிகள் போன்ற எதிர்கால மக்கள் தலைவர்களுக்கு உதவியது.

1890களின் பிற்பகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசுக்குள்ளே கருத்து வேற்றுமைகள் வளர்ந்தன. பிபின் சந்திரபால், பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்ற தலைவர்கள் வெறுமனே மனுக்கள் எழுதுவது, மன்றாடிக் கேட்டுக் கொள்வது, விண்ணப்பம் செய்வது போன்ற அணுகுமுறைகளுக்கு மாற்றாகத் தீவிரமான அணுகுமுறைகளைப் பரிந்துரைத்தனர். இத்தன்மையுடையோர் மிதவாத தேசியவாதிகளுக்கு நேரெதிராக "தீவிர தேசியவாதிகள் என்றழைக்கப்பட்டனர். 1897இல் திலகர் "சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்" என முழங்கிய போது அவர்களின் நோக்கம் தெளிவாகத் தெரிந்தது. தங்களது மனுக்கள், பிரார்த்தனைகள் மூலமாக மிதவாத தேசியவாதிகள் கேட்டுக் கொண்டிருந்த பொருளாதார அல்லது நிர்வாகச் சீர்திருத்தங்களுக்குப் பதிலாகத் திலகரும் தீவிரப்போக்குடைய அவருடையத் தொண்டர்களும் சுயராஜ்ஜியத்தைக் கோரினர். அவர்கள் ஒருவரையொருவர் விமர்சித்துக் கொண்டாலும் அவர்களை எதிரெதிர் துருவங்களில் வைத்துப் பார்ப்பது தவறாகும். மிதவாத தேசியவாதிகள், தீவிர தேசியவாதிகள் ஆகிய இரு தரப்பினருமே மாபெரும் இந்திய தேசியவாதிகளின் இயக்கத்தில் முக்கியக் கூறுகளாவர். உண்மையில் சுதேசி இயக்கம் தோன்றுவதற்கு பங்களிப்புச் செய்தவர்கள் அவர்களேயாவர். நீங்கள் அடுத்த பாடத்தில் படிக்கவுள்ள, 1905இல் ஆங்கிலேயர்களால் மேற்கொள்ளப்பட்ட வங்கப் பிரிவினை இந்தியர்களால் ஆவேசமாக எதிர்க்கப்பட்டது. 1905இல் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கம் ஆங்கிலேய ஆட்சியை நேரடியாக எதிர்த்ததோடு, சுதேசித் தொழில்கள், தேசியக்கல்வி, சுயஉதவி இந்திய மொழிகளைப் பயன்படுத்துதல் ஆகிய கருத்துகளை ஊக்குவித்தது. தீவிர தேசியவாதிகள் முன்வைத்த பெருமளவிலான மக்களைத் திரட்டுவது, ஆங்கிலப் பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிப்பது ஆகிய போராட்ட முறைகள் மிதவாத தேசியவாதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


மிதவாத தேசியவாதிகள், தீவிர தேசியவாதிகள் ஆகிய இருதரப்பினரும் அவர்கள் வழிகாட்டிகளாகப் பொறுப்பு வகித்து, அப்பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியத் தேவையுள்ளது எனும் உண்மையை ஏற்றுக் கொள்வதில் ஒரே கருத்தையேக் கொண்டிருந்தனர். பத்திரிகைகள் முதலானப் பல்வேறு வழிகளில் தேசிய உணர்வைப் புகட்டும் முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டனர். 1885இல் இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டபோது அதன் உறுப்பினர்களின் மூன்றில் ஒரு பகுதியினர் பத்திரிகையாளர்களாக இருந்தனர். தொடக்ககால விடுதலை இயக்கத்தின் வல்லமை மிக்கத் தலைவர்களில் பெரும்பாலோர் பத்திரிகைகளில் எழுதுவதில் ஈடுபட்டிருந்தனர். தாதாபாய் நௌரோஜி இந்தியாவின் குரல் (Voice of India), ராஸ்த் கோப்தார் (Rast Goftar) எனும் இரு பத்திரிகைகளைத் தொடங்கி அவற்றின் ஆசிரியராகவும் பணியாற்றினார். சுரேந்திரநாத் பானர்ஜி பெங்காலி (Bengalee) என்னும் செய்திப்பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பாலகங்காதர திலகர் கேசரி, மராட்டா ஆகியப் பத்திரிகைகளின் ஆசிரியராகத் திகழ்ந்தார். இவ்வழி முறைகளைப் பயன்படுத்தியே அவர்கள் காலனிய அடக்குமுறை குறித்து மக்களுக்கு கற்பித்துத் தேசியக் கருத்துகளையும் பரப்பினர். இந்திய தேசிய காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகள் பற்றிய செய்திகளை இப்பத்திரிகைகளே மக்களுக்கு எடுத்துச் சென்றன. இந்திய வரலாற்றில் முதன் முறையாக காலனிய அரசின் அடக்குமுறை கொள்கைகளுக்கும் சட்டங்களுக்கும் எதிராகப் பொதுமக்கள் கருத்தை உருவாக்குவதில் பத்திரிகைகள் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டன.


தேசிய இயக்கத்தில் மத்தியதர வகுப்பினரும் விவசாயிகளும், கைவினைஞர்களும் தொழிலாளர்களும் மிக முக்கியமான பங்கினை வகிக்க முடியுமென பால கங்காதர திலகர் உறுதியாக நம்பினார். காலனிய அரசின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக இம்மக்கள் பிரிவினரிடையே மன நிறைவின்மையைப் பரப்புவதற்கு அவர் பத்திரிகைகளைப் பயன்படுத்தினார். இந்தியாவில் ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக நாடுதழுவிய எதிர்ப்புக்கு அவர் அழைப்பு விடுத்தார். 1897 ஜுலை 27இல் திலகர் கைது செய்யப்பட்டு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124A யின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். திலகர் காங்கிரசில் தீவிர தேசியவாதிகள் பிரிவைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும் மிதவாத தேசியவாதிகள், தீவிர தேசியவாதிகள் ஆகிய இரு பிரிவினரும் ஒருங்கிணைந்து அவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்தனர். கருத்துச் சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் ஆகிய இரு உரிமைகளும் இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியக் கூறுகளாய் விளங்கின.

Tags : Rise of Nationalism in India | History இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி - வரலாறு.
12th History : Chapter 1 : Rise of Nationalism in India : Birth of Indian Associations Rise of Nationalism in India | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 1 : இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி : இந்தியாவில் சங்கங்கள் உருவாதல் - இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 1 : இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி