Home | 12 ஆம் வகுப்பு | 12வது வரலாறு | சமூகப் பொருளாதாரப் பின்னணி

இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி - வரலாறு - சமூகப் பொருளாதாரப் பின்னணி | 12th History : Chapter 1 : Rise of Nationalism in India

   Posted On :  08.07.2022 09:50 pm

12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 1 : இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி

சமூகப் பொருளாதாரப் பின்னணி

அ) புதிய நிலவுடைமை உரிமைகளால் ஏற்பட்ட பாதிப்புகள் ஆ) கட்டுப்பாடுகளற்ற வணிகக் கொள்கை, தொழில் நீக்கச் செயல்பாடுகள்: இந்தியக் கைவினைஞர்கள் மீது ஏற்படுத்தியத் தாக்கம் இ) பஞ்சங்களும் இந்தியர்கள் ஆங்கிலேயரின் கடல் கடந்த காலனிகளில் குடியேறுதலும்

சமூகப் பொருளாதாரப் பின்னணி


அ) புதிய நிலவுடைமை உரிமைகளால் ஏற்பட்ட பாதிப்புகள்

இந்தியாவின் மரபு சார்ந்த நிலவுடைமை முறையை ஆங்கிலேயர் சிதைத்தனர். ஆங்கிலேயர்க்கு முந்தைய காலங்களில் நிலவரியானது, விவசாயிகளுடன் விளைச்சலைப் பகிர்ந்து கொள்வதாய் அமைந்திருந்தது. ஆனால், ஆங்கிலேயர் பயிர்கள் விளையாமல் போவது, விலைகளில் ஏற்படும் வீழ்ச்சி, வறட்சி, பஞ்சம் போன்ற நிகழ்வுகளைக் கணக்கில் கொள்ளாமல் நிலவரியைப் பணமாகக் கணக்கிட்டு நிர்ணயம் செய்தனர். மேலும் கடனை அடைப்பதற்காக விற்பனை செய்வது என்பதும் பழக்கமானது. வட்டிக்குக் கடன் கொடுப்பவர்களை நிலவுரிமையாளர்களுக்கு முன்பணம் வழங்க ஊக்குவித்து, கடன் கொடுத்தவர்கள் கடன் வாங்கியவரின் சொத்துகளை இதன்மூலம் அபகரிக்க அனைத்து விதமான சூழ்ச்சிகளையும், மோசடிகளையும் மேற்கொண்டனர்.

கிழக்கிந்திய கம்பெனி அறிமுகம் செய்த புதிய நில நிர்வாகக் கொள்கையினால் மேலும் இரண்டு முக்கியப் பாதிப்புகள் ஏற்பட்டன. நிலத்தை விற்பனைப் பொருளாக்குவது, இந்தியாவில் வேளாண்மையை வணிகமயமாக்குவது ஆகிய இரண்டையும் அவர்கள் நிறுவனமாகவே ஆக்கினர். ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இந்தியாவில் நிலத்தில் தனிச் சொத்துரிமை என்பது இல்லை . தற்போது நிலம் ஒரு சரக்காக மாற்றப்பட்டு விற்பது அல்லது வாங்குவதன் வழியாக நபர்களிடையே கைமாறியது. மேலும் வரி/குத்தகை செலுத்தப்படவில்லை என்பதற்காக அரசு நிர்வாகம் நில உரிமையாளர்களிடமிருந்து நிலங்களைப் பறிமுதல் செய்தது. இந்நிலங்கள் மற்றவர்களுக்கு ஏலத்திற்கு விடப்பட்டன. இம்முறையால் ஒரு புதுவகையான நிலப்பிரபுக்கள் வர்க்கம் உருவானது. தங்கள் நிலங்களில் வாழாமல் நகரங்களில் வாழ்ந்த இவர்கள் குத்தகையை மட்டும் கறந்து கொண்டனர். மரபு சார்ந்த வேளாண் முறையில் விவசாயிகள் பெரும்பாலும் தங்கள் நுகர்வுப் பயன்பாட்டிற்குத் தேவையானதை மட்டுமே உற்பத்தி செய்தனர். புதிய நிலவருவாய் முறைகள் அறிமுகமான பின்னர் அவர்கள் சந்தைக்குத் தேவையானதை மட்டுமே உற்பத்தி செய்தனர்.

நிலம் விற்பனைச்சரக்காக மாற்றப்பட்டதும் வேளாண்மை வணிகமயமாக்கப்பட்டதும் விவசாயிகளின் வாழ்க்கை நிலையில் எந்த ஒரு

முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை; மாறாக, விவசாயிகளிடையே மனநிறைவின்மையை ஏற்படுத்தி அவர்களை அமைதி இழந்தவர்களாக, கட்டுப்பாடுகளை மீறுபவர்களாக ஆக்கியது. இந்த விவசாயிகள் பின்னர் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அவர்களின் கூட்டாளிகளுக்கும் எதிராகத் திரும்பினர்.

 

ஆ) கட்டுப்பாடுகளற்ற வணிகக் கொள்கை, தொழில் நீக்கச் செயல்பாடுகள்: இந்தியக் கைவினைஞர்கள் மீது ஏற்படுத்தியத் தாக்கம்

இங்கிலாந்தில் தொழில் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து கம்பெனி பின்பற்றியக் கொள்கையானது, இந்தியாவில் தொழில்கள் நீக்கப்படும் விளைவுகளை ஏற்படுத்தியது. இப்போக்கு முதல் உலகப் போர் தொடங்கும் வரை நீடித்தது. ஆங்கில அரசு கட்டுப்பாடுகளற்ற சுதந்திர வணிகம் (laissez faire) எனும் கொள்கையைப் பின்பற்றியது. பருத்தி, சணல், பட்டு ஆகிய கச்சாப் பொருட்கள் இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. இக்கச்சாப் பொருட்களிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டப் பொருட்கள் மீண்டும் இந்தியச் சந்தைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்பட்டப் பொருட்கள் இந்தியச் சந்தைகளில் மலைபோல் குவிந்தன. இந்தியக் கைத்தறி நெசவுத் துணிகளைக் காட்டிலும் இறக்குமதி செய்யப்பட்டத் துணிகள் குறைந்த விலையில் கிடைத்தன. ஆங்கிலேயரின் வருகைக்கு முன்பாக தனது கைத்தறித் துணிகளுக்காகவும் கைவினைப் பொருட்களுக்காகவும் இந்தியா புகழ் பெற்றிருந்தது. உலகச் சந்தையிலும் நல்ல மதிப்பைப் பெற்றிருந்தது. இருந்த போதிலும் காலனியாதிக்கக் கொள்கையின் விளைவாக இந்தியக் கைத்தறிப் பொருட்களும் கைவினைப் பொருட்களும் தங்கள் உள்நாட்டு, பன்னாட்டுச் சந்தைகளைப் படிப்படியாக இழந்தன. இங்கிலாந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதால் இந்தியாவின் நெசவாளர், பருத்தியிழை ஆடை தயாரிப்போர், தச்சர், கொல்லர், காலணிகள் தயாரிப்போர் ஆகியோர் வேலையற்றோர் ஆயினர். கச்சாப் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கான இடமாக இந்தியா மாறியது. இங்கிலாந்தின் தொழிற்சாலைகளுக்குத் தேவையான தொழிற்சாலைப் பயிர்களான அவுரி (Indigo) மற்றும் ஏனையப் பயிர்களை உற்பத்தி செய்யும்படி இந்திய விவசாயிகள் வற்புறுத்தப்பட்டனர். இம்மாற்றத்தினால் பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் மூலாதாரமாக விளங்கிய வேளாண்மை பாதிக்கப்பட்டு உணவுப் பற்றாக்குறைக்கு இட்டுச் சென்றது.


1859-60இல் வங்காளத்தில் நடைபெற்ற இண்டிகோ கலகம் கம்பெனியின் அடக்குமுறைக் கொள்கைக்கு எதிரான இந்திய விவசாயிகளின் ஒரு எதிர்வினையாகும். பெரும்பாலும் ஐரோப்பியர்களுக்குச் சொந்தமாயிருந்த நிலங்களில் இந்தியக் குத்தகை விவசாயிகள் அவுரியைப் பயிரிடக் கட்டாயப்படுத்தப்பட்டனர். துணிகளுக்கு சாயம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இச்செடிக்கு ஐரோப்பாவில் பெரும் தேவை ஏற்பட்டிருந்தது. சிறியதோர் தொகையை முன்பணமாகப் பெற்றுக் கொள்ளவும் சாதகமற்ற ஒப்பந்தங்களை ஏற்றுக் கொள்ளவும் இந்திய விவசாயிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். ஒரு விவசாயி இவ்வொப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் அவர் தனது நிலத்தில் அவுரியை மட்டுமே பயிர் செய்தாக வேண்டும். அவுரிக்குப் பண்ணையார் கொடுக்கும் விலையோ சந்தை விலையை விடக் குறைவாக இருந்தது. இதனால் பல சமயங்களில் தங்கள் நிலங்களுக்கான வரிபாக்கியைக்கூட விவசாயிகளால் செலுத்த இயலாத நிலை ஏற்பட்டது. ஆட்சியாளர்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்வர் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் அதிகாரிகளுக்குப் பல மனுக்களை எழுதினர். அமைதியான வழிகளில் தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். இவர்களின் வேண்டுகோள்கள் அனைத்தும் பயனற்றுப் போனதால் முன்பணம் பெறவும் புது ஒப்பந்தம் போடவும் அவர்கள் மறுத்துக் கலகத்தில் இறங்கினர். 1859-60இல் மேற்கொள்ளப்பட்ட இந்த இண்டிகோ புரட்சியின் மூலம் விவசாயிகள் பண்ணையார்களை வடக்கு வங்காளத்திலிருந்து வெளியேற்றினர்.

 

இ) பஞ்சங்களும் இந்தியர்கள் ஆங்கிலேயரின் கடல் கடந்த காலனிகளில் குடியேறுதலும்

பஞ்சங்கள்

இந்தியா மேன்மேலும் தொழில் நீக்கம் செய்யப்பட்ட நாடாக மாறியதால் கைவினைத் தொழில்களில் ஈடுபட்டிருந்த கைவினைத் தொழிலாளர்கள் வேலையிழந்தனர். மேலும் நீர்ப்பாசன ஏற்பாடுகள் மராமத்து செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டதாலும் கொடுமையான நிலவரியின் காரணமாகவும் பஞ்சங்கள் மீண்டும் மீண்டும் ஏற்பட்டன. ஆங்கிலேயரின் வருகைக்கு முன்னர் இந்திய ஆட்சியாளர்கள் பஞ்ச காலங்களில் வரி விலக்களிப்பது, தானியங்களின் விலைகளை முறைப்படுத்துவது, பஞ்சத்தால் பாதிப்புக்குள்ளானப் பகுதிகளிலிருந்து உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதைத் தடை செய்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் மக்களின் சிரமங்களைச் சீர்செய்து துயர் துடைத்தனர். ஆனால் ஆங்கிலேயர்கள் பஞ்சங்களின் போதும் தலையிடாக் கொள்கையைப் பின்பற்றினர். இதன் விளைவாக ஆங்கிலேயரின் ஆட்சியில் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் மாண்டனர். 1770-1900 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பஞ்சத்தின் காரணமாக இருபத்தைந்து மில்லியன் மக்கள் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1793இல் தொடங்கி 1900 வரையிலான காலப்பகுதியில் உலகில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போர்களில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை ஐந்து மில்லியனாக இருக்க 1891 முதல் 1900 வரையிலான பத்தாண்டுகளில் பஞ்சத்தினால் மட்டுமே இந்தியாவில் பத்தொன்பது மில்லியன் மக்கள் உயிரிழந்ததாக மெட்ராஸ் டைம்ஸ் பத்திரிக்கையின் ஆசிரியர் வில்லியம் டிக்பை குறிப்பிட்டுள்ளார்.

இதில் துயரம் யாதெனில், பட்டினியால் மக்கள் மடிந்து கொண்டிருந்த நிலையில் பல மில்லியன் டன் கோதுமை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. எடுத்துக்காட்டாக 1866இல் ஒரிசா பஞ்சத்தின்போது ஒன்றரை மில்லியன் மக்கள் பட்டினிக்குப் பலியான நிலையில் ஆங்கிலேயர் 200 மில்லியன் பவுண்ட் அரிசியை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்தனர். ஒரிசா பஞ்சத்தின் தூண்டுதலின் காரணமாக தேசியவாதியான தாதாபாய் நௌரோஜி இந்தியாவின் வறுமை குறித்துத் தனது வாழ்நாள் முழுவதுமான ஆய்வைத் தொடங்கினார். 1876-1878 காலப்பகுதியில் தொடர்ந்து இரண்டாண்டுகள் பருவமழைப் பொய்த்துப் போனதால் மதராஸ் மாகாணத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. ஒரிசா பஞ்சத்தின் போது பின்பற்றப்பட்ட தலையிடாக் கொள்கையையே அரசப்பிரதிநிதி லிட்டன் பின்பற்றினார். மதராஸ் மாகாணத்தில் 3.5 மில்லியன் மக்கள் பஞ்சத்திற்குப் பலியானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


இலங்கைக்கு மட்டுமல்லாது ஏனைய ஆங்கிலேய காலனிகளான மொரிஷியஸ், நீரிணைக் குடியேற்றங்கள் (Strait Settlements), கரீபியன் தீவுகள், டிரினிடாட், ஃபிஜி, தென்னாப்பிரிக்கா போன்ற இடங்களுக்கும் ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களாகக் குடிபெயர்ந்து செல்ல இந்தியர்கள் விருப்பம் தெரிவித்தனர். 1843இல் மொரிஷியஸில் 30,218 ஆண்களும் 4,307 பெண்களும் குடியேறியதாக அரசே அறிவித்தது. நூற்றாண்டின் இறுதியில் 5,00,000 தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்தது மொரிஷியஸ் சென்றனர்.

ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்

ஆங்கிலேயப் பேரரசின் காலனிகளான சிலோன் (ஸ்ரீலங்கா), மொரிஷியஸ், ஃபிஜி, மலேயா, கரீபியன் தீவுகள், தென்னாப்பிரிக்கா போன்ற பகுதிகளில் பெருந்தோட்டப் பயிர்களான காபி, தேயிலை, கரும்பு ஆகியன அறிமுகமானபோது அத்தோட்டங்களில் வேலை செய்யப் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். 1815இல் சிலோன் ஆளுநர் மதராஸ் மாகாண ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் பெருந்தோட்டங்களில் வேலை செய்யக் “கூலிகளை" அனுப்பிவைக்கக் கேட்டுக் கொண்டார். மதராஸ் மாகாண ஆளுநர் இக்கடிதத்தை மேல் நடவடிக்கைக்காகத் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தார். மக்கள் தங்கள் நிலத்தின் மீது அதிகப்பற்றுக் கொண்டிருப்பதால் ஊக்கத் தொகை ஏதேனும் வழங்காமல் அம்மக்களை அவர்களின் சொந்த மண்ணிலிருந்து நகரச் செய்வது சிரமமெனத் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஆனால் 1833,1843 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சங்கள் அரசாங்கத்தின் தூண்டுதல் இல்லாமலேயே மக்கள் புலம்பெயர்ந்து செல்லும் நிலையை உருவாக்கியது.

ஒப்பந்தக் கூலித் தொழிலாளர் முறையின் கீழ் இலங்கையின் காபி, தேயிலைப் தோட்டங்களில் இந்தியர்கள் கூலிகளாக வேலை செய்யச் சென்றனர். 1843இல் பிரிட்டிஷ் இந்தியாவில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டதால் பேரரசின் காலனிகளுக்கு குடிபெயரும் செயல்பாடுகள் ஊக்கம் பெற்றன. 1837இல் தமிழ்நாட்டிலிருந்து குடிபெயர்ந்து இலங்கையில் காபித் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 10,000 தொழிலின் வேகமான வளர்ச்சியால் தொழிலாளர்களின் தேவை அதிகரித்தது. 1846இல் 80,000 என மதிப்பிடப்பட்ட தமிழ் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1855இல் 1,28,000 ஆனது. 1877இல் ஏற்பட்ட பஞ்சத்தினால் இலங்கையில் ஏறத்தாழ 3,80,000 தமிழ் கூலித்தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

ஒப்பந்தத் தொழிலாளர் முறை: உழைப்புடன் கூடிய கடுங்காவல் தண்டனை போன்ற இவ்வொப்பந்தக் கூலித்தொழிலாளர் முறையின் கீழ் தொழிலாளர்கள் ஐந்து வருட காலத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இறுதியில் அவர்கள் குறைந்த அளவு கூலியைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பலாம். வறுமையில் உழன்ற பல விவசாயிகளும் நெசவாளர்களும் ஓரளவுப் பணம் சம்பாதிக்கும் நம்பிக்கையுடன் சென்றனர். ஆனால் அது அடிமைத் தொழிலை விடவும் மோசமாக அமைந்தது. வறுமையில் வாடிய ஏழைத் தொழிலாளர்களைச் சூழ்ச்சியின் மூலமோ அல்லது கடத்தியோ கொண்டுவர அரசு தனது முகவர்களை (கங்காணிகள்) அனுமதித்தது. நீண்ட கடல் பயணத்தில் தொழிலாளர்கள் பெருந்துயரங்களுக்குள்ளாயினர்.  பலர் வழியிலேயே இறந்தனர். 1856-1857இல் கல்கத்தாவிலிருந்து டிரினிடாட் சென்ற கப்பலில் பயணம் செய்த ஒப்பந்தக் கூலித்தொழிலாளர்களின் இறப்பு விகிதம் பின்வருமாறு: ஆண்களில் 12.3 விழுக்காட்டினரும், பெண்களில் 18.5 விழுக்காட்டினரும், 28% சிறுவர்களும், 36% சிறுமிகளும், 55% குழந்தைகளும் இறந்துவிட்டனர்.

Tags : Rise of Nationalism in India | History இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி - வரலாறு.
12th History : Chapter 1 : Rise of Nationalism in India : Socio-economic Background Rise of Nationalism in India | History in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 1 : இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி : சமூகப் பொருளாதாரப் பின்னணி - இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி - வரலாறு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு வரலாறு : அலகு 1 : இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி