இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி - வரலாறு - சமூக, சமய சீர்திருத்தங்கள் | 12th History : Chapter 1 : Rise of Nationalism in India
சமூக, சமய சீர்திருத்தங்கள்
அரசியல் செயல்பாடுகளில் மக்களை ஈடுபடுத்தும்
முன்னர் சமூகத்தை சீர்திருத்த வேண்டியதை ஆங்கிலக் கல்வியைக் கற்றறிந்தோர் உணர்ந்தனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடைபெற்ற சீர்திருத்த இயக்கங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. ராஜா ராம்மோகன் ராயால் நிறுவப்பெற்ற பிரம்ம சமாஜம், டாக்டர் ஆத்மராம் பாண்டுரங்
உருவாக்கிய பிரார்த்தனை சமாஜம், சையத் அகமது கானால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட அலிகார்
இயக்கம் ஆகிய சீர்திருத்த இயக்கங்கள். 2 மீட்பு இயக்கங்களான ஆரிய சமாஜம், இராமகிருஷ்ண
இயக்கம், தியோபந்த் இயக்கங்கள். 3. புனேயில் ஜோதிபா பூலே, கேரளாவில் நாராயண குரு, அய்யன்காளி,
தமிழ்நாட்டில் இராமலிங்க அடிகள், வைகுண்ட சுவாமிகள் பின்னர் அயோத்தி தாசர் ஆகியோரால்
முன்னெடுக்கப்பட்ட சமூக இயக்கங்கள் குறித்தும் இவ்வனைத்து சீர்திருத்தவாதிகள் குறித்தும்
அவர்களின் பங்களிப்பு குறித்தும் பதினொன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
பத்தொன்பதாம் நூற்றாண்டுச் சீர்திருத்தவாதிகள் காரணத்தை அடிப்படையாகக் கொண்டு கற்றறிந்த மேலை நாட்டினர் முன்வைத்த சவால்களைப் எதிர்கொண்டு பதில் கூறினர். இச்சீர்திருத்தவாதிகளால் தூண்டப்பட்ட மீள் சிந்தனையின் விளைவாகவே இந்திய தேசிய உணர்வு உதயமானது. 1828இல் ராஜா ராம்மோகன்ராய் பிரம்ம சமாஜத்தை நிறுவினார். அதனைத் தொடர்ந்து ஏனைய சமூகப் பண்பாட்டு அமைப்புகளான பிரார்த்தனை சமாஜம் (1867) ஆரிய சமாஜம் (1875) ஆகியவை நிறுவப்பெற்றன. ராயின் முன் முயற்சி கேசவ் சந்திர சென், ஈஸ்வர சந்திர வித்யாசாகர் போன்ற சீர்திருத்தவாதிகளால் தொடரப்பட்டன. சாதி ஒழிப்பு, குழந்தைத் திருமண ஒழிப்பு, விதவை மறுமணம் ஆகியவைகளின் மீது இச்சீர்திருத்தவாதிகள் அதிக அக்கறை செலுத்தினர். இஸ்லாமியரிடையே அலிகார் இயக்கம் இதே பணியை மேற்கொண்டது. காலப்போக்கில் அரசியல் தன்மை கொண்ட அமைப்புகளும் கழகங்களும் பிரிட்டிஷ் இந்தியாவின் பல பகுதிகளில் தோன்றி மக்களின் குறைகளைப் பற்றி பேசத்தொடங்கின.