வரலாறு - இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி | 12th History : Chapter 1 : Rise of Nationalism in India
கற்றலின் நோக்கங்கள்
கீழே குறிப்பிடப்பட்டவைகளோடு அறிமுகமாதல்
• வேளாண் செயல்களில் ஏற்பட்ட மாற்றங்களும் ஆங்கிலேய உற்பத்தியாளர்களின் இறக்குமதியும் இந்தியக் கைவினைத் தொழில்களையும் கைவினைஞர் வாழ்வையும் சீரழித்தது
• குறிப்பிட்ட இடைவெளிகளில் ஏற்பட்ட பஞ்சங்கள் நிலமற்றத் தொழிலாளர்களையும் வேலையில்லாக் கைவினைஞர்களையும் புலம்பெயரச் செய்தது
• மேற்கத்தியக் கல்வியின் அறிமுகமும் தேசிய எழுச்சியின் உதயமும்
• இந்தியாவில் தேசிய எழுச்சிக்குப் பங்களிப்புச் செய்த ஏனைய காரணிகள்
• நவீன இந்தியாவின் படித்த வகுப்பினர் இந்திய தேசிய காங்கிரசுக்கான அடித்தளம் அமைத்தல்
• தொடக்ககாலத் தேசியவாதிகளும் அவர்களின் பங்களிப்பும் குறிப்பாக நௌரோஜியும் அவருடைய செல்வச் சுரண்டல் கோட்பாடும்
அறிமுகம்
இந்தியாவை முன்னைக் காட்டிலும் அதிகமாகச் சுரண்டுவதற்காகவும் கட்டுப்படுத்துவதற்காகவும் இந்திய அரசியலை, பொருளாதாரத்தை ஒருமுகப்படுத்துவதில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். இவ்வெற்றி தவிர்க்க இயலாத வகையில் தேசிய உணர்வின் வளர்ச்சிக்கும், தேசிய இயக்கம் தோன்றுவதற்கும் இட்டுச் சென்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமூகச் சீர்திருத்தங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட இயக்கங்கள், போராட்டங்கள் அவற்றைத் தொடர்ந்து மேலைக்கல்வி பயின்ற இந்தியர்கள், குடிமை உரிமைகளுக்காக முன்வைத்த வேண்டுகோள்கள், சமர்ப்பித்த மனுக்கள் ஆகியவற்றை ஆரம்பப் புள்ளிகளாகக் கொண்டு இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு தொடங்குகிறது. கி.பி. (பொ.ஆ)1915இல் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி, 1919இல் இந்திய தேசிய இயக்கத்திற்கு அவர் தலைமையேற்றதிலிருந்து இந்திய தேசியம் மிகப்பெரும் மக்கள் இயக்கமாக மாறியது.
தேசியம்: விரிவான தளத்தில் தேசியமென்பது ஒரு நாட்டிற்கு விசுவாசமாகவும் பக்தியோடும் இருத்தல் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. அது தனது நாட்டை ஏனைய நாடுகளைக் காட்டிலும் உயர்வான இடத்தில் வைத்துப் பார்த்து அல்லது ஏனைய நாடுகளுக்குப் போட்டியாக தனது நாட்டின் பண்பாடும் மற்றும் விருப்பங்களின் வளர்ச்சியில் சிறப்புக் கவனம் செலுத்தும் ஒரு தேசிய உணர்வு அல்லது மனப்போக்காகும்.
காந்தியடிகளுக்கு முன்னர் தாதாபாய் நௌரோஜி, கோபால கிருஷ்ண கோகலே, பிபின் சந்திர பால், லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர் போன்றோரும், ஏனையோரும் காலனியச் சுரண்டல் குறித்தும், மக்களின் தேசிய அடையாளம் பற்றியும் இந்தியர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கான முன் முயற்சிகளை மேற்கொண்டனர். இவ்வியலில் இந்திய தேசிய இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றின் வழித்தடத்தைக் கண்டறிவதோடு, தொடக்ககாலத் தலைவர்கள் என்றறியப்பட்ட இவர்களின் பங்களிப்பின் மீதும் கவனம் செலுத்துகிறோம்.