இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி - வரலாறு - நௌரோஜியும் அவர் முன்வைத்த சுரண்டல் கோட்பாடும் | 12th History : Chapter 1 : Rise of Nationalism in India
நௌரோஜியும் அவர் முன்வைத்த சுரண்டல் கோட்பாடும்
‘இந்திய தேசியத்தின் முதுபெரும் தலைவர்’ என அறியப்படும் தாதாபாய் நௌரோஜி தொடக்கால தேசிய இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராவார். 1870களில் பம்பாய் மாநகராட்சிக் கழகத்திற்கும், நகர சபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1892இல் இங்கிலாந்துப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர் லண்டனில் ‘இந்திய சங்கம் (Indian Society - 1865), கிழக்கிந்தியக் கழகம் (East Indian Association - 1866) எனும் அமைப்புகளை உருவாக்கினார். அவர் மூன்று முறை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் எழுதிய ‘வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத
இந்திய ஆட்சியும்’ (Poverty and Un-British Rule in india - 1901) எனும் புத்தகமே இந்திய
விடுதலைப் போராட்டத்திற்கு அவர் செய்த முக்கியப் பங்களிப்பாகும். இந்நூலில் அவர் “செல்வச்
சுரண்டல்" எனும் கோட்பாட்டை முன்வைத்தார். எந்த நாடாக இருந்தாலும் வசூலிக்கப்பட்ட
வரியை அந்நாட்டு மக்களின் நல்வாழ்விற்காகவே செலவழிக்க வேண்டும். ஆனால் பிரிட்டிஷ் இந்தியாவில்
ஆங்கிலேயர் வசூலிக்கும் வரி இங்கிலாந்தின் நலனுக்காகச் செலவு செய்யப்படுகிறது எனக்
கூறினார். 1835 முதல் 1872 முடிய ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 13 மில்லியன் பவுண்டுகள்
மதிப்புடையப் பொருட்கள் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் ஆனால் அந்த அளவிற்கானப்
பணம் இந்தியா வந்து சேரவில்லை எனவும் கூறினார். லண்டனில் வாழும் கம்பெனியின் பங்குதாரர்களுக்கு
லாபத்தில் வழங்கப்பட வேண்டிய பங்கு , இருப்புப்பாதைத் துறையில் (Railways) முதலீடு
செய்தவர்களுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டவாறு தரப்பட வேண்டிய வட்டி, பணி நிறைவு பெற்றுவிட்ட
அதிகாரிகளுக்கும் தளபதிகளுக்கும் வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம் இந்தியாவிலும் இந்தியாவிற்கு
வெளியிலும் நாடுகளைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்டப் போர்களுக்காக இங்கிலாந்திடமிருந்து
பெற்ற கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டி ஆகிய இவையனைத்துக்கும் பதிலாகவே அப்பொருட்கள்
ஏற்றுமதி செய்யப்பட்டதாக அவர் வாதாடினார். இவையனைத்தும் தாயகக் கட்டணம் (Home
Charges) எனும் பெயரில் ஆண்டொன்றுக்கு 30 மில்லியன் பவுண்டுகள் நஷ்டம் ஏற்படுத்துவதாக
நௌரோஜி உறுதிபடக் கூறினார்.